Wednesday, October 3, 2012

முதுமையில் தனிமை

கோபத்துடன் காரில் ஏறி அமர்ந்தாள் ரமா.
"இத பாருங்க, இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும். மிஸஸ் கோபி
கிண்டலடிக்கிறாள், என்ன பேபி சிட்டிங்க்கு ஆள் கிடைக்கலியான்னு...”

மௌனமாக காரை கிளப்பினார் சுந்தரம். கார் மழையால் நனைந்த சாலைகளில்
விரைந்து சீக்கிரமாக வீட்டை அடைந்தது. ஓட்டமும் நடையுமாக விரைந்து சாவியை
பொருத்தி கதவை திறந்தார். ஹாலில் முதியவர் சோபாவில் ஒருக்களித்து படுத்து
இருந்தார். பக்கத்தில் போன் ஹாண்ட் செட் கிடந்தது.

“சாரிடா, பாத்ரூமில வழுக்கி விழுந்துட்டேன். சரியா கண்ணு தெரியலை. கீழே
சோப் கிடந்ததை பார்க்கலை.”
" போறது. அடி ஒண்ணும் பலமா இல்லையேப்பா?”
“இடுப்புகிட்டதான வலி இருக்கு. நடக்க முடியலை!”
கிட்டே போய் சோதித்தார். "ஒண்ணும் பெரிசா இருக்கிறதா தெரியலைப்பா. போய்
படுத்துக்கலாம். சாப்டாச்சா?”
“உம், ஆச்சு.”
கைத்தாங்கலாக படுக்கையறைக்கு அழைத்துப்போனார். நிதானமாக படுக்க
வைத்துவிட்டு, வலிக்கும் தூக்கத்துக்கும் மாத்திரையை கொடுத்து விட்டு,
ஹாலுக்கு திரும்பினார் சுந்தரம்.

மனைவி உர்ரென்று இருப்பது தெரிந்தது. என்ன செய்வது, இவள் கோபத்தை
அடக்குவது முடியாத சமாசாரம். நாப்பது வருஷங்களாக தெரிந்த விஷயம்தானே.
இவளை அடக்க ஒரே ஆசாமிதான் உலகத்தில் உண்டு; இவளுடைய மகன். அதென்னவோ
யாருக்கும் அடங்காதவள் மகன் சொன்னால் கேட்பாள். எதிர்த்து வாதம்
செய்தாலும் கடைசியில் அவனுக்குத்தான் விட்டுக்கொடுப்பாள். மற்ற எல்லோருமே
துச்சம்தான். ஹும்! மௌனமாக சாப்பிடப்போனார்.

சுப்ரமணியன்  படுக்கையில் நிம்மதியில்லாமல் தவித்தார். புரண்டு படுத்தால்
பரவாயில்லை போல் இருந்தது. மெதுவாக திரும்ப முயற்சி செய்தார். வலி இதோ
இருக்கிறேன் என்று உரத்து அறிவித்தது. பல்லைக்கடித்துக்கொண்டு வலது
பக்கமாக ஒருக்களித்துக் கொண்டுவிட்டார்.  பத்து முறை பெரிய மூச்சு
எடுத்து விட வலி மெதுவாக குறைந்தது.

வலிக்குத் தெரியுமா, இவர் ரிடையர்ட் செக்ரடரி என்று? இல்லை
தெரிந்தால்தால் அது அதை மதிக்குமா? இவர் வருகிறார் என்றாலே ஆபீஸ் ஒட்டு
மொத்தமாக அலறுமே! அது வரை வேலை செய்யலாமா வேண்டாமா என்று யோசித்தவர்கள் எல்லாம் சுறுசுறுப்பாகிவிடுவார்கள். இவர் வேலை வாங்கும் கடுமையை பார்த்து அலறி வேறு டிபார்ட்மெண்டுக்கு மாற்றம் வாங்கி போனவர்கள் உண்டு. இவரது
நேர்மையையும் வேலை  நேர்த்தியையும் வியந்தவர்களும் உண்டு.

