Friday, February 27, 2009

தேடல்-10

யாரோ உலுக்கவே தூக்கம் கலைந்தது சங்கருக்கு. உஷ் என்று எச்சரிக்கை செய்தார் குமரன்.
இன்னும் முழுதும் விடியவில்லை.
"என்ன என்ன விஷயம்?”
கண்களை கசக்கியபடி சங்கர் கேட்க "மெதுவா பேசுங்க. வெளியே ஆளுங்க இருக்காங்க. இப்ப நாம தப்பிக்க வழி பாக்கணும். அந்த ஓட்டை வழியா வெளியே பாருங்க" என்றார் குமரன்.
வெளியே பார்த்தபோது அங்கே கூட்டமாக காட்டுவாசிகள் நெருப்பை சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

"எல்லாரும் ஒரே பக்கமாக இருக்காங்க. நாம எதிர்பக்கமா தப்பிவிடலாம்.”
“தப்பி என்ன செய்வது?”
"அதை பத்தி அப்புறமா யோசிக்கலாம். இப்ப முதல்ல நாம தப்பிக்கணும்.”
"மத்தவங்க?”
"அவங்க பக்கத்து குடிசைலதான் இருக்காங்க.” குமரன் கையைக்காட்ட அங்கே ஓலைகள் கொஞ்சம் பிரிக்கப்பட்டு இருந்தன. கழி ஒன்றை வலுக்கட்டாயமாக நகர்த்தி வழி செய்து இருந்தது தெரிந்தது.
"பார்க்கலாமா?”

சங்கருக்கு அதற்கு மேல் சொல்ல வேண்டி இருக்கவில்லை. சுறுசுறுப்பாக ஓட்டை வழியா ஊர்ந்து வெளியே போனான். மூன்று அடியிலேயே அடுத்த குடிசை இருப்பது தெரிந்தது. "வனிதா! வனிதா!” என்று தாழ்ந்த குரலில் குமரன் கூப்பிட ஒரு நிமிஷம் என்று பதில் வந்தது. சற்றைக்கெல்லாம் ஓலைகள் சில பிரிக்கப்பட்டு வனிதாவின் முகம் எட்டிப்பார்த்தது.
"தப்பிப்போயிடலாமா?”
"உள்ளே வாங்க.”

இருவரும் சீக்கிரமே அடுத்த குடிசைக்குள் புகுந்தார்கள்.
குமரன் தப்பிக்கும் திட்டம் பற்றி சொன்னான்.
உற்சாகமே இல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தாள் வனிதா.
என்ன ஆயிற்று இவளுக்கு? நேற்று இவள்தானே தப்பிக்கிறது பத்தி பேசினாள்? அதுவும் யாரும் கடத்தப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வராத போதே!
என்ன நினைக்கிறாய் வனிதா?
"நடக்காது.” என்றாள் வனிதா.
"ஏன்?”
"அவர்கள் நம்மை முழுவதும் சுற்றி இருக்கிறார்கள். காவலுக்கு ஆள் போட்டு இருக்கிறார்கள்.”
"ஒத்தரையும் காணோமே?”
"வெளியே தெரியாது. ஆனால் இருக்கிறார்கள். அப்படி ஒரு வேளை தப்பினாலும் பிடிக்க நினைத்தால் அது அவர்களுக்கு வெகு எளிது.”
"உனக்கு எப்படி தெரியும்?”
"எப்படியா? நேத்து இரவு முயற்சி செய்தேன். அதனால் தெரியும்.”
என்னது!
வியப்பின் எல்லைக்கே போய்விட்டார்கள் குமரனும் சங்கரும்.
"ஆமாம். நீங்கள் எல்லாரும் நன்றாக தூங்கிவிட்டீர்கள். நான் கொஞ்ச நேரம் படுத்ததாக பாவனை செய்து விட்டு வெளியே எட்டிப்பார்த்தேன். வாசலில் ஆள் இருந்தது. நான் இந்தப்பக்கமாக கஷ்டப்பட்டு சத்தம் இல்லாமல் ஓலைகளை பிரித்தேன். (இப்போது தான் எப்படி சுலபமாக வழி செய்ய முடிந்தது என்று குமரனுக்கு புரிந்தது.) அப்புறம் உங்க குடிசை ஓலைகளை கூட பிரிக்க ஆரம்பித்தேன். ஆனால் சத்தம் அதிகமாக கேட்க ஆரம்பித்ததால் விட்டுவிட்டேன். சரி தப்பிக்க வழியை பார்த்துவிட்டு திருப்பி வரலாம் என்று வெளியே போனேன். அதோ அந்த மரங்களை தாண்டியதுமே யாரோ பின்னால் வருவது போல இருந்தது. திரும்பிப்பார்த்தால் காட்டுவாசி ஒருவன் வந்து கொண்டு இருந்தான். நான் மர இருட்டில் ஒதுங்கி நின்றேன். தாண்டிப்போக போகிறான் என்று நினைத்த போது திடும் என திரும்பி என் மார்புக்கு எதிரே ஈட்டியை நீட்டிவிட்டான். அவன் "ஹும்" என்று சத்தம் போட்டபின் எனக்கு இருந்த தைரியம் எல்லாம் போய் விட்டது. மறு பேச்சு இல்லாமல் திரும்பிவந்து படுத்து தூங்கிவிட்டேன்.”

குடிசையில் பார்த்தார்கள். வள்ளியம்மை மட்டுமே தூங்கிக்கொண்டு இருந்தார்கள். "மற்றவர்கள் எங்கே.” கதிர்வேலனாரும் நித்தியும் வேறு இடத்தில் இருக்கவேண்டும்.

தலையை பிய்த்துக்கொண்டார் குமரன். "இப்ப என்ன செய்கிறது.!”
"பேசாம படுத்து தூங்குங்க. விடிந்த பிறகு பார்க்கலாம்.”

தப்பிக்கும் முயற்சியை இப்படி கைவிட நேர்ந்ததை நொந்துகொண்டு இருவரும் படுக்கப் போனார்கள்.

Thursday, February 26, 2009

தேடல் -9

யாரும் ஒரு எதிர்ப்பும் காட்ட இடமில்லாது போயிற்று. கூரான ஈட்டிகளையும் கத்திகளையும் பார்த்தவர்கள் கலங்கி போயிருந்தனர். நித்தி மட்டுமே இன்னும் கனவுலகில் இருந்தான். ஏதோ தனக்குத்தானே பேசிக்கொள்வதும் தலை ஆட்டுவதும்.... காட்டுவாசிகள் அவன் கைகளை கட்டிப்போட்டபோது எதிர்ப்பே தெரிவிக்கவில்லை. சிலர் இவர்களது உடமைகளை அபகரித்துக்கொண்டு மறைந்தனர்.

அன்று காலை இவர்கள் போன வேகமும் வழியும் யாராலும் போக முடியாதது என்று தோன்றியது. நடந்தால் விட்டார்கள். நடக்க முடியாதவர்களை தர தர என்று இழுத்துப் போனார்கள். உண்மையாக நடக்க முடியாத இடங்களில் அலாக்காக தூக்கிவிட்டார்கள். பெண்களை மரியாதையாக நடத்துவது போலவே தோன்றியது. அந்த மட்டும் நல்லது என்று சங்கர் நினைத்தார்.

எங்கேயும் சற்றும் தாமதிக்காமல் விரைந்ததில் வெகு தூரம் கடந்து விட்டதாக தோன்றியது. எங்கே போகிறோம்? ஏன் நம்மை ஒன்றும் செய்யவில்லை? அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு விட்டு இருக்கலாமே? இந்த காட்டில் நாம் என்ன செய்ய முடியும்? ஏன் நம்மை சாகடிக்கவில்லை? ஏன் இவ்வளவு மெனக்கெட்டு எங்கோ அழைத்து போகிறார்கள்? கேள்விகள்..கேள்விகள்... பதில்தான் ஒன்றும் தட்டுப்படவில்லை. ஒரு வேளை மனிதர்களை சாப்பிடுவார்களோ? முதுகுதண்டில் ´சில்´ என்று ஏதோ ஏறியது போல இருந்தது.

