Friday, February 20, 2009

தேடல்-5.

¨கடைசியாக நான்.” சிரித்துக்கொண்டான் சங்கர்.
நான்.......

“சரியாக தூங்கி நான்கு மாதம் ஆகிறது. வீட்டிலிருந்து வேறு போன் மேல போன். கல்யாணம் பண்ணிக்கோப்பா. இப்படி இருக்கியே! ஆனால் மனதுதான் தாம்பத்யம் பக்கம் போக மறுக்கிறது. ஏன் என்னை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? ஆத்மான்னா என்ன என்று தேடி தேடி.. அவ்வளவு சுலபமா வந்துடுமா? சமீபகாலமாக மாத்திரை போட்டுதான் தூக்கம். அப்போதும் பிரகாசமான அந்த குகை.. என்ன என்றே புரியாமல் ஏதோ ஒரு ஈர்ப்பு. அங்கு போக வேண்டும் என்று... கடைசியாக ஒரு நாள் கனவில் நெடுங்காடு புலிக்குகை என்று மட்டும் ஒரு சப்தம் கேட்டது. அதற்கு ஏற்றாற்போல அலுவலகத்தில் அன்று சூசன் தன் நண்பன் ராபர்ட்டின் கடிதத்தை படித்துக்கொண்டு இருந்தாள். நெடுங்காடு என்று படிக்க முடியாமல் என்னிடம் கடிதத்தைக்காட்டி இது எப்படி படிப்பது என்று கேட்டாள். அப்புறம்...”

"எல்லாரும் சாப்பிடலாமா? என்ற குரல் அவன் சிந்தனை ஓட்டத்தை அறுத்தது. வெட்ட வெளியின் மத்தியில் ஒரு நெருப்பு எரிந்துக்கொண்டு இருந்தது. மஞ்சு அதில் சில கிழங்குகளை சுட்டுக்கொண்டு இருந்தாள். சிஷ்யன் அதிலிருந்து வென்னீர் பாத்திரத்தை இறக்கிக் கொண்டிருந்தான். வனிதாவும் குமரனும் வழக்கம் போல வளவளவென்று பேசியபடியே சில டின் டப்பாக்களை உடைத்துகொண்டு இருந்தார்கள். சங்கரும் அவர்களுக்கு உதவி செய்ய எழுந்தான். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பெரிய இலையை திணித்தாள் மஞ்சு. அதில் சங்கரும் குமரனும் உணவு பறிமாறினார்கள். அடிகள் மட்டும் சற்று தள்ளி அமர்ந்து சிஷ்யன் கொடுத்த அவலை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். பின்னர் எல்லாரும் உறங்கப்போனார்கள். இருந்த களைப்பில் வசதி குறைவு ஏதும் யாருக்கும் தெரியவில்லை. "அம்மா இத பூசிக்கமா. பூச்சி கடிக்காது" என்று சில இலைகளை கொடுத்தாள் மஞ்சு. விஞ்ஞானிகள் அதை வாங்கிக்கொள்ளவில்லை. ஆளுக்கு ஒரு உறங்கும் பை வைத்திருந்தார்கள். அதில் புகுந்து கொண்டார்கள். இலையை கசக்கிக்கொண்டு இருந்த சங்கரைப் பார்த்து "அந்த இலை சாதா இலைதான். ஒன்னும் விசேஷம் கிடையாது. குட் நைட்" என்று சொல்லி உறங்கப்போனாள் வனிதா.

காலை சங்கர் எழுந்த போது சற்றே வெளிச்சம் தெரிந்தது. மத்தியில் இருந்த நெருப்பின் அருகில் மௌனி அமர்ந்திருந்தான். இவன் தூங்கவே இல்லையா? பார்த்துக்கொண்டே இருந்த போது ஒரு சுள்ளியை நெருப்பில் போட்டான். மற்றவர்கள் இன்னும் உறங்குகிறார்கள். வெட்ட வெளியின் ஓரமாக மஞ்சு படுத்து இருந்தாள். அவள் அருகில் ஒரு நாயைப் பார்த்தான். இது ஏது? இங்கெல்லாம் நாய் வருமா என்ன? நாய் இவனைப் பார்த்து உறுமியது. சட்டென்று எழுந்தாள் மஞ்சு. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு "ஓ, முழுச்சிட்டையா சாமி! எல்லாரையும் எழுப்பலாமா? அப்பதான் சரியா இருக்கும்.” என்றாள். தேநீர் போட நெருப்பில் தண்ணீர் பாத்திரத்தை ஏற்றினான் சங்கர்.

காலை சிற்றுண்டி முடித்தபின் இரவு நன்றாக தூங்கிய விளைவோ என்னவோ எல்லாரும் வேகமாகவே நடந்தார்கள். விஞ்ஞானிகள் அவ்வப்போது ஓடுவதும் ஏதேதோ இலை பூ இவற்றை சேகரிப்பதுமாக இருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் மிகவும் தாமதப்படுத்தாததால் யாரும் ஆட்சேபிக்கவில்லை.

