Sunday, June 28, 2009

32 உம் கதையும்....

ஒரு இரும்பு கடை திறக்கலாம்ன்னு உத்தேசம். அவ்வளோ ஆணி!
மௌலிகிட்டே நேரம் இல்லைன்னு ஜகா வாங்கிடலாம்ன்னு பாத்தா சூரி சார் வேற கூப்டார்.
சரி கொஞ்சம் கதை விடலாமேன்னு... ரொம்ப நாளாச்சு இல்லே?
--------------------
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

ம்ம்ம்ம். அம்மா வழி தாத்தா பேர். வெச்சுட்டாங்க. என் பேரு எனக்கு ரொம்பவே பிடிக்குமே? ஆனா எந்த பேரை கேக்கறீங்க? பாருங்க முழு பேர் சொன்னா இணைய நண்பர்கள் பலருக்கு யாருன்னே தெரியறதில்லை. திவா ன்னு சொல்ல வேண்டி இருக்கு. ஆ.பா ன்னு இன்னொரு பேர். எனக்கு பிடிச்சது. இருந்தாலும் அதயும் யாரும் கூப்பிடறதில்லை. தொ.கி ன்னு இன்னொரு பேர். ஹிஹிஹி... அதுவும் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பத்தாவது படிக்கும் போது பசி வந்து வேலையா இருந்த அம்மாவை தொணப்பி அடி வாங்கினபோது.

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
ஓ! சில சமயம் நானே கூட படிக்க முடியும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
புதினா/ பருப்பு துவையல். உருளை/ பீன்ஸ் கறி, டொமாடோ ரசம், சுட்ட அப்பளாம். அவ்வளோதான். எதேஷ்டம்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை. எல்லாரோடயும் சகஜமா பழகறேன். "எதிரி" உட்பட. நட்பு எங்கிட்டே வெச்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். 55 வருஷமா ஒத்தரோட வாழ்ந்துகிட்டு இருக்கேன். அவரையே சரியா புரியலை. அப்புறம் எப்படி உடனே நட்பு? அது தானா வரும் நாளடைவிலே.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

ரெண்டும் இல்லை. நெரூர் காவிரியிலே முங்கி முங்கி குளிச்ச பிறகு மத்ததெல்லாம் நெருலா ஐஸ்க்ரீம் சாப்ட ஆசாமிக்கு மத்தது எப்படி ருசிக்காதோ அப்படி ஆயிடுத்து.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்ணாடி போட்டு இருக்கிறேனான்னு!
ஹிஹி சும்மா சொன்னேன். குரலைதான் கவனிப்பேன்.

8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம்: கொஞ்சம் கொஞ்சம் இருக்கிற நேர்மை.
பிடிக்காத விஷயம் : அப்பப்ப வரும் கோபம் .

9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?
//அவர் ப்ளாக்கர் இல்லை, நான் இடும் இடுகைகளையும் படிப்பவரல்ல. ஆகவே இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.//
மௌலிகிட்டேந்து சுட்டாச்சு. நன்னி மௌலி!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருமில்லை. தனிமையே எனக்கு பிடிச்சது.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ஹிஹிஹி...எப்பவுமே முக்காலே மூணு வீச நேரம் வெள்ளை பஞ்ச கச்ச வேஷ்டியும், வெள்ளை உத்தரீயமும்தான். இப்பவும் அதே!

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
மானிட்டரை பாக்கிறேன். மேலே பான் சுத்தற சத்தம் கேக்கரேன்.
(யாரப்பா இந்த கேள்விய முதல்லே கேட்டது? எழுதரவங்க மானிட்டரை பாக்காமலே எழுதராங்கன்னு நினைப்பா? அவ்வளோ அசிரத்தையா? :-))))))


13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?

ஏம்பா? போயும் போயும் ஒரு பேனாவா மாத்தணுமா? வேறே தோணலையா? சரி போகட்டும். டர்காய்ஸ் நீலம்.

14. பிடித்த மணம்?
சந்தனம். அப்புறம் இப்ப சமீபத்திலே எல்லாம் குட்டி பாப்பாவுக்குன்னு ஒரு தனி மணம் இருக்கே அது!


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?


யாரையும் அழைக்கலை. கவலைப்படாதீங்க!

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

மௌலி: கர்ம சிரத்தை குறித்து சமீப காலமா பதிந்து வருவது.
சூரி சாரின் ஆன்மீகம்.

17. பிடித்த விளையாட்டு:

சுடோகுதான் இப்ப.
காலேஜ் படிச்சப்ப விளையாடாத கேம் இல்லை. ஆனாலும் பாஸ்கெட் பால்தான் பிடிக்கும். கிரிகெட்டிலே டீமில் இருந்தாலும், கிரௌண்டுக்கு போனோமா அரை மணி ஒரு மணி விளையாடி வேர்க்க விருவிருக்க வந்தோமான்னு பாஸ்கெட் பால்தான் பிடிக்கும்!

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம், ஆனால் அவசியமில்லாமலே பேப்பர் படிக்கலாம். தொலை தூரம் பாக்கலாம்.... கணினித்திரைக்கு மட்டுமே அவசியமா வேண்டி இருக்கு.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

சினிமா பாக்க போறோமா? கொஞ்சம் நேரமாவது சிரிச்சுட்டு வரணும்- பாமா விஜயம், சர்வர் சுந்தரம் போல. ஆனா சினிமா எல்லாம் பாத்து ரொம்பவே வருஷங்கள் ஆச்சு.

20. கடைசியாகப் பார்த்த படம்?

ஹரிதாஸ் ன்னு கேள்வி பட்டு இருக்கீங்களா? இல்லை? அடடா! நானும் பாக்கலை. :-)) ஜாக்கி சானின் ட்ரங்கன் மாஸ்டர்.... என்னமா வளையறாரு! ரொம்பவே வியக்க வெச்ச படம்.

21. பிடித்த பருவகாலம் எது?

ம்ம்ம்ம். மழைக்காலம்தான். மழை பிசு பிசுன்னு வெளியே பெய்ய, லீவு நாளிலே ஒரு ஈஸிசேர், கையிலே ஒரு நல்ல புத்தகம், பக்கத்திலே வறுத்த கடலை அல்லது பக்கோடா.... அடடா!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கைவல்லிய நவநீதம். பல நாட்களா அதைத்தான் திருப்பி திருப்பி...

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு தரம் செட் பண்ணா அவ்வளொதான். வழக்கமா அதை ஒரு சில நொடிக்கு மேலே பாக்கிறதில்லையே! ஏன் இதை விதவிதமா செட் பண்ணறாங்கன்னு புரியலை.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : ப்ரணவம். அதை கேக்கறப்போ இருக்கிற நிம்மதி எப்பவௌம் இராது.
பிடிக்காதது : பயணம் போனாலே பேஜார்தான். வண்டிகளோட சத்தம்...

25.
வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

புது தில்லி. பிலானி போயிருக்கேன். அதுக்கு அதிகமா பயணம் பண்ணாலும் தூரம் கம்மின்னு நினைக்கிறேன்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஜாக் ஆப் ஆல் ட்ரேட்ஸ்! மாஸ்டர் ஆப்? ஹிஹிஹி

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொய்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ம்ம்ம்ம்.. காலை முதல் அலாரம் 3-50 க்கு அடிச்சபின் இன்னும் போகட்டும் அடுத்த அலாரத்துக்கு எழுந்துக்கலாம்ன்னு சொல்கிறதே அதான்.

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?

குன்னூர் ரொம்பவே பிடிச்சது. ஊட்டி மாதிரி ஜனங்க அதிகம் இல்லாம... ஆனா நாளாச்சு..இப்ப மாறி இருக்கும்.

30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?

தயக்கமே இல்லாத பதில் ... இருக்கணூம்ன்னா ஜீவன் முக்தனா இருக்கணும்.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

ஒரேன்னு போட்டா என்ன அர்த்தம்? மத்ததெல்லாம் அவங்களொட சேர்ந்துதான் செய்யறோம்ன்னா? (அப்புறம் முதல் 3 வார்த்தையை ஒண்ணா படிச்ச விபரீதமா இருக்கே!) அனேகமா எல்லா லௌகீக காரியங்களும் அவங்க இல்லாமதான் செய்யறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
என் மெய்லே இருக்கிற வாசகம். சந்தோஷமா இருங்க. வாழ்கை என்கிறது ரொம்ப குறைந்த காலம்தான்.
Be happy! Life is too short to be unhappy!

Thursday, March 12, 2009

தேடல் -19

¨ஆமாம். இவ்வளவு நாட்களும் உங்களுடன் வந்து கொண்டு இருந்தவர்தான். அடிகளாரை தூக்கியும் போனவர்தான். உம் ஆகட்டும்.¨ மஞ்சு திரும்பி நடந்து குகையின் ஒளிக்குள் மறைந்தார்.

வாலை ஆட்டிக்கொண்டு வழிகாட்டின நாயை ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே அனைவரும் பின் தொடர்ந்தனர்.
முன்னம் அவர்கள் பிரிந்த இடத்துக்கு வரவும் குமரனும் வனிதாவும் நிரம்பிய தோள் பைகளுடன் விவாதித்து கொண்டே வரவும் சரியாக இருந்தது. ¨போகலாமா!¨ என்ற கேட்டு விட்டு மீண்டும் அவர்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது கீழே இறங்குவதாக இருந்ததாலும் மனம் நிறைவாக இருந்ததாலும் எல்லாரும் விரைவாகவே இறங்கத்தொடங்கினர். மஞ்சுவை காணாததைக்கூட குமரனோ வனிதாவோ கவனிக்கவில்லை.

நான்கு நாட்களில் உலகமே எப்படி மாறிப்போய்விட்டது? முன்பு இதை பார்த்தாலே வெறுப்பு மேலோங்கியது. இப்போதோ எதைப்பார்த்தாலும் யாரை பார்த்தாலும் ஒரு கம்ஃபாஷன்தான் வருகிறது. முதலில் அம்மாவுக்கு போன் செய்து திருமணம் செய்து கொள்ள தயார்ன்னு சொல்லணும். எவ்வளவு சந்தோஷப்படுவாங்க! ஓ! நான் இந்தியா வந்து இருகிறதே கூட அவங்களுக்கு தெரியாதே. திடீரென்று எதிரே போய் நிற்கலாமா? வேண்டாம். அப்பாவுக்கு கொஞ்சம் பிபி. ஏதாவது ஆகிவிடக்கூடும்.

முன் எப்போதும் இல்லாத நிம்மதியை இப்போது உணர்ந்தான் சங்கர்.

அடிகளார் மனம் நிச்சலனமாக இருந்தாலும் ஆதர்ச சிஷ்யனை பிரிந்துவிட்டோமே என்ற ஆதங்கம் கொஞ்சம் தலைத்தூக்கத்தான் செய்தது. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டாரே குரு! குரு? ஆமாம். நித்தியிடம் சொன்னபோது நம்மை அறியாமலே சத்தியமான வார்த்தைகள் வந்து விழுந்தன. பிரியும் போது கூட நித்தி அழவே இல்லையே! எவ்வளவு வைராக்கியம் வந்துவிட்டது! தன் மேல் வைத்த மதிப்பை அப்படியே சித்தரிடம் திருப்பி விட்டுவிட்டான். எப்போ வருவானோ? எப்போது நான் பொறுப்பில் இருந்து விடுபடுவேனோ! ம்ம்ம்ம்ம்... அட, நம் மடத்துக்கு ரொம்ப மதிப்பு வைத்து இருக்கும் மதுரை ஆடிட்டரை மறந்து போனோமே! சில மாதங்கள் முன் வந்து ஏதோ பேச முற்பட்டபோது கூட, நேரம் சரியில்லாமல் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். முதலில் அவரை கூப்பிடச்சொல்லி பேச வேண்டும்...சிந்தனை தொடர்ந்தது.

வள்ளி ஒரு வழியா நம்ம முருகன் வழி காட்டிட்டான் பாத்தியா!
ஆமாங்க. முதல்ல கீழே இறங்கினதும் அவனுக்கு ஒரு அபிசேகம் செஞ்சுட்டு போகலாம்.
அடுத்து எந்த டாக்டரை..
யாரையும் பாக்க வேணாங்க. மஞ்சு எனக்கு அப்பப்ப ஏதோ பச்சிலை எல்லாம் கொடுத்து வந்தா. எனக்கும் ஏனோ சாப்பிடணும்னு தோணிச்சு. ஆயாசம் நீங்கத்தான் கொடுக்கிறா ன்னு நினைச்சேன். அது வேறன்னு இப்ப தோணுது. உடம்பே இப்ப வித்தியாசமா இருக்கு. லேசா....கனமே இல்லாம... என் தம்பியை சொத்துக்கு ஆசை படறான்னு நினைச்சு வீணா விலக்கி வெச்சு இருந்தோமே அது தப்புன்னு தோணுது. கூப்பிட்டு பேசணும்.

எல்லோருக்கும் இப்போது ஏதோ நினைவு மங்கியது. புதிய எண்ணங்கள் வந்தன. புதிய கண்ணோட்டங்கள்...

ஆகா இப்படி ஒரு அழகான முருகன் கோவில் இந்த மலையில்! நாள் போனதே தெரியவில்லையே! யாரையும் பார்க்கவில்லை, பேசவில்லை. ஆனால் ஒரு நிம்மதி வந்துவிட்டதே! தம் காரியம் இனி நன்றாக நடக்கும் என்று ஒரு நம்பிக்கையும் வந்துவிட்டது.

குமரனும் வனிதாவும் இன்னும் விவாதித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் தோள் பை நிறைய பலவித தாவரங்கள். பூக்கள், இலைகள்.. .. எது புதுசு? எது பழசு.? இதில் கருத்து வேறுபாடு நிறையவே இருந்தது. இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தனர். மற்றவர்களைப்பற்றி ஒரு நினைவே கூட இல்லாமல்.....

சுமார் இரண்டு மணி நேரத்தில் கீழே இறங்கிவிட்டார்கள். மேலே போகும்போது நான்கு நாட்கள் ஆயிற்றே! இப்போது இரண்டு மணி நேரம்தானா என்ற எண்ணம் சங்கர் மனதில் மட்டும் ஒரு கணம் தோன்றி மறைந்தது.