இந்த மஞ்சு என்ன ஆனாள்? காட்டுவாசிகள் வந்த போது திடீரென்று பக்கத்தில் காட்டுக்குள் புகுந்து மாயமாகிவிட்டது போல காணாமல் போனாள். அவர்கள் கவனிக்கவில்லை போலும். பின்னால் வருகிறாளா? மஞ்சுவால் கூட இவ்வளவு வேக நடை முடியுமோ என்று தோன்றியது. உன்னிப்பாக கேட்டும் யாரும் பின்னால் வரும் சத்தம் ஏதும் துளிக்கூட கேட்கவில்லை.

மதியம் ஏதோ சுட்ட கிழங்குகளை கொடுத்தார்கள். சாப்பிட மறுத்த குமரன் எதிரில் ஒரு கூரான ஈட்டி நீட்டப்பட்டது. “சாப்பிடுங்களேன் குமரன் " என்றாள் வனிதா. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தாழ்ந்த குரலில் “தப்பிக்க வேண்டுமானால் உடம்பில சக்தி வேணும் இல்லையா?” என்றாள்.
அதன் பின் குமரன் சாப்பிட ஆரம்பித்தார்.

சாப்பாடு முடிந்து எல்லாருக்கும் ஏதோ ஒரு தண்ணீர் போன்ற கலவை தரப்பட்டது. கொஞ்சம் வாசனை பிரச்சினையாக இருந்தாலும் தாகத்தில் அனைவரும் குடித்துவிட்டனர். பொழுது சாய்வதற்குள் ஒரு திறந்த புல்வெளியை அடைந்தனர். அங்கே சில வெட்டிய மரங்கள், ஓலைகளால் கட்டிய குடிசைகள் இருந்தன. ஒரு குடிசைக்குள் சங்கர் உட்பட நான்கு பேரை போட்டு தள்ளினார்கள்.

யாருக்கும் நிற்க கூட தெம்பு இல்லை. விழுந்த அடுத்த சில நிமிடங்களில் தூங்கிப்போனார்கள்.

Wednesday, February 25, 2009

தேடல்-8

வழக்கம்போல் சங்கர் அதிகாலை எழுந்துவிட்டான். இரவு சாப்பிடாமல் தூங்கியது சோர்வாக இருந்தாலும் இன்று ஏதோ நடக்கப்போகிறது என்று தோன்றியது. சிரித்துக்கொண்டான். ¨நேற்று என்னவெல்லாம் நடக்கவில்லை? இன்று ஏதோ நடக்கப்போகிறதா? அடிகள் என்ன ஆகியிருப்பார்? அப்படி தடம் ஒன்றும் இல்லாமல் எப்படி புலி தூக்கிச்சென்றது? இதை அப்படியே விடமுடியாதே? ஒரு வழியாக திரும்பிப்போனதும்- போவோமா?- போலீஸில் சொல்ல வேண்டும். அவர்கள் என்ன செய்வார்கள்? வனத்துறை அனுமதி இல்லாமல் எப்படி அங்கே போனீர்கள் என்று குடைவார்கள். குமரனும் வனிதாவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வந்ததாக சொல்லிக்கொள்ளலாம். ஒத்துக்கொள்வார்களா?¨ அர்த்தமில்லாமல் ஏதேதோ கேள்விகள்.

மஞ்சு ஏற்றி நெருப்பைத் தூண்டி ஒரு பாத்திரத்தில் வென்னீர் கொதிக்க வைப்பது தெரிந்தது. தானும் மௌனமாக அவள் அருகில் போய் அமர்ந்தான். "தூங்கினையா சாமி? ரொம்ப நாளாச்சில்ல?” என்று திரும்பிக்கூட பார்க்காமல் கேட்டாள் அவள். தலையை ஆட்டினான். ¨ஓ! தான் தலை ஆட்டுவது தெரியாதே, குனிந்து அல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறாள்¨ என நினைத்தான். "தூங்கினேன்.” கீச் கீச் என்று பறவைகள் சத்தம் கேட்டு நிமிர்ந்தான். அருகில் மரத்தின் கூட்டில் சில பறவைகள் கும்மாளமிட்டன. தாய் ஏதோ உணவு சம்பாதித்து வந்திருக்க வேண்டும். த ஏர்லி பேர்ட்.. என்று நினைவோடியது. "பாத்தியா சாமி. அதெல்லாம் நம்ம மாதிரி கவல படுரதில்ல. இப்ப திங்க கிடச்சுதா, சரி. இல்லையா கிடைக்கிர இடத்த தேடிப் போய்ரும். சாமி நமக்கு வேண்டியத கொடுக்கும் அப்படி நம்புதுங்க. சிரித்தாள். நம்பிக்க இல்லாதது நாமதான?”
"பறவைக்கெல்லாம் சாமி பத்தி தெரியுமா" கேட்டான் சங்கர்.
“தெரியாதுன்னு எப்படி தெரியும் சாமி?“ எதிர்கேள்வி கேட்டாள்.
என்ன கேள்வி இது என்று வியந்த சங்கரை குமரன் அழைத்து கவனத்தை கலைத்தார். “சங்கர் இன்றைய ஆக்ஷன் ப்ளான் முடிவு பண்ணனும்.

இப்போதுதான் எல்லாரும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார்கள். திரும்பிவிடலாம் என்று குமரன், வனிதா சொல்ல கதிர்வேலன் தம்பதியினர் என்ன ஆனாலும் தொடர்ந்து மேலே போகலாம் என்று வாதித்தனர். நித்தி பேசவே இல்லை. "குரு போன வருத்தம் போல் இருக்கிறது. நாம்தான் இப்போது முடிவு செய்ய வேண்டும்" என்று நினைத்துக்கொண்டான் சங்கர். என்ன செய்யலாம்? இவ்வளவு தூரம் வந்தது வீணாக போய் விடுமா? என்ன செய்ய வேண்டுமானாலும் இந்த மஞ்சுவின் உதவிதானே வேண்டும். யாரும் அவளை கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையே? நாம் என்ன சொன்னாலும் அவள் கட்டுப்பட்டு ஆக வேண்டும் என்று நினைக்கிறார்களோ?

"இதப்பாருங்க வனத்துறை அனுமதி இல்லாம நாம இங்க வந்ததே தப்பு. அதனால திரும்பிப்போய் நாம நடந்ததை போலீஸ்ல சொல்லனும். அதுதான் சரி. எங்களுக்கு இங்கெலாம் சுத்த அனுமதி இருந்தாலும் நாம இப்ப இருக்கற பகுதிக்கு அனுமதி உண்டான்னு தெரியல. எங்க இருக்கோம்னே சரியா தெரியலையே?திரும்பி போறதுதான் சரி.”

“மஞ்சு என்ன சொல்றே?” என்றான் சங்கர்.
"சாமிங்க நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி சாமி" என்றாள் சுருக்கமாக.
"மேலே தொடர்ந்து போகலாம்" என்றான் சங்கர். குமரன் சட்டென்று எழுந்தார். "நீங்க வேண்ணா போங்க. நாங்க திரும்பறோம்.” அதெப்படி மஞ்சு வழி காட்டாம போயிடுவீங்களா?" அக்கரையோடு வினவினார் கதிர்வேலன். “எப்படியாவது போறோம். கோபத்துடன் குமரன் தன் பையை எடுத்தார். "வனிதா நீ ஏன் கிளம்பலை?”
"அதுக்கு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன், குமரன்" என்று தன் எதிரே சுட்டிக்காட்டினாள் வனிதா.

