Sunday, August 21, 2011

ஒரு முத்து, இரு முத்து, மும்முத்து.

தொடர் விளையாட்டு சாதாரணமா பிடிக்காது. இன்னைக்கு என்னமோ ஒரு மூடு. கோமா அக்கா கோத்து வாங்கி எஸ்கேப் ஆக முடியாதுன்னு மெய்ல் போட்டு பயமுறுத்தவே சரி எழுதுவோம்ன்னு ஆரம்பிச்சேன். கொஞ்ச நாளா வேற ரொம்ப கான்சென்ட்ரேட் செய்யற வேலையா வேற போச்சு. ஒரு மாறுதலுக்கு... மாறு லுக்கு....
கோமா அக்கா போஸ்ட்டையே எடிட் பண்ணிட்டேன். கலர் கலரா போட்டு இருக்காங்க. தாங்கீஸ்!
----
இப்படி பொதுவா போஸ்ட் போடக்கூட எனக்கு ஒரு ப்ளாக் இல்ல. அதனால எண்ண இப்ப? இது கதை உடற ப்லாக்தானேன்னு... ஹிஹிஹி.
----

ஒரு முத்து ,இரு முத்து ,மும்முத்து.
1) விரும்பும் மூன்று விஷயங்கள்


1.நல்ல காபி
2.
நல்ல நாவல்..
3.
லைட்டான மழையுடன் சூடான டீ, சாய் நாற்காலி, பகோடா.
-----------------------------------------------------
2)
விரும்பாத மூன்று விஷயங்கள்?

1.
பொய். (விளையாட்டுக்கு கூட.)
2.
வலையில் வசை
3.
தலைக்கு மேலே வேலை
--------------------------------------
3)
பயப்படும் மூன்று விஷயங்கள்?

1.
பயமே கிடையாது. சாரி.
--------------------------
4)
புரியாத மூன்று விஷயங்கள்?


1. ஆஹா! இது நிறையவே இருக்கு. நான் யார்?
2.
எங்கிருந்து வந்தேன்?
3.
எங்கே போகிறேன்?
--------------------------.

5)
மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

1.,
பிளையார் பொம்மை. (இப்ப கை உடைஞ்சி போயிட்டார் :-(
2
கணினி திரை.
கூலிங் க்ளாஸ்
---------------------
6)
சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?

1.
என் பேத்தி. (ஆச்சரியம் இல்லை)
2.
தேவன் நாவல்கள்.
3.
ஆபரேஷன் தியேட்டரில் ஆளுக்கு ஆள் அடிக்கும் ஜோக்குகள்.
-----------------------------
7)
தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

1-
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இந்த க்ஷணம் ன்னு எடுத்துக்காம பதில் சொல்லறேன். மும்பை ஐஐடி திட்டமான ஸ்போக்கன் டுடோரியல் தமிழாக்கம். உசிரை வாங்குது!
2-
பழைய தமிழ், சம்ஸ்க்ருத புத்தகங்களின் படமாக்கம்.
3-
உரத்த சிந்தனை.
---------------------------
8)
வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

1-
அறக்கட்டளைக்கு வைப்பு நிதி சேகரம்.
2-
இந்த வேலை எல்லாம் விட்டுவிட்டு ஆத்ம சிந்தனை கொஞ்சமாவது......
3-
குறிப்பிட்ட அளவாவது புத்தக மின்னாக்கம்.
------------------------------------
9)
செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

1-
அது நம்மகிட்ட இருக்கா? மேலே சொன்ன மூணுமே செய்து முடிக்ககூடியதுதான்.

---------------------------
10)
கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.
தேவையில்லாம மத்தவங்களை பத்தி கமெண்ட்ஸ்.
2.
சாப்பாட்டில் குறைகள் கூறுவது
3.
கோன் ஸ்பீக்கரில் .சத்தமான பாட்டுக்கள்.
--------------------------
11)
கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்?

1.
சம்ஸ்க்ருதம் சரளமாக படிக்க பேச...
2.
கோபப்படாமல் இருப்பது எப்படி?
3. சோர்வில்லாமல் வேலை செய்வது எப்படி.
---------------------------- 
12)
பிடித்த மூன்று உணவு வகைகள் ?

1.
கடலை மிட்டாய்.
2.
பூரி. (அப்படியே சாப்பிடுவேன்)
3.
புதினா துவையல்.
------------------------
13)
அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

1.
இப்படி மத்தவங்களை கஷ்டப்படுத்தறதில்லை. :-))
-----------------------
14)
பிடித்த மூன்று படங்கள்?

1.
ராஜா ரவி வர்மாவோட.... என்னது சினிமா படமா? சரி சரி.. பலே பாண்டியா.
2-
சலங்கை ஒலி.
3-
ஹார்ட் இஸ் அ லோன்லி ஹண்டர்.
----------------------------- 
15)
இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?)
உணவு உடை இருப்பிடம் எப்பொழுதும் சொல்வது.அது போக...
1-
தினசரி எட்டு மணி நேர தூக்கம்.
2-
சரியான நேரத்துக்கு உணவு. (டயபெடிஸ்)
3-
தினசரி ஜபம். (கொஞ்சமாவது)
---------------------------------------
16)
இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
பாவம், விடுங்க. யாரும் இல்லை. விரோதிகளை சம்பாதித்துக்கொள்ள விருப்பம் இல்லை. :-))))



Thursday, June 16, 2011

கொலை.....