ஒரு டவேரா வந்து நின்றது. ¨அக்கா! அக்கா!¨ என்று உரக்க கூவியபடி ஒருவர் இறங்கி ஓடி வந்தார். ¨பத்து நாளா எங்கே போய்விட்டீங்க? நாங்க படாத பாடு பட்டுட்டோம். அக்கம் பக்கம் தேடாத இடமில்லை.¨
¨பத்து நாளா?¨
¨பின்ன, உங்க ட்ரைவர் காரை ரிப்பேர் பாத்து திரும்பி வந்து பத்து நாள் ஆகப்போகுது. இங்கே பக்கத்திலே ஒரு கிராமத்திலே இருப்பீங்கன்னு சொல்லி போனீகளாம். அங்க கேட்டா யாருக்கும் தெரியலே! என்ன செய்யிறதுன்னு தெரியாம எங்கிட்ட வந்தான். நானும் ரெண்டு நாள் பொறுத்து பாத்திட்டு வண்டில இங்கேயே சுத்தி சுத்தி வரென். சொல்லிட்டு போக்கூடாதா? சரி வாங்க போலாம்.¨
¨இவங்களையும் பக்கத்து ஊரிலே விட்டுடலாம்பா. நாங்கள்லாம் ஒண்ணா இந்த மலையிலே ஒரு முருகன் கோவிலுக்கு போய் வந்தோம்.¨
¨பக்கத்து ஊர் என்ன? எங்கே போகணுமோ அங்கேயே விட்டுடலாம். உங்களை திரும்ப பாத்ததுல இப்ப எவ்வளொ நிம்மதியா இருக்கு.¨

அனைவரும் வண்டியில் ஏறினர்.

மௌனமாக தூரத்தில் அமர்ந்து இதை பார்த்துக்கொண்டிருந்த நாய் சிரிப்பது போல இருந்தது. அது நம் பிரமையாகதான் இருக்க வேண்டும். நாய் எங்காவது சிரிக்குமா என்ன? அது புலியாக மட்டும்தான் மாறும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிறைவுற்றது!

Wednesday, March 11, 2009

தேடல்-18

¨இவள் யார்? உங்கள் வழி காட்டிதான்! வேறு யாரும் இல்லை.¨ என்ற குரல் கேட்டது.
மஞ்சு கம்பீரமாக எழுந்து நின்று முதன் முறையாக குழுவினரை நேருக்கு நேர் பார்த்தாள்.

சக்தி வாய்ந்த கண்கள் ! ஏன் இவ்வளவு நாட்கள் யாரையும் நேரே பார்க்கவில்லை என்பது புரிந்தது. பார்த்திருந்தால் அவற்றின் சக்தி இது சாதாரண பெண் இல்லை என்று அடையாளம் காட்டி இருக்கும்!

இப்போது குரல் அவளது வாயிலிருந்தே வருகிறது என்பது புரிந்தது.

¨ஐந்து நாட்களாக உங்களுடனேயே இருக்கிறேனே! மௌனியை தவிர யாரும் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தால் அவரை அங்கேயே நிறுத்தி தேவையானதை செய்துவிட்டு வந்தேன். அவருக்கு உபதேசம் ஆகிவிட்டது. சமாதிக்கு போய்விட்டார்! சில காலம் சென்ற பின் இந்த மலையில் உலவும் பல சித்தர்களில் அவரும் ஒருவராகிவிடுவார். நித்திக்கு கொஞ்சம் புரிந்தது. கொஞ்சம் சிரமப்பட்டே அவன் கவனத்தை திருப்ப வேண்டி இருந்தது.¨

யாருக்கும் ஒரு பேச்சும் எழவில்லை. இவ்வளவு சக்தி வாய்ந்த சித்தர் நம்மிடையே ஒருவராக பழகி உலாவிக்கொண்டு இருந்தாரா? பிரமிப்பே ஏற்பட்டது. அனவரும் தரையில் வீழ்ந்து வணங்கினர்.

¨திருப்பி இங்கே...¨
¨திருப்பி இங்கே நீங்கள் வர முடியாது. இந்த இடம் கொஞ்சம் வித்தியாசமானது. உலகின் சாதாரண விதிகள் இங்கு செல்லுபடியாகாது. நீங்கள் திரும்பி இங்கே வருவது தேவையானால் அதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த இடம் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே வித்தியாசமாக ஆகிவிடும். திருப்பி இங்கே வந்தால் கூட உங்களால் கண்டு பிடிக்க முடியாது. அதைப்பற்றி கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையானது சரியான சமயத்தில் யார் மூலமாகவோ வந்து சேரும். இந்த மலையின் அடிவாரத்துக்கு போவதற்குள்ளேயே இங்கே நடந்த பல விஷயங்கள் உங்களுக்கு மறந்துவிடும். தேவையானது மட்டுமே நினைவில் இருக்கும்.¨

¨ஏன் அப்படி?¨
மஞ்சு சிரித்தார். அப்புறம் ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் கூட இங்கே வரத்தோன்றும். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கத்தோன்றும். கவலைப்படாதீர்கள் தேவையான நேரத்தில் ஏதோ ஒரு நபர், விஷயத்தின் மூலம் உங்களுக்கு எப்போதும் வழி காட்டப்பட்டுவிடும்.¨

¨ நித்தியானந்தம், இங்கேயே கொஞ்சம் நேரம் இரு. சிலர் வந்து உன்னை அழைத்து போவார்கள். எல்லாம் நல்ல படியாக நடக்கும்! போய் வாருங்கள். நிறைவான வாழ்க்கை வாழுங்கள்! நேரம் ஆகிவிட்டது. குமரனும் வனிதாவும் வந்து விடுவார்கள். சீக்கிரம் போங்கள்!¨

¨அவர்களுக்கு... ¨என்று இழுத்த சங்கரை இடைமறித்தார் மஞ்சு. ¨அவர்களுக்கு அவர்கள் தேடி வந்தது கிடைத்துவிட்டது. யார் யார் எதை தேடுகிறார்களோ அதுதானே கிடைக்கும்? அவர்களால் ஒன்றும் பிரச்சினை வராது. இதோ இந்த நாயை தொடர்ந்து போங்கள். சீக்கிரமே கீழே போய்விடலாம்.¨

நாய்?

இப்போது அவர்கள் கண் எதிரே புலி முன்னம் அவர்களுடன் வந்து கொண்டு இருந்த நாயாக மாறியது.

திகைப்புக்கு மேல் திகைப்பு!

Tuesday, March 10, 2009

தேடல் -17

¨நித்தியானந்தம். நீ இங்கேயே இருக்க வேண்டியது. உனக்கு சில பயிற்சிகள் சொல்லித்தரப்படும்.¨

¨முடியாது ஐயா!¨ என்றான் நித்தி!
¨ஏன்?¨
¨என் குருவை விட்டு பிரிந்து இருக்க மாட்டேன்.¨

நிறைவான சிரிப்பொலி கேட்டது.

¨இனி உனக்கும் உன் குருவுக்கும் கூட இப்போது பேசுவது கேட்கும். அந்த மடத்தைப்பற்றிதான் உனக்கு தெரியுமே? மிகவும் பெயர் பெற்றது. நான் சொன்னபடி செய்தால் அந்த மடத்து பொறுப்பு உனக்கு வந்து சேரும். நிறைய பொருளும் கிடைக்கும், ஊரார் உன்னை மதித்து கொண்டாடுவார்கள். இந்த நாட்டிலேயே, ஏன் உலகிலேயே சிறந்த ஆன்மீகவாதி என்ற பெயர் கிடைக்கும். நான் சொல்கிறபடி செய்யாது போனால் இத்தனையும் இழப்பாய்!¨

¨என்ன வேண்டுமானாலும் இழந்துவிட்டு போகிறேன். என் குருவை விட்டு போக மாட்டேன்.¨

¨நித்தியானந்தம்! உன்னைப்போல குரு பக்தி கொண்டவரை பார்ப்பது அரிது. உனக்கு என்று சில வேலைகள் காத்து இருக்கின்றன. நாட்டில் மக்கள் அரசியல் மீது நம்பிக்கையை வேகமாக இழந்து வருகிறார்கள். அராஜகம் பெருகிவிட்டது. இனி ஆன்மீகம் ஒன்றே அவர்களுக்கு நம்பிக்கையை தரும். அப்போதுதான் அவர்களால் முழு சக்தியுடன் வேலை செய்து விளங்க முடியும். இந்த மறு மலர்ச்சி உன்னால்தான் நிகழ வேண்டும் என்பது இறைவன் சித்தம். அதற்கு மறுப்பு சொல்லாதே.¨

¨மாட்டேன்!!¨ என்றான் நித்தி உறுதியாக.

¨நித்தி அடியேன் சொல்கிறேன். இவர் நம் குரு பரம்பரையில் மிகவும் மூத்தவர். அதனால் இவர் சொல்வதை தட்டக்கூடாது.¨
¨குருவே உங்களைத்தவிர எனக்கு யாரையும் தெரியாது.¨
¨அப்படியானால் நான் சொல்வதை கேட்பாயல்லவா? நான் உத்திரவு போடுகிறேன். இவர் சொல்வது போல இனி நடந்து கொள்ள வேண்டும். என்ன யோசிக்கிறாய்? இனி இவர் என்ன சொன்னாலும் அதை நான் சொல்வதாகவே நினைக்க வேண்டும்.!¨

ஒரு நிமிட மௌனத்துக்குப்பின் ¨குருவே அப்படியானால் சரி. உங்கள் ஆணையை மீற மாட்டேன்!¨ என்றான் நித்தி.

¨ஆகட்டும். நேரம் ஆகிவிட்டது. நீங்கள் கிளம்பலாம்.¨

¨ஐயா எங்களுக்கு வழி காட்டி உதவிய இந்த பெண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்!¨ என்றான் சங்கர்.

கலகல என்ற சிரிப்பொலி கேட்டது

Monday, March 9, 2009

தேடல் - 16

¨அடிகளே!¨ என்று ஆரம்பிக்கும்போதே அடிகளார் கீழே விழுந்தார்.

¨ஐயா! எனக்கு புத்தி வந்துவிட்டது. மக்களை மிகவும் இனம் பிரித்துக்கொண்டு இருந்தேன். ஜனங்களை இனம் பிரிப்பது அவரவர் வேலையை ஒழுங்காக செய்ய மட்டுமே என்று புரியாமல் இருந்தேன். அதனால் ஒரு அகந்தை இருந்தது. சாதாரண எளிய ஜனங்கள் மீது அதனால் ஒரு அலட்சியம் இருந்தது. இவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்தேன். காட்டுவாசிகள் எனக்கு வைத்தியம் பார்த்த பின்னரே இவர்களுக்கு நிறையவே தெரியும். எல்லாத்துக்கும் மேலே அன்பு காட்ட தெரியும் என்று புரிந்து கொண்டேன். என்னை எல்லா பொறுப்பிலிருந்தும் விடுவித்து தவம் செய்ய விடுங்கள்!¨ என்றார்.

¨சச்சிதானந்தம்! குரு சொன்னதை அப்போதே நிறைவேற்றி இருந்தால் இந்த தொல்லை உமக்கு வந்து இருக்காது. போகிறது. உங்கள் பிரச்சினை புரிகிறது. ஆனால் இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுக்க வேண்டு. காலம் கனிய வேண்டும்.¨

¨எத்தனை சமூக தொண்டுகள் செய்கிறேன்? எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் குருவே? ¨

¨சமூக தொண்டு செய்ய எத்தனையோ நிறுவனங்கள். அவற்றுக்கு உதவி செய்யலாம். ஆன்மீகத்தை கவனிக்கத்தான் ஆளில்லை. அதை செய்யுங்கள். அதுதானே உங்கள் வேலை? மக்களுக்கு சேவை செய்கிறேன் பேர்வழி என்று ஏதாவது கொடுக்க கொடுக்க மக்கள் அதை வாங்கிக்கொண்டு மேலும் மேலும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பர். அவர்களை சோம்பேறிகள் ஆக்க வேண்டாம். அவர்களுக்கு இறை உணர்வுடன் உழைக்க கற்றுக்கொடுங்கள். உழைக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள். பெற்றதை பகிர்ந்து கொள்ள சொல்லிக்கொடுங்கள். பண்பை சொல்லிக்கொடுங்கள்!¨

¨எதற்காக மடங்கள் இருக்கின்றன? ஆன்மீகத்தை கட்டிக்காக்கத்தானே! மக்களை நல்வழி படுத்தத்தானே! இந்த முக்கிமான காரியத்துக்கு உதவத்தான் அத்தனை சொத்தை இறைவன் கொடுத்தான். செலவுக்கு கவலை படாமல் ஆன்மீக தொண்டு செய்வதற்கு செல்வந்தர்கள், மன்னர்கள் நிலபுலன்கள் கொடுத்தார்கள். எப்போது அந்த நோக்கத்தில் இருந்து விலகி போயிற்றோ அப்போது மடங்களும் தார்மீக சக்தியை இழக்கும். அடிகளே , மடங்கள் செய்ய வேண்டிய காரியங்களை நடத்தாவிட்டால் அந்த சொத்துக்களும் கைவிட்டு போகும். பிரச்சினைகள்தான் அதிகமாகும் ஆன்மீகம் காணாமல் போய் சொத்தை நிர்வாகம் செய்வதிலேயே நேரம் போனால் எப்படி?

¨ இறைவன் மீதும் குருவின் மீதும் நம்பிக்கை வைக்காமல் நீதி மன்றங்கள் மீதும் ஆட்சியாளர் மீதும் ஏன் நம்பிக்கை வைக்கிறீர்கள்?
மட நிர்வாகத்தின் நுணுக்கங்களை அதற்காக இருக்கிற நபர்களிடம் விட்டுவிடுங்கள். ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களை சூழ்ந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போகும். பொருளைப்பற்றி கவலைப்படாமல் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துங்கள். தேவையான பொருளை இறைவன் தானே அனுப்புவான். மக்களை நல்ல வழிக்கு திருப்ப என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய வழி தானே தெரிய வரும். மக்களிடம் அன்பு காட்டி முன்னுதாரணமாக இருங்கள்.¨

¨ நித்தியானந்தம் இங்கேயே இருக்கட்டும். அவனுக்கு பயிற்சி கொடுக்கப்படும். அவன் வந்து சேர்ந்தபின் அவனுக்கு பட்டம் கட்டிவிட்டு அவனிடம் பொறுப்புக்களை கொடுத்துவிட்டு நீங்கள் ஒதுங்கி தவம் செய்யலாம். அது வரை அனைவரிடமும் அன்பு காட்டி நிர்வாகம் செய்து வாருங்கள்!¨

¨ஆகட்டும் ஐயா!¨

¨நித்தியானந்தம். நீ இங்கேயே இருக்க வேண்டியது. உனக்கு சில பயிற்சிகள் சொல்லித்தரப்படும்.¨

¨முடியாது ஐயா!¨ என்றான் நித்தி!