அங்கே பத்து காட்டுவாசிகள் வந்துக்கொண்டிருந்தனர். மஞ்சு பக்கம் திரும்பினான் சங்கர். அவன் மனதில் இருந்த கேள்விக்கு விடை கொடுத்தாள் மஞ்சு.
“அவங்க எங்க ஆளுங்க இல்லை சாமி.”

Tuesday, February 24, 2009

தேடல்-7

அடுத்த நாள் காலை எழுந்த குழுவினர் சுறு சுறுப்பாக கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். ஏதோ வயிற்றுக்குப் போட்டுவிட்டு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தனர். நேற்று மாலை தடங்கல் ஏற்படும் போல இருந்தது. ஆனால் நல்ல காலம் மலைவாசிகள் இரண்டு பேர் அந்தப்பக்கம் வர மஞ்சு அவர்களிடம் ஏதோ பேசி சரி செய்துவிட்டாள். குமரன் அவர்களுக்கு கொடுத்த பணமும் கொஞ்சம் வேலை செய்து இருக்க வேண்டும். ஆமாம், அந்த பணத்தை வைத்து இந்த காட்டில் என்ன வாங்க முடியும்? சிரிப்பு அடக்க முடியவில்லை நித்தியானந்தத்துக்கு. எப்போதேனும் கீழே கிராமத்துக்கு போகும் போது பயன்படலாம்.

மீண்டும் நடை. நேற்று போல நடக்க முடியவில்லை யாருக்கும். இப்போது மலை உயரத்தில் ஏறுவது நன்றாக தெரிந்தது. மூச்சு விட சற்று சிரமமாக இருந்தது. பாதையும் கடினமாக இருந்தது. சரிவும் அதிகம். ஏற ஏற மேடு முடிவில்லாது தோன்றியது. செருப்புகள் எப்போதோ அறுந்து போய் விட்டு விடப்பட்டன. வெறும் காலுடன் நடந்து பழக்கமில்லாதவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். காற்றும் குளிர்ந்து வீசியது. சாதாரணமாக இது சுகமாக இருக்கும். இப்போதோ உள்ளே வேர்த்துக்கொட்ட மேலே மட்டும் சில்லிப்பு கஷ்டமாகவே இருந்தது. வியர்வை இவ்வளவு சில்லென்று இருக்குமா என்ன? ஏதோ இயந்திரத்தனமாக நடந்து கொண்டிருந்தனர். ஒரு கால் முன்னே... அடுத்து இன்னொரு கால்... அடுத்து .....

யாரும் எதிர்பாராத சமயத்தில் அந்த தாக்குதல் நடந்தது. ஒத்தையடிப்பாதையில் அவர்கள் போய்க் கொண்டு இருந்தபோது திடீரென்று ஒரு உறுமல் கேட்டது. யாரும் நிதானிக்கும் முன் ஒரு புலி தோன்றி அடிகளாரை கவ்விக்கொண்டு புதரில் மறைந்தது. நித்தியானந்தம் தவிர எல்லாரும் உறைந்து நின்றார்கள். "விடு, விடு, விட்டு விடு, என்ன செய்கிறேன் பார்" என்று கூச்சலிட்டான் நித்தியானந்தம். "குருவே! குருவே!" என்று கதறிய படி புலி சென்ற திசையில் புதரில் விழுந்து ஓடி மறைந்தான்.

யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆண்கள் புதர் வரை ஓடிச்சென்று தயங்கி நின்றார்கள். அடுத்து கிடு கிடு பள்ளம். புதர்கள். பெரிய பாறாங்கற்கள். இதில் ஒரு ஆளை தூக்கிக்கொண்டு புலி எப்படி ஓடியது? சிஷ்யனும்தான் எப்படி ஓடினான்? "சாமியோவ்! இதுல உங்களால ஏதும் ஆவாது. கொஞ்சம் இங்கியே நில்லுங்க. நான் போய் பாத்து வரேன்" என்ற படி மஞ்சு புதரைத் தாண்டி பாறையில் குதித்தாள்.

அனைவருக்கும் ஏற்பட்ட அதிர்ச்சியில் புலி மீண்டும் வருமோ என்ற கவலை கூட எழவில்லை. விஞ்ஞானிகள் "இவ்வளவு நாட்களாக இங்கேயெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறோம், புலியின் தடத்தை பார்த்ததுக்கூட இல்லையே" என்று பேசிகொண்டனர். ஆனால் மலையின் இந்த பகுதிக்கு வந்திருக்கிறீர்களா என்ன என்று கதிர்வேலர் கேட்ட போது இல்லை என்று ஒத்துக்கொண்டனர்.
அனைவரும் கவலையோடு பார்த்துக்கொண்டிருக்க பதினைந்து நிமிடம் கழிந்தது. பின்னர் ஏதோ அரவம் கேட்டது. இப்போதுதான் வேறு மிருகம் வருகிறதோ என்று பயம் வந்தது. சற்றைக்கெல்லாம் நித்தியும் மஞ்சுவும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

என்ன ஆச்சு என்று தலைக்குத்தலை கேள்விகள் எழுந்தன. நித்தி பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை. கண்களில் கண்ணீர் வழிய வழிய வாய் ஏதேதோ முணமுணத்துக்கொண்டு இருந்தது. மஞ்சுதான் பேசினாள். “சாமி நாங்க ரொம்ப தொலவு போக முடியல. அங்கே பெரிய சரிவு. யாருமே - எந்த புலியுமே போக முடியாத அளவு. என்ன தேடியும் ஒரு குறியும் காணோம். சாமிய புலி எங்க தூக்கிப்போச்சோ தெரில.” "புலியெல்லாம் இங்க இருக்குன்னு சொன்னியா என்ன?” என்று குமரன் பாய சங்கர் "புலி இருப்பதாகத்தான் சொன்னாள். நாங்கள்தான் சும்மா பயமுறுத்துகிறாள் என்று நினைத்தோம்" என்று சமாதானப்படுத்தினார். அடுத்து என்ன செய்வது என்று கேள்வி எழுந்தது. தலைக்குத்தலை ஏதேதோ சொன்னார்கள். முடிவில் பொழுது சாயும் நேரம் வந்து விட்டதால் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு போய் விடுவதென்றும் பின் காலை பார்த்துக்கொள்ளலாம் என்றும் முடிவானது. அப்படியே சற்று வேகமாக நடந்து அரை மணியில் ஒரு திறந்த வெளிக்கு வந்தனர். நெருப்பு மூட்டப்பட்டது. அதன் அருகில் சாப்பாட்டைப் பற்றிய சிந்தனை கூட இல்லாமல் அனைவரும் படுத்தனர்.

மஞ்சு மட்டும்தான் கதிர்வேலனார் மனைவிக்கு பாதங்களை வென்னீர் ஊற்றி கழுவி ஏதோ கிழங்கைப்போட்டு தேய்த்துக்கொண்டு இருந்தாள். செருப்பு இல்லாது போய் பாதங்கள் புண்ணாகி இருந்தன. அப்படியே ஏதோ இலைகளை மெல்லும்படி கொடுத்தாள். கதிர்வேலனார் எழுந்து பையில் இருந்து சாப்பிடக்கொடுத்தார்.

பெரும் புலியின் தாக்குதலில் இருந்து தப்பித்தவர்கள் இப்போது காவலுக்கு யார் என்ற யோசனை கூட இல்லாமல் தூங்கிப்போயினர்.