கொலை செய்வேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒன்று இல்லை இரண்டு கொலைகள்.
முரட்டுத்தனமும் மஹா கோபமுமாக இருந்தவன் வாழ்க்கை திடீரென்று ஏதோ திசை மாறிபோய்விட்டது. கொசுவைக்கூட கொல்லக்கூடாது என்று கொசு வலை போட்டுக்கொண்டே படுத்துவந்தவன். என் முரட்டுத்தனம் கோபம் எல்லாவற்றையும் ஆடக்கி வைத்துவிட்டு நல்ல பேருடனேயே வாழ்ந்து வருகிறேன்.... எந்த உயிரை பார்த்தாலும் ஒரு கம்பேஷன்தான் வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் நல்லா இருக்கணும் என்றே ப்ரார்த்தனைகள் எப்போதும். ம்ம்ம்.... இன்று இப்படி....

என் கையை பார்க்கிறேன். இவ்வளவு ரத்தமா? இது என் ரத்தமா இல்லை கொலையுண்டவரின் ரத்தமா? எப்படியும் என்னுடையதுதான் போல இருக்கிறது. யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என்ன சொல்லுவார்கள்? வியர்த்துக்கொட்டிக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பயமாகவே இருந்தது. இன்னும் யாரும் பதுங்கி இருக்கிறார்களோ?

கீழே கிடக்கும் சடலங்களை பார்க்கிறேன். பாவம் என்று தோன்றுகிறது. விரதம் கைக்கொண்ட நாள் முதலே வெகு பாதுகாப்பாக இருந்து இருக்கிறேன். ஆனால் இன்றோ கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். அதனால்தான் நான் இருக்கும் இடத்துக்கு இவர்களால் வர முடிந்தது.

அதை நானும் கவனிக்கவில்லை. திடீரென இவர்கள் என்னை ஒன்றாக தாக்கப்போக... முன் காலத்திய பழக்கம்... அனிச்சை செயல்... ரிப்லெக்ஸ் என்கிறார்களே... நானாக அடிக்கவில்லை. கைதான் அடித்தது. கை அடித்துவிட்டது என்று சற்று நேரம் கழித்தே உணர்வுக்கு தெரிந்தது... தெரிந்த போதோ காலம் கடந்துவிட்டு இருந்தது. இவ்வளவு சுலபமாக இவர்கள் இறந்து போனது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது! என் சாமர்த்தியம் எனக்கே தெரியாமல் இருக்கிறது.

சரி இப்போது என்ன செய்வது? பக்கத்தில் இருக்கக்கூடிய நீர் பிரவாகம் நினைவுக்கு வந்தது. ஹும்... அதுதான் செய்யத்தக்கது. சடலங்களை சுமந்தபடி சென்று நீர் ப்ரவாகத்தில் விட்டேன். கைகளை சுத்தமாக கழுவினேன்.

பாத் ரூமில் இருந்து திரும்பி வந்து படுக்கையில் கொசு வலைக்குள் புகுந்து கொண்டு ,வலை நகர்ந்து இருந்த இடத்தை சரி செய்துவிட்டு தூங்கிபோனேன்.

பி.கு: நேற்று நடந்த உண்மை நிகழ்ச்சி.... கொஞ்சம் கண்ணு காது...மிஸ்லீடிங்க.... ஹிஹிஹி!

Sunday, March 7, 2010

கொலை.

வணக்கம் சார்!
யாருப்பா?
......அனுப்பினாரு!
ஓ, ஒரு நிமிஷம்.
உள்ளே போய் தொலைபேசிவிட்டு வந்தார்.
சரிதான்பா. பிரச்சினை உனக்கு தெரியுமில்லையா?
கொஞ்சம் தெரியுங்க.
எம்மேலே ஒரு கேஸ் நடக்குது. ஒரே சாட்சி ....தான். அவன் இல்லாட்டா கேஸ் நிக்காது. நானும் என்னன்னமோ சொல்லி பாத்துட்டேன். ஆளு மசியறா மாதிரி இல்லே! வேற வழியில்லே.
ஒரு சாட்சியும் இல்லாம தீத்துடனும். சரியா?
ஆகட்டுங்க.
சாட்சி மட்டும் இருந்தா நான் தொலஞ்சேன் என்று மனசில் எண்ணிக்கொண்டவர் தொடர்ந்தார். " இதோ பார். எல்லா விவரமும் சேத்து வெச்சிருக்கேன். ராத்திரி 9 மணிக்கு அவன் இருக்கற இடத்தில யாரும் இருக்க மாட்டாங்க. எல்லாரும் வேலை முடிஞ்சு போகிற நேரம். அதான் சரியான நேரம்....”
திட்டம் தீவிரமானது...
******
அவன் இளைஞன். சுறுசுறுப்பானவன். திறமையானவன். வேலை கிடைத்ததில் ஆச்சரியமில்லை.
வழக்கம் போல தோள் பையை மாட்டிக்கொண்டு மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பினான். மற்றவர்களை விட இவன் கொஞ்சம் வித்தியாசமானவன். பல விஷயங்களை யோசித்து புதிதாக ஏதாவது செய்வான். அதுதான் இவன் பலம். இன்று இந்த நகரத்தில் வேலை. முன்னமேயே கொஞ்சம் ஆராய்ந்து திட்டமிட்டாகிவிட்டது.
இந்த டாக்டர் வேலையை முடித்து விட்டால் அப்புறம் தொழில் செய்வது சுலபம். அதற்குத்தான் சரியான திட்டமிட்டாகிவிட்டதே! சமீபத்தில் நடந்த பிரச்சினைகள்.....