அடிகள் யோசித்துக்கொண்டே நடந்தார். நமக்கு விடிவு காலம் பிறக்குமா? குரு கடைசி காலத்தில் சொன்னார். புலிக்குகைக்குப் போ. உனக்கு நல்லது என்று. நாம்தாம் தாமதித்துவிட்டோம். என்ன செய்வது. எப்போது பத்து பிரச்சினைகளவது இருக்கின்றது. ஒரு பிரச்சினை முடிந்தால் அடுத்த பிரச்சினை உடனே வந்து விடுகிறது.மடத்துக்கு குத்தகை, வாடகை பாக்கி என்று வர வேண்டியது கோடிக்கணக்கில் இருக்கிறது. யார் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்? எல்லாருக்கும் வருகிற கொஞ்சம் வரவு மட்டும் கண்ணில் படுகிறது. செலவு கண்ணில் படுகிறதில்லை. மடத்து நிர்வாகம் ஒண்ணும் ராஜபோகம் இல்லை. எவ்வளவு மனிதர்கள். எவ்வளவு பிரச்சினைகள். எல்லாரையும் திருப்தி செய்யனும். இவர்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? ஆளாளுக்கு நாட்டாண்மை பண்ணப்பார்க்கிறார்கள். அறிவிலிகள். அந்தரங்கமாக இருக்க வேண்டிய விஷயங்களை அப்படி வைத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு குடும்ப மக்களைதான் நம்ப வேண்டி இருக்கு. இதை எல்லாரும் விமர்சிக்கிறார்கள். என் பிரச்சினை புரியவில்லை. என் தலைவிதி இந்த காட்டுவாசம். இந்த நித்தியானந்தம் மட்டும்தான்...மனசிலே இருக்கிற கோபத்தை எல்லாம் இவன் மேலே காட்டுகிறேன். இருந்தாலும் நான் சொன்னபடி எல்லாம் ஆடுகிறான். அப்படி ஒரு குரு பக்தி. கொஞ்சம் ரொம்பவே ஓட்டறேனோ? இந்த காடுதான் புரியவில்லை. ஏதோ சுற்றிச் சுற்றி வருவது போல இருக்கிறது. இந்த ... காட்டுப்பெண். என்ன தெரியும் இவளுக்கு? எங்கு போய் கொண்டு இருக்கிறோம் என்று இவளுக்கு தெரியுமா? தயங்காமல் போவதை பார்த்தால் தெரியும்போல்தான் இருக்கிறது. இருந்தாலும் எளிய புத்தியில்லாத பெண்தானே? இங்கே யார் எனக்கு வழிகாட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை. என் பிரச்சினைகள் யாருக்கு புரியும்? இந்த காட்டில் மலையில் என்னை விட அதிகம் படித்த புத்திசாலி யாரும் இருக்கிறார்களோ? அது எப்படி முடியும்?
--

7 comments:

மதுரையம்பதி said...

அப்பறம்?..

ambi said...

இப்படி குருவே குழம்பினா என்னத்த சொல்றது? அவர் இன்னும் பக்குவப்படல போலிருக்கு. :))

கிருத்திகா said...

ஒரோர்த்தர் பார்வையை சொல்லப்போறீங்களா ரொம்ப நல்லாருக்கு....

திவா said...

அம்பி, ¨குரு¨ன்னு நாம பலரை கூப்பிட்டாலும் அந்த குரு தன்மை எல்லாருக்குமே இல்லாமல் போகலாம் இல்லையா?

கிருத்திகா அக்கா, நன்னி!

கவிநயா said...

//ஒரோர்த்தர் பார்வையை சொல்லப்போறீங்களா ரொம்ப நல்லாருக்கு....//

ஆமாம், ஒவ்வொருவர் மனசையும் சொல்றது நல்லாருக்கு. இப்படி காட்டுப் பயணம் ஏதும் செய்திருக்கீங்களோ? துல்லியமா எழுதறீங்களே :)

வெட்டிப்பயல் said...

கதை நல்லா போயிட்டு இருக்கு திவா சார்.

ஆனா எடுத்தவுடனே கிளம்பற மாதிரி இருக்கறதுக்கு பதிலா கொஞ்சம் பில்ட் அப் கொடுத்துட்டு ஒரு நாலாவது பாகத்துல கிளம்ப ஆரம்பிச்சிருக்கலாம். கொஞ்சம் பொறுமையா நிறுத்தி நிதானமா எழுதலாம். அந்த மலையையும் பாதையையும் விவரிச்சி எழுதினா எல்லாரும் நடந்து வர மாதிரி இருக்கும்.

இந்த மாதிரி கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் :)

திவா said...

விமர்சனத்துக்கு நன்றி வெட்டி,
ஆனா எனக்கு அவ்வளொ பொறுமை இல்லைன்னு நினைக்கிறேன். தடதடன்னு உள்ளே இறங்கிட்டேன் இல்லை? யாரான எப்பப்பா தேடப்போறேன்னு கேட்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
ம்ம்ம் முழுக்க எழுதியாச்சு. பாக்கலாம்.