Monday, February 23, 2009

தேடல் -6

      மதிய உணவு ஒரு அருவி அருகில் நடந்தது. எல்லாருக்கும் நல்ல பசி. அவரவர் கொண்டு வந்த பைகள் இப்போது கணிசமாகவே எடை குறைந்திருந்தன. எடை குறைய குறைய நல்லதுதானே? சுலபமாக நடக்கலாம் என்று நினைத்துக் கொண்டான் நித்தியானந்தம். உடல் எடை மட்டுமல்ல .... கர்மாவும்தான். பரம குரு சொன்னது ஞாபகம் வந்தது. ¨அழுக்கு தேயத் தேய ஆத்மா ஒளி விடும். அதில் முழுகப்பாரு. நம் கடன் இப்போது குருவுக்கு பணிவிடை செய்து கிடப்பதே. இவருக்கு கோபம் அதிகம் வருகிறது. பாவம் என்ன செய்வார். பரம குரு போனதில் இருந்து யாரும் இவரை மதிப்பதில்லை. இவர் குருவாக தகுதி இல்லை என்று நினைப்பு. இவரை தேர்ந்தெடுத்ததே பரம குருதானே? அவரிடம் பக்தி கொண்டவர்கள் இவரை யோசித்துதான் தேர்ந்தெடுத்து இருப்பார் என்று நம்ப வேண்டாமா? இதெல்லாம் ஆராயக்கூடாது. அபசாரம். அதோ குரு சற்று சிரமப்படுகிறார். போய் ஏதேனும் தரையில் விரிப்போம். கொஞ்சம் படுக்கட்டும். இந்த மஞ்சு....யார்? ஏன் இவளைச்சுற்றியே என் மனது வட்டமிடுகிறது? அப்படி காமம் ஒன்றும் இல்லையே.¨ "இல்லையா?” என்று அடிமனது கேட்டது.
"நித்தி...” குரு கூப்பிட்டதும் எழுந்து ஓடினான் நித்தியானந்தம்.

       மீண்டும் நடை, நடை. பழக்கமில்லாதவர்கள் சிரமப்பட்டார்கள். ஏதோ மிருகங்கள் பயன்படுத்தும் பாதைகள் போல அவ்வப்போது அறிகுறிகள் தெரிந்தன. எல்லையே இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது போல இருந்தது. அண்மையில் உள்ள மரங்களைத்தவிர ஒன்றும் பார்க்க முடியாததால் திருப்பி திருப்பி ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருவது போலவும் இருந்தது. இதோ இந்த புதரை பார்த்தால் போல இருக்கிறதே? அந்த யானை மாதிரியான கல். சீச்சீ. அது வேறு மாதிரி இருந்தது. ஆனால் மாலை வரும்போது மலையில் கணிசமாக ஏறிவிட்டதுபோல தோன்றியது. ஒரு திருப்பத்தில் திடீரென்று மரங்கள் விலகிவிட கீழே வெகு தூரத்தில் பசுமையான வயல்கள் தெரிந்தன. அருகில் ஒரு ஏரி. அவற்றின் மேலே வட்டமிடும் பருந்துகள். எல்லோருமே மெய் மறந்து சற்று நேரம் நின்றார்கள்.

சரி சரி கிளம்பலாம்" என்று சங்கர் குரல் கொடுக்க அவர்கள் மீண்டும் நடக்கலானார்கள்.

கொஞ்ச தூரம் சென்றதும் ஒருவர் குறைவது போல இருக்கிறதே என்று எண்ணிய சங்கர் ஒரு முறை அனைவரையும் பார்த்தான். குருவும் சிஷ்யனும் அதோ; விஞ்ஞானிகள், கதிர்வேலனார், அவர் மனைவி.... ஆ, மௌனியைத்தான் காணோம்!

     “யாரும் மௌனியைப்பாத்தீங்களா?” என்று குரலெழுப்பினான். அனைவரும் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இல்லையே! நான் கடைசியாக அந்த ஓடையை தாண்டும் போது பார்த்தேன். இல்லை, நான் அப்புறமும் பார்த்தேனே? அந்த சின்ன மேடு ஏற கதிர்வேலனாருக்கு கை கொடுத்தானே. வள வள என்று பேச்சு ஆரம்பித்தது.

        அதற்குள் மஞ்சுவும் சங்கரும் வந்த வழியே போக ஆரம்பித்தனர். நெடு தூரம் போக வேண்டி இருக்கவில்லை. எல்லோரும் வயலின் அழகை ரசித்த இடத்தில் மௌனி மரத்தடியில் வெறிக்க பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். "ஏம்பா, என்ன ஆச்சு உனக்கு?” வழக்கம் போல் பதில் இல்லை. ஆனால் இப்போது கவனியாமலே அல்லவா இருக்கிறான்? சங்கர் உடம்பை பிடித்து உலுக்க அப்போதும் ஒரு அசைவும் இல்லை.

      “கடடோனியா" என்று ஒரு குரல் கேட்டது. சங்கர் திரும்பி பார்க்க குமரன் நின்று கொண்டிருந்தார். “அசைவே காணோம் பாத்தீங்களா? நான் ஏற்கெனவே இவன் சைகியாட்ரி கேஸ் அப்படிதான் நினச்சேன். சரியாப்போச்சு.”

      பேச்சுக்குரல் கேட்டு அனைவரும் அங்கு வந்து சேரவே என்ன செய்வது என்று விவாதித்தார்கள். எல்லாருக்குமே அவனை அப்படியே விட்டு விட்டு போக விருப்பமில்லை, வனிதாவைத்தவிர. "நாம கேட்டா வந்தாரு? எப்படி வந்தாரோ அப்படியே போகட்டுமே?”
கதிர்வேலனார் மஞ்சு பக்கம் திரும்பினார். "நீதாம்மா ஏதேனும் வழி சொல்லனும்."
"ஐயா! இந்த பக்கத்தில மலை கிராமம் ஒண்ணு இருக்கு. எப்பவாச்சும் யாரேனும் இந்த இடத்துக்கு வருவாங்க. அவங்களை பாத்துக்க சொல்லிட்டு நாம மேலே போகலாம்.”
"எப்பவாச்சும்னா அவங்க வரவரை காத்திருக்கனுமா" என்று வனிதா கேட்கும் போதே யாரோ வரும் சந்தடி கேட்டது.

Friday, February 20, 2009

தேடல்-5.

¨கடைசியாக நான்.” சிரித்துக்கொண்டான் சங்கர்.
நான்.......

“சரியாக தூங்கி நான்கு மாதம் ஆகிறது. வீட்டிலிருந்து வேறு போன் மேல போன். கல்யாணம் பண்ணிக்கோப்பா. இப்படி இருக்கியே! ஆனால் மனதுதான் தாம்பத்யம் பக்கம் போக மறுக்கிறது. ஏன் என்னை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? ஆத்மான்னா என்ன என்று தேடி தேடி.. அவ்வளவு சுலபமா வந்துடுமா? சமீபகாலமாக மாத்திரை போட்டுதான் தூக்கம். அப்போதும் பிரகாசமான அந்த குகை.. என்ன என்றே புரியாமல் ஏதோ ஒரு ஈர்ப்பு. அங்கு போக வேண்டும் என்று... கடைசியாக ஒரு நாள் கனவில் நெடுங்காடு புலிக்குகை என்று மட்டும் ஒரு சப்தம் கேட்டது. அதற்கு ஏற்றாற்போல அலுவலகத்தில் அன்று சூசன் தன் நண்பன் ராபர்ட்டின் கடிதத்தை படித்துக்கொண்டு இருந்தாள். நெடுங்காடு என்று படிக்க முடியாமல் என்னிடம் கடிதத்தைக்காட்டி இது எப்படி படிப்பது என்று கேட்டாள். அப்புறம்...”