மருத்துவ மனை ஒரு முடிவில்லா தெருவின் கடைசியில் இருந்தது. இதோ வந்துவிட்டது. பொழுது சாய்ந்து நேரமாகிவிட்டதால் ஏறக்குறைய காலியாகிவிட்டது. வண்டிகள் ஒவ்வொன்றாக கிளம்பிக்கொண்டு இருந்தன. காவலாளி போக்கு வரத்தை சரி செய்து கொண்டு இருந்தார். ஓரமாக போய் சைக்கிள் நிறுத்துமிடம் வந்ததும் திரும்பிப்பார்த்தான்.
காவலாளி இந்தப்பக்கம் திரும்பவே இல்லை. பையை திறந்து தயாராக இருந்ததை ஷெட்டின் கூரை கீழே குறுக்குக்கம்பியில் பொருத்தினான். ஒட்டுநாடாவால் அதை அங்கேயே நிறுத்தி வைப்பது அரை நிமிஷ வேலையாக இருந்தது. யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு வரவேற்பறையை நோக்கி நடந்தான்.

வரவேற்பறையில் பணிப்பெண் நிமிர்ந்துகூட பார்க்காமல் டோக்கன் முடிந்துவிட்டது என்றாள். இவன் மௌனமாக ஒரு அறிமுக அட்டையை நீட்டினான். அதை பார்த்தவள் "வேண்டியதுதான். நேரமாகிவிட்டதே. டாக்டர் பார்ப்பாரோ மாட்டாரோ!” என்றாள். “பரவாயில்லை. இருந்து பார்த்துவிட்டு போகிறேன்.”
வரவேற்பறையில் ஒரு மூலையாக பார்த்து அமைதியாக உட்கார்ந்து கொண்டான். இன்னும் ஐந்தாறு பேர்கள்தான். இதான் ஆராய்ச்சி செய்து செயலாக்க வேண்டும் என்கிறது. நோயாளிகளை பார்க்கும்போது நடுவில் போனால் வேலைக்கு ஆகாது. கடைசியில் என்றால் சுளுவாக முடிந்துவிடும். பதினைந்து நிமிஷம் ஆனதும் கண் விழித்துப்பார்த்தான். கடைசி நபர் உள்ளே போகிறார். திரும்பி வாசல் பக்கம் பார்த்தான். கண்ணாடி வழியாக காம்பௌண்ட் வாசலும் வண்டிகள் நிறுத்துமிடமும் தெரிந்தது. இரண்டும் ஏறக்குறைய வெறிச்சோடி விட்டன. பீடி பற்றவைத்துக்கொண்டிருந்த பரட்டை தலையன் ஒருவனைத்தவிர தெருவில் கூட யாருமில்லை. காவலாளி விளக்குகளை ஒவ்வொன்றாக அமர்த்துவது தெரிந்தது. கொஞ்சம் கலவரத்துடன் பார்த்தான். நல்ல வேளை கடைசி நோயாளி சைக்கிளில் வந்து இருக்க வேண்டும். காவலாளி அதை பார்த்துவிட்டு விளக்கை அணைக்காமல் போய்விட்டான்.

கடைசி நோயாளி சிரிப்புடன் வெளியே வந்தார். டாக்டர் ஏதோ ஜோக் அடித்து இருக்க வேண்டும். வரவேற்பறை பெண் உள்ளே போனார். " அவ்வளோதானேம்மா? என்ன ரெப்ரசன்டேடிவ்வா? இப்போ இல்லை....ஓஹோ, அப்ப சரி. வரச்சொல்லு”
பணிப்பெண் இவனுக்கு சைகை செய்ய உள்ளே போனான்.

டாக்டர் இண்டர்காமில் பேசிக்கொண்டு இருந்தார். " ட்ரைவர்! வண்டியை எடுத்துக்கொண்டு கோவிலுக்குப்போய் அம்மாவை அழைச்சுகிட்டு வா. இங்க எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.” போனை வைத்துவிட்டு பணிப்பெண்ணை பார்த்தார்.
“சரிம்மா. நீ கிளம்பு. சந்தானத்தை கதவை பூட்டிக்கொள்ளச் சொல்லு.”
வெளியே கார் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது.
இவனைப்பார்த்து "சொல்லுங்க" என்றார்.