அப்படி இருந்த எனக்கு இப்படி ஒரு நிலமையா!  கண்ணசைவுக்காக பத்து பேர்
காத்திருந்த நாட்கள் போய், இப்போது கூப்பிடக்கூட ஆள் இல்லை. எல்லாம் காமு
போன பிறகு மோசமாகிவிட்டது. அவள் எப்படியோ எல்லாவற்றையும்
இழுத்துக்கட்டிக்கொண்டு போனாள். வேலையே கதியாக இருந்தவருக்கு  மருமகள்
இடக்கு என்று அரசல் புரசலாகத்தான் தெரியும்.  இருந்தாலும் இவருக்கு ஒரு
பாதிப்பும் இல்லாமல் வாழ்கை ஓடிவிட்டது. மருமகளுக்கு சினிமா, கிளப்,
பார்ட்டி என்று புதுதில்லி மேல்தட்டு ஜனங்களுடன் பழகுவதே பிடித்தம்.
அதற்கு மட்டும் ஃபினான்ஸ் செக்ரடரியின் நாட்டுபெண் என்ற ஹோதா வேண்டி
இருந்தது. அந்த ஆதாரத்தில் ஏணியில் மேலே ஏறியாகிவிட்டது. இப்போது வயது
அறுபதாகியும் விட மனமில்லை.

சாப்பிட்ட உணவு ஜீரணமாக மறுத்துக்கொண்டு இருந்தது. சமையல்காரி
ஜனங்களுக்கு சாப்பாட்டு விஷயத்தில் வைராக்கியம் வர வேண்டும் என்ற உயர்ந்த
கருத்துடையவள் போலிருக்கிறது. உப்பு சப்பில்லாமல் ஒரு குழம்பு, ரசம்.
ஹும்! காமு சமைத்தால் இப்படியா இருக்கும்? அவள் செய்யும் மிளகு
குழம்புக்கு ஈடு இணை உண்டா? நினைக்கும் போதே வாயில் எச்சில் ஊறுமே!

என்ன செய்வது! இந்த எண்பத்தி ரெண்டு வயதில் கண்ணும் சரியாக தெரியவில்லை,
காதும் கேட்கவில்லை. ஆனாலும் நாக்கு சுவையாக கேட்கிறது.... கட்டிப்போட
முடியவில்லை. ருசியாக சாப்பாட்டுக்கு வழி இல்லை என்றாலும் மோசமாக
இல்லாமல் இருக்கக்கூடாதா! இன்றைக்கு உப்பு அதிகம் என்று சொன்னால் நாளை
உப்பே இல்லாமல் போய்விடும். அல்லது காரம் அல்சரை உண்டாக்கும் அளவு
இருக்கும். ஆளை மாத்து என்றால் பேசாதீங்க, இவ கிடைச்சதே பெரிய விஷயம்
என்கிறார்கள். இவர்களுக்கு என்ன! முக்காலே மூணு வீச வேளை ஹோட்டலிலோ
பார்டியிலோதான் சாப்பாடு.

அலுத்துக்கொண்டே மாத்திரையின் விளைவில் மெதுவாக தூங்கிப்போனார் சுப்ரமணியன் .

அடுத்த நாள் காலை உணவு சமயத்திலேயே ஆரம்பித்துவிட்டாள் ரமா.
“இதோ பாருங்க, இன்னிக்கு ஒண்ணில ரெண்டு பாத்துடப்போறேன். ஒரு சினிமா
முழுக்க பார்க்க முடியலை, ஒரு பார்டி கூட முழுக்க அடெண்ட் பண்ண முடியலை.
வீட்டிலேயாவது டிவில சினிமா பார்க்கலாம்னாலும் அதுவும் முடியலை.
உங்கப்பாவுக்கு சிஷ்ருஷை எல்லாம் என்னால செய்ய முடியாது. பேசாம முதியோர்
இல்லத்துல கொண்டு விட்டுவிட வேண்டியதுதான்.”
“சுளையா நாப்பதாயிரம் பென்ஷன் வரது அவருக்கு. ஹி டிசர்வ்ஸ் பெட்டர்”
“நாப்பதாயிரம் யாருக்கு வேணும்! என் பிள்ளை அமெரிக்காவிலிருந்து மாசம்
லட்ச ரூபா அனுப்பறான். நான் சொன்ன இடத்தில அருமையா கவனிச்சுக்கிறாங்க.
ஒரு குறையும் இருக்காது.  இவரை கவனிச்சுக்க என்னால முடியாது”
“அவர் ஒத்துல்லையே!”
“அதுக்குத்தான் தகுந்த ஏற்பாடு செய்திருக்கேனே!”
“இருந்தாலும் நீ சொல்லறது ரொம்ப கொடுமை ரமா!”
“கொடுமையாவது மண்ணாவது. இங்கே நாம கவனிச்சுக்கறதைவிட அங்கே நல்லாவே
கவனிச்சுப்பாங்க.”
“ஆனா....”
“மேலே பேசாதீங்க. எல்லாம் நான் கவனிச்சுக்கிறேன்.”

