Saturday, December 29, 2007

பெண்பார்க்கும் படலம்

அவள் பெற்றோருக்கு ஆச்சரியம். இவள் எப்படி "பெண்பார்க்கும்" நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொண்டாள்?
கீதா சற்று வித்தியாசமானவள். மற்ற பெண்களைப்போல இல்லை. எதெடுத்தாலும் கொஞ்சம் மாறுபட்டு சிறப்பாக செய்வதே அவளுடைய தனித்துவம். அப்படிப்பட்டவள் பெண்பார்க்க வருகிறார்கள் என்றதும் சரி என்று தலையை ஆட்டி விட்டாள். இதுதான் அவள் பெற்றோருக்கு ஆச்சரியம்! "ஏதேனும் ஏடாகூடமாய் செய்ய மாட்டயேடி?” ஆயிரமாவது தடவை அம்மா கேட்டு விட்டாள். புன்னகைதான் பதில். அம்மாவுக்கு வயிற்றில் புளியை கரைத்தது போல்தான் இருந்தது. "பாடலீஸ்வரா, இவள் இடக்கு பண்ணாம எல்லாம் நல்லபடியா முடிய நீதான் பாத்துக்கணும்" என்று அம்மாவின் வாய் முணுமுணுத்தபடி இருந்தது.

ஆயிற்று, மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டார்கள். என்னையும் அங்கே இருக்கும்படி கீதாவின் அப்பா சொல்லி இருந்தார். ஒரு தைரியத்துக்குத்தான். எங்கே மகள் எப்போ என்ன பண்ணுவாளோ என்று அவருக்கும் உள்ளுக்குள் உதைப்புதான்.

"வாங்க வாங்க!" வாயார வரவேற்றார் கீதாவின் அப்பா.
எல்லாரும் வந்து அமர்ந்தவுடன் ஒருசில நிமிஷங்கள் சின்ன பேச்சில் போயிற்று.
மாப்பிள்ளை பையனைப்பார்த்தேன். நல்ல பையன் மாதிரிதான் இருக்கிறான். விசாரித்தவரை நல்லபடியாகதான் எல்லாரும் சொன்னார்கள் என்று கீதாவின் அப்பா சொல்லி இருந்தார்.
பையனும் கலகலவென்றே அனைவருடன் பேசினான்.

"பொண்ணை வரச்சொல்லும்மா!” பெண்ணை பெற்றவர்.
கீதா வந்து பொதுவாக எல்லாருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். பையனின் பெற்றொர்கள் சில கேள்விகள் கேட்டார்கள். அடக்கமாகவே பதில் சொன்னாள் கீதா. சற்று நேரத்திலேயே அவர்கள் திருப்தி அடைந்துவிட்டதாக தோன்றியது. "அப்படின்னா..” என்று பிள்ளை பக்கம் திரும்ப அவன் சற்றே தயங்கியதாக எனக்குப்பட்டது. அதற்குள் கீதா, “மன்னிக்கணும்..” என்று ஆரம்பிக்க அங்கே சூழ்நிலை திடீரென்று மாறியது. அனேகமாக எல்லோரும் கொஞ்சம் பதட்டமடைந்தார்கள். கீதாவின் அம்மா வாய் "பாடலீஸ்வரா" என்று முணுமுணுக்க ஆரம்பித்தது எனக்கு தெளிவாக கேட்டது.

"இவரோட சில நிமிஷங்கள் தனியாக பேசினால் தேவலை" என்றாள் கீதா. கீதாவின் பெற்றோர் முகத்தில் ஈயாடவில்லை. பையனின் பெற்றோர் முகங்களில் கொஞ்சம் குழப்பம். பையன் மட்டும் சற்று உற்சாகப்படுகிறானோ?
"இந்த பக்கத்து அறைக்கு கொஞ்சம் வர முடியுமா?”
"நீங்களும் போங்க" என்று கீதா அப்பா தாழ்வாக சொன்னபோதும் அவளுக்கு கேட்டுவிட்டது.
“நீங்க வந்தா பரவாயில்லை மாமா" என்று சொல்ல நான் குழப்பத்துடனேயே போனேன். என்ன பேசப்போகிறாள் இந்த பெண்?