“ சார்! நான் ரெட் புல் செக்யூரிடி கம்பெனியிலிருந்து வருகிறேன். நாங்கள் 25 வருஷமாக இந்த வியாபாரத்தில் இருக்கிறோம்.
சமீபத்தில் மருத்துவ மனை மீது ரௌடிகள் தாக்குதல் நடத்துவது அ திகமாகிவிட்டது. சாகும் நிலையில் இருக்கிற ஒருவரை கொண்டு வந்து அட்மிட் பண்ணுவது. அவர் இறந்து போனால் கொன்றுவிட்டாய் என்று கலாட்டா பண்ணுவது. ரகளைக்கு பயந்த டாக்டரிடம் பணம் கறப்பது. போலீஸுக்கு போனாலும் கூட்டமாக கலாட்டா செய்வதால இன்னார்தான் செய்தார்ன்னு ஒண்ணும் ஆதாரமிருக்காது"

டாக்டர் ஆமென்று தலையசைத்தார். சமீபத்திய நிகழ்வு அவர் மனதில் ஓடியது. "எங்களுடைய சமீபத்திய ப்ராடக்ட் உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறேன். இதைப்பற்றி சொல்வதை விட வேலை செய்வதை காட்டுகிறேன்.”

இதற்குள் மடிக்கணினியை பிரித்து சக்தியூட்டி இருந்தான்.
"இதோ பாருங்கள் உங்க மேசை மேலே இருக்கும் கணினியிலேயே வெளியே நடப்பதை பார்க்கலாம். அதை தேவையானபோது பதிவும் செய்யலாம். இதைப்போல...”
கணினியில் சைக்கிள் ஷெட் தெரிந்தது. காவலாளி வருவது அங்கே இவன் பொருத்திய தொலை காமிரா வழியாக தெரிந்தது. நகர் படம் பதிவாக ஆரம்பித்தது. வெற்றி உணர்வோடு இவன் டாக்டரை பார்த்தான். இருவரும் கணினி திரையை கவனிக்க ஆரம்பிக்க பரட்டைத் தலையன் சைக்கிள் கூடத்தில் நுழைந்து கத்தியால் காவலாளியை சரமாரியாக குத்துவது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

டாக்டர் கீழே மயங்கிக்கிடந்த விற்பனை பிரதிநிதியின் நாடித்துடிப்பை பார்த்துவிட்டு போலீஸுக்கு போன் செய்ய ஆரம்பித்தார்...

Sunday, June 28, 2009

32 உம் கதையும்....

ஒரு இரும்பு கடை திறக்கலாம்ன்னு உத்தேசம். அவ்வளோ ஆணி!
மௌலிகிட்டே நேரம் இல்லைன்னு ஜகா வாங்கிடலாம்ன்னு பாத்தா சூரி சார் வேற கூப்டார்.
சரி கொஞ்சம் கதை விடலாமேன்னு... ரொம்ப நாளாச்சு இல்லே?
--------------------
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

ம்ம்ம்ம். அம்மா வழி தாத்தா பேர். வெச்சுட்டாங்க. என் பேரு எனக்கு ரொம்பவே பிடிக்குமே? ஆனா எந்த பேரை கேக்கறீங்க? பாருங்க முழு பேர் சொன்னா இணைய நண்பர்கள் பலருக்கு யாருன்னே தெரியறதில்லை. திவா ன்னு சொல்ல வேண்டி இருக்கு. ஆ.பா ன்னு இன்னொரு பேர். எனக்கு பிடிச்சது. இருந்தாலும் அதயும் யாரும் கூப்பிடறதில்லை. தொ.கி ன்னு இன்னொரு பேர். ஹிஹிஹி... அதுவும் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பத்தாவது படிக்கும் போது பசி வந்து வேலையா இருந்த அம்மாவை தொணப்பி அடி வாங்கினபோது.

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
ஓ! சில சமயம் நானே கூட படிக்க முடியும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
புதினா/ பருப்பு துவையல். உருளை/ பீன்ஸ் கறி, டொமாடோ ரசம், சுட்ட அப்பளாம். அவ்வளோதான். எதேஷ்டம்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை. எல்லாரோடயும் சகஜமா பழகறேன். "எதிரி" உட்பட. நட்பு எங்கிட்டே வெச்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். 55 வருஷமா ஒத்தரோட வாழ்ந்துகிட்டு இருக்கேன். அவரையே சரியா புரியலை. அப்புறம் எப்படி உடனே நட்பு? அது தானா வரும் நாளடைவிலே.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

ரெண்டும் இல்லை. நெரூர் காவிரியிலே முங்கி முங்கி குளிச்ச பிறகு மத்ததெல்லாம் நெருலா ஐஸ்க்ரீம் சாப்ட ஆசாமிக்கு மத்தது எப்படி ருசிக்காதோ அப்படி ஆயிடுத்து.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்ணாடி போட்டு இருக்கிறேனான்னு!
ஹிஹி சும்மா சொன்னேன். குரலைதான் கவனிப்பேன்.

8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம்: கொஞ்சம் கொஞ்சம் இருக்கிற நேர்மை.
பிடிக்காத விஷயம் : அப்பப்ப வரும் கோபம் .

9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?
//அவர் ப்ளாக்கர் இல்லை, நான் இடும் இடுகைகளையும் படிப்பவரல்ல. ஆகவே இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.//
மௌலிகிட்டேந்து சுட்டாச்சு. நன்னி மௌலி!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருமில்லை. தனிமையே எனக்கு பிடிச்சது.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ஹிஹிஹி...எப்பவுமே முக்காலே மூணு வீச நேரம் வெள்ளை பஞ்ச கச்ச வேஷ்டியும், வெள்ளை உத்தரீயமும்தான். இப்பவும் அதே!