Friday, March 6, 2009

தேடல்-15

¨கதிர்வேலரே, வள்ளியம்மையே! உங்க ரெண்டு பேருக்கும் நான் பேசறது கேக்கும். ஆன்மீகத்தில கணவன் மனைவியை தனித்தனியா பாக்கிறதில்லை. தம்பதியாதான் பாப்போம்! கதிர்வேலரே பணம் சம்பாதிப்பது எப்படி முக்கியமோ அதே போல அதை செலவிட கத்துக்கறதும் முக்கியம். பொருளை தேடு தேடுன்னு தேடினீங்க. சேத்ததை எப்படி செலவழிச்சீங்க?¨

¨உண்மைதான் சாமி, யாருக்கும் எதுவும் பெரிசா பண்ணலை.¨

¨அதனால்தான் அது ஆஸ்பத்திரிகளுக்கு போச்சு! தேவையா இது? உங்க குலத்தாலதான் பல தான தர்மங்கள் நடைபெற்று இருக்கு. பல கோவில்கள் கும்பாபிஷேகம் ஆகியிருக்கு. பல வேத ஆகம பாடசாலைகள் நடந்து இருக்கு. அதை நினைவில் வைக்கணும். தொடர்ந்து அந்த காரியத்தை செய்யணும்.¨

¨ஆகட்டும் சாமி!¨

¨ குடும்ப சண்டையால பிரிஞ்சாலும் குல தெய்வ வழிபாட்டை விடலாமா? அதை சரி பண்ணுங்க.¨

¨ஆகட்டும் சாமி! ஆனா குல தெய்வம் எதுன்னே எங்க தாத்தா காலத்துலேந்தே தெரியாம போயிடுத்தே!¨

¨வேற எது? கடைசியா வந்து சேந்தீங்களே, அதே முருகன் கோவில்தான்! ¨

¨முருகா!¨

¨உங்க முன் ஜன்ம புண்ணியம்தான் கடைசியா உங்க குல தெய்வத்துகிட்டேயே கொண்டுவந்து விட்டது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. நீங்கள் இருவரும் முன் ஜன்மங்களில செஞ்சதுக்கு தகுந்தபடி அனுபவிச்சீங்க. கஷ்டம் வேண்டியது அனுபவிச்சாச்சு. இனி சந்தோஷமா வீட்டுக்கு திரும்புங்க. வருஷம் ஒரு தரம் குல தெய்வத்தை போய் பாத்து ஆராதனை எல்லாம் செய்யணும். அதான், நீங்க கடைசியா போன கோவில் முருகனுக்கு அபிஷேக ஆராதனை பண்ணி அன்னதானம் செய்யுங்க. அக்கம் பக்க கிராமம் எல்லாத்துக்கும் செய்தி போகணும். ஒரு ஆயிரத்து எட்டு பேராவது சாப்பிடணும். சரியா? உங்க மனைவிக்கு தேவையான மருந்து எல்லாம் போன நாலு நாள்ளே கொடுத்தாச்சு.¨

¨நன்றி சாமி!¨ என்று கீழே விழுந்தனர் தம்பதியர்.

¨எங்க சொந்தக்காரங்க நிறைய பேர் சுத்தி சுத்தி வராங்களே. ரொம்ப தொந்திரவா இருக்கு.¨

¨வாரிசு இல்லைன்னுதான் சுத்தி வந்தாங்க. உங்களுக்கு கெடுதல் பண்ண நிறைய முயற்சி செய்தாங்க. அதுல கொஞ்சம் பலனும் அவங்களுக்கு கிடச்சது. ¨

¨அவங்களுக்கு அதால கெட்டதும் எதுவும் ஏற்பட வேண்டாம் சாமி.¨

¨ஆஹா! இதைதான் எதிர்பார்த்தேன். நல்ல மனசு உங்க ரெண்டு பேருக்கும். அதுதான் உங்களை காப்பாத்தி வருது. எல்லாருமே அவங்க அவங்க செய்கிற காரியத்துக்கு அனுபவிச்சே தீரணும். இதில நீங்க செய்யக்கூடியது ஒண்ணும் இல்லை. ¨

¨நீங்க யாரையும் வெறுக்காம தேவையான அளவு மட்டும் கொஞ்சம் அவங்களுக்கு உதவி செய்யலாம்.¨

--
¨அடிகளே!¨ என்று ஆரம்பிக்கும்போதே அடிகளார் கீழே விழுந்தார்.

Thursday, March 5, 2009

தேடல்-14

¨வாருங்கள் குழந்தைகளே!¨

எல்லாருக்கும் இப்போது அதிசயமாக இருந்தது. ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகத்தெளிவாகவே கேட்டது.


¨பயப்பட வேண்டாம். புலி உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் தேடி வந்த இடத்தை இப்போது அடைந்து விட்டீர்கள். இனி மேல் உங்களுடன் பேசுவது மற்றவர்களுக்கு கேட்காது. யாருடன் பேசுகிறேனோ அவர்களுக்கு மட்டுமே கேட்கும். நீங்கள் பேசுவதும் அப்படியே. எனக்கு மட்டுமே கேட்கும். கவலைப்படாமல் பேசலாம். ¨


பிறகு ஒவ்வொருவருடனும் ஒரே நேரத்தில் பேச்சு வார்த்தை நடந்தது.


¨ குருவே எனக்கு எனக்கு சன்யாசம் கொடுங்கள்.¨

¨ஏன்?¨

¨வாழ்கையே பிடிக்காமல் போய்விட்டது. ஓடி ஓடி சம்பாதித்து அலுத்துவிட்டது. சம்பாதித்து, குடும்பம் நடத்தி, பிள்ளைகள் பெற்று .... என்கிற வாழ்கை பிடிக்கவேயில்லை. . ஆத்மாவை தேடுவதிலேயே நேரத்தை கடத்துகிறேன்.¨

¨சன்னியாசம் பெற்றுக்கொண்டால் உடனே ஆத்மா பிடிபட்டு விடுமா?¨

¨..........¨

¨இது உலகின் மீது உள்ள வெறுப்பு. பற்றற்று இருப்பதும் வெறுப்புடன் இருப்பதும் ஒன்று இல்லை. பிரம்மத்தைப்பற்றி கொஞ்சம் படித்து வைத்து இருக்கிறாய் அல்லவா?¨

¨ஆம்!¨

¨சுருக்கமாக எல்லாமே பிரம்மம் இல்லையா?¨

¨ஆமாம்¨

¨அப்போது பிரம்மத்தை வெறுக்கிறாயா?¨

¨.......¨

¨இல்லைதானே! இதோ பார் பற்றும் இருக்கக்கூடாது; வெறுப்பும் இருக்கக்கூடாது.¨

¨ சங்கர் உலக நியதியுடன் போயே ஆத்ம முன்னேற்றத்தை பார்க்கணும். இந்த கலி யுகத்துக்கு சன்யாசம் பொருந்தாது. சில மடங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் மிகவும் அரிதாக பிறவியில் வைராக்கியம் வந்தவர் தவிர மற்றவர்கள் குடும்பம் நடத்தத்தான் வேண்டும். இந்த கலியில் சரியாக சன்னியாசம் நடத்துவது துர்லபம். பிரச்சினைகள்தான் அதிகம். மனதில்தான் சன்னியாசம் முக்கியமாக வேண்டும். அதீத பற்றில்லாமல் குடும்பம் நடத்திக்கொண்டே எல்லாவற்றையும் செய்யலாம். உன் ஆத்ம முன்னேற்றம் இதனால் பாதிக்காது. மாறாக உறுதி படும். பொறு! ¨

¨எவ்வளவு நாள்? எவ்வளவு நாள் பொறுக்க வேண்டும்?¨

¨சங்கர், இன்னும் கொஞ்ச நாட்கள்தான் நீ பொறுக்க வேண்டும். உன்னால் நீ இப்போது இருக்கிற நாடுக்கு ஒரு பெரிய திருப்பம் ஏற்பட வேண்டி இருக்கிறது. அது நடந்ததும் நிறைய பொருள் தொடர்ந்து கிடைக்க வழி கிடைக்கும். அப்போது நாடு திரும்பு. நிறைய வேலைகள் உனக்காக இங்கே காத்துகொண்டு இருக்கு. நாட்டில் ஒரு ஆன்மீக மறு மலர்ச்சி ஏற்பட நீ ஒரு காரணமாக இருக்கப்போகிறாய்! அதற்கு பண பலமும் அவசியம். அதை சம்பாதித்துக்கொண்டு திரும்புவாய். தகுந்த நேரத்தில் உனக்கு தேவையான வழி காட்டுதல் கிடைக்கும்.¨

¨நல்லது குருவே. இப்போது எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்களே, என்ன பண்ணுவது? ¨


¨ செய்து கொள் சங்கர். அதை நீ மறுத்ததால்தான் உனக்கு மன உளைச்சல் வந்தது. உனக்காக பிறந்தவள் கல்யாணம் ஆகவில்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறாள். இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. உன் பெற்றோரிடம் உன் சம்மதத்தை தெரியப்படுத்து. தானாக நடக்க வேண்டியது நடக்கும்.கிருஹஸ்த தர்மம் மிக உயர்ந்தது. அதை சரியாக கடை பிடிப்பவர்கள்தான் இல்லை. அப்படி நடந்தால் பல விஷயங்கள் மிகவும் சுலபமாக சரியாகிவிடும். ஆகவே திருமணம் செய்து கொண்டு முறைப்படி வாழ்ந்து பல விஷயங்களை சாதிப்பாயாக. உனக்கு வருபவள் இந்த விஷயங்களுக்கு அனுகூலமாகவே இருப்பாள்.¨

Wednesday, March 4, 2009

தேடல்-13

திடுதிப்பென்று வனிதா நின்றாள். பின்னாலேயே வந்த அடிகளார் மோதாமல் இருக்க மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.
¨மன்னிக்க வேண்டும்¨ என்று அவசரமாக குமரன் கூற அடிகள் சாந்தமாக ¨பரவாயில்லை!¨ என்றது அனைவரையும் வியப்பில் ஆழ்தியது.
¨என்ன வனிதா இப்படி?¨ என்ற குமரன் வனிதாவின் முகத்தை பார்த்து நிறுத்திக்கொண்டான். வனிதா பரபரப்புடன் பையை கீழே போட்டு உள்ளிருந்து தொலை நோக்கியை எடுத்தாள். கண்களில் அதை பொருத்திக்கொண்டு வலது பக்கம் இருந்த பள்ளத்தாக்கை ஆராய்ந்தாள். ¨குமரன், அதோ பாருங்க!¨ என்றபடி தொலை நோக்கியை அவரிடம் கொடுத்தாள்.
ஆராய்ந்த குமரனும் பரபரப்பானார்.
¨நான் நினைப்பதும் நீ நினைப்பதும் ஒன்றுதானா?¨
¨ஆமாம். அழிந்துவிட்டது என்று பலரும் சொல்லி வரும் செடி போலதான் இருக்கிறது. கிட்டே போய் பார்த்தால்தான் தெரியும்.¨
¨நேரம் ஆகிவிட்டது. இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். சமீபத்தில் சில அரிய தாவரங்கள் இருக்கின்றன. நாங்கள் கொஞ்ச நேரத்தில் அங்கே போய் பார்த்துவிட்டு வருகிறோம். ¨

யாரும் பதில் சொல்லக்கூட நேரம் தராமல் இருவரும் பள்ளத்தில் இறங்கிவிட்டனர்.

மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இதென்ன ....
தாழ்ந்த குரலில் மஞ்சு சொன்னாள்... ¨ கிளம்புங்க போகலாம்.¨
¨எங்கே?¨ என்று குழப்பத்தில் கேட்டான் சங்கர்.
¨நாம தேடி வந்த புலிக் குகை அந்த திருப்பத்திலதான் இருக்கு!¨ என்று சொல்லிக்கொண்டே நடந்தாள் மஞ்சு.
திகைத்துப்போய் நின்றவர்கள் சுதாரித்துக்கொண்டு அவள் பின்னால் விரைந்தார்கள்.

மஞ்சுவை இப்போது விரட்டிப்பிடிக்க வேண்டியிருந்தது. பல காலம் பழகிய பாதையில் நடப்பதைப்போல தயக்கமில்லாமல் நடந்து சீக்கிரமே பாதையின் வளைவை திரும்பி விட்டாள். பின்னால் ஓட்டமும் நடையுமாக தொடர்ந்தவர்கள் வளைவு திரும்பியதும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஒரு குகையின் எதிரே சுமார் பதினைந்தடி தள்ளி மஞ்சு அமர்ந்திருக்க குகையின் வாசலை அடைத்தபடி முன்னே அடிகளாரை தூக்கிச்சென்ற புலி படுத்திருந்தது.

புலிக்கு எதிரே உட்கார்ந்து இருந்தாலும் மஞ்சு கொஞ்சம் கூட பயப்படுவது போல தெரியவில்லை. வந்தவர்கள் புலிக்குகையை தேடி வந்தாலும் புலியை எதிர்பார்த்து வரவில்லை. இப்போது யோசிக்கும் போது அது தர்க்க ரீதியாக மடத்தனமாக இருந்தது.

புலியின் பின்னே குகையின் வாசல் தெரிந்தது. சுமார் ஐந்து அடி உயரம், அகலம் இருந்தது. குகையின் உள்ளே எதிர்பார்க்கும் இருட்டுக்கு மாறாக செக்கச்செவேல் என்று ஒளி. ஆனால் கண்ணை கூசுவதாக இல்லை. இதமாகவே இருந்தது. அங்கங்கு பொன்னிற ஒளியும் சேர்ந்து பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. குகையின் பின்னால் பச்சைப்பசேல் என்று மரங்கள், புதர்கள். இனம் புரியாத நல்ல வாசனை ஒன்று அங்கே தவழ்ந்து கொண்டு இருந்தது.

¨வாருங்கள் குழந்தைகளே!¨

எல்லாருக்கும் இப்போது அதிசயமாக இருந்தது. ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகத்தெளிவாகவே கேட்டது.