தன் பாக்கெட்டிலிருந்து ஒரு டைரியை எடுத்து மேசையில் போட்ட படி உட்கார்ந்தான் பிள்ளை. மூன்று பேரும் உட்கார்ந்ததும் "மன்னிக்கனும்" என்று ஆரம்பித்தாள் கீதா. "இந்த காலத்தில் பெண்கள் முன் போல இல்லை. எங்களுக்கும் சில பல அபிப்பிராயங்கள் ஆசைகள் எல்லாம் வந்தாச்சு. முன் காலம் போல அதையெல்லாம் அடக்கிப்போடனும் என்பதும் எனக்கு சம்மதமில்லை. வயசாக ஆக அபிப்பிராயங்கள் இறுகிப்போச்சு.” என்றபடி அங்கிருந்த ஒரு வெள்ளைத்தாளை பிரித்தாள் கீதா.
"இதில் என்னுடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் எழுதியிருக்கேன். எதில் விட்டுக்கொடுக்கவே முடியாது, எதில் நீக்குபோக்கு இருக்கலாம், எது எனக்கு ஒரு பொருட்டே கிடையாது... எல்லாம் விலாவரியாக எழுதியிருக்கேன். உதாரணமா என் கணவர் புகை பிடிக்கக்கூடாது. இதை விட்டுக்கொடுக்க முடியாது. சினிமா பார்ப்பதுல நீக்கு போக்கு இருக்க முடியும். இதையெல்லாம் படிச்சுவிட்டு எல்லாம் சரின்னா நான் கல்யாணத்துக்கு தயார்" என்றாள்.

"என்னப்பா இது! புதுசு புதுசா... நாராயணா!” என்று நினைத்துக்கொண்டேன்.
பையன் இதை எப்படி எடுத்துக்கொள்கிறான்? முகத்தைப்பார்த்தேன்.
ஒரு சிறு புன்னகையோடு "நானும் அந்தமாதிரி ஒரு பட்டியல் வச்சு இருக்கேன்" என்று டைரியில் இருந்து ஒரு பேப்பரை எடுத்தான் அவன்.
கீதா முகம் பிரகாசமானது! இருவரும் தீவிரமாக பட்டியல்களை அலச ஆரம்பிக்க நான் அந்த அறையிலிருந்து வெளியேறினேன். ஆமாம். புத்திசாலி இளைஞர் மத்தியிலே என்னை போன்ற கிழங்கட்டைகளுக்கு என்ன வேலை?

Wednesday, December 19, 2007

தெளிவு

{குறிப்பு: போட்டிக்கான கதை இது அல்ல. மற்றது -விபத்து}
காலை பூஜையை முடித்து ஈஸி நாற்காலியில் அமர்ந்தேன். பக்கத்து வீட்டுக்காரரும் அவர் மனைவியும் மெதுவாக எட்டிப்பார்த்தார்கள். “ப்ரீயா இருக்கீங்களா?”
"வாங்க வாங்க, பூஜையெல்லாம் முடிச்சாச்சு. சொல்லுங்க" என்றேன்.
"ஒண்ணுமில்ல, ஒரு சின்ன பிரச்சினை. உங்களால உதவி பண்ண முடியும்.”
"ஆஹா! என்னால முடிஞ்சா நிச்சயம் செய்யறேன்."
“பிரச்சினை ஜானகியாலதான்.”
“என்னது??!”
ஆச்சரியப்பட்டு போனேன். ஜானகி நல்ல பெண் ஆயிற்றே! பள்ளியில் முதலில் இல்லாவிட்டாலும் முதல் ஐந்தில் இருப்பாள். இப்போது பட்டம் பெற்ற பின் ஒரு வருஷமாக வேலைக்கு போகிறாள். ஆபீஸில் ஒரு தப்பு தண்டா கிடையாது. அவள் என்ன பிரச்சினை செய்யப்போகிறாள்?
“ஆமாம். அவளுக்கு நல்ல வரன் ஒண்ணு பாத்திருக்கோம்.”
“துபாய்ல வேலை."
“கை நிறைய சம்பளம்."
“அவங்க வீட்டுக்கு போய் இருந்தோம். ரொம்பவே பணக்காரங்கன்னு தெரியுது."
“இந்த மாதிரி இடம் அமைய கொடுத்து வச்சு இருக்கணும்.”
“ஒரே பொண்ணு. வேற கூட பொறந்தவா இல்லை. இவளுக்கு பண்ணாம யாருக்கு பண்ண போறோம்?”
“ஜாதகம் பாத்துட்டாளாம். பொருந்தி இருக்காம். பையன் ஜாதகத்துக்கு நிறைய ஜாதகம் பொருந்தலையாம். இவளதுதான் பொருந்தி இருக்காம்.”
இருவரும் மாற்றி மாற்றி பேசினார்கள்.
"சரி. பிரச்சினை என்ன?”
“இவ மாட்டேங்கிறா. அதுதான் பிரச்சினையே.”
“ஆபீஸ்ல யாரானும்...”
"கேட்டுட்டேனே. அப்படி ஒண்ணும் இல்ல.”
“சரி, சாயந்தரம் ஆபீஸ்ல இருந்து வந்தபின்ன இங்க வரச்சொல்லுங்க. நான் பேசறேன்.”

