Thursday, August 11, 2016

பெரியவளா ஆன பிறகு நீ என்னவா ஆவே?

தாத்தா ஒனக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் எனக்கு கத்துக்கொடுத்துடு. நா பெரிசானப்பறம் டாக்டராவோ டீச்சராவோ ஆவேன் இல்ல..... டாக்டரா ஆகணும்ன்னுதான் நெனக்கறேன்.... அப்பறம் நான் மத்தவாளுக்கு எல்லாத்தையும் கத்துக்கொடுக்கணும் இல்ல?
-பேத்தி

ஒரூர்ல ஒரு குட்டி பொண்ணு இருந்தாளாம். அவ ஸ்கூல டீச்சர் ஒரு நாள் ஒரு கேள்வி கேட்டாளாம். நீங்க எல்லாரும் பெரியவனா இல்ல பெரியவளா ஆனபிறகு என்னவா ஆவீங்க?
ஒரு பையன் சொன்னான்: நா வக்கீலா ஆவேன். இன்னொரு பையன் சொன்னான் நா எஞ்சின் ட்ரைவரா ஆவேன். ஒரு பொண்ணு சொன்னா நா டாக்டரா ஆவேன். இன்னொரு பையன் சொன்னான் நா பேஷண்டா ஆவேன்!
இப்படி எல்லாரும் சொல்லறப்ப கடைசியா குட்டிப்பொண்ணு முறை வந்துது. இவ எழுந்தப்ப ஸ்கூல் பெல் அடிச்சுடுத்து. டீச்சர் சரி நீ நாளைக்கு சொல்லுன்னு சொல்லிட்டா.
குட்டிப்பொண்ணுக்கு குழப்பம். நா பெரியவளா ஆனா என்னவா ஆகணும்? இந்த டீச்சர் மாதிரி ஆகலாமா? எவ்வளோ பேர் இவங்களுக்கு பணிஞ்சு நடக்கறாங்க.

இப்படி யோசிச்சுக்கொண்டே நடந்தா. டீச்சர் நேரா ஸ்கூல்லேந்து ஒரு டாக்டரோட க்ளினிக்குக்கு போனா. போய் அங்கே உக்காந்தா. அட நம்ம டீச்சர் ஒரு டாக்டரோட இடத்தில போய் காத்துக்கொண்டு இருக்காளே? நாம டாக்டராகலாமா? கொஞ்ச நேரம் கழிச்சு அந்த டாக்டர் வெளியே வந்தாங்க. பக்கத்தில இருந்த ஒரு கடைக்கு போனாங்க. ஏதோ வாங்கிட்டு கடைக்கார அம்மாவுக்கு நிறைய காசு கொடுத்தாங்க.

அட! நாம் கடைக்கார முதலாளி ஆகலாம். நிறைய காசு கிடைக்கும்ன்னு அந்த குட்டிப்பொண்ணு நினைச்சா. அப்ப ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அக்கா வந்தா. கடைக்கார அம்மாகிட்ட ஏதோ பேசிட்டு கிளம்பிட்டாங்க. வழில இருந்த போலீஸ்காரங்க எல்லாரும் அவங்களுக்கு சல்யூட் அடிச்சாங்க. பாத்தியா எல்லாரும் இவங்களுக்கு எவ்ளோ மரியாதை கொடுக்கறாங்க. நாம போலீஸ் இன்ஸ்பெக்டராத்தான் ஆகணும். இப்படி நினைச்சுகிட்டு இருக்கறப்ப அந்த இன்ஸ்பெக்டர் கோர்ட்டுக்கு போனாங்க. அங்க உள்ளே நுழைஞ்சு யாருக்கோ சல்யூட் அடிச்சாங்க. அட இவங்க யாருக்குடா சல்யூட் அடிக்கறாங்கன்னு இவளும் உள்ளே போய் பாத்தா. அங்கே ஒரு ஜட்ஜ் அம்மா உக்காந்துகிட்டு இருந்தாங்க!
சரி சரி அப்ப நாமளும் ஜட்ஜாத்தான் ஆகணும்ன்னு குட்டிப்பொண்ணு நினைச்சா.