Tuesday, March 3, 2009

தேடல் -12

¨ஆமாம்! ஏன் இப்படி என்னை இழுத்துக்கொண்டு ஓடி வந்தீர்கள்?¨ என்று கேட்டார் அடிகளார்.

¨பின்னே காட்டுவாசிகள் திரும்பி வந்தால்?¨ என்று பதில் கேள்வி எழுப்பினார் குமரன்.
¨ஒன்றும் ஆகி இராது¨ என்றார் அடிகள்.
நித்தி கருமமே கண்ணாக அடிகளாரின் உடம்பை ஆராய்ந்து கொண்டிருந்தான். பல இடங்களில் புலியின் பல் ஆழமாக போய் இருந்ததும் அதற்கு ஏதோ மூலிகை வைத்து கட்டி இருந்ததும் தெரிய வந்தது.
சங்கர் ஆராய்ந்து பார்த்ததில் காயம் ஆழமாக பலமாக இருந்தாலும் ஆரோக்கியமாகவே தோன்றியது ஆச்சரியமாக இருந்தது.
¨யார் இப்படி சிகித்சை செய்தது?¨
¨காட்டுவாசிகள்தான்.¨
¨என்னது?¨
¨ஆமாம் அவர்கள் நீங்கள் நினைப்பது போல பயங்கரமானவர்கள் இல்லை.¨
¨நடந்ததை சொல்ல வேண்டும்.¨
¨சுருக்கமாக சொல்கிறேன். புலி திடீரென தாக்கியதில் எனக்கு ஒண்ணும் புரியவில்லை. அது வெகு வேகமாக என்னை தாக்கி கவ்விக்கொண்டு விட்டது. கழுத்தில் தடிமனான துணி சுத்தி இருந்ததால் சாகவில்லை போல் இருக்கிறது. அது அதிக தூரம் ஒன்றும் என்னை இழுத்துப்போகவில்லை. கொஞ்ச தூரத்திலேயே ஒரு புதரின் பின்னால் கிடந்தேன். நித்தியும் மஞ்சுவும் எனக்கு வெகு அருகில்தான் போனார்கள். பலங்கொண்ட மட்டும் கத்தினேனே. காதில் விழவில்லை?¨
நித்தி திகைப்புடன் பார்த்தான்.
¨உங்களுக்கு பலங்கொண்ட மட்டும் என்பது அப்போது அதிகமாக இருந்திருக்காது¨ என்றார் குமரன்.
¨அப்புறம் காட்டுவாசிகள் வந்தார்கள். என்னை தூக்கிப்போனார்கள். நான் நினைவு இழந்துவிட்டேன். விழித்தபோது குடிசையில் இருந்தேன். காட்டுவாசிகள் மருந்திட்டு கட்டுபோட்டார்கள். அவர்களை எவ்வளவு தவறாக மதிப்பிட்டேன். சக சீவர்களிடம் அன்பு காட்டுவது என்னைப்போன்றவர்களுக்கு முக்கியம் என்று புரிய வைத்தார்கள். எவ்வளவு பேரை அனாவசியமாக கடிந்து கொண்டேன்? கோபப்பட்டேன்? என்னைப்போன்றவர் கடைபிடிக்க வேண்டியதெல்லாம் நேற்று படுத்துக்கிடந்த போது தெரிய வந்தது.¨
¨அப்போ காட்டுவாசிகளால் நமக்கு ஆபத்து இல்லை?¨
¨இல்லை என்றே நினைக்கிறேன்.¨
¨எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்? நாம் போய் கொண்டே இருக்கலாம்.¨ என்றான் சங்கர்.
எங்கே போவது?
அடுத்த பத்து நிமிடங்களில் இருபது கருத்துக்கள் வெளியாகின.
கதிர்வேலன் காட்டுவாசிகளால் பிரச்சினை இல்லை என்று ஆகிவிட்டதால் தொடர்ந்து மேலே போகலாம் என்றார். மற்றவர் ஆபத்து நீங்கியதாக ஒப்புக்கொள்ளவில்லை.

கடைசியில் கதிர்வேலன் தம்பதியரைத்தவிர மற்றவர் திரும்பி போக தீர்மானித்தனர். விரும்பினர் என தெரிந்தது.
சங்கர் வள்ளியம்மையுடன் ஏதோ பேசிக்கொணடு இருந்த மஞ்சுவை பார்த்து ¨என்ன மஞ்சு, எங்களை கிளம்பிய இடத்துக்கு கொண்டு சேர்த்து விடுகிறாயா?¨ என்றான்.
மஞ்சு வழக்கம் போல் தரையை பார்த்துக்கொண்டே ¨ஆகட்டும் சாமி!¨ என்றாள்.
அனைவரும் மூட்டைகளை தூக்கிக்கொண்டனர். வள்ளியம்மை கதிர்வேலரிடம் ஏதோ சொல்ல அவரும் பேசாமல் பைகளை தூக்கிக்கொண்டார்.
அடிகளால் நடக்க முடிகிறது என்று கண்டுகொண்ட பின் அனைவரும் தயங்காமல் நடக்கலாயினர்.

Monday, March 2, 2009

தேடல்-11

விடிந்துவிட்டதை உணர்ந்த போது சங்கருக்கு சற்று அலுப்பாகவே இருந்தது. ஏன் இப்படி கிறுக்குத்தனமாக மாட்டிக்கொண்டு விழிக்கிறோம்? நல்ல வேலை, நல்ல சம்பளம், - ஒரு கல்யாணத்தை செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக.......

உடனே தன்னால் அப்படி இருக்கவே முடியாது என்று தோன்றியது. உள்ளே ஏதோ ஒரு அமைதியின்மை. எதை செய்தால் இது தீரும்? புலிக்குகையை பற்றி கேட்ட போதே ஒரு ஈர்ப்பு இருந்தது. அட மாதக்கணக்கில் தூக்கமே வராமல் விழித்த நான் கடந்த சில நாட்களாக நன்றாக தூங்கி இருக்கிறேனே? அது எப்படி. ஒரே அலைச்சல், நடை அதுதான் என்ற நினைப்புடனேயே இல்லை இது வேறு ஏதோ என்றும் தோன்றியது. ச்சே! இந்த மாதிரி குழப்பங்கள்தான் என் அமைதி இன்மைக்கு காரணம் என்று முணு முணத்துக்கொண்டான் சங்கர். குமரன் என்ன செய்கிறான் என்று திரும்பிப்பார்த்தான். வெளியே எதோ வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது தெரிந்தது. திடீரென்று பரபரப்பானான் குமரன். இங்கே பார் நம்பவே மாட்டாய் என்றான் திரும்பி.

எழுந்து போய் குமரன் பார்த்துக்கொண்டு இருந்த ஓட்டை வழியே வெளியே சங்கர் பார்க்க ஒன்றும் தெரியவில்லை. ஒன்றும் இல்லையே என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே குடிசையின் வெளியே சத்தம் கேட்டது. வாசலின் குறுக்கே இருந்த தடைகள் விலக்கப்படும் ஒலி கேட்க தொடர்ந்து "கதவு"ம் திறக்கப்பட்டது.
“நல்லா இருக்கீங்களா சாமி" என்று மஞ்சு கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள்!

இவளை பார்த்துதான் குமரன் கூப்பிட்டு இருக்க வேண்டும்.
எங்கே போயிருந்தாய் மஞ்சு?
அட எங்கே போவேன் சாமி? பின்னாலேயேதான் வந்துகிட்டு இருந்தேன். சரியான நேரம் பாத்து ஏதனாச்சும் செய்யலாம்ன்னு... திடீர்ன்னு பாத்தா காட்டுவாசிங்க கிளம்பிட்டாங்க. திரும்பி வாராங்களான்னு கொஞ்ச நேரம் பாத்துட்டு இதோ வரேன்....சீக்கிரம் கிளம்பிடுவோம். எங்கியாச்சும் திரும்பி வந்துட போறாங்க...
பரபரப்புடன் சொன்னாள்.

குமரனும் சங்கரும் அடுத்த குடிசைக்குள் போகும்முன்னேயே அதன் "கதவு" திறந்து வனிதா வெளிப்பட்டாள். மற்றவர்களும் வந்து சேர்ந்து கொள்ள அனைவரும் கிளம்பிவிட்டனர். அட இப்படிக்கூடவா ஒரு எதிர்பாராத அதிருஷ்டம்! நித்தி மட்டும் ஏனோ தயங்கி நிற்பதாக தோன்றியது. திடீரென்று குமரன் நாம மத்த குடிசைகளையும் பார்த்துவிடலாம். ஏதாவது சாப்பிட இருந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்றான். அட நல்ல யோசனைதான், நீங்கள் போய் கொண்டே இருங்கள் நாங்கள் விரைந்து தேடிவிட்டு வருகிறோம் என்றான் சங்கர். மற்றவர்கள் அந்த பகுதியை விட்டு வெளியே போவதற்குள்ளேயே ஆ என்று கூவினான் குமரன்.


மீதி இருந்த இரண்டு குடிசைகள் ஒன்றில் நுழைந்து அங்கே ஒன்றும் இல்லை என்று கண்டு கொண்ட சங்கர் குமரன் கூச்சலால் வெளியே வந்து அங்கே ஓடினான். உள்ளே நுழந்து இருந்த குமரன் யாரையோ கைத்தாங்கலாக அழைத்து வருவது தெரிந்தது. அது யார் என்று தெரிய வந்தபோது திகைத்துப்போனான் சங்கர்.

¨குருவே குருவே!¨ என்று நித்தி ஓடி வந்து வெளியே வந்தவர் காலில் போய் விழுந்தான். அப்போதுதான் அது அடிகளார் என்று புரிந்தது மற்றவர்களுக்கு.
வனிதா தாழ்ந்த குரலில் எல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம். முதலில் அவரை அழத்துக்கொண்டு வாருங்கள் என்றாள்.
கும்பலாக அனைவரும் அடிகளாரை எப்படியோ தாங்கிக்கொண்டு ஓடினர். அடிகளார் ஏதோ சொல்ல முயல எல்லாம் அப்புறம் ஆகட்டும் என்று அடமடக்கினர். மஞ்சு முன் ஓடி வழி காட்ட மற்றவர் பின்னாலேயே விரைந்தனர். ஒரு இருபது நிமிடம் ஓடுவதற்குள் அனைவருக்கும் வியர்த்துவிட்டது. போதும். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று குமரன் சொல்ல அனைவரும் ஆங்காங்கே அமர்ந்தனர்.
¨ஆமாம்! ஏன் இப்படி என்னை இழுத்துக்கொண்டு ஓடி வந்தீர்கள்?¨ என்று கேட்டார் அடிகளார்.

Friday, February 27, 2009

தேடல்-10

யாரோ உலுக்கவே தூக்கம் கலைந்தது சங்கருக்கு. உஷ் என்று எச்சரிக்கை செய்தார் குமரன்.
இன்னும் முழுதும் விடியவில்லை.
"என்ன என்ன விஷயம்?”
கண்களை கசக்கியபடி சங்கர் கேட்க "மெதுவா பேசுங்க. வெளியே ஆளுங்க இருக்காங்க. இப்ப நாம தப்பிக்க வழி பாக்கணும். அந்த ஓட்டை வழியா வெளியே பாருங்க" என்றார் குமரன்.
வெளியே பார்த்தபோது அங்கே கூட்டமாக காட்டுவாசிகள் நெருப்பை சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

"எல்லாரும் ஒரே பக்கமாக இருக்காங்க. நாம எதிர்பக்கமா தப்பிவிடலாம்.”
“தப்பி என்ன செய்வது?”
"அதை பத்தி அப்புறமா யோசிக்கலாம். இப்ப முதல்ல நாம தப்பிக்கணும்.”
"மத்தவங்க?”
"அவங்க பக்கத்து குடிசைலதான் இருக்காங்க.” குமரன் கையைக்காட்ட அங்கே ஓலைகள் கொஞ்சம் பிரிக்கப்பட்டு இருந்தன. கழி ஒன்றை வலுக்கட்டாயமாக நகர்த்தி வழி செய்து இருந்தது தெரிந்தது.
"பார்க்கலாமா?”

சங்கருக்கு அதற்கு மேல் சொல்ல வேண்டி இருக்கவில்லை. சுறுசுறுப்பாக ஓட்டை வழியா ஊர்ந்து வெளியே போனான். மூன்று அடியிலேயே அடுத்த குடிசை இருப்பது தெரிந்தது. "வனிதா! வனிதா!” என்று தாழ்ந்த குரலில் குமரன் கூப்பிட ஒரு நிமிஷம் என்று பதில் வந்தது. சற்றைக்கெல்லாம் ஓலைகள் சில பிரிக்கப்பட்டு வனிதாவின் முகம் எட்டிப்பார்த்தது.
"தப்பிப்போயிடலாமா?”
"உள்ளே வாங்க.”

இருவரும் சீக்கிரமே அடுத்த குடிசைக்குள் புகுந்தார்கள்.
குமரன் தப்பிக்கும் திட்டம் பற்றி சொன்னான்.
உற்சாகமே இல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தாள் வனிதா.
என்ன ஆயிற்று இவளுக்கு? நேற்று இவள்தானே தப்பிக்கிறது பத்தி பேசினாள்? அதுவும் யாரும் கடத்தப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வராத போதே!
என்ன நினைக்கிறாய் வனிதா?
"நடக்காது.” என்றாள் வனிதா.
"ஏன்?”
"அவர்கள் நம்மை முழுவதும் சுற்றி இருக்கிறார்கள். காவலுக்கு ஆள் போட்டு இருக்கிறார்கள்.”
"ஒத்தரையும் காணோமே?”
"வெளியே தெரியாது. ஆனால் இருக்கிறார்கள். அப்படி ஒரு வேளை தப்பினாலும் பிடிக்க நினைத்தால் அது அவர்களுக்கு வெகு எளிது.”
"உனக்கு எப்படி தெரியும்?”
"எப்படியா? நேத்து இரவு முயற்சி செய்தேன். அதனால் தெரியும்.”
என்னது!
வியப்பின் எல்லைக்கே போய்விட்டார்கள் குமரனும் சங்கரும்.
"ஆமாம். நீங்கள் எல்லாரும் நன்றாக தூங்கிவிட்டீர்கள். நான் கொஞ்ச நேரம் படுத்ததாக பாவனை செய்து விட்டு வெளியே எட்டிப்பார்த்தேன். வாசலில் ஆள் இருந்தது. நான் இந்தப்பக்கமாக கஷ்டப்பட்டு சத்தம் இல்லாமல் ஓலைகளை பிரித்தேன். (இப்போது தான் எப்படி சுலபமாக வழி செய்ய முடிந்தது என்று குமரனுக்கு புரிந்தது.) அப்புறம் உங்க குடிசை ஓலைகளை கூட பிரிக்க ஆரம்பித்தேன். ஆனால் சத்தம் அதிகமாக கேட்க ஆரம்பித்ததால் விட்டுவிட்டேன். சரி தப்பிக்க வழியை பார்த்துவிட்டு திருப்பி வரலாம் என்று வெளியே போனேன். அதோ அந்த மரங்களை தாண்டியதுமே யாரோ பின்னால் வருவது போல இருந்தது. திரும்பிப்பார்த்தால் காட்டுவாசி ஒருவன் வந்து கொண்டு இருந்தான். நான் மர இருட்டில் ஒதுங்கி நின்றேன். தாண்டிப்போக போகிறான் என்று நினைத்த போது திடும் என திரும்பி என் மார்புக்கு எதிரே ஈட்டியை நீட்டிவிட்டான். அவன் "ஹும்" என்று சத்தம் போட்டபின் எனக்கு இருந்த தைரியம் எல்லாம் போய் விட்டது. மறு பேச்சு இல்லாமல் திரும்பிவந்து படுத்து தூங்கிவிட்டேன்.”