திருப்தியுடன் சென்றார்கள்.

“வாம்மா ஜானகி! நல்லா இருக்கியா?”
“நல்லாதான் இருக்கேன் மாமா. உங்க முட்டி வலி பரவாயில்லையா?”
“அது கிடக்கு. எப்பவும்தான் வலிக்குது. பழகிப்போச்சு.”
“ஏன் மாமா, என் அப்பா அம்மா இங்க வந்து என் கல்யாண விஷயமா பேசினாங்களோ?”
“நீ புத்திசாலிமா! கண்டு பிடிச்சிட்டையே!”
“இதுக்கு ரொம்ப புத்திசாலிதனம் வேணுமாக்கும்? நேத்து வாக்குவாதம். இன்னிக்கு நீங்க கூப்பிட்டு அனுப்பறீங்க.”
“ஏன்மா இந்த சம்பந்தம் வேணாங்கிற?”
“சரி படாது மாமா"
"ஏன்?”
“என் அப்பா அம்மாவுக்கு கல்யாணம்கிறது ரெண்டு குடும்பத்துக்குள்ள உண்டாற ஒரு உறவுன்னு புரியல. வெறும் நல்ல வேலை, கை நிறைய சம்பளம்னு பாக்கிறா. பையன் குணம் என்ன எப்படிப்பட்டவன்? நாளை ஒரே பொண்ண கொடுத்த நமக்கு அனுசரணையா இருப்பானா? இத பாக்க வேண்டாமா? நான் அந்த பையன் வேலை பாக்கிற அலுவலகத்துல என் நண்பர்கள் மூலமா விசாரிச்சுட்டேன். பணம் பணம்னு ஒரே குறியா இருக்கறதா கேள்வி. அவங்க வீடுலயும் அப்படிதானாம். பணக்கார குடும்பம்னா அதுக்கு தகுந்தபடி செய்யனும்னு சக்திக்கு மீறி கல்யாணம் செய்வாங்க. பின்னால அவஸ்த படறது யாரு? ரிடையரான என் அப்பாவோட கைகாசெல்லாம் இதுக்கே போன பிறகு வாழ்கைக்கு அவர் பென்ஷன் போதுமா?”
அவளை வியப்புடன் பார்த்தேன்.
“ ஒரு சாதாரண உள்ளூர்ல வேலை பாக்கிற மிடில் க்ளாஸ் மாப்பிள்ளை பாக்கச் சொல்லுங்க. கல்யாணத்துக்கு அப்புறம் என் அப்பா அம்மாவையும் தேவையானா ஆதரிக்கிறா மாதிரி. அவரப்பத்தி விசாரிக்கச் சொல்லுங்க. நல்ல பையனா இருந்தா சரிதான். பணம் வேண்டாம். குணம் போதும். வரட்டுமா?"
இந்த காலத்து பெண்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்!

Monday, December 17, 2007

விபத்து

விபத்து நடக்கப்போகிறது என்று நான் பேருந்தில் ஏறியவுடன் தெரிந்துவிட்டது. தினமும் இதில்தான் அலுவலகம் போகிறேன். சும்மா நாலு நிறுத்தம்தான். எல்ஐசி அருகேதான் இறங்குவேன். அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். நான் வழக்கமாக இறங்கும் இடத்துக்கு அருகில்தான் விபத்து நடக்கப்போகிறது. நடக்கும் விபத்தில் நான் மாட்டக்கூடாது. மற்றவர்... யார் எப்படி போனால் எனக்கென்ன. சொன்னால் நம்பவா போறாங்க?

இந்த அமானுஷ்ய சக்தி எனக்கு இருப்பது சமீபமாகதான் தெரியும். பக்கத்து வீட்டு குழந்தை என் வீட்டில்தான் எப்பவும் விளையாடும். ஒரு நாள் "இன்னிக்கு எங்க மாமா சிங்கப்பூர்லேந்து வரபோறாங்களே! எனக்கு நிறைய சாக்லேட் எல்லாம் வாங்கி வருவாங்க" என்று பெருமையடித்துக் கொண்டது. அப்போதுதான் என் மனசில் பளிச் என்று தெரிந்தது. "இல்லை வரமாட்டார்.” என்றேன். வவ்வவ்வே என்றவாறு ஓடிவிட்டாள். அன்று சாயம்காலம் அவள் வரும்போது முகம் வாடி இருந்தது. “திடீர்னு லீவு கிடைக்கலையாம். வரலை" என்றாள். "அதுதான் நான் சரியாச் சொன்னேனே" என்று சிரித்தேன்.