இப்படி யோசிச்சுக்கொண்டே பக்கத்தில இருந்த பூங்கால போய் உக்காந்தா. டீச்சரா? டாக்டரா? கடை முதலாளியா? இன்ஸ்பெக்டரா? ஜட்ஜா? என்னவா ஆகறது நல்லது? குழப்பமா இருக்கே!

அப்ப அந்த ஜட்ஜ் அம்மா உடை மாத்திக்கிட்டு வந்தாங்க. அங்க ஒரு இடத்தில உக்காந்து இருந்த ஒரு அம்மாகிட்ட போய் பேசிட்டு அவங்களை வணங்கிட்டு திரும்பினாங்க. குட்டிப்பொண்ணுக்கு ஒரே ஆச்சரியம். திரும்பி வந்த அவங்ககிட்ட இவ போய் “அம்மா வணக்கம். நீங்கதான் ஊர்லேயே பெரிய ஜட்ஜ் ஆச்சே? அவங்களுக்கு ஏன் வணக்கம் சொன்னீங்க?” ன்னு கேட்டா. அவங்க சிரிச்சுகிட்டே “அவங்கதான் என் அம்மா. நா நேர்மையான வக்கீலா இருந்து ஜட்ஜ் ஆனதுக்கு அவங்களோட வளர்ப்புதான் காரணம். தினமும் இன்னேரத்துக்கு இந்த பூங்காவில வந்து உக்காந்து இருப்பாங்க. நானும் வேலை முடிஞ்சு தினமும் இங்க வந்து அவங்ககிட்ட பேசிட்டுப்போவேன்” அப்படின்னாங்க

அட ந்னு ஆச்சரியப்பட்டுகிட்டே இருந்தப்ப அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும் வந்து பேசிட்டு வணக்கம் சொல்லிட்டு போனாங்க. போறப்ப குட்டிப்பொண்ணு “நீங்களும் அவங்களோட மகளான்னு கேட்டா. ஆமா! நா இவ்வளோ தைரியசாலியா இன்ஸ்பெக்டரா ஆகறதுக்கு அவங்க என்னை வளர்த்த விதம்தான் காரணம்” ந்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்திலேயே கடைக்கார முதலாளியும் வந்து பழங்கள் கொடுத்து வணக்கம் சொன்னாங்க. குட்டிப்பொண்ணு கேட்டதுல அந்த அம்மாதான் இவங்களுக்கு தைரியம் சொல்லி கடை வைக்க உதவி பண்ணாங்கன்னு தெரிஞ்சது. இவங்களைப்போலவே அடுத்து வந்த டாக்டரும் அவங்களோட பொண்ணுதான். மத்தவங்களுக்கு கருணை உள்ளத்தோட சேவை செய்யணும்ன்னு தன் அம்மா சொல்லி வளத்ததா சொன்னாங்க. டாக்டர் அவங்க அம்மாகிட்ட பேசிக்கொண்டு இருந்தப்ப குட்டிப்பொண்ணு நேரமாச்சுன்னு வீட்டுக்குப்போயிட்டா.

அடுத்த நாள் ஸ்கூல்ல குட்டிப்பொண்ணுகிட்ட டீச்சர் சொன்னங்க: “உம். இப்ப நீயும் சொல்லி முடிச்சுடு. பெரியவளா ஆன பிறகு நீ என்னவா ஆவே?”
குட்டிப்பொண்ணு தயக்கம் இல்லாம சொன்னா: “ஒரு நல்ல அம்மாதான் தன் பொண்ணுங்களையும் பையன்களையும் நேர்மையா தைரியசாலியா, கருணை உள்ளத்தோட வளக்க முடியும். அதனால நான் ஒரு நல்ல அம்மாவா ஆவேன்!”

இத கேட்டு டீச்சரோட சேந்து எல்லாரும் கைதட்டினாங்களாம்!