குடிசையில் பார்த்தார்கள். வள்ளியம்மை மட்டுமே தூங்கிக்கொண்டு இருந்தார்கள். "மற்றவர்கள் எங்கே.” கதிர்வேலனாரும் நித்தியும் வேறு இடத்தில் இருக்கவேண்டும்.

தலையை பிய்த்துக்கொண்டார் குமரன். "இப்ப என்ன செய்கிறது.!”
"பேசாம படுத்து தூங்குங்க. விடிந்த பிறகு பார்க்கலாம்.”

தப்பிக்கும் முயற்சியை இப்படி கைவிட நேர்ந்ததை நொந்துகொண்டு இருவரும் படுக்கப் போனார்கள்.

Thursday, February 26, 2009

தேடல் -9

யாரும் ஒரு எதிர்ப்பும் காட்ட இடமில்லாது போயிற்று. கூரான ஈட்டிகளையும் கத்திகளையும் பார்த்தவர்கள் கலங்கி போயிருந்தனர். நித்தி மட்டுமே இன்னும் கனவுலகில் இருந்தான். ஏதோ தனக்குத்தானே பேசிக்கொள்வதும் தலை ஆட்டுவதும்.... காட்டுவாசிகள் அவன் கைகளை கட்டிப்போட்டபோது எதிர்ப்பே தெரிவிக்கவில்லை. சிலர் இவர்களது உடமைகளை அபகரித்துக்கொண்டு மறைந்தனர்.

அன்று காலை இவர்கள் போன வேகமும் வழியும் யாராலும் போக முடியாதது என்று தோன்றியது. நடந்தால் விட்டார்கள். நடக்க முடியாதவர்களை தர தர என்று இழுத்துப் போனார்கள். உண்மையாக நடக்க முடியாத இடங்களில் அலாக்காக தூக்கிவிட்டார்கள். பெண்களை மரியாதையாக நடத்துவது போலவே தோன்றியது. அந்த மட்டும் நல்லது என்று சங்கர் நினைத்தார்.

எங்கேயும் சற்றும் தாமதிக்காமல் விரைந்ததில் வெகு தூரம் கடந்து விட்டதாக தோன்றியது. எங்கே போகிறோம்? ஏன் நம்மை ஒன்றும் செய்யவில்லை? அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு விட்டு இருக்கலாமே? இந்த காட்டில் நாம் என்ன செய்ய முடியும்? ஏன் நம்மை சாகடிக்கவில்லை? ஏன் இவ்வளவு மெனக்கெட்டு எங்கோ அழைத்து போகிறார்கள்? கேள்விகள்..கேள்விகள்... பதில்தான் ஒன்றும் தட்டுப்படவில்லை. ஒரு வேளை மனிதர்களை சாப்பிடுவார்களோ? முதுகுதண்டில் ´சில்´ என்று ஏதோ ஏறியது போல இருந்தது.

இந்த மஞ்சு என்ன ஆனாள்? காட்டுவாசிகள் வந்த போது திடீரென்று பக்கத்தில் காட்டுக்குள் புகுந்து மாயமாகிவிட்டது போல காணாமல் போனாள். அவர்கள் கவனிக்கவில்லை போலும். பின்னால் வருகிறாளா? மஞ்சுவால் கூட இவ்வளவு வேக நடை முடியுமோ என்று தோன்றியது. உன்னிப்பாக கேட்டும் யாரும் பின்னால் வரும் சத்தம் ஏதும் துளிக்கூட கேட்கவில்லை.

மதியம் ஏதோ சுட்ட கிழங்குகளை கொடுத்தார்கள். சாப்பிட மறுத்த குமரன் எதிரில் ஒரு கூரான ஈட்டி நீட்டப்பட்டது. “சாப்பிடுங்களேன் குமரன் " என்றாள் வனிதா. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தாழ்ந்த குரலில் “தப்பிக்க வேண்டுமானால் உடம்பில சக்தி வேணும் இல்லையா?” என்றாள்.
அதன் பின் குமரன் சாப்பிட ஆரம்பித்தார்.

சாப்பாடு முடிந்து எல்லாருக்கும் ஏதோ ஒரு தண்ணீர் போன்ற கலவை தரப்பட்டது. கொஞ்சம் வாசனை பிரச்சினையாக இருந்தாலும் தாகத்தில் அனைவரும் குடித்துவிட்டனர். பொழுது சாய்வதற்குள் ஒரு திறந்த புல்வெளியை அடைந்தனர். அங்கே சில வெட்டிய மரங்கள், ஓலைகளால் கட்டிய குடிசைகள் இருந்தன. ஒரு குடிசைக்குள் சங்கர் உட்பட நான்கு பேரை போட்டு தள்ளினார்கள்.

யாருக்கும் நிற்க கூட தெம்பு இல்லை. விழுந்த அடுத்த சில நிமிடங்களில் தூங்கிப்போனார்கள்.

Wednesday, February 25, 2009

தேடல்-8

வழக்கம்போல் சங்கர் அதிகாலை எழுந்துவிட்டான். இரவு சாப்பிடாமல் தூங்கியது சோர்வாக இருந்தாலும் இன்று ஏதோ நடக்கப்போகிறது என்று தோன்றியது. சிரித்துக்கொண்டான். ¨நேற்று என்னவெல்லாம் நடக்கவில்லை? இன்று ஏதோ நடக்கப்போகிறதா? அடிகள் என்ன ஆகியிருப்பார்? அப்படி தடம் ஒன்றும் இல்லாமல் எப்படி புலி தூக்கிச்சென்றது? இதை அப்படியே விடமுடியாதே? ஒரு வழியாக திரும்பிப்போனதும்- போவோமா?- போலீஸில் சொல்ல வேண்டும். அவர்கள் என்ன செய்வார்கள்? வனத்துறை அனுமதி இல்லாமல் எப்படி அங்கே போனீர்கள் என்று குடைவார்கள். குமரனும் வனிதாவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வந்ததாக சொல்லிக்கொள்ளலாம். ஒத்துக்கொள்வார்களா?¨ அர்த்தமில்லாமல் ஏதேதோ கேள்விகள்.

மஞ்சு ஏற்றி நெருப்பைத் தூண்டி ஒரு பாத்திரத்தில் வென்னீர் கொதிக்க வைப்பது தெரிந்தது. தானும் மௌனமாக அவள் அருகில் போய் அமர்ந்தான். "தூங்கினையா சாமி? ரொம்ப நாளாச்சில்ல?” என்று திரும்பிக்கூட பார்க்காமல் கேட்டாள் அவள். தலையை ஆட்டினான். ¨ஓ! தான் தலை ஆட்டுவது தெரியாதே, குனிந்து அல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறாள்¨ என நினைத்தான். "தூங்கினேன்.” கீச் கீச் என்று பறவைகள் சத்தம் கேட்டு நிமிர்ந்தான். அருகில் மரத்தின் கூட்டில் சில பறவைகள் கும்மாளமிட்டன. தாய் ஏதோ உணவு சம்பாதித்து வந்திருக்க வேண்டும். த ஏர்லி பேர்ட்.. என்று நினைவோடியது. "பாத்தியா சாமி. அதெல்லாம் நம்ம மாதிரி கவல படுரதில்ல. இப்ப திங்க கிடச்சுதா, சரி. இல்லையா கிடைக்கிர இடத்த தேடிப் போய்ரும். சாமி நமக்கு வேண்டியத கொடுக்கும் அப்படி நம்புதுங்க. சிரித்தாள். நம்பிக்க இல்லாதது நாமதான?”
"பறவைக்கெல்லாம் சாமி பத்தி தெரியுமா" கேட்டான் சங்கர்.
“தெரியாதுன்னு எப்படி தெரியும் சாமி?“ எதிர்கேள்வி கேட்டாள்.
என்ன கேள்வி இது என்று வியந்த சங்கரை குமரன் அழைத்து கவனத்தை கலைத்தார். “சங்கர் இன்றைய ஆக்ஷன் ப்ளான் முடிவு பண்ணனும்.

இப்போதுதான் எல்லாரும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார்கள். திரும்பிவிடலாம் என்று குமரன், வனிதா சொல்ல கதிர்வேலன் தம்பதியினர் என்ன ஆனாலும் தொடர்ந்து மேலே போகலாம் என்று வாதித்தனர். நித்தி பேசவே இல்லை. "குரு போன வருத்தம் போல் இருக்கிறது. நாம்தான் இப்போது முடிவு செய்ய வேண்டும்" என்று நினைத்துக்கொண்டான் சங்கர். என்ன செய்யலாம்? இவ்வளவு தூரம் வந்தது வீணாக போய் விடுமா? என்ன செய்ய வேண்டுமானாலும் இந்த மஞ்சுவின் உதவிதானே வேண்டும். யாரும் அவளை கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையே? நாம் என்ன சொன்னாலும் அவள் கட்டுப்பட்டு ஆக வேண்டும் என்று நினைக்கிறார்களோ?

"இதப்பாருங்க வனத்துறை அனுமதி இல்லாம நாம இங்க வந்ததே தப்பு. அதனால திரும்பிப்போய் நாம நடந்ததை போலீஸ்ல சொல்லனும். அதுதான் சரி. எங்களுக்கு இங்கெலாம் சுத்த அனுமதி இருந்தாலும் நாம இப்ப இருக்கற பகுதிக்கு அனுமதி உண்டான்னு தெரியல. எங்க இருக்கோம்னே சரியா தெரியலையே?திரும்பி போறதுதான் சரி.”

“மஞ்சு என்ன சொல்றே?” என்றான் சங்கர்.
"சாமிங்க நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி சாமி" என்றாள் சுருக்கமாக.
"மேலே தொடர்ந்து போகலாம்" என்றான் சங்கர். குமரன் சட்டென்று எழுந்தார். "நீங்க வேண்ணா போங்க. நாங்க திரும்பறோம்.” அதெப்படி மஞ்சு வழி காட்டாம போயிடுவீங்களா?" அக்கரையோடு வினவினார் கதிர்வேலன். “எப்படியாவது போறோம். கோபத்துடன் குமரன் தன் பையை எடுத்தார். "வனிதா நீ ஏன் கிளம்பலை?”
"அதுக்கு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன், குமரன்" என்று தன் எதிரே சுட்டிக்காட்டினாள் வனிதா.

அங்கே பத்து காட்டுவாசிகள் வந்துக்கொண்டிருந்தனர். மஞ்சு பக்கம் திரும்பினான் சங்கர். அவன் மனதில் இருந்த கேள்விக்கு விடை கொடுத்தாள் மஞ்சு.
“அவங்க எங்க ஆளுங்க இல்லை சாமி.”

Tuesday, February 24, 2009

தேடல்-7

அடுத்த நாள் காலை எழுந்த குழுவினர் சுறு சுறுப்பாக கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். ஏதோ வயிற்றுக்குப் போட்டுவிட்டு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தனர். நேற்று மாலை தடங்கல் ஏற்படும் போல இருந்தது. ஆனால் நல்ல காலம் மலைவாசிகள் இரண்டு பேர் அந்தப்பக்கம் வர மஞ்சு அவர்களிடம் ஏதோ பேசி சரி செய்துவிட்டாள். குமரன் அவர்களுக்கு கொடுத்த பணமும் கொஞ்சம் வேலை செய்து இருக்க வேண்டும். ஆமாம், அந்த பணத்தை வைத்து இந்த காட்டில் என்ன வாங்க முடியும்? சிரிப்பு அடக்க முடியவில்லை நித்தியானந்தத்துக்கு. எப்போதேனும் கீழே கிராமத்துக்கு போகும் போது பயன்படலாம்.

மீண்டும் நடை. நேற்று போல நடக்க முடியவில்லை யாருக்கும். இப்போது மலை உயரத்தில் ஏறுவது நன்றாக தெரிந்தது. மூச்சு விட சற்று சிரமமாக இருந்தது. பாதையும் கடினமாக இருந்தது. சரிவும் அதிகம். ஏற ஏற மேடு முடிவில்லாது தோன்றியது. செருப்புகள் எப்போதோ அறுந்து போய் விட்டு விடப்பட்டன. வெறும் காலுடன் நடந்து பழக்கமில்லாதவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். காற்றும் குளிர்ந்து வீசியது. சாதாரணமாக இது சுகமாக இருக்கும். இப்போதோ உள்ளே வேர்த்துக்கொட்ட மேலே மட்டும் சில்லிப்பு கஷ்டமாகவே இருந்தது. வியர்வை இவ்வளவு சில்லென்று இருக்குமா என்ன? ஏதோ இயந்திரத்தனமாக நடந்து கொண்டிருந்தனர். ஒரு கால் முன்னே... அடுத்து இன்னொரு கால்... அடுத்து .....