மாலை நாலு மணிக்கு சுப்ரமணியனுக்கு ஆச்சரியம். என்ன இது மருமகள் கூப்பிடுகிறாளே!
“அப்பா, வாங்க, ஆஸ்பத்திரி போய் டெஸ்ட் பண்ணிண்டு வந்துடலாம்.”
“எனக்கு ஒண்ணுமில்லையேமா. நேத்து அடிப்பட்ட வலி கூட இன்னிக்கு லேசாத்தான் இருக்கு.”
“அதெல்லாம் நம்ப முடியாதுப்பா. தலையில வேற அடிபட்டிருக்கு. ஒரு ஸ்கேன்
பாத்துட்டா நிம்மதியா இருக்கலாம்”
நம்ப முடியாமலே காரில் ஏறி உட்கார்ந்தார். சுந்தரம் வழக்கம் போல மௌனமாகவே
வண்டியை ஓட்டினார். இருந்தாலும் ஏனோ அமைதியில்லாமல் இருந்தாற்போல
தோன்றியது.
“ஏண்டா சுந்தரம் உன் உடம்புக்கு ஒண்ணுமில்லையே!”
“இவருக்கு ஒண்ணுமில்லைப்பா” மருமகளிடமிருந்து பதில் வந்தது.
இதை இவன் சொல்லக்கூட வாய் இல்லை பார் என்று நினைத்துக்கொண்டார் சுப்ரமணியன்.
ஆமாம், ஏன் ஊருக்கு வெளியே போய் கொண்டு இருக்கிறோம்?
கார் ஒரு நவீன பெரிய கட்டிடத்தின் முன் போய் நின்றது.

கைத்தாங்கலாக அழைத்து போக நீட்டிய கையை உதறிவிட்டு மெதுவாக நடந்தார்.
சுந்தரம் காரை பார்க் செய்ய ஓட்டிக்கொண்டு போனார்.
சுப்ரமணியன்  லாபியில் ஒரு சோபாவில் உட்கார்ந்தார். "இங்கேயே இருங்கோ,
நான் வரேன்" என்று மருமகள் ரிசப்ஷன் பக்கம் போனாள். அங்கே ஏதோ காகிதங்களை
வாங்கி எழுதுவது தெரிந்தது.
சிலு சிலுவென்றிருந்தது. மேலே பார்த்தார். பேன் சத்தமில்லாமல்
சுற்றிக்கொண்டு இருந்தது. புஜு புஜு என்று இருந்த சோபாவில் இன்னும்
வசதியாக சாய்ந்து கொண்டார். அப்படியே தூங்கிப்போனார்.

