Thursday, August 23, 2012

வைத்தியம்.


இருப்பிடத்திலிருந்து வெளியே வந்தார் எறும்புச்சித்தர்.
"என்னம்மா விஷயம்?"
பையனை முன்னிறுத்தினாய் அந்த தாய். “ஐயா, இவனுக்கு உடம்பு சரியில்லே. கொஞ்சம் கவனிக்கணும்."
சிறுவன் கீழ்படிந்து வணங்கினான்.
"என்னப்பா உன் பெயர்?"
"ஸ்ரீநிவாசன்."
"என்ன உனக்கு?"
தாய் இடைமறித்தாள்... "சுறுசுறுப்பே போதலைங்க. எப்பவுமே சோர்ந்திருக்கிறான்."
"அடடா? அது நம் வம்சத்துக்கே கெட்ட பெயராச்சே!"
"ஆமாம். ஐயா, அதனாலத்தான் உடனே கூட்டி வந்தேன்."
"ஏன் தம்பி இப்படி இருக்கிறாய்?"
"என்ன செய்வேன் ஐயா? வேலைக்கு போகத்தான் நினைக்கிறேன். உடம்பு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது."
"உம், சரிதான். அம்மா இவனை இங்கேயே விட்டுச்செல். ஒரு மண்டல காலம் இங்கிருந்து நான் காட்டும் புனித நீரை தினசரி அருந்தி வரட்டும். எல்லா உபாதைகளும் சரியாகிவிடும்."
"சரி ஐயா! அப்படியே ஆகட்டும். மிக்க நன்றி."

அடுத்த நாள் காலை சித்தர் ஸ்ரீநிவாசனை எழுப்பினார். "எழுந்திரப்பா, வெகு தூரம் போக வேண்டும்."
"இதோ தயார் ஐயா."
இருவரும் பரபரவென்று வெளியே வந்தார்கள். சித்தர் செல்லும் திசையிலேயே தானும் முடிந்த வேகத்தில் போகலானான். சுற்றி இருந்த எல்லாரும் புதியவர்கள். அவரவர் ஒவ்வொரு திசையில் விரைந்து கொண்டிருந்தார்கள். எதிரும் புதிருமாக வந்தவர்கள் ஒவ்வொருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டார்கள். சித்தர் இவனுக்காக அங்கங்கே பொறுமையுடன் காத்திருந்தார். நீண்டபயணம்.

ஒரு வழியாக சித்தர் ஓரிடத்தில் மறைவாக உட்கார்ந்து கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்தான் ஸ்ரீநிவாசன். யாரையும் காணவில்லை. இங்கே வந்து உட்கார் என்பது போல சைகை செய்தார் சித்தர். பெரும் காற்று வீசிக்கொண்டு இருந்தது. கொஞ்ச தூரத்தில் மிகப்பெரிய உருவம் ஒன்று அமர்ந்து ஏதோ ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தது. அது கைகளை இங்கும் அங்கும் நகர்த்திய போது பெரும் நிழல் இங்கும் அங்கும் விரைந்தது. ஸ்ரீநிவாசனுக்கு இது முற்றிலும் புது அனுபவம். பயந்துபோய் உட்கார்ந்திருந்தான். சற்று நேரத்தில் டிங் டிங் டிங் என்று பெரும் ஓசை எழுந்தது. சித்தர் எழுந்து அந்த ஓசை வந்த திசை நோக்கி வணங்கினார். ஏதும் புரியாமல் இவனும் வணங்கினான். சற்று நேரத்தில் சிவப்பு ஒளி ஒன்று விண்ணில் சுழன்றது. பயந்து போனவனை சித்தர் அமைதிப்படுத்தினார்

மெதுவாக பயம் நீங்கி சுற்றும் முற்றும் பார்த்தான். அட! வெளுப்பாக நீர்த்த பொருள் இங்கும் அங்கும் கிடந்தது. ஏனோ அதை குடிக்கத்தோன்றியது. கிளம்பியவனை சித்தர் சைகையால் அமர்த்தினார். சற்று நேரத்தில் அந்த பெரிய உருவம் நகரத்தொடங்கியது. சித்தர் வாவாவென்று சைகை செய்தார். திடீரென்று பெரும் கூட்டம் அங்கே கூடிவிட்டது. இவர்கள் இது வரை எங்கிருந்தார்கள்? ஆளுக்கு ஆள் அந்த நீர்த்த திரவத்தை சுற்றிக்கொண்டு குடிக்கலானார்கள். ஸ்ரீநிவாசனும் ஒன்றை அணுகி, அதிலிருந்து நீரை தலையில் தெளித்துக்கொண்டான்; வயிறு முட்டக்குடித்தான். சற்றைக்கெல்லாம் திரவம் காலியாகிவிட்டது! வந்த வேகத்திலேயே அனைவரும் கலைந்து போனார்கள். சுற்றும் முற்றும் பார்க்க இப்போது சித்தர் மட்டுமே சிரித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். விரைந்து போய் அவர் அடி பணிந்தான்.  
"ஐயா இது தேவாம்ருதம் போல் இருக்கிறது. இப்போதே எனக்கு சுறு சுறுப்பு வந்து விட்டாற்போலிருக்கிறது."
 அவர் சிரித்தார். "ஆமாம்ப்பா. அப்படித்தான் இருக்கும். ஆனால் இந்த நிலை நீடித்து இருக்க ஒரு மண்டலம் இந்த நீரை பருகுவாயாக! இனி நீயே இங்கு வரலாமில்லையா? பயமில்லையே?"
"நல்லது ஐயா! பயமில்லை!"

வெங்கட்ராமன் எழுந்திருந்தார்." அடியே எறும்பெல்லாம் போகட்டும்; அப்புறம் சுத்தம் பண்ணு" என்றவாறு பூஜை அறையை விட்டு வெளியே போனார்.