"எல்லாரும் சாப்பிடலாமா? என்ற குரல் அவன் சிந்தனை ஓட்டத்தை அறுத்தது. வெட்ட வெளியின் மத்தியில் ஒரு நெருப்பு எரிந்துக்கொண்டு இருந்தது. மஞ்சு அதில் சில கிழங்குகளை சுட்டுக்கொண்டு இருந்தாள். சிஷ்யன் அதிலிருந்து வென்னீர் பாத்திரத்தை இறக்கிக் கொண்டிருந்தான். வனிதாவும் குமரனும் வழக்கம் போல வளவளவென்று பேசியபடியே சில டின் டப்பாக்களை உடைத்துகொண்டு இருந்தார்கள். சங்கரும் அவர்களுக்கு உதவி செய்ய எழுந்தான். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பெரிய இலையை திணித்தாள் மஞ்சு. அதில் சங்கரும் குமரனும் உணவு பறிமாறினார்கள். அடிகள் மட்டும் சற்று தள்ளி அமர்ந்து சிஷ்யன் கொடுத்த அவலை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். பின்னர் எல்லாரும் உறங்கப்போனார்கள். இருந்த களைப்பில் வசதி குறைவு ஏதும் யாருக்கும் தெரியவில்லை. "அம்மா இத பூசிக்கமா. பூச்சி கடிக்காது" என்று சில இலைகளை கொடுத்தாள் மஞ்சு. விஞ்ஞானிகள் அதை வாங்கிக்கொள்ளவில்லை. ஆளுக்கு ஒரு உறங்கும் பை வைத்திருந்தார்கள். அதில் புகுந்து கொண்டார்கள். இலையை கசக்கிக்கொண்டு இருந்த சங்கரைப் பார்த்து "அந்த இலை சாதா இலைதான். ஒன்னும் விசேஷம் கிடையாது. குட் நைட்" என்று சொல்லி உறங்கப்போனாள் வனிதா.

காலை சங்கர் எழுந்த போது சற்றே வெளிச்சம் தெரிந்தது. மத்தியில் இருந்த நெருப்பின் அருகில் மௌனி அமர்ந்திருந்தான். இவன் தூங்கவே இல்லையா? பார்த்துக்கொண்டே இருந்த போது ஒரு சுள்ளியை நெருப்பில் போட்டான். மற்றவர்கள் இன்னும் உறங்குகிறார்கள். வெட்ட வெளியின் ஓரமாக மஞ்சு படுத்து இருந்தாள். அவள் அருகில் ஒரு நாயைப் பார்த்தான். இது ஏது? இங்கெல்லாம் நாய் வருமா என்ன? நாய் இவனைப் பார்த்து உறுமியது. சட்டென்று எழுந்தாள் மஞ்சு. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு "ஓ, முழுச்சிட்டையா சாமி! எல்லாரையும் எழுப்பலாமா? அப்பதான் சரியா இருக்கும்.” என்றாள். தேநீர் போட நெருப்பில் தண்ணீர் பாத்திரத்தை ஏற்றினான் சங்கர்.

காலை சிற்றுண்டி முடித்தபின் இரவு நன்றாக தூங்கிய விளைவோ என்னவோ எல்லாரும் வேகமாகவே நடந்தார்கள். விஞ்ஞானிகள் அவ்வப்போது ஓடுவதும் ஏதேதோ இலை பூ இவற்றை சேகரிப்பதுமாக இருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் மிகவும் தாமதப்படுத்தாததால் யாரும் ஆட்சேபிக்கவில்லை.

அடிகள் யோசித்துக்கொண்டே நடந்தார். நமக்கு விடிவு காலம் பிறக்குமா? குரு கடைசி காலத்தில் சொன்னார். புலிக்குகைக்குப் போ. உனக்கு நல்லது என்று. நாம்தாம் தாமதித்துவிட்டோம். என்ன செய்வது. எப்போது பத்து பிரச்சினைகளவது இருக்கின்றது. ஒரு பிரச்சினை முடிந்தால் அடுத்த பிரச்சினை உடனே வந்து விடுகிறது.மடத்துக்கு குத்தகை, வாடகை பாக்கி என்று வர வேண்டியது கோடிக்கணக்கில் இருக்கிறது. யார் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்? எல்லாருக்கும் வருகிற கொஞ்சம் வரவு மட்டும் கண்ணில் படுகிறது. செலவு கண்ணில் படுகிறதில்லை. மடத்து நிர்வாகம் ஒண்ணும் ராஜபோகம் இல்லை. எவ்வளவு மனிதர்கள். எவ்வளவு பிரச்சினைகள். எல்லாரையும் திருப்தி செய்யனும். இவர்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? ஆளாளுக்கு நாட்டாண்மை பண்ணப்பார்க்கிறார்கள். அறிவிலிகள். அந்தரங்கமாக இருக்க வேண்டிய விஷயங்களை அப்படி வைத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு குடும்ப மக்களைதான் நம்ப வேண்டி இருக்கு. இதை எல்லாரும் விமர்சிக்கிறார்கள். என் பிரச்சினை புரியவில்லை. என் தலைவிதி இந்த காட்டுவாசம். இந்த நித்தியானந்தம் மட்டும்தான்...மனசிலே இருக்கிற கோபத்தை எல்லாம் இவன் மேலே காட்டுகிறேன். இருந்தாலும் நான் சொன்னபடி எல்லாம் ஆடுகிறான். அப்படி ஒரு குரு பக்தி. கொஞ்சம் ரொம்பவே ஓட்டறேனோ? இந்த காடுதான் புரியவில்லை. ஏதோ சுற்றிச் சுற்றி வருவது போல இருக்கிறது. இந்த ... காட்டுப்பெண். என்ன தெரியும் இவளுக்கு? எங்கு போய் கொண்டு இருக்கிறோம் என்று இவளுக்கு தெரியுமா? தயங்காமல் போவதை பார்த்தால் தெரியும்போல்தான் இருக்கிறது. இருந்தாலும் எளிய புத்தியில்லாத பெண்தானே? இங்கே யார் எனக்கு வழிகாட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை. என் பிரச்சினைகள் யாருக்கு புரியும்? இந்த காட்டில் மலையில் என்னை விட அதிகம் படித்த புத்திசாலி யாரும் இருக்கிறார்களோ? அது எப்படி முடியும்?
--

Thursday, February 19, 2009

தேடல்-4.

தேடல்-4.

பிற்பகல் வேளையில் அனைவரும் மஞ்சுவை தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இப்போது ஒத்தையடிபாதை ஏதும் இல்லை. ஆராய்சியாளர்கள் அசராமல் போய்க்கொண்டு இருந்தனர். ஹைக்கிங் காலணி போட்டு இருந்த சங்கர் அவர்களுக்கு ஈடாக நடந்தான். அடிகளும் சீடனும் கொஞ்சம் பின்னால் வந்து கொண்டு இருந்தனர். கதிர்வேலனும் அவர் மனைவியும் இவர்களுக்கு இணையாக நடக்க சிரமப்பட்டுக்கொண்டு இருந்தனர். அவ்வப்போது மஞ்சு நிதானித்து சென்று கொண்டு இருந்தாள். இதனால் அனைவரும் இவளுக்கு வழி தெரிந்துதான் போகிறாளா என்று நினைத்தபடி நடந்தனர்.

சுமார் இரண்டு மணி நேரத்துக்குப்பின் மஞ்சு ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டாள். “ஏன் மஞ்சு உக்காந்து விட்ட?” என்று வினவினான் சங்கர். "நம்ம பின்னால ஒருத்தர் தொடர்ந்து வராருங்கோ. எவ்வளவு நேரந்தாந் தாமசித்து வரது? நம்மோட சேந்துக்கட்டுமே" என்றாள் அவள். எல்லாரும் ஒருவர் ஒருவர் பார்த்துக்கொண்டனர். "யாருக்கும் எதுவும் கேட்டுச்சா?” என்றான் சங்கர். உன்னிப்பாக கவனித்தனர். சந்தடியே இல்லை. "இல்லையே?” பத்து நிமிடங்கள் கழித்து மஞ்சு அவர்கள் வந்த வழியிலேயே போய் ஐந்து நிமிடங்களில் அவனுடன் திரும்பி வந்தாள். காலை ராபர்ட் சத்திரத்தைவிட்டு போனதை பார்த்தபடி இருந்த அவனேதான்.