 அரை மணி கழித்து முழித்துக்கொண்ட சுப்ரமணியன்  சுற்றும் முற்றும்
பார்த்தார். முன் இருந்த கூட்டம் வெகுவாக குறைந்து போயிருந்தது. உடனடியாக
சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உந்துதல் இருந்தது. அதுதான் அவரை எழுப்பி
இருக்க வேண்டும். சுந்தரம் எங்கே, ரமா எங்கே? கண்ணுக்கு எட்டிய இடங்களில்
காணவில்லை.  எங்கேயாவது ஏற்பாடு செய்ய போயிருக்க வேண்டும். வந்து
விடுவார்கள்.
இன்னும் சற்று நேரம் போக உபாதை அதிகமாகியது. உட்கார முடியவில்லை. மெதுவாக
தட்டுத்தடுமாறிக்கொண்டு எழுந்தார். அப்போது ரிசப்ஷனில் இருந்த பெண்மணி
இவரை பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த சிப்பந்தியிடம் ஏதோ சொன்னாள். அவர்
விரைந்து வந்தார்.
“என்ன சார், என்ன வேண்டும்?”
“உடனடியாக டாய்லெட் போக வேண்டும்.”
"இப்போதே அழைத்துப்போகிறேன். உங்கள் ரூமுக்கே போகலாம்.”
"என் ரூமா?”
“ஆமாம் சார், 28 ஆம் நம்பர் ரூம் உங்களுடையது. நீங்கள் தூங்கிவிட்டதால்
அப்போதே அழைத்துப்போகவில்லை.”
முதலில் உபாதை நீங்கினால் போதும் என்றிருந்தது. சிப்பந்தியின் உதவியுடன்
அறைக்கு போனார். டாய்லெட் போனபின் அப்பாடா என்றிருந்தது. பின்
சிப்பந்தியின் உதவியுடன் அறையில்  இருந்த சோபாவில் உட்கார்ந்தார். பெரிய
அறை; ஏசி செய்து வசதியாகத்தான் இருக்கிறது. அவரது பெட்டி ஒன்று ஓரமாக
வைக்கப்பட்டு இருந்தது. முன்னேற்பாடு நிறையவே இருந்திருக்கிறது!
“இது என்ன இடம்?”
“முதியோர் இல்லம் சார்.”
“என்னுடன் வந்தவர்கள்?”
“நீங்கள் தூங்கிக்கொண்டு இருந்தீர்களா, எழுப்பி தொந்திரவு கொடுக்க
வேண்டாம் என்று சொல்லி போய் விட்டார்கள்!”
முதியோர்  இல்லத்து செக்ரடரி அவருடைய சம்மதம் இல்லாமல் சேர்க்க முடியாது
என்று சொன்னதும் அந்த பெண்மணி எப்படி செய்வீங்களோ தெரியாது,
சமாதானப்படுத்தி பாத்துக்குங்க, இந்தாங்க டொனேஷன் என்று சொல்லி
அலட்சியமாக ஒரு பெரிய கட்டு ரூபாய் நோட்டுகளை மேசை மேல் போட்டதும் அவன்
நினைவில் ஒரு கணம் வந்து மறைந்தது. முகத்தை திருப்பிக்கொண்டு  "என்ன
வேணுமானாலும் இந்த மணியை அடிங்க சார். இல்லை இன்டர்காம்ல கூப்பிடுங்க.
நாங்க யாரான வந்து பாத்துப்போம் " என்று சொல்லி வெளியே போனான் சிப்பந்தி.

கொடுமையிலும் கொடுமை முதுமையில் தனிமை என்று நினைத்துக்கொண்டார்
சுப்ரமணியன் . யோசிக்கலானார். சற்று நேரம் பலத்த யோசனையில் கழிந்தது.
ஒரு முடிவுக்கு வந்தவராய் சுற்று முற்றும் பார்த்தார். பக்கத்திலேயே
டெலிபோன் இருந்தது. அதை எடுத்தார்.

"நான் அமெரிக்காவில் இருக்கும் என் பேரனுடன் பேச முடியுமா?”
“முடியுமே சார்! உங்கள் கணக்கில் நிறைய பணம் இருக்கிறது”
"நல்லது. பெயர் ஸ்ரீநிவாசன்.”
"நம்பர் சார்?"
நம்பரை சொன்னார்.
உடனேயே தொலைபேசி இணைப்பு கிடைத்தது.
“தாத்தா! வாட் எ சர்ப்ரைஸ்! எப்படி இருக்கீங்க!”
“ஏதோ இருக்கேன்ப்பா”
அடுத்த ஐந்து நிமிடங்களில் நடந்ததை சொன்னார்.
“இப்ப எதுக்கு போன் பண்ணேன்னா, இதே மாதிரி உன் அப்பா, அம்மாவுக்கு நீ
செய்துட மாட்டயே? ப்ராமிஸ் பண்ணு!”
“ப்ராமிஸ் தாத்தா, இப்படி பண்ணவே மாட்டேன்!”
“அது போதும்டா!”