யாரும் எதிர்பாராத சமயத்தில் அந்த தாக்குதல் நடந்தது. ஒத்தையடிப்பாதையில் அவர்கள் போய்க் கொண்டு இருந்தபோது திடீரென்று ஒரு உறுமல் கேட்டது. யாரும் நிதானிக்கும் முன் ஒரு புலி தோன்றி அடிகளாரை கவ்விக்கொண்டு புதரில் மறைந்தது. நித்தியானந்தம் தவிர எல்லாரும் உறைந்து நின்றார்கள். "விடு, விடு, விட்டு விடு, என்ன செய்கிறேன் பார்" என்று கூச்சலிட்டான் நித்தியானந்தம். "குருவே! குருவே!" என்று கதறிய படி புலி சென்ற திசையில் புதரில் விழுந்து ஓடி மறைந்தான்.

யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆண்கள் புதர் வரை ஓடிச்சென்று தயங்கி நின்றார்கள். அடுத்து கிடு கிடு பள்ளம். புதர்கள். பெரிய பாறாங்கற்கள். இதில் ஒரு ஆளை தூக்கிக்கொண்டு புலி எப்படி ஓடியது? சிஷ்யனும்தான் எப்படி ஓடினான்? "சாமியோவ்! இதுல உங்களால ஏதும் ஆவாது. கொஞ்சம் இங்கியே நில்லுங்க. நான் போய் பாத்து வரேன்" என்ற படி மஞ்சு புதரைத் தாண்டி பாறையில் குதித்தாள்.

அனைவருக்கும் ஏற்பட்ட அதிர்ச்சியில் புலி மீண்டும் வருமோ என்ற கவலை கூட எழவில்லை. விஞ்ஞானிகள் "இவ்வளவு நாட்களாக இங்கேயெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறோம், புலியின் தடத்தை பார்த்ததுக்கூட இல்லையே" என்று பேசிகொண்டனர். ஆனால் மலையின் இந்த பகுதிக்கு வந்திருக்கிறீர்களா என்ன என்று கதிர்வேலர் கேட்ட போது இல்லை என்று ஒத்துக்கொண்டனர்.
அனைவரும் கவலையோடு பார்த்துக்கொண்டிருக்க பதினைந்து நிமிடம் கழிந்தது. பின்னர் ஏதோ அரவம் கேட்டது. இப்போதுதான் வேறு மிருகம் வருகிறதோ என்று பயம் வந்தது. சற்றைக்கெல்லாம் நித்தியும் மஞ்சுவும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

என்ன ஆச்சு என்று தலைக்குத்தலை கேள்விகள் எழுந்தன. நித்தி பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை. கண்களில் கண்ணீர் வழிய வழிய வாய் ஏதேதோ முணமுணத்துக்கொண்டு இருந்தது. மஞ்சுதான் பேசினாள். “சாமி நாங்க ரொம்ப தொலவு போக முடியல. அங்கே பெரிய சரிவு. யாருமே - எந்த புலியுமே போக முடியாத அளவு. என்ன தேடியும் ஒரு குறியும் காணோம். சாமிய புலி எங்க தூக்கிப்போச்சோ தெரில.” "புலியெல்லாம் இங்க இருக்குன்னு சொன்னியா என்ன?” என்று குமரன் பாய சங்கர் "புலி இருப்பதாகத்தான் சொன்னாள். நாங்கள்தான் சும்மா பயமுறுத்துகிறாள் என்று நினைத்தோம்" என்று சமாதானப்படுத்தினார். அடுத்து என்ன செய்வது என்று கேள்வி எழுந்தது. தலைக்குத்தலை ஏதேதோ சொன்னார்கள். முடிவில் பொழுது சாயும் நேரம் வந்து விட்டதால் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு போய் விடுவதென்றும் பின் காலை பார்த்துக்கொள்ளலாம் என்றும் முடிவானது. அப்படியே சற்று வேகமாக நடந்து அரை மணியில் ஒரு திறந்த வெளிக்கு வந்தனர். நெருப்பு மூட்டப்பட்டது. அதன் அருகில் சாப்பாட்டைப் பற்றிய சிந்தனை கூட இல்லாமல் அனைவரும் படுத்தனர்.

மஞ்சு மட்டும்தான் கதிர்வேலனார் மனைவிக்கு பாதங்களை வென்னீர் ஊற்றி கழுவி ஏதோ கிழங்கைப்போட்டு தேய்த்துக்கொண்டு இருந்தாள். செருப்பு இல்லாது போய் பாதங்கள் புண்ணாகி இருந்தன. அப்படியே ஏதோ இலைகளை மெல்லும்படி கொடுத்தாள். கதிர்வேலனார் எழுந்து பையில் இருந்து சாப்பிடக்கொடுத்தார்.

பெரும் புலியின் தாக்குதலில் இருந்து தப்பித்தவர்கள் இப்போது காவலுக்கு யார் என்ற யோசனை கூட இல்லாமல் தூங்கிப்போயினர்.

Monday, February 23, 2009

தேடல் -6

      மதிய உணவு ஒரு அருவி அருகில் நடந்தது. எல்லாருக்கும் நல்ல பசி. அவரவர் கொண்டு வந்த பைகள் இப்போது கணிசமாகவே எடை குறைந்திருந்தன. எடை குறைய குறைய நல்லதுதானே? சுலபமாக நடக்கலாம் என்று நினைத்துக் கொண்டான் நித்தியானந்தம். உடல் எடை மட்டுமல்ல .... கர்மாவும்தான். பரம குரு சொன்னது ஞாபகம் வந்தது. ¨அழுக்கு தேயத் தேய ஆத்மா ஒளி விடும். அதில் முழுகப்பாரு. நம் கடன் இப்போது குருவுக்கு பணிவிடை செய்து கிடப்பதே. இவருக்கு கோபம் அதிகம் வருகிறது. பாவம் என்ன செய்வார். பரம குரு போனதில் இருந்து யாரும் இவரை மதிப்பதில்லை. இவர் குருவாக தகுதி இல்லை என்று நினைப்பு. இவரை தேர்ந்தெடுத்ததே பரம குருதானே? அவரிடம் பக்தி கொண்டவர்கள் இவரை யோசித்துதான் தேர்ந்தெடுத்து இருப்பார் என்று நம்ப வேண்டாமா? இதெல்லாம் ஆராயக்கூடாது. அபசாரம். அதோ குரு சற்று சிரமப்படுகிறார். போய் ஏதேனும் தரையில் விரிப்போம். கொஞ்சம் படுக்கட்டும். இந்த மஞ்சு....யார்? ஏன் இவளைச்சுற்றியே என் மனது வட்டமிடுகிறது? அப்படி காமம் ஒன்றும் இல்லையே.¨ "இல்லையா?” என்று அடிமனது கேட்டது.
"நித்தி...” குரு கூப்பிட்டதும் எழுந்து ஓடினான் நித்தியானந்தம்.

       மீண்டும் நடை, நடை. பழக்கமில்லாதவர்கள் சிரமப்பட்டார்கள். ஏதோ மிருகங்கள் பயன்படுத்தும் பாதைகள் போல அவ்வப்போது அறிகுறிகள் தெரிந்தன. எல்லையே இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது போல இருந்தது. அண்மையில் உள்ள மரங்களைத்தவிர ஒன்றும் பார்க்க முடியாததால் திருப்பி திருப்பி ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருவது போலவும் இருந்தது. இதோ இந்த புதரை பார்த்தால் போல இருக்கிறதே? அந்த யானை மாதிரியான கல். சீச்சீ. அது வேறு மாதிரி இருந்தது. ஆனால் மாலை வரும்போது மலையில் கணிசமாக ஏறிவிட்டதுபோல தோன்றியது. ஒரு திருப்பத்தில் திடீரென்று மரங்கள் விலகிவிட கீழே வெகு தூரத்தில் பசுமையான வயல்கள் தெரிந்தன. அருகில் ஒரு ஏரி. அவற்றின் மேலே வட்டமிடும் பருந்துகள். எல்லோருமே மெய் மறந்து சற்று நேரம் நின்றார்கள்.

சரி சரி கிளம்பலாம்" என்று சங்கர் குரல் கொடுக்க அவர்கள் மீண்டும் நடக்கலானார்கள்.

கொஞ்ச தூரம் சென்றதும் ஒருவர் குறைவது போல இருக்கிறதே என்று எண்ணிய சங்கர் ஒரு முறை அனைவரையும் பார்த்தான். குருவும் சிஷ்யனும் அதோ; விஞ்ஞானிகள், கதிர்வேலனார், அவர் மனைவி.... ஆ, மௌனியைத்தான் காணோம்!

     “யாரும் மௌனியைப்பாத்தீங்களா?” என்று குரலெழுப்பினான். அனைவரும் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இல்லையே! நான் கடைசியாக அந்த ஓடையை தாண்டும் போது பார்த்தேன். இல்லை, நான் அப்புறமும் பார்த்தேனே? அந்த சின்ன மேடு ஏற கதிர்வேலனாருக்கு கை கொடுத்தானே. வள வள என்று பேச்சு ஆரம்பித்தது.

        அதற்குள் மஞ்சுவும் சங்கரும் வந்த வழியே போக ஆரம்பித்தனர். நெடு தூரம் போக வேண்டி இருக்கவில்லை. எல்லோரும் வயலின் அழகை ரசித்த இடத்தில் மௌனி மரத்தடியில் வெறிக்க பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். "ஏம்பா, என்ன ஆச்சு உனக்கு?” வழக்கம் போல் பதில் இல்லை. ஆனால் இப்போது கவனியாமலே அல்லவா இருக்கிறான்? சங்கர் உடம்பை பிடித்து உலுக்க அப்போதும் ஒரு அசைவும் இல்லை.

      “கடடோனியா" என்று ஒரு குரல் கேட்டது. சங்கர் திரும்பி பார்க்க குமரன் நின்று கொண்டிருந்தார். “அசைவே காணோம் பாத்தீங்களா? நான் ஏற்கெனவே இவன் சைகியாட்ரி கேஸ் அப்படிதான் நினச்சேன். சரியாப்போச்சு.”

      பேச்சுக்குரல் கேட்டு அனைவரும் அங்கு வந்து சேரவே என்ன செய்வது என்று விவாதித்தார்கள். எல்லாருக்குமே அவனை அப்படியே விட்டு விட்டு போக விருப்பமில்லை, வனிதாவைத்தவிர. "நாம கேட்டா வந்தாரு? எப்படி வந்தாரோ அப்படியே போகட்டுமே?”
கதிர்வேலனார் மஞ்சு பக்கம் திரும்பினார். "நீதாம்மா ஏதேனும் வழி சொல்லனும்."
"ஐயா! இந்த பக்கத்தில மலை கிராமம் ஒண்ணு இருக்கு. எப்பவாச்சும் யாரேனும் இந்த இடத்துக்கு வருவாங்க. அவங்களை பாத்துக்க சொல்லிட்டு நாம மேலே போகலாம்.”
"எப்பவாச்சும்னா அவங்க வரவரை காத்திருக்கனுமா" என்று வனிதா கேட்கும் போதே யாரோ வரும் சந்தடி கேட்டது.

Friday, February 20, 2009

தேடல்-5.

¨கடைசியாக நான்.” சிரித்துக்கொண்டான் சங்கர்.
நான்.......

“சரியாக தூங்கி நான்கு மாதம் ஆகிறது. வீட்டிலிருந்து வேறு போன் மேல போன். கல்யாணம் பண்ணிக்கோப்பா. இப்படி இருக்கியே! ஆனால் மனதுதான் தாம்பத்யம் பக்கம் போக மறுக்கிறது. ஏன் என்னை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? ஆத்மான்னா என்ன என்று தேடி தேடி.. அவ்வளவு சுலபமா வந்துடுமா? சமீபகாலமாக மாத்திரை போட்டுதான் தூக்கம். அப்போதும் பிரகாசமான அந்த குகை.. என்ன என்றே புரியாமல் ஏதோ ஒரு ஈர்ப்பு. அங்கு போக வேண்டும் என்று... கடைசியாக ஒரு நாள் கனவில் நெடுங்காடு புலிக்குகை என்று மட்டும் ஒரு சப்தம் கேட்டது. அதற்கு ஏற்றாற்போல அலுவலகத்தில் அன்று சூசன் தன் நண்பன் ராபர்ட்டின் கடிதத்தை படித்துக்கொண்டு இருந்தாள். நெடுங்காடு என்று படிக்க முடியாமல் என்னிடம் கடிதத்தைக்காட்டி இது எப்படி படிப்பது என்று கேட்டாள். அப்புறம்...”

"எல்லாரும் சாப்பிடலாமா? என்ற குரல் அவன் சிந்தனை ஓட்டத்தை அறுத்தது. வெட்ட வெளியின் மத்தியில் ஒரு நெருப்பு எரிந்துக்கொண்டு இருந்தது. மஞ்சு அதில் சில கிழங்குகளை சுட்டுக்கொண்டு இருந்தாள். சிஷ்யன் அதிலிருந்து வென்னீர் பாத்திரத்தை இறக்கிக் கொண்டிருந்தான். வனிதாவும் குமரனும் வழக்கம் போல வளவளவென்று பேசியபடியே சில டின் டப்பாக்களை உடைத்துகொண்டு இருந்தார்கள். சங்கரும் அவர்களுக்கு உதவி செய்ய எழுந்தான். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பெரிய இலையை திணித்தாள் மஞ்சு. அதில் சங்கரும் குமரனும் உணவு பறிமாறினார்கள். அடிகள் மட்டும் சற்று தள்ளி அமர்ந்து சிஷ்யன் கொடுத்த அவலை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். பின்னர் எல்லாரும் உறங்கப்போனார்கள். இருந்த களைப்பில் வசதி குறைவு ஏதும் யாருக்கும் தெரியவில்லை. "அம்மா இத பூசிக்கமா. பூச்சி கடிக்காது" என்று சில இலைகளை கொடுத்தாள் மஞ்சு. விஞ்ஞானிகள் அதை வாங்கிக்கொள்ளவில்லை. ஆளுக்கு ஒரு உறங்கும் பை வைத்திருந்தார்கள். அதில் புகுந்து கொண்டார்கள். இலையை கசக்கிக்கொண்டு இருந்த சங்கரைப் பார்த்து "அந்த இலை சாதா இலைதான். ஒன்னும் விசேஷம் கிடையாது. குட் நைட்" என்று சொல்லி உறங்கப்போனாள் வனிதா.

