தேடல்-4.
பிற்பகல் வேளையில் அனைவரும் மஞ்சுவை தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இப்போது ஒத்தையடிபாதை ஏதும் இல்லை. ஆராய்சியாளர்கள் அசராமல் போய்க்கொண்டு இருந்தனர். ஹைக்கிங் காலணி போட்டு இருந்த சங்கர் அவர்களுக்கு ஈடாக நடந்தான். அடிகளும் சீடனும் கொஞ்சம் பின்னால் வந்து கொண்டு இருந்தனர். கதிர்வேலனும் அவர் மனைவியும் இவர்களுக்கு இணையாக நடக்க சிரமப்பட்டுக்கொண்டு இருந்தனர். அவ்வப்போது மஞ்சு நிதானித்து சென்று கொண்டு இருந்தாள். இதனால் அனைவரும் இவளுக்கு வழி தெரிந்துதான் போகிறாளா என்று நினைத்தபடி நடந்தனர்.
சுமார் இரண்டு மணி நேரத்துக்குப்பின் மஞ்சு ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டாள். “ஏன் மஞ்சு உக்காந்து விட்ட?” என்று வினவினான் சங்கர். "நம்ம பின்னால ஒருத்தர் தொடர்ந்து வராருங்கோ. எவ்வளவு நேரந்தாந் தாமசித்து வரது? நம்மோட சேந்துக்கட்டுமே" என்றாள் அவள். எல்லாரும் ஒருவர் ஒருவர் பார்த்துக்கொண்டனர். "யாருக்கும் எதுவும் கேட்டுச்சா?” என்றான் சங்கர். உன்னிப்பாக கவனித்தனர். சந்தடியே இல்லை. "இல்லையே?” பத்து நிமிடங்கள் கழித்து மஞ்சு அவர்கள் வந்த வழியிலேயே போய் ஐந்து நிமிடங்களில் அவனுடன் திரும்பி வந்தாள். காலை ராபர்ட் சத்திரத்தைவிட்டு போனதை பார்த்தபடி இருந்த அவனேதான்.
“யாருப்பா நீ? ஏன் எங்க பின்னால வர?”
பதில் இல்லை.
“ஒன்னும் பேச மாட்ராருங்க.” என்றாள் மஞ்சு.
"சரி வருவதானால் வரட்டுமே. யாருக்கு என்ன நஷ்டம்" என்றான் குமரன்.
இன்னும் தாமதமாகாமல் போனால் சரிதான் என்று அடிகளார் சொல்ல மீண்டும் நடக்க ஆரம்பித்தனர். தோள் பையை சுமக்க கஷ்டப்பட்ட கதிர்வேலன் கையிலிருந்து அதை மௌனி மௌனமாகவே விடுவித்தான். இப்போது மஞ்சு வேகமாகவே நடக்க ஆரம்பித்தாள். "ராவுக்குள்ள கரடி பள்ளத்துகிட்ட போயிடணும்” என்று முணு முணுத்தாள்.
நடை இப்போது அனைவருக்குமே சிரமமாகிவிட்டது. எப்போது பொழுது சாயும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வேளையும் வந்து ஒரு சிறு திறந்த வெளியில் மஞ்சு மூட்டையை இறக்கியபோது யாரும் ஆட்சேபிக்கவில்லை. அனைவரும் மூட்டைகளை இறக்கி வைத்து ¨அப்பாடா!¨ என்ற படி கீழே சாய்ந்தனர். மஞ்சுவும் மௌனியும் பக்கத்தில் மரங்களின் கீழ் இருந்த சுள்ளிகளை சேர்க்க ஆரம்பித்தனர். வேறு யாருக்கும் அதற்கு சக்தி இல்லை. விஞ்ஞானிகள் கூட சோர்வாகிவிட்டதாக தெரிந்தது.
ஒரு கல்லின் மீது சாய்ந்தபடி அனைவரையும் பார்த்தான் சங்கர்.