என்ன ஆயிடுத்துன்னு இப்படி உம்முன்னு உக்காந்து இருக்கீங்க? என்றாள் ரமா.
பதில் இல்லை.
கண கண என்று போன் மணி சத்தம் கேட்டது.
“அட, ஸ்ரீநிவாசனா! எப்படி இருக்கே? என்ன சேதி? ”
.......
“அது வந்து இல்லடா....”
......
அடுத்த ஐந்து நிமிஷம் அவளுக்கு பேச வாய்பே கிடைக்கவில்லை. அவளது முகம்
வெளிரிக்கொண்டே போயிற்று. வியர்த்துக்கொட்டலாயிற்று.
“இல்ல, இல்ல, நீயும் உன் பெண்டாட்டியும் இதுக்காக இங்கே வர வேணாம். நான்
நாளைக்கே போய் திரும்ப அழைச்சுண்டு வந்துடறேன்”
.......
“சரி சரி இப்பவே போறேன்.”
தட்டுத்தடுமாறிக்கொண்டு போனை கீழே வைத்த உடனேயே அது திருப்பியும் அலறியது.

“மேடம், நான் முதியோர் இல்லத்திலேந்து பேசறேன்.....”
-------------------------------------------------------------------------------------------

Wednesday, September 19, 2012

மூஞ்சூறு




பூஜைக்கு எல்லா ரெடியாம்மா?

“இதோ ஆயிடுத்துன்னா. இந்த தொல்லை தாங்கலை. எத வெச்சாலும் இழுத்துண்டு போயிடறது” என்று அலுத்தபடியே பூஜை அறையை விட்டு வெளியே வந்தாள் வெங்கடராமனின் சஹதர்மிணி.

சிரித்துக்கொண்டே உள்ளே போய் பூஜையை தொடங்கினார் வெங்கடராமன். வழக்கம் போல் பூஜை பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு சந்தனம் அரைக்கலானார். வாய் ஸ்தோத்திரங்களை முணுமுணுத்தபடி இருந்தது. இதோ ஆயிற்று. தினப்படி பூஜையை முடித்துவிட்டால் பிள்ளையாரை பார்க்கப் போய்விடலாம். என்னதான் பிள்ளையார் சதுர்த்தி என்றாலும் தினப்படி பூஜைதானே பிரதானம்?

ருத்திரம் சமகத்துடன் தினசரி பூஜை முடிந்தது. பஞ்சாயதனத்தை பூஜை பெட்டிக்குள் நகர்த்திவிட்டு கதவை மூடிவிட்டு நேற்று வாங்கி வந்த களிமண் பிள்ளையாரை முன்னுக்கு நகர்த்திக்கொண்டார். “இந்த முறை வாங்கி வந்த குடை எவ்வளவு அழகாக இருக்கிறது? நல்ல கற்பனா ரசத்துடன் செய்திருக்கிறான் யாரோ!” இரண்டு மெல்லிய மூங்கில் துண்டை ஒரு அச்சில் அமைத்து இரண்டுக்கும் நடுவில் காகித வேலை செய்திருந்தது. இரண்டையும் ஸான்ட்விச் போல சேர்த்து  ரப்பர் பான்ட் போட்டு வைத்திருக்க அது பார்க்க கொடி போல இருந்தது. ரப்பர் பான்டை கழட்டிவிட்டு ஒரு மூங்கில் துண்டை ஒரு சுழற்று சுழற்றி ரப்பர் பான்டை திருப்பி பொருத்த, அட அழகு! என்று தோன்றியது.

இதெல்லாம் இருக்கட்டும், மனசு ஈடு படணும் அதானே முக்கியம் என்று நினைத்துக் கொண்டு பூஜையை ஆரம்பித்தார். 

ஏனோ ப்ராண ப்ரதிஷ்டை மந்திரம் தடைப் பட்டது. திருப்பித் திருப்பி நாலு தரம் சொல்ல வேண்டியிருந்தது. மனசு ஏன் இன்றைக்கு இவ்வளவு ஊசலாடுகிறது? பிள்ளையாருக்கு அப்பம், கொழுக்கட்டை, பழங்கள் என்று நிறைய நிவேதனம் செய்து தண்ணீர் சொம்பையும் அவர் பக்கம் நகர்த்தி பூஜையை முடித்து எழுந்திருந்தார்.