Tuesday, May 17, 2016

கொடுங்கோல் மன்னன்

ஒரு நாட்டை ஒரு கொடுங்கோல் மன்னன் ஆண்டு வந்தான். குடிகள் அனைவரும் அவனது ஆட்சியில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தனர்.
இதற்கு எதிராக மறைமுகமாக ஒரு இளைஞர் குழு உருவாகிக்கொண்டு இருந்தது. அவர்கள் இந்த மன்னனை அகற்றும் வேலயில் யார் துணை வருவார்கள் என்று மக்களை கண்காணித்துக்கொண்டு இருந்தனர். பொதுவாக எல்லாருமே மன்னன் மீது ஒரு வெறுப்பில் இருந்தனர். ஆனால் எதிர்க்க சிலரே துணிந்தனர்.
ஒரு ஏழை கிழவி இருந்தாள். அவள் தினசரி அரண்மனைக்கு எதிரே சென்று நின்று மன்னன் நீடூடி வாழ்க என்று மும்முறை வாழ்த்தி வருவாள். இதை கண்ட இளைஞர் குழுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எல்லாரும் எதிர்க்கும்போது இவள் மட்டும் ஏன் இப்படி தினசரி வாழ்த்துகிறாள்? ஏழையாக இருக்கிறாள். மன்னனால் ஏதும் ஆதாயம் கிடைத்ததாகவும் தெரியவில்லையே?
பொறுக்க முடியாமல் ஒரு நாள் அவளை பின் தொடர்ந்து சென்றனர். அவள் குடிசைக்குள் புகுந்து விசாரித்தனர்.
 “எல்லாரும் எதிர்க்கும் போது நீ மட்டும் ஏன் வாழ்த்துகிறாய்?”
 “நீங்க எல்லாம் சின்ன பசங்க உங்களுக்கு புரியாது!”
சொல்லு பாப்போம், புரியறதா இல்லையான்னு அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்.”
நான் மூணு தலைமுறை ஆட்சியை பாத்துட்டேன். இந்த ராஜாவோட தாத்தா ஆண்டப்ப நா சின்ன பொண்ணு. அவன் கொடுங்கோலன். எல்லாரும் வெறுத்துப்போயிருந்தோம். இவன் சாக மாட்டானான்னு பேசிக்கொண்டு இருப்போம். அந்த நல்ல நாளும் வந்தது. ஒரு நாள் அவன் செத்துப்போனான்.
அவனோட பிள்ள அடுத்து பட்டத்துக்கு வந்தான். அவனோட ஆட்சியும் கொடுங்கோல் ஆட்சிதான். அவனோட அப்பனே தேவலைன்னு நினைக்கிற அளவுக்கு அவன் ஆட்சி இருந்தது. முன்ன மாதிரியே இவன் எப்படா சாவான்னு எல்லாரும் காத்திருந்தாங்க. அவனும் ஒரு வழியா செத்தான். அடுத்து இப்போ இருக்கற ராஜா பட்டத்துக்கு வந்தான். இவன் ஆட்சியோ இவனோட தாத்தாவயும் அப்பனையும் நல்ல ஆட்சி கொடுத்தவங்கன்னு நினைக்க வைக்குது.

நீங்க எல்லாரும் இவன் சாவக்கூடாதான்னு நினைக்கிறீங்க. இவன் செத்தா வரபோறவன் எப்படி இருப்பான்னு எனக்கு கதி கலங்குது! அதனாலத்தான் இவனே இருந்துட்டு போகட்டும்ன்னு தினசரி வாழ்த்தறேன்!”