“என்ன விசித்திரமான குழு! ஒத்தருக்கு ஒத்தர் ஒரு வாரம் முன்னால் தெரியாது. இப்போது எல்லாரும் ஒன்றாக...” ஒவ்வொருவராக பார்க்க ஆரம்பித்தான்.“ விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் சோர்வில்லாமல் இருந்தார்கள். இப்போ ..யார் இவர்கள்? வளவளவென்று பேசியபடியே இருக்கிறார்கள். சக வேலை செய்பவர்களா, நண்பர்களா, காதலர்களா? இது மேல்நாட்டில் சகஜம். இந்தியாவில்.... இங்கும்தான் எல்லாம் வேகமாக மாறி வருகிறது. அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. அடுத்து அடிகளார். அவர் தன்னைப்பற்றி விவரம் அதிகம் சொல்லவில்லை. ஏன்? அவர் சிஷ்யனை ஏன் இந்த ஓட்டு ஓட்டுகிறார்? அதோ ஏதேதோ கட்டளைகள்..... இந்த சிஷ்யன் எப்படிப்பட்டவன்? முதலில் நல்ல பையனாகத்தானே தெரிந்தான். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி மஞ்சுவின் பக்கம் பார்வை போகிறது. இந்த மஞ்சு... களைப்படைவதாகவே தெரியவில்லை. மௌனியிடன் ஏதேதோ பேசுகிறாப்போல இருக்கிறது. ஆச்சரியம். இவள் முகத்தை யாரும் சரியாகக்கூட பார்க்க முடியவில்லை. எப்போதும் தலை குனிந்தபடியே இருந்தவள் இப்போது மௌனியுடன் பேசும்போது மட்டும்... இந்த மௌனி யார்? புரியவில்லை. ஊமையா? இல்லை அப்படி.. கண்களை பார்த்தால் ஒரு வெறிப்பு... ஒன்று உன்மத்தனாக இருக்கனும் அல்லது... கதிர்வேலன். பாவம். மனைவி மீதுதான் என்ன அன்பு. இப்படி எல்லாருமா இருந்துவிடுகிறார்கள். புதுசாக ஒன்று... இன்கம்பாட்டபிலிடி.. அப்படிச்சொல்லி பிரிவது சகஜமாகி வருகிறது. கடைசியாக நான்.” சிரித்துக்கொண்டான் சங்கர்.
நான்.......
6 comments:
நாலு பகுதிகளையும் ஒரே மூச்சுல படிச்சாச்சு.
இப்ப தான் விறுவிறுப்பு சேருது. மேல போகட்டும். :))
ஒரு கதாபாத்திரம் தானாப் பேசிக்க ஆரம்பிச்சாச்சு. :-)
வாவ்! நன்னி அம்பி!
//ஒரு கதாபாத்திரம் தானாப் பேசிக்க ஆரம்பிச்சாச்சு. :-)//
பின்னே! நம்மகிட்டே மாட்டியாச்சு. இனி தலையை பிச்சுக்க வேன்டியதுதான் பாக்கி!
'நம்பிக்கை'ல படிச்சிட்டேன்... நல்லா கதை சொல்றீங்க :)
ஸ்ரீகாழியூரர் கவிதையை மீனாம்மா அழகா நினைவுபடுத்தியிருந்தாங்களே... மத்தவங்களுக்காக இங்கே -
தேடுவது எதுவென்று
அறியாமல்
தேடிக்கொண்டு
இருக்கின்றேன்
கிடைப்பது கிடைத்தாலும்
தேடியது நிற்குமா?
தேடுவது பழகிப்போய்
தேடுவது தொடருமோ?
தேட வேண்டியதை விட்டு
தேடலை தேடுகிறேன்.
தேடலே தேவையானால்
தேடல் அவசியம்தானா?
-காழியூரன்
கவி அக்கா, பாராட்டுக்கும் கவிதையை இங்கே இட்டதுக்கும் நன்றி!
Post a Comment