காலை சங்கர் எழுந்த போது சற்றே வெளிச்சம் தெரிந்தது. மத்தியில் இருந்த நெருப்பின் அருகில் மௌனி அமர்ந்திருந்தான். இவன் தூங்கவே இல்லையா? பார்த்துக்கொண்டே இருந்த போது ஒரு சுள்ளியை நெருப்பில் போட்டான். மற்றவர்கள் இன்னும் உறங்குகிறார்கள். வெட்ட வெளியின் ஓரமாக மஞ்சு படுத்து இருந்தாள். அவள் அருகில் ஒரு நாயைப் பார்த்தான். இது ஏது? இங்கெல்லாம் நாய் வருமா என்ன? நாய் இவனைப் பார்த்து உறுமியது. சட்டென்று எழுந்தாள் மஞ்சு. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு "ஓ, முழுச்சிட்டையா சாமி! எல்லாரையும் எழுப்பலாமா? அப்பதான் சரியா இருக்கும்.” என்றாள். தேநீர் போட நெருப்பில் தண்ணீர் பாத்திரத்தை ஏற்றினான் சங்கர்.

காலை சிற்றுண்டி முடித்தபின் இரவு நன்றாக தூங்கிய விளைவோ என்னவோ எல்லாரும் வேகமாகவே நடந்தார்கள். விஞ்ஞானிகள் அவ்வப்போது ஓடுவதும் ஏதேதோ இலை பூ இவற்றை சேகரிப்பதுமாக இருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் மிகவும் தாமதப்படுத்தாததால் யாரும் ஆட்சேபிக்கவில்லை.

அடிகள் யோசித்துக்கொண்டே நடந்தார். நமக்கு விடிவு காலம் பிறக்குமா? குரு கடைசி காலத்தில் சொன்னார். புலிக்குகைக்குப் போ. உனக்கு நல்லது என்று. நாம்தாம் தாமதித்துவிட்டோம். என்ன செய்வது. எப்போது பத்து பிரச்சினைகளவது இருக்கின்றது. ஒரு பிரச்சினை முடிந்தால் அடுத்த பிரச்சினை உடனே வந்து விடுகிறது.மடத்துக்கு குத்தகை, வாடகை பாக்கி என்று வர வேண்டியது கோடிக்கணக்கில் இருக்கிறது. யார் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்? எல்லாருக்கும் வருகிற கொஞ்சம் வரவு மட்டும் கண்ணில் படுகிறது. செலவு கண்ணில் படுகிறதில்லை. மடத்து நிர்வாகம் ஒண்ணும் ராஜபோகம் இல்லை. எவ்வளவு மனிதர்கள். எவ்வளவு பிரச்சினைகள். எல்லாரையும் திருப்தி செய்யனும். இவர்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? ஆளாளுக்கு நாட்டாண்மை பண்ணப்பார்க்கிறார்கள். அறிவிலிகள். அந்தரங்கமாக இருக்க வேண்டிய விஷயங்களை அப்படி வைத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு குடும்ப மக்களைதான் நம்ப வேண்டி இருக்கு. இதை எல்லாரும் விமர்சிக்கிறார்கள். என் பிரச்சினை புரியவில்லை. என் தலைவிதி இந்த காட்டுவாசம். இந்த நித்தியானந்தம் மட்டும்தான்...மனசிலே இருக்கிற கோபத்தை எல்லாம் இவன் மேலே காட்டுகிறேன். இருந்தாலும் நான் சொன்னபடி எல்லாம் ஆடுகிறான். அப்படி ஒரு குரு பக்தி. கொஞ்சம் ரொம்பவே ஓட்டறேனோ? இந்த காடுதான் புரியவில்லை. ஏதோ சுற்றிச் சுற்றி வருவது போல இருக்கிறது. இந்த ... காட்டுப்பெண். என்ன தெரியும் இவளுக்கு? எங்கு போய் கொண்டு இருக்கிறோம் என்று இவளுக்கு தெரியுமா? தயங்காமல் போவதை பார்த்தால் தெரியும்போல்தான் இருக்கிறது. இருந்தாலும் எளிய புத்தியில்லாத பெண்தானே? இங்கே யார் எனக்கு வழிகாட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை. என் பிரச்சினைகள் யாருக்கு புரியும்? இந்த காட்டில் மலையில் என்னை விட அதிகம் படித்த புத்திசாலி யாரும் இருக்கிறார்களோ? அது எப்படி முடியும்?
--

Thursday, February 19, 2009

தேடல்-4.

தேடல்-4.

பிற்பகல் வேளையில் அனைவரும் மஞ்சுவை தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இப்போது ஒத்தையடிபாதை ஏதும் இல்லை. ஆராய்சியாளர்கள் அசராமல் போய்க்கொண்டு இருந்தனர். ஹைக்கிங் காலணி போட்டு இருந்த சங்கர் அவர்களுக்கு ஈடாக நடந்தான். அடிகளும் சீடனும் கொஞ்சம் பின்னால் வந்து கொண்டு இருந்தனர். கதிர்வேலனும் அவர் மனைவியும் இவர்களுக்கு இணையாக நடக்க சிரமப்பட்டுக்கொண்டு இருந்தனர். அவ்வப்போது மஞ்சு நிதானித்து சென்று கொண்டு இருந்தாள். இதனால் அனைவரும் இவளுக்கு வழி தெரிந்துதான் போகிறாளா என்று நினைத்தபடி நடந்தனர்.

சுமார் இரண்டு மணி நேரத்துக்குப்பின் மஞ்சு ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டாள். “ஏன் மஞ்சு உக்காந்து விட்ட?” என்று வினவினான் சங்கர். "நம்ம பின்னால ஒருத்தர் தொடர்ந்து வராருங்கோ. எவ்வளவு நேரந்தாந் தாமசித்து வரது? நம்மோட சேந்துக்கட்டுமே" என்றாள் அவள். எல்லாரும் ஒருவர் ஒருவர் பார்த்துக்கொண்டனர். "யாருக்கும் எதுவும் கேட்டுச்சா?” என்றான் சங்கர். உன்னிப்பாக கவனித்தனர். சந்தடியே இல்லை. "இல்லையே?” பத்து நிமிடங்கள் கழித்து மஞ்சு அவர்கள் வந்த வழியிலேயே போய் ஐந்து நிமிடங்களில் அவனுடன் திரும்பி வந்தாள். காலை ராபர்ட் சத்திரத்தைவிட்டு போனதை பார்த்தபடி இருந்த அவனேதான்.

“யாருப்பா நீ? ஏன் எங்க பின்னால வர?”
பதில் இல்லை.
“ஒன்னும் பேச மாட்ராருங்க.” என்றாள் மஞ்சு.
"சரி வருவதானால் வரட்டுமே. யாருக்கு என்ன நஷ்டம்" என்றான் குமரன்.

இன்னும் தாமதமாகாமல் போனால் சரிதான் என்று அடிகளார் சொல்ல மீண்டும் நடக்க ஆரம்பித்தனர். தோள் பையை சுமக்க கஷ்டப்பட்ட கதிர்வேலன் கையிலிருந்து அதை மௌனி மௌனமாகவே விடுவித்தான். இப்போது மஞ்சு வேகமாகவே நடக்க ஆரம்பித்தாள். "ராவுக்குள்ள கரடி பள்ளத்துகிட்ட போயிடணும்” என்று முணு முணுத்தாள்.

நடை இப்போது அனைவருக்குமே சிரமமாகிவிட்டது. எப்போது பொழுது சாயும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வேளையும் வந்து ஒரு சிறு திறந்த வெளியில் மஞ்சு மூட்டையை இறக்கியபோது யாரும் ஆட்சேபிக்கவில்லை. அனைவரும் மூட்டைகளை இறக்கி வைத்து ¨அப்பாடா!¨ என்ற படி கீழே சாய்ந்தனர். மஞ்சுவும் மௌனியும் பக்கத்தில் மரங்களின் கீழ் இருந்த சுள்ளிகளை சேர்க்க ஆரம்பித்தனர். வேறு யாருக்கும் அதற்கு சக்தி இல்லை. விஞ்ஞானிகள் கூட சோர்வாகிவிட்டதாக தெரிந்தது.

ஒரு கல்லின் மீது சாய்ந்தபடி அனைவரையும் பார்த்தான் சங்கர்.

“என்ன விசித்திரமான குழு! ஒத்தருக்கு ஒத்தர் ஒரு வாரம் முன்னால் தெரியாது. இப்போது எல்லாரும் ஒன்றாக...” ஒவ்வொருவராக பார்க்க ஆரம்பித்தான்.“ விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் சோர்வில்லாமல் இருந்தார்கள். இப்போ ..யார் இவர்கள்? வளவளவென்று பேசியபடியே இருக்கிறார்கள். சக வேலை செய்பவர்களா, நண்பர்களா, காதலர்களா? இது மேல்நாட்டில் சகஜம். இந்தியாவில்.... இங்கும்தான் எல்லாம் வேகமாக மாறி வருகிறது. அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. அடுத்து அடிகளார். அவர் தன்னைப்பற்றி விவரம் அதிகம் சொல்லவில்லை. ஏன்? அவர் சிஷ்யனை ஏன் இந்த ஓட்டு ஓட்டுகிறார்? அதோ ஏதேதோ கட்டளைகள்..... இந்த சிஷ்யன் எப்படிப்பட்டவன்? முதலில் நல்ல பையனாகத்தானே தெரிந்தான். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி மஞ்சுவின் பக்கம் பார்வை போகிறது. இந்த மஞ்சு... களைப்படைவதாகவே தெரியவில்லை. மௌனியிடன் ஏதேதோ பேசுகிறாப்போல இருக்கிறது. ஆச்சரியம். இவள் முகத்தை யாரும் சரியாகக்கூட பார்க்க முடியவில்லை. எப்போதும் தலை குனிந்தபடியே இருந்தவள் இப்போது மௌனியுடன் பேசும்போது மட்டும்... இந்த மௌனி யார்? புரியவில்லை. ஊமையா? இல்லை அப்படி.. கண்களை பார்த்தால் ஒரு வெறிப்பு... ஒன்று உன்மத்தனாக இருக்கனும் அல்லது... கதிர்வேலன். பாவம். மனைவி மீதுதான் என்ன அன்பு. இப்படி எல்லாருமா இருந்துவிடுகிறார்கள். புதுசாக ஒன்று... இன்கம்பாட்டபிலிடி.. அப்படிச்சொல்லி பிரிவது சகஜமாகி வருகிறது. கடைசியாக நான்.” சிரித்துக்கொண்டான் சங்கர்.
நான்.......

Wednesday, February 18, 2009

தேடல் -3

மூன்று மணி நேர நடைக்கு அப்புறம் முன்னால் போய்க்கொண்டு இருந்த சங்கர். திடீரென்று நின்றார்.
---
“யார் நீங்க?”
அங்கே ஒரு மரத்தடியில் கல் மீது அமர்ந்து இருந்தவர்களும் இவர்களை வியப்புடன் பார்த்தார்கள்.
“சரியாப்போச்சு, நாங்கதானெ அதை கேக்கனும்?” என்றார்கள் அந்த இளைஞனும் யுவதியும்.
பின் சிரித்தபடி தாங்கள் தாவரவியல் ஆராய்சியாளர்கள் என்றும் அடிக்கடி இந்தபக்கம் வந்து தேடுவது உண்டென்றும் சொன்னார்கள்.
“நீங்க எங்க வந்தீங்க?”
"நாங்க புலிக்குகையை தேடி போறோம்.”
“அப்படி கேள்வி பட்டதே இல்லையே!”
"இதோ இந்த பெண் அழைத்துப்போகிறாள்"
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். "குமரன், புது இடம் போல இருக்கு. அங்கேயும் பார்த்தாதான் என்ன?” என்றாள் யுவதி.
“சரிதான், வனிதா" என்று குமரன் சொல்ல, இதற்குள் நடந்த களைப்பில் எல்லாரும் உட்கார்ந்து விட்டார்கள்.
"சரி மதியம் ஆச்சு. இங்கே சாப்பிட்டு கிளம்பலாம்" என்று சங்கர் சொல்ல யாரும் ஆட்சேபணை சொல்லவில்லை.
கதிர்வேலன் தம்பதியினர் கிராமத்து டீக் கடையை கணிசமாக காலி செய்து வாங்கிய உணவு பொருட்களை பிரித்தார்கள். சங்கரும் ஆராய்ச்சியாளர்களும் தம் முதுகுப்பையில் இருந்து சில டப்பாக்களை எடுத்து உடைத்தனர். அடிகளாரின் சிஷ்யன் மூட்டையில் இருந்து அவல் எடுத்து ஊற வைக்கலானான். இந்தாம்மா என்று சங்கர் மலைப்பெண்ணிடம் ஒரு பேப்பர் தட்டை நீட்ட அவள் "வேண்டாஞ்சாமி, இதெல்லாம் எனக்கு ஒத்து வராது" என்று குனிந்த தலை நிமிராமல் மறுத்தாள்.

ராபர்ட் கனைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினான். மேல போகு முன்னே நாம் அறிமுகம் செஞ்சுகிறது நல்லது. இங்கே இருக்கும் சங்கர் அமெரிக்காவுல என் நண்பரின் ஆபீஸ்ல வேலை பாக்கிறார். இவரது நண்பர் ஒருவர் புலிக்குகையை பத்தி சொல்லி இங்க வந்திருக்கார். இவர் கதிர்வேலன். அவரது மனைவி வள்ளியம்மை.” கனவைப்பற்றி சுருக்கமாக சொன்னான். இவர் என்று அடிகள் பக்கம் கேள்வியுடன் திரும்பினான். ஏதோ சொல்ல வந்த சிஷ்யனை கை காட்டி அமர்த்திவிட்டு "சச்சிதானந்த அடிகள். இது நித்தியானந்தம்" என்று முடித்துக்கொண்டார். அதற்கு மேல் ஏதும் சொல்ல விரும்பவில்லை போல தோன்றியது.
பிறகு சற்று நேரம் அங்கே கொஞ்சம் கலகலப்புடன் பேச்சுவார்த்தை நடந்தது.
உணவு முடிந்து ராபர்ட் "சரி நான் கிளம்புகிறேன்" என்று சொல்ல சங்கர் வியப்புடன் கேட்டான் "நீங்க எங்களுடன் வரலையா?”
"வருவதாக எங்கே சொன்னேன். நான் வழக்கமாய் மூலிகை தேட போகும் வழி இது. இனி நீங்க வேற வழில போகனும். கவலைப்படாதீங்க. மஞ்சு இருக்கும் வரை கவலை இல்ல" என்றபடி வலது பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

Tuesday, February 17, 2009

தேடல் -2.