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
மானிட்டரை பாக்கிறேன். மேலே பான் சுத்தற சத்தம் கேக்கரேன்.
(யாரப்பா இந்த கேள்விய முதல்லே கேட்டது? எழுதரவங்க மானிட்டரை பாக்காமலே எழுதராங்கன்னு நினைப்பா? அவ்வளோ அசிரத்தையா? :-))))))


13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?

ஏம்பா? போயும் போயும் ஒரு பேனாவா மாத்தணுமா? வேறே தோணலையா? சரி போகட்டும். டர்காய்ஸ் நீலம்.

14. பிடித்த மணம்?
சந்தனம். அப்புறம் இப்ப சமீபத்திலே எல்லாம் குட்டி பாப்பாவுக்குன்னு ஒரு தனி மணம் இருக்கே அது!


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?


யாரையும் அழைக்கலை. கவலைப்படாதீங்க!

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

மௌலி: கர்ம சிரத்தை குறித்து சமீப காலமா பதிந்து வருவது.
சூரி சாரின் ஆன்மீகம்.

17. பிடித்த விளையாட்டு:

சுடோகுதான் இப்ப.
காலேஜ் படிச்சப்ப விளையாடாத கேம் இல்லை. ஆனாலும் பாஸ்கெட் பால்தான் பிடிக்கும். கிரிகெட்டிலே டீமில் இருந்தாலும், கிரௌண்டுக்கு போனோமா அரை மணி ஒரு மணி விளையாடி வேர்க்க விருவிருக்க வந்தோமான்னு பாஸ்கெட் பால்தான் பிடிக்கும்!

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம், ஆனால் அவசியமில்லாமலே பேப்பர் படிக்கலாம். தொலை தூரம் பாக்கலாம்.... கணினித்திரைக்கு மட்டுமே அவசியமா வேண்டி இருக்கு.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

சினிமா பாக்க போறோமா? கொஞ்சம் நேரமாவது சிரிச்சுட்டு வரணும்- பாமா விஜயம், சர்வர் சுந்தரம் போல. ஆனா சினிமா எல்லாம் பாத்து ரொம்பவே வருஷங்கள் ஆச்சு.

20. கடைசியாகப் பார்த்த படம்?

ஹரிதாஸ் ன்னு கேள்வி பட்டு இருக்கீங்களா? இல்லை? அடடா! நானும் பாக்கலை. :-)) ஜாக்கி சானின் ட்ரங்கன் மாஸ்டர்.... என்னமா வளையறாரு! ரொம்பவே வியக்க வெச்ச படம்.

21. பிடித்த பருவகாலம் எது?

ம்ம்ம்ம். மழைக்காலம்தான். மழை பிசு பிசுன்னு வெளியே பெய்ய, லீவு நாளிலே ஒரு ஈஸிசேர், கையிலே ஒரு நல்ல புத்தகம், பக்கத்திலே வறுத்த கடலை அல்லது பக்கோடா.... அடடா!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கைவல்லிய நவநீதம். பல நாட்களா அதைத்தான் திருப்பி திருப்பி...

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு தரம் செட் பண்ணா அவ்வளொதான். வழக்கமா அதை ஒரு சில நொடிக்கு மேலே பாக்கிறதில்லையே! ஏன் இதை விதவிதமா செட் பண்ணறாங்கன்னு புரியலை.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : ப்ரணவம். அதை கேக்கறப்போ இருக்கிற நிம்மதி எப்பவௌம் இராது.
பிடிக்காதது : பயணம் போனாலே பேஜார்தான். வண்டிகளோட சத்தம்...

25.
வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

புது தில்லி. பிலானி போயிருக்கேன். அதுக்கு அதிகமா பயணம் பண்ணாலும் தூரம் கம்மின்னு நினைக்கிறேன்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஜாக் ஆப் ஆல் ட்ரேட்ஸ்! மாஸ்டர் ஆப்? ஹிஹிஹி

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொய்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ம்ம்ம்ம்.. காலை முதல் அலாரம் 3-50 க்கு அடிச்சபின் இன்னும் போகட்டும் அடுத்த அலாரத்துக்கு எழுந்துக்கலாம்ன்னு சொல்கிறதே அதான்.

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?

குன்னூர் ரொம்பவே பிடிச்சது. ஊட்டி மாதிரி ஜனங்க அதிகம் இல்லாம... ஆனா நாளாச்சு..இப்ப மாறி இருக்கும்.

30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?

தயக்கமே இல்லாத பதில் ... இருக்கணூம்ன்னா ஜீவன் முக்தனா இருக்கணும்.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

ஒரேன்னு போட்டா என்ன அர்த்தம்? மத்ததெல்லாம் அவங்களொட சேர்ந்துதான் செய்யறோம்ன்னா? (அப்புறம் முதல் 3 வார்த்தையை ஒண்ணா படிச்ச விபரீதமா இருக்கே!) அனேகமா எல்லா லௌகீக காரியங்களும் அவங்க இல்லாமதான் செய்யறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
என் மெய்லே இருக்கிற வாசகம். சந்தோஷமா இருங்க. வாழ்கை என்கிறது ரொம்ப குறைந்த காலம்தான்.
Be happy! Life is too short to be unhappy!