இரண்டாம் முறை என் பெண்டாட்டி வைஷ்ணவி கோவில் போகலாம் என்று சொன்னபோது நடந்தது. வேண்டாம், அது பூட்டி இருக்கும் என்ரு சொன்னேன். கேட்கவில்லை. அவ்வளவு தூரம் அம்பத்தூர் தாண்டி திருமுல்லை வாயில் போய் கடைசியில் அந்த கோவில் அருகே ஒரு சாவு, எடுத்த பிறகுதான் கோவில் திறப்பார்கள் என்று சொல்லிவிட்டார்கள். முடிந்து வீட்டுக்கு திரும்ப வெகு நேரம் ஆகுமே என்று உடனே திரும்பிவிட்டோம்.

பாத்தீங்களா, இந்த நினைவு ஓட்டத்திலேயே ரெண்டு நிறுத்தம் போச்சு! நான் முண்டி அடித்துக்கொண்டு முன்னால் இறங்கும் படி பக்கம் போனேன். முன்னால் ஒரு சின்ன கூட்டம். சில ஆட்கள், ஒரு குடுகுடு கிழவி - அவள் பின்னால் ஒரு குண்டன் தள்ளாடிக்கொண்டு இருந்தான். காலங்காலைல குடியா? ஒரே மப்பு போல இருக்கு.

ஒரு நிமிடம் டிரைவர்கிட்ட விபத்து நடக்கபோறதுன்னு சொல்லலாமான்னு நினைத்தேன். சொன்னா நம்பவா போறாங்க? சரி, சரி, யார் எப்படி போனா நமக்கு என்ன? நாம சீக்கிரம் இறங்கிடனும்.

டிரைவர் திடீர் என்று ப்ரேக் போட்டார். வண்டி குலுங்கியது. யாரோ என் மேலே விழுந்தார்கள். ஓ விபத்தோ? இல்லை, “சாவு கிராக்கி" என்று டிரைவர் திட்ட வண்டி மீண்டும் வேகம் எடுத்தது. என் மேல் விழுந்தவன் சாரி சொல்ல எனக்கு சந்தேகம். சந்தடி சாக்கில் பர்ஸ் போச்சோ? சட்டை பையை தொட்டுப்பார்த்தால் அதில் பர்ஸை காணோம்! கால் சாராயின் வலது பை, இடது பை.... பரபரப்புடன் கைப்பையை துழாவினேன். இருந்தது. அப்படா, இன்றைக்கு பணம் அதிகமாக இருக்கே, கொஞ்சம் பாதுகாப்பா இருக்கட்டும்னு கைப்பையில் வைத்தேன். மறந்து போனது.

திருப்தியுடன் நிமிர்ந்தபோது வாசல் பக்கம் கிழவியை காணோம். வண்டி குலுங்கினதில் கீழே விழுந்து விட்டாளோ? இதுதான் விபத்தோ? ஓ, மற்றவர்களையும் காணோமே! நான் பர்ஸை தீவிரமாக தேடியபோது பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்று கிளம்பிவிட்டு இருக்கிறது. அய்யய்யோ! அடுத்து என் ஸ்டாப். அதற்குள்ளே இறங்கனுமே! இறங்குவதற்கு முன்னால் முண்டி அடித்து போனேன். குண்டன் லேசில் நகர்வதாயில்லை. "நிறுத்துங்க, இறங்கனும்!” என்று கத்தினேன். டிரைவர் அலட்சியமாக பார்த்தபடியே "சார் நீங்க அடுத்த ஸ்டாப்லதானே இறங்குவீங்க!” என்றபடி வேகத்தை அதிகப்படுத்தினார்.
"இல்ல, இல்ல, இந்த வண்டில விபத்து நடக்கப்போறது. நிறுத்துங்க!”
பின்னால் நின்றவர்கள் சிரித்தார்கள். எனக்கென்ன! யார் எப்படி போனா என்ன? நான் எப்படியாவது இறங்கனும். ரத்தம் தலைக்கு ஏறியது. பயம் விச்வரூபம் எடுக்க, யாரோ சட்டை காலரை பிடித்து இழுத்தும் வெளியே குதித்
..............
துவிட்டான். பக்கத்திலேயே மின்னல் வேகத்தில் வந்த லாரி மோதி அங்கேயே இறந்து போனான். அக்கம் பக்கம் ஒரு நிமிடம் உறைந்து நின்ற நபர்கள் "சரி, சரி. யார் எப்படி போனா நமக்கு என்ன? வேலைக்கு போக நேரமாச்சு" என்றபடி கலைந்து சென்றனர்.