“யாருப்பா நீ? ஏன் எங்க பின்னால வர?”
பதில் இல்லை.
“ஒன்னும் பேச மாட்ராருங்க.” என்றாள் மஞ்சு.
"சரி வருவதானால் வரட்டுமே. யாருக்கு என்ன நஷ்டம்" என்றான் குமரன்.

இன்னும் தாமதமாகாமல் போனால் சரிதான் என்று அடிகளார் சொல்ல மீண்டும் நடக்க ஆரம்பித்தனர். தோள் பையை சுமக்க கஷ்டப்பட்ட கதிர்வேலன் கையிலிருந்து அதை மௌனி மௌனமாகவே விடுவித்தான். இப்போது மஞ்சு வேகமாகவே நடக்க ஆரம்பித்தாள். "ராவுக்குள்ள கரடி பள்ளத்துகிட்ட போயிடணும்” என்று முணு முணுத்தாள்.

நடை இப்போது அனைவருக்குமே சிரமமாகிவிட்டது. எப்போது பொழுது சாயும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வேளையும் வந்து ஒரு சிறு திறந்த வெளியில் மஞ்சு மூட்டையை இறக்கியபோது யாரும் ஆட்சேபிக்கவில்லை. அனைவரும் மூட்டைகளை இறக்கி வைத்து ¨அப்பாடா!¨ என்ற படி கீழே சாய்ந்தனர். மஞ்சுவும் மௌனியும் பக்கத்தில் மரங்களின் கீழ் இருந்த சுள்ளிகளை சேர்க்க ஆரம்பித்தனர். வேறு யாருக்கும் அதற்கு சக்தி இல்லை. விஞ்ஞானிகள் கூட சோர்வாகிவிட்டதாக தெரிந்தது.

ஒரு கல்லின் மீது சாய்ந்தபடி அனைவரையும் பார்த்தான் சங்கர்.

“என்ன விசித்திரமான குழு! ஒத்தருக்கு ஒத்தர் ஒரு வாரம் முன்னால் தெரியாது. இப்போது எல்லாரும் ஒன்றாக...” ஒவ்வொருவராக பார்க்க ஆரம்பித்தான்.“ விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் சோர்வில்லாமல் இருந்தார்கள். இப்போ ..யார் இவர்கள்? வளவளவென்று பேசியபடியே இருக்கிறார்கள். சக வேலை செய்பவர்களா, நண்பர்களா, காதலர்களா? இது மேல்நாட்டில் சகஜம். இந்தியாவில்.... இங்கும்தான் எல்லாம் வேகமாக மாறி வருகிறது. அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. அடுத்து அடிகளார். அவர் தன்னைப்பற்றி விவரம் அதிகம் சொல்லவில்லை. ஏன்? அவர் சிஷ்யனை ஏன் இந்த ஓட்டு ஓட்டுகிறார்? அதோ ஏதேதோ கட்டளைகள்..... இந்த சிஷ்யன் எப்படிப்பட்டவன்? முதலில் நல்ல பையனாகத்தானே தெரிந்தான். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி மஞ்சுவின் பக்கம் பார்வை போகிறது. இந்த மஞ்சு... களைப்படைவதாகவே தெரியவில்லை. மௌனியிடன் ஏதேதோ பேசுகிறாப்போல இருக்கிறது. ஆச்சரியம். இவள் முகத்தை யாரும் சரியாகக்கூட பார்க்க முடியவில்லை. எப்போதும் தலை குனிந்தபடியே இருந்தவள் இப்போது மௌனியுடன் பேசும்போது மட்டும்... இந்த மௌனி யார்? புரியவில்லை. ஊமையா? இல்லை அப்படி.. கண்களை பார்த்தால் ஒரு வெறிப்பு... ஒன்று உன்மத்தனாக இருக்கனும் அல்லது... கதிர்வேலன். பாவம். மனைவி மீதுதான் என்ன அன்பு. இப்படி எல்லாருமா இருந்துவிடுகிறார்கள். புதுசாக ஒன்று... இன்கம்பாட்டபிலிடி.. அப்படிச்சொல்லி பிரிவது சகஜமாகி வருகிறது. கடைசியாக நான்.” சிரித்துக்கொண்டான் சங்கர்.
நான்.......

Wednesday, February 18, 2009

தேடல் -3

மூன்று மணி நேர நடைக்கு அப்புறம் முன்னால் போய்க்கொண்டு இருந்த சங்கர். திடீரென்று நின்றார்.
---
“யார் நீங்க?”
அங்கே ஒரு மரத்தடியில் கல் மீது அமர்ந்து இருந்தவர்களும் இவர்களை வியப்புடன் பார்த்தார்கள்.
“சரியாப்போச்சு, நாங்கதானெ அதை கேக்கனும்?” என்றார்கள் அந்த இளைஞனும் யுவதியும்.
பின் சிரித்தபடி தாங்கள் தாவரவியல் ஆராய்சியாளர்கள் என்றும் அடிக்கடி இந்தபக்கம் வந்து தேடுவது உண்டென்றும் சொன்னார்கள்.
“நீங்க எங்க வந்தீங்க?”
"நாங்க புலிக்குகையை தேடி போறோம்.”
“அப்படி கேள்வி பட்டதே இல்லையே!”
"இதோ இந்த பெண் அழைத்துப்போகிறாள்"
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். "குமரன், புது இடம் போல இருக்கு. அங்கேயும் பார்த்தாதான் என்ன?” என்றாள் யுவதி.
“சரிதான், வனிதா" என்று குமரன் சொல்ல, இதற்குள் நடந்த களைப்பில் எல்லாரும் உட்கார்ந்து விட்டார்கள்.
"சரி மதியம் ஆச்சு. இங்கே சாப்பிட்டு கிளம்பலாம்" என்று சங்கர் சொல்ல யாரும் ஆட்சேபணை சொல்லவில்லை.
கதிர்வேலன் தம்பதியினர் கிராமத்து டீக் கடையை கணிசமாக காலி செய்து வாங்கிய உணவு பொருட்களை பிரித்தார்கள். சங்கரும் ஆராய்ச்சியாளர்களும் தம் முதுகுப்பையில் இருந்து சில டப்பாக்களை எடுத்து உடைத்தனர். அடிகளாரின் சிஷ்யன் மூட்டையில் இருந்து அவல் எடுத்து ஊற வைக்கலானான். இந்தாம்மா என்று சங்கர் மலைப்பெண்ணிடம் ஒரு பேப்பர் தட்டை நீட்ட அவள் "வேண்டாஞ்சாமி, இதெல்லாம் எனக்கு ஒத்து வராது" என்று குனிந்த தலை நிமிராமல் மறுத்தாள்.