தேடல் -2.
காலை ராபர்ட் வாசலை தாண்டி போகும் போது திண்ணையில் படுத்து இருந்தவன் எழுந்தான். இரவு முழுதும் கொட்டித்தீர்த்த மழை அவனை பாதித்ததாக தெரியவில்லை. யார் இவன் என்று யோசித்தபடியே வெளியே வந்து எதிரில் இருந்த திறந்த வெளியை அடைந்தான். அங்கே ஒரு நெருப்பை யாரோ மூட்டியிருந்தார்கள். அதில் குளிர் காய அமர்ந்தான்.

அந்த வயதான தம்பதியினர் சற்று நேரத்தில் வெளியே வந்து அவன் அருகில் அமர்ந்தார்கள். "நீங்க யார்? எங்கிருந்து வரீங்க?”

என் பெயர் கதிர்வேலன் என்று ஆரம்பித்தார். தன் ஊரைச்சொன்னார். கொடி கட்டி பறக்கும் அவர் வியாபாரம், பணத்தை குறி வைக்கும் உறவினர்கள், மனதை கனமாக அழுத்தும் குழந்தை இல்லா பிரச்சினை, ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக சுத்தியது, கோவில் கோவிலாக சுத்தியது, ஆனால் இன்றுவரை ஒரு பயனும் இல்லாதது..... “டாக்டர் எல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லைனுதான் சொல்றாங்க. ஆனா ஒரு புழுவும் முளைக்கலியே!” தாபம் கண்ணீராக வழிந்தது. "கடைசியில யாரோ இங்கே போக சொன்னாங்க. வரும் வழில கார் ரிப்பேர் ஆயிட்டுது. அதை சரி செய்து ஊருக்கு கொண்டு போக சொல்லிட்டேன். அப்ப தற்செயலா வந்த பஸ்ஸுல இங்க வந்து சேந்தோம். இனி அவன் விட்ட வழி!" பின்னர் தன் மனைவியின் கனவையும் உடனே அங்கே போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதையும் சொன்னார்.

அப்போது காவி அணிந்து ஒரு மடாதிபதி போல தோற்றம் கொண்டவர் வந்து சேர்ந்தார். அவர் பின்னால் வந்த சிஷ்யன் அவர் அமர ஒரு பலகையை போட்டான்.
“நீங்க வரச்சொன்னதா கேள்விப்பட்டேன்."
ராபர்ட் தலை ஆட்டினான். தம்பதியினரை பார்த்து "நீங்க காட்டு வழில நடந்தே போக வேண்டியிருக்குமே" என்றான். கதிர் வேலனுக்கு முன் அவர் மனைவி முந்திக்கொண்டு பதில் சொன்னாள், “என்ன ஆனாலும் சரி, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி. போயே தீருவோம்"

என்னை கவனிக்கவில்லையே என்பது போல காவிதாரி இருமினார். அவர் பக்கம் திரும்பி மெல்ல சிரித்த ராபர்ட் "அடிகளே, கொஞ்சம் பொறுங்க. உங்களுக்கு வழி காட்ட ஆள் வந்துகிட்டே இருக்கு" என்றான்.

சங்கரும் அங்கே வந்து தன் தோள் பையை இறக்கி வைத்து உட்கார்ந்து "நான் தயார்" என்றான். ஏதோ பயணத்துக்கு தயாரானவன் போல காணப்பட்டது.

ராபர்ட் அவனை திரும்பி பார்த்து ¨அப்புறம் என்ன போக வேண்டியதுதான்¨ என்று எழுந்தான். அனைவரும் அவனை பின் தொடர்ந்து சென்றார்கள். கிராம எல்லை அதிக தூரம் இல்லையாதலால் சீக்கிரமே வந்து விட்டார்கள். அதோ உங்களை வழிகாட்டி அழைத்துப்போக ஆள் என்று சுட்டிக்காட்டினான் ராபர்ட். அங்கே உட்கார்ந்து இருந்த ஒரு மலை சாதி பெண் இவர்களைப் பார்த்ததும் தலையை குனிந்தபடி எழுந்தாள்.

“இவளா" என்று இகழ்ச்சியுடன் கேட்டார் அடிகள்.
“ஆமாம். பெயர் மஞ்சு. இவளுக்கு இந்த மலைப்பகுதியெல்லாம் நல்லா தெரியும். புலிக்குகைக்கு வழி தெரியும் என்று சொல்கிறாள்¨ என்றான் ராபர்ட்.
“அப்படியாம்மா? அது எங்கே இருக்கு?அங்கே எங்களை அழைத்துப்போக முடியுமா" என்று ஆவலுடன் கேட்டான் சங்கர்.
“ஆங்!” என்றவள் திரும்பி மலையை நோக்கி கை காட்டினாள். ¨அங்க தூரத்தில.. வழி கேள்வி பட்டு இருக்கேன். போனதில்ல" என்றாள்.
"போனதில்லையாமே? இவளை நம்பி எப்படி போறது? என்றார் கதிரேசன் கவலையுடன்.
“நம்புங்க சாமி! போயிரலாம். அவ்வளவு தூரம் ஆச்சேன்னு பாக்கறீங்களா?”
"இல்ல இல்ல எப்படியும் போகணும்" என்றாள் கதிரேசன் மனைவி வள்ளியம்மை.
"வழியெல்லாம் காட்டுப்பாதை, முள்ளு தைக்கும், உங்க செருப்பு ரெண்டு மைலு தாங்காது, பிஞ்சிரும். ராவு குளிரு, பூச்சி பொட்டு இருக்கும். புலி சிறுத்தையெல்லாம் வரும். பரவாயில்லையா?' என்று பயமுறுத்தினாள். அனைவரின் உடலும் சிலிர்த்தது. எப்படியானாலும் என்று வழக்கம் போல கதிரேசன் மனைவி பிடிவாதம் பிடிக்க, ஒரு மணி நேரத்தில் புறப்பட வேண்டும் என்று முடிவானது.

இரண்டு மணி நேரத்தில் அவர்கள் மலையேற ஆரம்பித்து விட்டார்கள். ஒத்தையடிப்பாதை ஒன்றை பற்றி போய் கொண்டு இருந்ததால் எதிர்பார்த்தது போல இல்லாமல் நடை சுலபமாகவே இருந்தது. பின் தங்கி வந்த வள்ளியின் கையிலிருந்து மலைப்பெண் பையை பிடுங்கிக்கொண்டாள். "கொடும்மா பரவால்லை. இது உனக்கு பழக்கமில்ல.” மூன்று மணி நேர நடைக்கு அப்புறம் முன்னால் போய்க்கொண்டு இருந்த சங்கர். திடீரென்று நின்றான்.

Monday, February 16, 2009

தேடல் -1

          அப்பனே முருகா, காப்பாத்துப்பா என்றபடி பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள் அந்த தம்பதியினர். கண்களில் பயண அலுப்பு. ஆனாலும் ¨கோவில் எங்கப்பா இருக்கு?¨ என்று பக்கத்து டீக்கடையில் விசாரித்துகொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். தம்பதியினர் குளத்தில் கைகால் சுத்தம் செய்து கொண்டு இளைப்பாற சிறிது தண்ணீரும் குடித்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தனர்.

       அந்த கேள்வி அனாவசியம்தான். அந்த மலையடிவார கிராமமே சின்னது. அங்கே கோவில், குளம், சத்திரம் தவிர இரண்டொரு வீதிகள் மட்டுமே. ஒரு நாளைக்கு ஒரு பஸ் அந்தப்பக்கம் வர வேண்டும் என்றாலும் சாலை கெட்டுப்போனால் அரிதாகவே அதை பார்க்கலாம். இன்றைக்கு ஏதோ வந்து இருக்கிறது. இதோ வரேன் வரேன் என்று பயமுறுத்தும் மழை வந்து விட்டால் அனேகமாக இன்னும் ஒருவாரம் வராது.

     சத்திரத்தின் வாசலில் இருவர் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தனர். “புலிக்குகையை பார்த்தா...”

      "ஐய்யா, எவ்வளவு நேரமா நிக்கிறது? கொஞ்சம் சீக்கிரம் அனுப்புங்க" என்று இடை மறித்தாள் அந்த பால்காரி. "ஆமா நீ எத்தினி வீட்டுக்கு பால் ஊத்தனும்?” என்று கேட்டப்படியே உள்ளே போனார் சத்திரக்காரர். பாலை பாத்திரத்தில் வாங்கியபடியே "இன்னும் ஒரு லிட்டர் கொடு. பஸ்ஸில அதிசயமா சில பேர் வந்து எறங்கினத பாத்தேன். இந்த எடம் தவிர வேற எங்க போவாங்க" என்றார். ¨ஆமா, இந்த குக்கிராமத்துல பெரிய ஓட்டல் இருக்கே அங்கதான் போவாங்க¨ என்று சிரித்தபடி பாலை ஊற்றிவிட்டு கிளம்பினாள் பால்காரி. சத்திரக்காரர் எதிரில் இருந்த வாலிபனைப் பார்த்து "இதோ நீங்க எதிர்பார்த்த ஆளு வந்துட்டாரு. பேசிக்குங்க" என்றபடி உள்ளே போனார்.

      பேசிக்கொண்டு இருந்த வாட்டசாட்டமான வாலிபன் தெருவைப் பார்த்தான். கிராம சூழ்நிலைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் ஒரு வெள்ளைக்கார வாலிபன் வந்து கொண்டிருந்தான். அணுகியதும் ¨நான் சங்கர்!¨ என்று கையை நீட்ட, வியப்புடன் பார்த்தான் அவன். "நான் ராபர்ட். சூசன் சுகமா? உங்களை எதிர்பார்த்தேன், ஆனால் இவ்வளவு சீக்கிரம் அல்ல" என்றான். இருவரும் சத்திர திண்ணையில் அமர்ந்தனர். ராபர்ட் இயல்பாக உட்கார்ந்ததைப் பார்த்தால் இந்தியாவுக்கு ரொம்பவே பழகியவன் என தெரிந்தது. என்ன விஷயம் என்று ராபர்ட் வினவ அவர்கள் பேச ஆரம்பித்தனர்.

      சத்திரக்காரரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. கோவிலில் தரிசனம் முடித்த அந்த தம்பதியினர் சத்திரக்காரரை பார்த்து இளைப்பாற இடம் கிடைக்குமா என்று வினவினார்கள். "தனியா ரூம்பு எதுவும் இல்ல. கூடத்துலதான் தங்க படுக்க எல்லாமே" என்று பதில் வந்தது. தயங்கி நின்ற கணவனைப்பார்த்த அந்த அம்மாள் "வேற வழி? காரோ பஞ்சர் ஆயிருச்சு. ஏதோ பஸ்ஸு கிடைக்க அந்த முருகன் வழி பண்ணான். இங்கேயே தங்கலாம், டிரைவர் சரி பண்ணி கொண்டு வருவானில்லே" என்றாள். "ம்..பார்க்கலாம். இந்த ரோடு இவ்வளோ மோசமாயிருக்கும்னு தெரியாது.” என்றபடி உள்ளே சென்றனர்.

        அலுப்பில் தூங்கிய அந்த அம்மாள் திடீரென்று எழுந்தாள். உடம்பு முழுதும் வேர்த்துக்கொட்டி இருந்தது. முருகா முருகா என்று அரற்ற ஆரம்பித்துவிட்டாள். பக்கதில் கண் அசந்து இருந்த கதிர்வேலர் "என்ன ஆச்சுமா? என்ன ஆச்சு?வள்ளி...என்ன ஆச்சு” என்று பதறினார். "இவ்வளொ நாள் பட்ட கஷ்டத்துக்கு தீர்வு கிடைச்சிருச்சுங்க. முருகன் கனவுல வந்து புலிக்குகைக்கு போ, உனக்கு வழி பொறக்கும்ன்னு சொன்னாரு. அது இங்கதான் எங்கியோ இருக்காம்.”

      புலிக்குகை எங்க இருக்கு என்று கேட்டவரை ஏற இறங்க பார்த்தார் சத்திரக்காரர். "இதென்ன இன்னிக்கு? இதே கேள்வி கேக்கிற இரண்டாவது நபர் நீங்க! அது பத்தி காதுல விழுந்திருக்கு, ஆனா எங்க இருக்குன்னு எல்லாம் தெரியாது" என்றார் அவர்.
" யாரது முதல் நபர்?”
“அதோ திண்ணைல பேசறாங்க பாருங்க ரெண்டு மண்ணேரமா. அதுல வெள்ளக்காரர் இல்லாத ஒத்தர்.”
"வெள்ளக்காரர் எப்படி இங்க...”
"அவர் நாலு வருஷமாவே இங்க இருக்காரு. அவர் தர பைசால தான் சத்தரம் ஓடுது. ஏதோ ஆராய்ச்சி பண்றாரு. மூலிகையால தங்கம் பண்ணப்போறாராம்" என்று சிரித்தார். "இந்தாங்க டீ. ராத்திரிக்கு சாப்பாடு வேணுமில்ல?"
“...முயற்சி பண்ணி பாக்கலாம். நிச்சயமா ஒண்ணும் சொல்ல முடியாது...” என்று பேசிக்கொண்டு இருந்தவர்களை இடை மறித்தார் கதிர்வேலன். "ஐயா! புலிக்குகை பத்தி விசாரிச்சது யாரு?”

         சங்கர் அவரை வியப்புடன் பார்த்தான்.
“ஏன்?"
"அங்க போகனும்"
பேசிக்கொண்டு இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
ராபர்ட் சொன்னான் "அப்படித்தான் இவரும் கேக்கிறாரு. கோவில்லேயே தங்கி இருக்கிற சாமியாரும் அவரோட சிஷ்யனும் கேக்கிறாங்க. எனக்குத்தான் பதில் தெரியலே. பதில் தெரிஞ்ச ஒத்தரை வரச்சொல்லி இருக்கேன். இப்ப கோவில் போயிட்டு சாப்பிட்டு தூங்குங்க. காலைல பாப்போம்”

Sunday, February 15, 2009

அறிவிப்பு!

டமர டமர டம்!
டமர டமர டம்!

இதனால் சகலருக்கும் தெரிவித்து கொல்வது (சரியாதான் எழுதி இருக்கேன்!) என்னவென்றால் நாளை துவங்கி தேடல் என்கிற தொடர் கதை இங்கே வெளியாகும். எல்லாரும் படிச்சு பயன்பெறுங்க! பக்கத்திலேயே இருக்கிற காபி, மாத்திரையும் வேணுமானா எடுத்துகிடலாம்!
நன்னி!