Thursday, March 12, 2009

தேடல் -19

¨ஆமாம். இவ்வளவு நாட்களும் உங்களுடன் வந்து கொண்டு இருந்தவர்தான். அடிகளாரை தூக்கியும் போனவர்தான். உம் ஆகட்டும்.¨ மஞ்சு திரும்பி நடந்து குகையின் ஒளிக்குள் மறைந்தார்.

வாலை ஆட்டிக்கொண்டு வழிகாட்டின நாயை ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே அனைவரும் பின் தொடர்ந்தனர்.
முன்னம் அவர்கள் பிரிந்த இடத்துக்கு வரவும் குமரனும் வனிதாவும் நிரம்பிய தோள் பைகளுடன் விவாதித்து கொண்டே வரவும் சரியாக இருந்தது. ¨போகலாமா!¨ என்ற கேட்டு விட்டு மீண்டும் அவர்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது கீழே இறங்குவதாக இருந்ததாலும் மனம் நிறைவாக இருந்ததாலும் எல்லாரும் விரைவாகவே இறங்கத்தொடங்கினர். மஞ்சுவை காணாததைக்கூட குமரனோ வனிதாவோ கவனிக்கவில்லை.

நான்கு நாட்களில் உலகமே எப்படி மாறிப்போய்விட்டது? முன்பு இதை பார்த்தாலே வெறுப்பு மேலோங்கியது. இப்போதோ எதைப்பார்த்தாலும் யாரை பார்த்தாலும் ஒரு கம்ஃபாஷன்தான் வருகிறது. முதலில் அம்மாவுக்கு போன் செய்து திருமணம் செய்து கொள்ள தயார்ன்னு சொல்லணும். எவ்வளவு சந்தோஷப்படுவாங்க! ஓ! நான் இந்தியா வந்து இருகிறதே கூட அவங்களுக்கு தெரியாதே. திடீரென்று எதிரே போய் நிற்கலாமா? வேண்டாம். அப்பாவுக்கு கொஞ்சம் பிபி. ஏதாவது ஆகிவிடக்கூடும்.

முன் எப்போதும் இல்லாத நிம்மதியை இப்போது உணர்ந்தான் சங்கர்.

அடிகளார் மனம் நிச்சலனமாக இருந்தாலும் ஆதர்ச சிஷ்யனை பிரிந்துவிட்டோமே என்ற ஆதங்கம் கொஞ்சம் தலைத்தூக்கத்தான் செய்தது. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டாரே குரு! குரு? ஆமாம். நித்தியிடம் சொன்னபோது நம்மை அறியாமலே சத்தியமான வார்த்தைகள் வந்து விழுந்தன. பிரியும் போது கூட நித்தி அழவே இல்லையே! எவ்வளவு வைராக்கியம் வந்துவிட்டது! தன் மேல் வைத்த மதிப்பை அப்படியே சித்தரிடம் திருப்பி விட்டுவிட்டான். எப்போ வருவானோ? எப்போது நான் பொறுப்பில் இருந்து விடுபடுவேனோ! ம்ம்ம்ம்ம்... அட, நம் மடத்துக்கு ரொம்ப மதிப்பு வைத்து இருக்கும் மதுரை ஆடிட்டரை மறந்து போனோமே! சில மாதங்கள் முன் வந்து ஏதோ பேச முற்பட்டபோது கூட, நேரம் சரியில்லாமல் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். முதலில் அவரை கூப்பிடச்சொல்லி பேச வேண்டும்...சிந்தனை தொடர்ந்தது.

வள்ளி ஒரு வழியா நம்ம முருகன் வழி காட்டிட்டான் பாத்தியா!
ஆமாங்க. முதல்ல கீழே இறங்கினதும் அவனுக்கு ஒரு அபிசேகம் செஞ்சுட்டு போகலாம்.
அடுத்து எந்த டாக்டரை..
யாரையும் பாக்க வேணாங்க. மஞ்சு எனக்கு அப்பப்ப ஏதோ பச்சிலை எல்லாம் கொடுத்து வந்தா. எனக்கும் ஏனோ சாப்பிடணும்னு தோணிச்சு. ஆயாசம் நீங்கத்தான் கொடுக்கிறா ன்னு நினைச்சேன். அது வேறன்னு இப்ப தோணுது. உடம்பே இப்ப வித்தியாசமா இருக்கு. லேசா....கனமே இல்லாம... என் தம்பியை சொத்துக்கு ஆசை படறான்னு நினைச்சு வீணா விலக்கி வெச்சு இருந்தோமே அது தப்புன்னு தோணுது. கூப்பிட்டு பேசணும்.

எல்லோருக்கும் இப்போது ஏதோ நினைவு மங்கியது. புதிய எண்ணங்கள் வந்தன. புதிய கண்ணோட்டங்கள்...

ஆகா இப்படி ஒரு அழகான முருகன் கோவில் இந்த மலையில்! நாள் போனதே தெரியவில்லையே! யாரையும் பார்க்கவில்லை, பேசவில்லை. ஆனால் ஒரு நிம்மதி வந்துவிட்டதே! தம் காரியம் இனி நன்றாக நடக்கும் என்று ஒரு நம்பிக்கையும் வந்துவிட்டது.

குமரனும் வனிதாவும் இன்னும் விவாதித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் தோள் பை நிறைய பலவித தாவரங்கள். பூக்கள், இலைகள்.. .. எது புதுசு? எது பழசு.? இதில் கருத்து வேறுபாடு நிறையவே இருந்தது. இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தனர். மற்றவர்களைப்பற்றி ஒரு நினைவே கூட இல்லாமல்.....