Tuesday, May 10, 2016

குழந்தைக்கதைகள் - 3

ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்துதாம். அது குட்ட்ட்டி குருவியாம். அது இப்படீஈஈஈ போச்சாம்.
எங்க போச்சு?
சாப்ட ஏதாவது கிடைக்குமான்னு தேடிண்டு போச்சாம்.
உம்!
ரொம்ப தூரம் பறந்து களைச்சுப்போய் ஒரு மரத்துல உக்காந்துதாம். எதிர்க்க ஒரு படம் வரையரவர் இருந்தாராம். அவர் மலைக்கு முன்னால் நின்னுண்டு மலையையும் காட்டையும் படமா வரஞ்சுண்டு இருந்தாராம். குருவி இத ஆச்சர்யமா பாத்துதாம். என்னடா இது, அவர் முன்னால பெரிசா வெள்ளையா துணி இருக்கு. அதுல அவர் ஏதோ இப்படி அப்படி செஞ்சா கலர் கலரா கோடெல்லாம் விழறதுன்னு ஆச்சரியப்பட்டுதாம்.
அது பாத்துண்டே இருக்கறப்ப அவர் படம் வரையறதை நிறுத்திட்டு டீ குடிக்கப்போனாராம்.
அங்க டீக்கட இருந்துதா?
இல்ல.
பின்ன?
ப்ளாஸ்க்ல டீ கொண்டு வந்து இருந்தார். அத குடிக்கப்போனார்.
செரி.
அவர் டீக்குடிக்கறப்ப இந்த குருவி கிட்ட போய் பாக்கலாமேன்னு கிட்ட போச்சாம். அங்க நெறையா கிண்ணம் வெச்சு இருந்துதாம். ஒவ்வொண்ணுத்துலேயும் கலர் கலரா தண்ணி மாதிரி இருந்துதாம். என்ன என்ன கலர் இருந்தது?
நீலம் ம்ம்ம்ம் ப்ரௌன், செவப்பு, பிங்க் ம்ம்ம் அப்பறம் ப்ரௌன்….. இல்ல இது வேற ப்ரௌன்! அப்பறம் மஞ்சள் எல்லாம் இருந்துதாம்.
ரைட்! இருந்துதா? குருவி கிட்ட பாக்கறதுக்கு குனிஞ்சு பாத்துதாம். அதோட மூக்கு ஒரு கிண்ணத்துக்குள்ள போயிடுத்தாம். அந்த கிண்னத்துல மஞ்ச கலர் இருந்துதா? மூக்கு மஞ்சளா போயிடுத்து!
அப்பறம் அது குனிஞ்சதால கலர் கிண்ணமெல்லாம் வெச்சிருந்த ஸ்டூல் தொப்புன்னு கவுந்துடுத்தாம். படம் போட்டவர் என்னடாது சத்தம்ன்னு ஓடி வந்தாராம். கலர் எல்லாம் குருவி மேலே கொட்டிடுத்தாம். குருவி அலறி பொடச்சுண்டு அங்கேந்து பறந்து போயிடுத்தாம்.


பயந்து போன குருவி தன்னோட மரத்துக்கு போச்சாம். அங்க இருந்த மத்த குருவி எல்லாம் நீ யார்டா ந்னு கேட்டுதாம்.
என்னடா இப்படி கேக்கறீங்க? நாந்தான் குட்டி குருவின்னு சொல்லித்தாம்.
போப்போ! குட்டிக்குருவி இப்படி எல்லாம் இருக்காது. ஏன் நாங்க யாருமே இப்படி கலர் கலரா இருக்க மாட்டோம். மரியாதையா போயிடு ந்னு வெரட்டிடுத்தாம்.
என்னடா செய்யறதுன்னு யோசிச்ச குருவி ஆந்தைகிட்டே போய் யோசனை கேக்கலாம்ன்னு பறந்து போச்சாம். கதய கேட்ட ஆந்த “ம்ம்ம்ம் ரொம்ப சிக்கல்தான். யோசிச்சு சொல்லறேன். அந்த மரத்துல உக்காந்துண்டு இரு” ன்னு சொல்லித்தாம். குருவியும் அது காட்டின மரத்துல உக்காந்துண்டு அக்கம் பக்கம் பாத்துதாம். அங்க ஒரு கொளம் இருந்துதாம். ஒண்ணும் சாப்பிடவே இல்லையே. கொஞ்சம் தண்ணியாவது குடிக்கலாம்ன்னு கொளத்துக்கு போச்சாம். குனிஞ்சு கொளத்துல தண்ணி குடிக்கறப்ப ..
தொப்புன்னு கொளத்துல விழுந்துடுத்தாம்தானே?
ஆமா. கொளத்துல விழுந்துடுத்து. சுதாரிச்சு எழுந்து கரைக்கு தத்தி தத்தி போயிடுத்தாம். கரைலேந்து பாத்தா தண்ணி கலர் கலரா ஆயிடுத்து! ஆச்சரியத்தோட பாத்துண்டு இருந்த குருவிகிட்ட ஆந்த வந்து நீ பழயபடி ஆயிட்டே. உன் இடத்துக்கு திரும்பிப்போ ந்னு சொல்லித்து. அப்படியான்னு குருவியும் சந்தோஷமா ஒடம்ப பாத்துதாம். கலர் போய்டுத்து! அப்பறம் அது பறந்து தன்னோட மரத்துக்கு போச்சு. அந்த இருந்த குருவி எல்லாம் “டேய், நீ இல்லாதப்ப ஒரு பறவை வந்து தாந்தான் நீ ந்னு சொல்லி எங்கள ஏமாத்தப்பாத்துதுன்னு சொல்லித்தாம். குருவி இல்லடா நாதான் அதுன்னு சொல்லித்து.
மத்த குருவி எல்லாம் நம்பலை. அப்பறம் குருவி தன்னோட ரெக்கைல இன்னும் ஒட்டிண்டு இருந்த கலரை எல்லாம் காட்டித்தாம். அப்பறம்தான் அதுங்க நம்பித்து. எப்படி இப்படி ஆச்சுன்னு கேட்டுதாம். குருவி சொன்ன கதையை கேட்டு ரொம்ப ஆச்சரியப்பட்டுடுத்தாம்.