மனசு நிறையவே இல்லை. பூஜைக்கு பிள்ளையார் வரவேயில்லை என்று ஒரு உணர்ச்சி! கனத்த மனதுடன் காக்கைக்கு அன்னத்துடன்  கிணற்றடியை தாண்டி தோட்டத்துக்கு போனார். காம்பவுண்ட் சுவர் ஓரத்தில் …. விக்கித்துப்போய் சிலையாக நின்று விட்டார் வெங்கட்ராமன். அரக்க பரக்க வந்த வேலைக்காரி எலிப்பொறியில் தலை நசுங்கி கிடந்ததை “மறந்தே போயிட்டேன்”   என்றவாறு எலிப்பொறியுடன் தூக்கிப்போனாள்.

“ஹே ஜீவனே! நான் தப்பு பண்ணிவிட்டேன்! இந்த பாவியை மன்னிக்க முடியுமா உன்னால? இந்த எலிப்பொறியை தூக்கிப் போடு! ன்னு முன்னேயே சொன்னேன். யாரும் கேட்கலை. சரி அவசியம்ன்னா  கூண்டுப்பொறி வாங்கி வைன்னு சொன்னேன். அதை நானே செய்திருக்கணும். அப்படி ஒண்ணை வாங்கனும்ன்னு எவ்வளோ நாளா நினைச்சு கை வரலை! என் சோம்பேறித்தனம்தான் காரணம். அப்பவே செய்திருந்தால் நீ இப்போ செத்துப்போயிருக்க மாட்டாயோ என்னமோ! பிள்ளையார் சதுர்த்தியும் அதுவுமா…. என் தப்பு! என் தப்பு! என் தப்பு! ஜீவ ஹிம்ஸை செய்துட்டு பூஜை செய்து என்ன பலன்? இவ்வளவு நாள் பூஜை செய்தும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஜீவ காருண்யம் வரலைன்னா என்னதான் பூஜை செய்கிறேன்? மன்னிச்சுடுப்பா மன்னிச்சுடு!”

“என்னன்னா, தீட்டுக்கு குளிக்கற மாதிரி அகாலத்துல குளியல்?” என்று கேட்ட மனைவியை பொருட்படுத்தாமல் உடை மாற்ற உள்ளே சென்றார் வெங்கட்ராமன்.

Thursday, August 23, 2012

வைத்தியம்.


இருப்பிடத்திலிருந்து வெளியே வந்தார் எறும்புச்சித்தர்.
"என்னம்மா விஷயம்?"
பையனை முன்னிறுத்தினாய் அந்த தாய். “ஐயா, இவனுக்கு உடம்பு சரியில்லே. கொஞ்சம் கவனிக்கணும்."
சிறுவன் கீழ்படிந்து வணங்கினான்.
"என்னப்பா உன் பெயர்?"
"ஸ்ரீநிவாசன்."
"என்ன உனக்கு?"
தாய் இடைமறித்தாள்... "சுறுசுறுப்பே போதலைங்க. எப்பவுமே சோர்ந்திருக்கிறான்."
"அடடா? அது நம் வம்சத்துக்கே கெட்ட பெயராச்சே!"
"ஆமாம். ஐயா, அதனாலத்தான் உடனே கூட்டி வந்தேன்."
"ஏன் தம்பி இப்படி இருக்கிறாய்?"
"என்ன செய்வேன் ஐயா? வேலைக்கு போகத்தான் நினைக்கிறேன். உடம்பு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது."
"உம், சரிதான். அம்மா இவனை இங்கேயே விட்டுச்செல். ஒரு மண்டல காலம் இங்கிருந்து நான் காட்டும் புனித நீரை தினசரி அருந்தி வரட்டும். எல்லா உபாதைகளும் சரியாகிவிடும்."
"சரி ஐயா! அப்படியே ஆகட்டும். மிக்க நன்றி."