ராபர்ட் கனைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினான். மேல போகு முன்னே நாம் அறிமுகம் செஞ்சுகிறது நல்லது. இங்கே இருக்கும் சங்கர் அமெரிக்காவுல என் நண்பரின் ஆபீஸ்ல வேலை பாக்கிறார். இவரது நண்பர் ஒருவர் புலிக்குகையை பத்தி சொல்லி இங்க வந்திருக்கார். இவர் கதிர்வேலன். அவரது மனைவி வள்ளியம்மை.” கனவைப்பற்றி சுருக்கமாக சொன்னான். இவர் என்று அடிகள் பக்கம் கேள்வியுடன் திரும்பினான். ஏதோ சொல்ல வந்த சிஷ்யனை கை காட்டி அமர்த்திவிட்டு "சச்சிதானந்த அடிகள். இது நித்தியானந்தம்" என்று முடித்துக்கொண்டார். அதற்கு மேல் ஏதும் சொல்ல விரும்பவில்லை போல தோன்றியது.
பிறகு சற்று நேரம் அங்கே கொஞ்சம் கலகலப்புடன் பேச்சுவார்த்தை நடந்தது.
உணவு முடிந்து ராபர்ட் "சரி நான் கிளம்புகிறேன்" என்று சொல்ல சங்கர் வியப்புடன் கேட்டான் "நீங்க எங்களுடன் வரலையா?”
"வருவதாக எங்கே சொன்னேன். நான் வழக்கமாய் மூலிகை தேட போகும் வழி இது. இனி நீங்க வேற வழில போகனும். கவலைப்படாதீங்க. மஞ்சு இருக்கும் வரை கவலை இல்ல" என்றபடி வலது பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

Tuesday, February 17, 2009

தேடல் -2.

தேடல் -2.
காலை ராபர்ட் வாசலை தாண்டி போகும் போது திண்ணையில் படுத்து இருந்தவன் எழுந்தான். இரவு முழுதும் கொட்டித்தீர்த்த மழை அவனை பாதித்ததாக தெரியவில்லை. யார் இவன் என்று யோசித்தபடியே வெளியே வந்து எதிரில் இருந்த திறந்த வெளியை அடைந்தான். அங்கே ஒரு நெருப்பை யாரோ மூட்டியிருந்தார்கள். அதில் குளிர் காய அமர்ந்தான்.

அந்த வயதான தம்பதியினர் சற்று நேரத்தில் வெளியே வந்து அவன் அருகில் அமர்ந்தார்கள். "நீங்க யார்? எங்கிருந்து வரீங்க?”

என் பெயர் கதிர்வேலன் என்று ஆரம்பித்தார். தன் ஊரைச்சொன்னார். கொடி கட்டி பறக்கும் அவர் வியாபாரம், பணத்தை குறி வைக்கும் உறவினர்கள், மனதை கனமாக அழுத்தும் குழந்தை இல்லா பிரச்சினை, ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக சுத்தியது, கோவில் கோவிலாக சுத்தியது, ஆனால் இன்றுவரை ஒரு பயனும் இல்லாதது..... “டாக்டர் எல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லைனுதான் சொல்றாங்க. ஆனா ஒரு புழுவும் முளைக்கலியே!” தாபம் கண்ணீராக வழிந்தது. "கடைசியில யாரோ இங்கே போக சொன்னாங்க. வரும் வழில கார் ரிப்பேர் ஆயிட்டுது. அதை சரி செய்து ஊருக்கு கொண்டு போக சொல்லிட்டேன். அப்ப தற்செயலா வந்த பஸ்ஸுல இங்க வந்து சேந்தோம். இனி அவன் விட்ட வழி!" பின்னர் தன் மனைவியின் கனவையும் உடனே அங்கே போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதையும் சொன்னார்.

அப்போது காவி அணிந்து ஒரு மடாதிபதி போல தோற்றம் கொண்டவர் வந்து சேர்ந்தார். அவர் பின்னால் வந்த சிஷ்யன் அவர் அமர ஒரு பலகையை போட்டான்.
“நீங்க வரச்சொன்னதா கேள்விப்பட்டேன்."
ராபர்ட் தலை ஆட்டினான். தம்பதியினரை பார்த்து "நீங்க காட்டு வழில நடந்தே போக வேண்டியிருக்குமே" என்றான். கதிர் வேலனுக்கு முன் அவர் மனைவி முந்திக்கொண்டு பதில் சொன்னாள், “என்ன ஆனாலும் சரி, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி. போயே தீருவோம்"

என்னை கவனிக்கவில்லையே என்பது போல காவிதாரி இருமினார். அவர் பக்கம் திரும்பி மெல்ல சிரித்த ராபர்ட் "அடிகளே, கொஞ்சம் பொறுங்க. உங்களுக்கு வழி காட்ட ஆள் வந்துகிட்டே இருக்கு" என்றான்.

சங்கரும் அங்கே வந்து தன் தோள் பையை இறக்கி வைத்து உட்கார்ந்து "நான் தயார்" என்றான். ஏதோ பயணத்துக்கு தயாரானவன் போல காணப்பட்டது.

ராபர்ட் அவனை திரும்பி பார்த்து ¨அப்புறம் என்ன போக வேண்டியதுதான்¨ என்று எழுந்தான். அனைவரும் அவனை பின் தொடர்ந்து சென்றார்கள். கிராம எல்லை அதிக தூரம் இல்லையாதலால் சீக்கிரமே வந்து விட்டார்கள். அதோ உங்களை வழிகாட்டி அழைத்துப்போக ஆள் என்று சுட்டிக்காட்டினான் ராபர்ட். அங்கே உட்கார்ந்து இருந்த ஒரு மலை சாதி பெண் இவர்களைப் பார்த்ததும் தலையை குனிந்தபடி எழுந்தாள்.

“இவளா" என்று இகழ்ச்சியுடன் கேட்டார் அடிகள்.
“ஆமாம். பெயர் மஞ்சு. இவளுக்கு இந்த மலைப்பகுதியெல்லாம் நல்லா தெரியும். புலிக்குகைக்கு வழி தெரியும் என்று சொல்கிறாள்¨ என்றான் ராபர்ட்.
“அப்படியாம்மா? அது எங்கே இருக்கு?அங்கே எங்களை அழைத்துப்போக முடியுமா" என்று ஆவலுடன் கேட்டான் சங்கர்.
“ஆங்!” என்றவள் திரும்பி மலையை நோக்கி கை காட்டினாள். ¨அங்க தூரத்தில.. வழி கேள்வி பட்டு இருக்கேன். போனதில்ல" என்றாள்.
"போனதில்லையாமே? இவளை நம்பி எப்படி போறது? என்றார் கதிரேசன் கவலையுடன்.
“நம்புங்க சாமி! போயிரலாம். அவ்வளவு தூரம் ஆச்சேன்னு பாக்கறீங்களா?”
"இல்ல இல்ல எப்படியும் போகணும்" என்றாள் கதிரேசன் மனைவி வள்ளியம்மை.
"வழியெல்லாம் காட்டுப்பாதை, முள்ளு தைக்கும், உங்க செருப்பு ரெண்டு மைலு தாங்காது, பிஞ்சிரும். ராவு குளிரு, பூச்சி பொட்டு இருக்கும். புலி சிறுத்தையெல்லாம் வரும். பரவாயில்லையா?' என்று பயமுறுத்தினாள். அனைவரின் உடலும் சிலிர்த்தது. எப்படியானாலும் என்று வழக்கம் போல கதிரேசன் மனைவி பிடிவாதம் பிடிக்க, ஒரு மணி நேரத்தில் புறப்பட வேண்டும் என்று முடிவானது.

இரண்டு மணி நேரத்தில் அவர்கள் மலையேற ஆரம்பித்து விட்டார்கள். ஒத்தையடிப்பாதை ஒன்றை பற்றி போய் கொண்டு இருந்ததால் எதிர்பார்த்தது போல இல்லாமல் நடை சுலபமாகவே இருந்தது. பின் தங்கி வந்த வள்ளியின் கையிலிருந்து மலைப்பெண் பையை பிடுங்கிக்கொண்டாள். "கொடும்மா பரவால்லை. இது உனக்கு பழக்கமில்ல.” மூன்று மணி நேர நடைக்கு அப்புறம் முன்னால் போய்க்கொண்டு இருந்த சங்கர். திடீரென்று நின்றான்.