கொர்ர்ர்ர் கொர்ர்ர்...

Thursday, May 5, 2016

குழந்தைக்கதைகள் - 2

ஒரு ஊர்ல ஒரு குட்டிப்பொண்ணு இருந்தாளாம். அவ இப்படீஈஈ தோட்டத்துக்கு போனாளாம். அங்க ஒரு நாய்க்குட்டி இருந்ததாம். அந்த நாய்க்குட்டி சோகமா இருந்ததாம். அந்த பொண்ணு நாய்க்குட்டிகிட்ட “ஏன் சோகமா இருக்கே?” ன்னு கேட்டாளாம். நாய்க்குட்டி “அம்மா திட்டினா” ந்னு சொல்லித்தாம். “அச்சோ பாவமே! ஏன்?” ந்னு கேட்டாளாம். நா முக்கியமான பேப்பரை எல்லாம் கடிச்சி கொதறி போட்டேன். அதனால திட்டின்னா” ந்னு சொல்லித்தாம். “அட, அது போன மாசம்ன்னா?” ந்னு சொன்னாளாம். ஆமாம்ன்னு சொல்லித்தாம்.

சரி வா போலாம்ன்னு பொண்ணு நாய்க்குட்டிய அழச்சுண்டு போனாளாம். அங்க ஒரு பூன இருந்துதாம். அதுவும் அழுதுண்டு இருந்துதாம். “ஏன் அழற?” ந்னு நாய்க்குட்டி கேட்டுதாம். “இந்த கால்ல அடிப்பட்டுது; அதனால அழறேன்” ந்னு சொல்லித்தாம். “இந்த கால்லயா? ஒண்ணும் காயமே காணமே! நல்லாத்தானே இருக்கு? எப்ப அடி பட்டது?” ந்னு நாய்க்குட்டி கேட்டுதாம். அதுக்கு “போன மாசம் இங்க லேசா அடிபட்டது” ந்னு பூன சொல்லித்தாம்.  “ஏண்டா யாரும் போன மாசம் லேசா பட்ட அடிக்கு இப்ப அழுவாங்களா?” ந்னு நாய்க்குட்டி கேட்டுதாம். “ஏன் நீ மட்டும் போன மாசம் உங்க அம்மா திட்டினதுக்கு இப்ப சோகமா இருக்கலையா?” ந்னு பூன கேட்டுதாம்.

அந்த பொண்ணு ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி விளையாட அழைச்சுண்டு போனாளாம்.