சுமார் இரண்டு மணி நேரத்தில் கீழே இறங்கிவிட்டார்கள். மேலே போகும்போது நான்கு நாட்கள் ஆயிற்றே! இப்போது இரண்டு மணி நேரம்தானா என்ற எண்ணம் சங்கர் மனதில் மட்டும் ஒரு கணம் தோன்றி மறைந்தது.

ஒரு டவேரா வந்து நின்றது. ¨அக்கா! அக்கா!¨ என்று உரக்க கூவியபடி ஒருவர் இறங்கி ஓடி வந்தார். ¨பத்து நாளா எங்கே போய்விட்டீங்க? நாங்க படாத பாடு பட்டுட்டோம். அக்கம் பக்கம் தேடாத இடமில்லை.¨
¨பத்து நாளா?¨
¨பின்ன, உங்க ட்ரைவர் காரை ரிப்பேர் பாத்து திரும்பி வந்து பத்து நாள் ஆகப்போகுது. இங்கே பக்கத்திலே ஒரு கிராமத்திலே இருப்பீங்கன்னு சொல்லி போனீகளாம். அங்க கேட்டா யாருக்கும் தெரியலே! என்ன செய்யிறதுன்னு தெரியாம எங்கிட்ட வந்தான். நானும் ரெண்டு நாள் பொறுத்து பாத்திட்டு வண்டில இங்கேயே சுத்தி சுத்தி வரென். சொல்லிட்டு போக்கூடாதா? சரி வாங்க போலாம்.¨
¨இவங்களையும் பக்கத்து ஊரிலே விட்டுடலாம்பா. நாங்கள்லாம் ஒண்ணா இந்த மலையிலே ஒரு முருகன் கோவிலுக்கு போய் வந்தோம்.¨
¨பக்கத்து ஊர் என்ன? எங்கே போகணுமோ அங்கேயே விட்டுடலாம். உங்களை திரும்ப பாத்ததுல இப்ப எவ்வளொ நிம்மதியா இருக்கு.¨

அனைவரும் வண்டியில் ஏறினர்.

மௌனமாக தூரத்தில் அமர்ந்து இதை பார்த்துக்கொண்டிருந்த நாய் சிரிப்பது போல இருந்தது. அது நம் பிரமையாகதான் இருக்க வேண்டும். நாய் எங்காவது சிரிக்குமா என்ன? அது புலியாக மட்டும்தான் மாறும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிறைவுற்றது!

Wednesday, March 11, 2009

தேடல்-18

¨இவள் யார்? உங்கள் வழி காட்டிதான்! வேறு யாரும் இல்லை.¨ என்ற குரல் கேட்டது.
மஞ்சு கம்பீரமாக எழுந்து நின்று முதன் முறையாக குழுவினரை நேருக்கு நேர் பார்த்தாள்.

சக்தி வாய்ந்த கண்கள் ! ஏன் இவ்வளவு நாட்கள் யாரையும் நேரே பார்க்கவில்லை என்பது புரிந்தது. பார்த்திருந்தால் அவற்றின் சக்தி இது சாதாரண பெண் இல்லை என்று அடையாளம் காட்டி இருக்கும்!

இப்போது குரல் அவளது வாயிலிருந்தே வருகிறது என்பது புரிந்தது.

¨ஐந்து நாட்களாக உங்களுடனேயே இருக்கிறேனே! மௌனியை தவிர யாரும் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தால் அவரை அங்கேயே நிறுத்தி தேவையானதை செய்துவிட்டு வந்தேன். அவருக்கு உபதேசம் ஆகிவிட்டது. சமாதிக்கு போய்விட்டார்! சில காலம் சென்ற பின் இந்த மலையில் உலவும் பல சித்தர்களில் அவரும் ஒருவராகிவிடுவார். நித்திக்கு கொஞ்சம் புரிந்தது. கொஞ்சம் சிரமப்பட்டே அவன் கவனத்தை திருப்ப வேண்டி இருந்தது.¨

யாருக்கும் ஒரு பேச்சும் எழவில்லை. இவ்வளவு சக்தி வாய்ந்த சித்தர் நம்மிடையே ஒருவராக பழகி உலாவிக்கொண்டு இருந்தாரா? பிரமிப்பே ஏற்பட்டது. அனவரும் தரையில் வீழ்ந்து வணங்கினர்.

¨திருப்பி இங்கே...¨
¨திருப்பி இங்கே நீங்கள் வர முடியாது. இந்த இடம் கொஞ்சம் வித்தியாசமானது. உலகின் சாதாரண விதிகள் இங்கு செல்லுபடியாகாது. நீங்கள் திரும்பி இங்கே வருவது தேவையானால் அதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த இடம் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே வித்தியாசமாக ஆகிவிடும். திருப்பி இங்கே வந்தால் கூட உங்களால் கண்டு பிடிக்க முடியாது. அதைப்பற்றி கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையானது சரியான சமயத்தில் யார் மூலமாகவோ வந்து சேரும். இந்த மலையின் அடிவாரத்துக்கு போவதற்குள்ளேயே இங்கே நடந்த பல விஷயங்கள் உங்களுக்கு மறந்துவிடும். தேவையானது மட்டுமே நினைவில் இருக்கும்.¨