Monday, February 16, 2009

தேடல் -1

          அப்பனே முருகா, காப்பாத்துப்பா என்றபடி பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள் அந்த தம்பதியினர். கண்களில் பயண அலுப்பு. ஆனாலும் ¨கோவில் எங்கப்பா இருக்கு?¨ என்று பக்கத்து டீக்கடையில் விசாரித்துகொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். தம்பதியினர் குளத்தில் கைகால் சுத்தம் செய்து கொண்டு இளைப்பாற சிறிது தண்ணீரும் குடித்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தனர்.

       அந்த கேள்வி அனாவசியம்தான். அந்த மலையடிவார கிராமமே சின்னது. அங்கே கோவில், குளம், சத்திரம் தவிர இரண்டொரு வீதிகள் மட்டுமே. ஒரு நாளைக்கு ஒரு பஸ் அந்தப்பக்கம் வர வேண்டும் என்றாலும் சாலை கெட்டுப்போனால் அரிதாகவே அதை பார்க்கலாம். இன்றைக்கு ஏதோ வந்து இருக்கிறது. இதோ வரேன் வரேன் என்று பயமுறுத்தும் மழை வந்து விட்டால் அனேகமாக இன்னும் ஒருவாரம் வராது.

     சத்திரத்தின் வாசலில் இருவர் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தனர். “புலிக்குகையை பார்த்தா...”

      "ஐய்யா, எவ்வளவு நேரமா நிக்கிறது? கொஞ்சம் சீக்கிரம் அனுப்புங்க" என்று இடை மறித்தாள் அந்த பால்காரி. "ஆமா நீ எத்தினி வீட்டுக்கு பால் ஊத்தனும்?” என்று கேட்டப்படியே உள்ளே போனார் சத்திரக்காரர். பாலை பாத்திரத்தில் வாங்கியபடியே "இன்னும் ஒரு லிட்டர் கொடு. பஸ்ஸில அதிசயமா சில பேர் வந்து எறங்கினத பாத்தேன். இந்த எடம் தவிர வேற எங்க போவாங்க" என்றார். ¨ஆமா, இந்த குக்கிராமத்துல பெரிய ஓட்டல் இருக்கே அங்கதான் போவாங்க¨ என்று சிரித்தபடி பாலை ஊற்றிவிட்டு கிளம்பினாள் பால்காரி. சத்திரக்காரர் எதிரில் இருந்த வாலிபனைப் பார்த்து "இதோ நீங்க எதிர்பார்த்த ஆளு வந்துட்டாரு. பேசிக்குங்க" என்றபடி உள்ளே போனார்.

      பேசிக்கொண்டு இருந்த வாட்டசாட்டமான வாலிபன் தெருவைப் பார்த்தான். கிராம சூழ்நிலைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் ஒரு வெள்ளைக்கார வாலிபன் வந்து கொண்டிருந்தான். அணுகியதும் ¨நான் சங்கர்!¨ என்று கையை நீட்ட, வியப்புடன் பார்த்தான் அவன். "நான் ராபர்ட். சூசன் சுகமா? உங்களை எதிர்பார்த்தேன், ஆனால் இவ்வளவு சீக்கிரம் அல்ல" என்றான். இருவரும் சத்திர திண்ணையில் அமர்ந்தனர். ராபர்ட் இயல்பாக உட்கார்ந்ததைப் பார்த்தால் இந்தியாவுக்கு ரொம்பவே பழகியவன் என தெரிந்தது. என்ன விஷயம் என்று ராபர்ட் வினவ அவர்கள் பேச ஆரம்பித்தனர்.

      சத்திரக்காரரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. கோவிலில் தரிசனம் முடித்த அந்த தம்பதியினர் சத்திரக்காரரை பார்த்து இளைப்பாற இடம் கிடைக்குமா என்று வினவினார்கள். "தனியா ரூம்பு எதுவும் இல்ல. கூடத்துலதான் தங்க படுக்க எல்லாமே" என்று பதில் வந்தது. தயங்கி நின்ற கணவனைப்பார்த்த அந்த அம்மாள் "வேற வழி? காரோ பஞ்சர் ஆயிருச்சு. ஏதோ பஸ்ஸு கிடைக்க அந்த முருகன் வழி பண்ணான். இங்கேயே தங்கலாம், டிரைவர் சரி பண்ணி கொண்டு வருவானில்லே" என்றாள். "ம்..பார்க்கலாம். இந்த ரோடு இவ்வளோ மோசமாயிருக்கும்னு தெரியாது.” என்றபடி உள்ளே சென்றனர்.

        அலுப்பில் தூங்கிய அந்த அம்மாள் திடீரென்று எழுந்தாள். உடம்பு முழுதும் வேர்த்துக்கொட்டி இருந்தது. முருகா முருகா என்று அரற்ற ஆரம்பித்துவிட்டாள். பக்கதில் கண் அசந்து இருந்த கதிர்வேலர் "என்ன ஆச்சுமா? என்ன ஆச்சு?வள்ளி...என்ன ஆச்சு” என்று பதறினார். "இவ்வளொ நாள் பட்ட கஷ்டத்துக்கு தீர்வு கிடைச்சிருச்சுங்க. முருகன் கனவுல வந்து புலிக்குகைக்கு போ, உனக்கு வழி பொறக்கும்ன்னு சொன்னாரு. அது இங்கதான் எங்கியோ இருக்காம்.”

      புலிக்குகை எங்க இருக்கு என்று கேட்டவரை ஏற இறங்க பார்த்தார் சத்திரக்காரர். "இதென்ன இன்னிக்கு? இதே கேள்வி கேக்கிற இரண்டாவது நபர் நீங்க! அது பத்தி காதுல விழுந்திருக்கு, ஆனா எங்க இருக்குன்னு எல்லாம் தெரியாது" என்றார் அவர்.
" யாரது முதல் நபர்?”
“அதோ திண்ணைல பேசறாங்க பாருங்க ரெண்டு மண்ணேரமா. அதுல வெள்ளக்காரர் இல்லாத ஒத்தர்.”
"வெள்ளக்காரர் எப்படி இங்க...”
"அவர் நாலு வருஷமாவே இங்க இருக்காரு. அவர் தர பைசால தான் சத்தரம் ஓடுது. ஏதோ ஆராய்ச்சி பண்றாரு. மூலிகையால தங்கம் பண்ணப்போறாராம்" என்று சிரித்தார். "இந்தாங்க டீ. ராத்திரிக்கு சாப்பாடு வேணுமில்ல?"
“...முயற்சி பண்ணி பாக்கலாம். நிச்சயமா ஒண்ணும் சொல்ல முடியாது...” என்று பேசிக்கொண்டு இருந்தவர்களை இடை மறித்தார் கதிர்வேலன். "ஐயா! புலிக்குகை பத்தி விசாரிச்சது யாரு?”

         சங்கர் அவரை வியப்புடன் பார்த்தான்.
“ஏன்?"
"அங்க போகனும்"
பேசிக்கொண்டு இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
ராபர்ட் சொன்னான் "அப்படித்தான் இவரும் கேக்கிறாரு. கோவில்லேயே தங்கி இருக்கிற சாமியாரும் அவரோட சிஷ்யனும் கேக்கிறாங்க. எனக்குத்தான் பதில் தெரியலே. பதில் தெரிஞ்ச ஒத்தரை வரச்சொல்லி இருக்கேன். இப்ப கோவில் போயிட்டு சாப்பிட்டு தூங்குங்க. காலைல பாப்போம்”

Sunday, February 15, 2009

அறிவிப்பு!

டமர டமர டம்!
டமர டமர டம்!

இதனால் சகலருக்கும் தெரிவித்து கொல்வது (சரியாதான் எழுதி இருக்கேன்!) என்னவென்றால் நாளை துவங்கி தேடல் என்கிற தொடர் கதை இங்கே வெளியாகும். எல்லாரும் படிச்சு பயன்பெறுங்க! பக்கத்திலேயே இருக்கிற காபி, மாத்திரையும் வேணுமானா எடுத்துகிடலாம்!
நன்னி!