Wednesday, May 4, 2016

குரங்கும் குட்டிகளும்

 ஒரு காட்டில ஒரு குரங்கு இருந்துதாம். அதுக்கு ரெண்டு குட்டி இருந்துதாம். ஒரு நாள் அம்மா குரங்கு ரெண்டுத்தையும் விட்டுட்டு “சமத்தா இருங்கோ; நான் போய் வாழைப்பழம் கொண்டு வரேன்”னு போச்சாம். சரிம்மான்னு சொல்லிட்டு ரெண்டு குட்டியும் மரத்து மேல சமத்தா விளையாடிண்டு இருந்துதாம்.
கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா கொரங்கு திரும்பி வந்துதா? ரெண்டும் ஜாலியா “ஹை அம்மா வந்தாச்சு, அம்மா வந்தாச்சு”ன்னு கத்தித்தாம்.
தலைய தூக்கி பாத்த அம்மா கொரங்கு “டேய் பசங்களா! குதிங்கடா”ன்னு கத்தித்து.
ரெண்டு குட்டில சின்ன கொரங்கு உடனே  ‘பொத்’ ந்னு குதிச்சுடுத்து. கொஞ்சம் பெரிசா இருந்த குட்டிக்குரங்கு ’எதுக்கும்மா?’ ன்னு கேட்டுண்டு அங்கயே இருந்தது.
கீழ குதிச்ச குட்டியை அம்மா கொரங்கு போய் பிடிச்சுண்டுடுத்து.
அந்த குதிக்காத குட்டிய ‘கா தெ ஸ்னேக்’ வந்து உடம்ப சுத்தி இறுக்கித்து. குட்டி “ஐயோ அம்மா!” ன்னு அலறித்து. அம்மா குரங்கு உடனே பக்கத்துல இருந்த தென்ன மரத்து மேல ஏறித்து. ஒரு தேங்காய பறிச்சு கா மேல போட்டுது. கா க்கு தலை சுத்தித்து. அது குரங்கை பிடிச்சு இருந்ததை விட்டுடுத்து, கொரங்கு குட்டி கீழே விழுந்தது. அதுக்குள்ள அம்மா கொரங்கு கீழே போய் அத பிடிச்சுண்டுடுத்து.
அந்த குட்டி “அம்மா, உடம்பெல்லாம் வலிக்கறது. ஊ பட்டுடுத்து”ன்னு அழுதுது. “சரியாப்போயிடும். நீ நா குதின்னு சொன்னத உடனே கேக்காம இருந்தாலத்தானே இப்படி ஆச்சு? இனிமே இப்படி செய்யாதே!” ன்னு சொல்லித்தாம்.
சரிம்மா; இனிமே நீ சொன்னா…
“அம்மா சொன்னா உடனே கேக்கணும். அதானே நீதி தாத்தா?”

ஹிஹிஹி! ரைட்டு. தூங்கு!

Saturday, March 12, 2016

சபதம்

Swot ஆராய்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
நீ ரொம்ப பிடிவாதக்காரன். எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்கணும்ன்னு பார்ப்பாய். அதான் உன் பலம்.
உன் திறமைப்பத்தி உனக்கே தெரியாது. நல்லா பாட வரும்ன்னு உனக்கு நினைப்பு. இல்லைன்னு யாரானா சொன்னா ஒத்துக்க மாட்டே. உன்னை யாரானா புகழ்ந்துட்டா தலை கால் தெரியாம போயிடும்; மயங்கிடுவே. அவங்கள அப்படியே நம்பிடுவே. இப்படி எல்லாம் இருந்தா உருப்பட முடியாது…
கோபம் கொப்பளித்தது. போதும் போதும்! அப்படியா நினைக்கிறீங்க? செஞ்சு காட்டறேன் பாருங்க! காலாகாலத்துக்கும் என்னைப்பத்தி மக்கள் பேசறா மாதிரி செஞ்சு காட்டறேன் பாருங்க! சூளுரைக்கப்பட்டது.

சூளுரைத்த காகம் கோபமாக வெளியேறி பறந்தது. ஊரை அடைந்து மரத்தில் அமர்ந்து வடை சுட்டுக்கொண்டு இருந்த கிழவியை பார்த்தது!