அடுத்த நாள் காலை சித்தர் ஸ்ரீநிவாசனை எழுப்பினார். "எழுந்திரப்பா, வெகு தூரம் போக வேண்டும்."
"இதோ தயார் ஐயா."
இருவரும் பரபரவென்று வெளியே வந்தார்கள். சித்தர் செல்லும் திசையிலேயே தானும் முடிந்த வேகத்தில் போகலானான். சுற்றி இருந்த எல்லாரும் புதியவர்கள். அவரவர் ஒவ்வொரு திசையில் விரைந்து கொண்டிருந்தார்கள். எதிரும் புதிருமாக வந்தவர்கள் ஒவ்வொருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டார்கள். சித்தர் இவனுக்காக அங்கங்கே பொறுமையுடன் காத்திருந்தார். நீண்டபயணம்.

ஒரு வழியாக சித்தர் ஓரிடத்தில் மறைவாக உட்கார்ந்து கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்தான் ஸ்ரீநிவாசன். யாரையும் காணவில்லை. இங்கே வந்து உட்கார் என்பது போல சைகை செய்தார் சித்தர். பெரும் காற்று வீசிக்கொண்டு இருந்தது. கொஞ்ச தூரத்தில் மிகப்பெரிய உருவம் ஒன்று அமர்ந்து ஏதோ ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தது. அது கைகளை இங்கும் அங்கும் நகர்த்திய போது பெரும் நிழல் இங்கும் அங்கும் விரைந்தது. ஸ்ரீநிவாசனுக்கு இது முற்றிலும் புது அனுபவம். பயந்துபோய் உட்கார்ந்திருந்தான். சற்று நேரத்தில் டிங் டிங் டிங் என்று பெரும் ஓசை எழுந்தது. சித்தர் எழுந்து அந்த ஓசை வந்த திசை நோக்கி வணங்கினார். ஏதும் புரியாமல் இவனும் வணங்கினான். சற்று நேரத்தில் சிவப்பு ஒளி ஒன்று விண்ணில் சுழன்றது. பயந்து போனவனை சித்தர் அமைதிப்படுத்தினார்

மெதுவாக பயம் நீங்கி சுற்றும் முற்றும் பார்த்தான். அட! வெளுப்பாக நீர்த்த பொருள் இங்கும் அங்கும் கிடந்தது. ஏனோ அதை குடிக்கத்தோன்றியது. கிளம்பியவனை சித்தர் சைகையால் அமர்த்தினார். சற்று நேரத்தில் அந்த பெரிய உருவம் நகரத்தொடங்கியது. சித்தர் வாவாவென்று சைகை செய்தார். திடீரென்று பெரும் கூட்டம் அங்கே கூடிவிட்டது. இவர்கள் இது வரை எங்கிருந்தார்கள்? ஆளுக்கு ஆள் அந்த நீர்த்த திரவத்தை சுற்றிக்கொண்டு குடிக்கலானார்கள். ஸ்ரீநிவாசனும் ஒன்றை அணுகி, அதிலிருந்து நீரை தலையில் தெளித்துக்கொண்டான்; வயிறு முட்டக்குடித்தான். சற்றைக்கெல்லாம் திரவம் காலியாகிவிட்டது! வந்த வேகத்திலேயே அனைவரும் கலைந்து போனார்கள். சுற்றும் முற்றும் பார்க்க இப்போது சித்தர் மட்டுமே சிரித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். விரைந்து போய் அவர் அடி பணிந்தான்.  
"ஐயா இது தேவாம்ருதம் போல் இருக்கிறது. இப்போதே எனக்கு சுறு சுறுப்பு வந்து விட்டாற்போலிருக்கிறது."
 அவர் சிரித்தார். "ஆமாம்ப்பா. அப்படித்தான் இருக்கும். ஆனால் இந்த நிலை நீடித்து இருக்க ஒரு மண்டலம் இந்த நீரை பருகுவாயாக! இனி நீயே இங்கு வரலாமில்லையா? பயமில்லையே?"
"நல்லது ஐயா! பயமில்லை!"

வெங்கட்ராமன் எழுந்திருந்தார்." அடியே எறும்பெல்லாம் போகட்டும்; அப்புறம் சுத்தம் பண்ணு" என்றவாறு பூஜை அறையை விட்டு வெளியே போனார்.