Thursday, August 11, 2016

பெரியவளா ஆன பிறகு நீ என்னவா ஆவே?

தாத்தா ஒனக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் எனக்கு கத்துக்கொடுத்துடு. நா பெரிசானப்பறம் டாக்டராவோ டீச்சராவோ ஆவேன் இல்ல..... டாக்டரா ஆகணும்ன்னுதான் நெனக்கறேன்.... அப்பறம் நான் மத்தவாளுக்கு எல்லாத்தையும் கத்துக்கொடுக்கணும் இல்ல?
-பேத்தி

ஒரூர்ல ஒரு குட்டி பொண்ணு இருந்தாளாம். அவ ஸ்கூல டீச்சர் ஒரு நாள் ஒரு கேள்வி கேட்டாளாம். நீங்க எல்லாரும் பெரியவனா இல்ல பெரியவளா ஆனபிறகு என்னவா ஆவீங்க?
ஒரு பையன் சொன்னான்: நா வக்கீலா ஆவேன். இன்னொரு பையன் சொன்னான் நா எஞ்சின் ட்ரைவரா ஆவேன். ஒரு பொண்ணு சொன்னா நா டாக்டரா ஆவேன். இன்னொரு பையன் சொன்னான் நா பேஷண்டா ஆவேன்!
இப்படி எல்லாரும் சொல்லறப்ப கடைசியா குட்டிப்பொண்ணு முறை வந்துது. இவ எழுந்தப்ப ஸ்கூல் பெல் அடிச்சுடுத்து. டீச்சர் சரி நீ நாளைக்கு சொல்லுன்னு சொல்லிட்டா.
குட்டிப்பொண்ணுக்கு குழப்பம். நா பெரியவளா ஆனா என்னவா ஆகணும்? இந்த டீச்சர் மாதிரி ஆகலாமா? எவ்வளோ பேர் இவங்களுக்கு பணிஞ்சு நடக்கறாங்க.

இப்படி யோசிச்சுக்கொண்டே நடந்தா. டீச்சர் நேரா ஸ்கூல்லேந்து ஒரு டாக்டரோட க்ளினிக்குக்கு போனா. போய் அங்கே உக்காந்தா. அட நம்ம டீச்சர் ஒரு டாக்டரோட இடத்தில போய் காத்துக்கொண்டு இருக்காளே? நாம டாக்டராகலாமா? கொஞ்ச நேரம் கழிச்சு அந்த டாக்டர் வெளியே வந்தாங்க. பக்கத்தில இருந்த ஒரு கடைக்கு போனாங்க. ஏதோ வாங்கிட்டு கடைக்கார அம்மாவுக்கு நிறைய காசு கொடுத்தாங்க.

அட! நாம் கடைக்கார முதலாளி ஆகலாம். நிறைய காசு கிடைக்கும்ன்னு அந்த குட்டிப்பொண்ணு நினைச்சா. அப்ப ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அக்கா வந்தா. கடைக்கார அம்மாகிட்ட ஏதோ பேசிட்டு கிளம்பிட்டாங்க. வழில இருந்த போலீஸ்காரங்க எல்லாரும் அவங்களுக்கு சல்யூட் அடிச்சாங்க. பாத்தியா எல்லாரும் இவங்களுக்கு எவ்ளோ மரியாதை கொடுக்கறாங்க. நாம போலீஸ் இன்ஸ்பெக்டராத்தான் ஆகணும். இப்படி நினைச்சுகிட்டு இருக்கறப்ப அந்த இன்ஸ்பெக்டர் கோர்ட்டுக்கு போனாங்க. அங்க உள்ளே நுழைஞ்சு யாருக்கோ சல்யூட் அடிச்சாங்க. அட இவங்க யாருக்குடா சல்யூட் அடிக்கறாங்கன்னு இவளும் உள்ளே போய் பாத்தா. அங்கே ஒரு ஜட்ஜ் அம்மா உக்காந்துகிட்டு இருந்தாங்க!
சரி சரி அப்ப நாமளும் ஜட்ஜாத்தான் ஆகணும்ன்னு குட்டிப்பொண்ணு நினைச்சா.