¨ஏன் அப்படி?¨
மஞ்சு சிரித்தார். அப்புறம் ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் கூட இங்கே வரத்தோன்றும். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கத்தோன்றும். கவலைப்படாதீர்கள் தேவையான நேரத்தில் ஏதோ ஒரு நபர், விஷயத்தின் மூலம் உங்களுக்கு எப்போதும் வழி காட்டப்பட்டுவிடும்.¨

¨ நித்தியானந்தம், இங்கேயே கொஞ்சம் நேரம் இரு. சிலர் வந்து உன்னை அழைத்து போவார்கள். எல்லாம் நல்ல படியாக நடக்கும்! போய் வாருங்கள். நிறைவான வாழ்க்கை வாழுங்கள்! நேரம் ஆகிவிட்டது. குமரனும் வனிதாவும் வந்து விடுவார்கள். சீக்கிரம் போங்கள்!¨

¨அவர்களுக்கு... ¨என்று இழுத்த சங்கரை இடைமறித்தார் மஞ்சு. ¨அவர்களுக்கு அவர்கள் தேடி வந்தது கிடைத்துவிட்டது. யார் யார் எதை தேடுகிறார்களோ அதுதானே கிடைக்கும்? அவர்களால் ஒன்றும் பிரச்சினை வராது. இதோ இந்த நாயை தொடர்ந்து போங்கள். சீக்கிரமே கீழே போய்விடலாம்.¨

நாய்?

இப்போது அவர்கள் கண் எதிரே புலி முன்னம் அவர்களுடன் வந்து கொண்டு இருந்த நாயாக மாறியது.

திகைப்புக்கு மேல் திகைப்பு!

Tuesday, March 10, 2009

தேடல் -17

¨நித்தியானந்தம். நீ இங்கேயே இருக்க வேண்டியது. உனக்கு சில பயிற்சிகள் சொல்லித்தரப்படும்.¨

¨முடியாது ஐயா!¨ என்றான் நித்தி!
¨ஏன்?¨
¨என் குருவை விட்டு பிரிந்து இருக்க மாட்டேன்.¨

நிறைவான சிரிப்பொலி கேட்டது.

¨இனி உனக்கும் உன் குருவுக்கும் கூட இப்போது பேசுவது கேட்கும். அந்த மடத்தைப்பற்றிதான் உனக்கு தெரியுமே? மிகவும் பெயர் பெற்றது. நான் சொன்னபடி செய்தால் அந்த மடத்து பொறுப்பு உனக்கு வந்து சேரும். நிறைய பொருளும் கிடைக்கும், ஊரார் உன்னை மதித்து கொண்டாடுவார்கள். இந்த நாட்டிலேயே, ஏன் உலகிலேயே சிறந்த ஆன்மீகவாதி என்ற பெயர் கிடைக்கும். நான் சொல்கிறபடி செய்யாது போனால் இத்தனையும் இழப்பாய்!¨

¨என்ன வேண்டுமானாலும் இழந்துவிட்டு போகிறேன். என் குருவை விட்டு போக மாட்டேன்.¨

¨நித்தியானந்தம்! உன்னைப்போல குரு பக்தி கொண்டவரை பார்ப்பது அரிது. உனக்கு என்று சில வேலைகள் காத்து இருக்கின்றன. நாட்டில் மக்கள் அரசியல் மீது நம்பிக்கையை வேகமாக இழந்து வருகிறார்கள். அராஜகம் பெருகிவிட்டது. இனி ஆன்மீகம் ஒன்றே அவர்களுக்கு நம்பிக்கையை தரும். அப்போதுதான் அவர்களால் முழு சக்தியுடன் வேலை செய்து விளங்க முடியும். இந்த மறு மலர்ச்சி உன்னால்தான் நிகழ வேண்டும் என்பது இறைவன் சித்தம். அதற்கு மறுப்பு சொல்லாதே.¨

¨மாட்டேன்!!¨ என்றான் நித்தி உறுதியாக.

¨நித்தி அடியேன் சொல்கிறேன். இவர் நம் குரு பரம்பரையில் மிகவும் மூத்தவர். அதனால் இவர் சொல்வதை தட்டக்கூடாது.¨
¨குருவே உங்களைத்தவிர எனக்கு யாரையும் தெரியாது.¨
¨அப்படியானால் நான் சொல்வதை கேட்பாயல்லவா? நான் உத்திரவு போடுகிறேன். இவர் சொல்வது போல இனி நடந்து கொள்ள வேண்டும். என்ன யோசிக்கிறாய்? இனி இவர் என்ன சொன்னாலும் அதை நான் சொல்வதாகவே நினைக்க வேண்டும்.!¨

ஒரு நிமிட மௌனத்துக்குப்பின் ¨குருவே அப்படியானால் சரி. உங்கள் ஆணையை மீற மாட்டேன்!¨ என்றான் நித்தி.

¨ஆகட்டும். நேரம் ஆகிவிட்டது. நீங்கள் கிளம்பலாம்.¨

¨ஐயா எங்களுக்கு வழி காட்டி உதவிய இந்த பெண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்!¨ என்றான் சங்கர்.

கலகல என்ற சிரிப்பொலி கேட்டது