இப்படி யோசிச்சுக்கொண்டே பக்கத்தில இருந்த பூங்கால போய் உக்காந்தா. டீச்சரா? டாக்டரா? கடை முதலாளியா? இன்ஸ்பெக்டரா? ஜட்ஜா? என்னவா ஆகறது நல்லது? குழப்பமா இருக்கே!

அப்ப அந்த ஜட்ஜ் அம்மா உடை மாத்திக்கிட்டு வந்தாங்க. அங்க ஒரு இடத்தில உக்காந்து இருந்த ஒரு அம்மாகிட்ட போய் பேசிட்டு அவங்களை வணங்கிட்டு திரும்பினாங்க. குட்டிப்பொண்ணுக்கு ஒரே ஆச்சரியம். திரும்பி வந்த அவங்ககிட்ட இவ போய் “அம்மா வணக்கம். நீங்கதான் ஊர்லேயே பெரிய ஜட்ஜ் ஆச்சே? அவங்களுக்கு ஏன் வணக்கம் சொன்னீங்க?” ன்னு கேட்டா. அவங்க சிரிச்சுகிட்டே “அவங்கதான் என் அம்மா. நா நேர்மையான வக்கீலா இருந்து ஜட்ஜ் ஆனதுக்கு அவங்களோட வளர்ப்புதான் காரணம். தினமும் இன்னேரத்துக்கு இந்த பூங்காவில வந்து உக்காந்து இருப்பாங்க. நானும் வேலை முடிஞ்சு தினமும் இங்க வந்து அவங்ககிட்ட பேசிட்டுப்போவேன்” அப்படின்னாங்க

அட ந்னு ஆச்சரியப்பட்டுகிட்டே இருந்தப்ப அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும் வந்து பேசிட்டு வணக்கம் சொல்லிட்டு போனாங்க. போறப்ப குட்டிப்பொண்ணு “நீங்களும் அவங்களோட மகளான்னு கேட்டா. ஆமா! நா இவ்வளோ தைரியசாலியா இன்ஸ்பெக்டரா ஆகறதுக்கு அவங்க என்னை வளர்த்த விதம்தான் காரணம்” ந்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்திலேயே கடைக்கார முதலாளியும் வந்து பழங்கள் கொடுத்து வணக்கம் சொன்னாங்க. குட்டிப்பொண்ணு கேட்டதுல அந்த அம்மாதான் இவங்களுக்கு தைரியம் சொல்லி கடை வைக்க உதவி பண்ணாங்கன்னு தெரிஞ்சது. இவங்களைப்போலவே அடுத்து வந்த டாக்டரும் அவங்களோட பொண்ணுதான். மத்தவங்களுக்கு கருணை உள்ளத்தோட சேவை செய்யணும்ன்னு தன் அம்மா சொல்லி வளத்ததா சொன்னாங்க. டாக்டர் அவங்க அம்மாகிட்ட பேசிக்கொண்டு இருந்தப்ப குட்டிப்பொண்ணு நேரமாச்சுன்னு வீட்டுக்குப்போயிட்டா.

அடுத்த நாள் ஸ்கூல்ல குட்டிப்பொண்ணுகிட்ட டீச்சர் சொன்னங்க: “உம். இப்ப நீயும் சொல்லி முடிச்சுடு. பெரியவளா ஆன பிறகு நீ என்னவா ஆவே?”
குட்டிப்பொண்ணு தயக்கம் இல்லாம சொன்னா: “ஒரு நல்ல அம்மாதான் தன் பொண்ணுங்களையும் பையன்களையும் நேர்மையா தைரியசாலியா, கருணை உள்ளத்தோட வளக்க முடியும். அதனால நான் ஒரு நல்ல அம்மாவா ஆவேன்!”

இத கேட்டு டீச்சரோட சேந்து எல்லாரும் கைதட்டினாங்களாம்!