Wednesday, December 23, 2015

சலூன் கதைகள் - 3

வாங்க! போன வாரம் வரக்காணோமேன்னு பாத்தேன்.
.…
ஆமா. மழையில் நானும் இங்க வர முடில. நிறைய வெள்ளம் பாதிப்புத்தான். ஆனா பாருங்க செஞ்ச பாவத்துக்கு அனுபவிச்சே ஆகணும். யாரும் தப்பிக்க முடியாது. நா அனுபவத்துல பாத்துருக்கேன்.
எங்க ஊர்லதாங்க. மூணு பேரு. மண்டையன், பாம்பாட்டி. மொரட்டடி முத்துகிஷ்ணன். இவங்க எங்கூரு ரௌடிங்க. ரௌடின்னா எங்க ஊர்ல ஒண்ணும் பண்ண முடியாது.
நாங்க நானூறு குடும்பம். உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம். அதான். வெளியூர்காரங்க வந்து இவங்கள கூலிக்கு வெச்சிக்குவாங்க. இப்ப நீங்க இருக்கீங்க. என் மேல கோவம். ஏதோ… உங்களுக்கு போட்டியா தொழில் செய்யறேன்; உங்களுக்கு தொந்திரவா இருக்கேன். ஏதோ ஒண்ணு. நீங்க என்ன பழி தீக்கப் பாக்கறிங்க. நீங்க இவங்ககிட்டப்போய் பாருய்யா, இன்னாரை வெட்டணும்… கைய வெட்டணும், கால வெட்டணும்… இல்ல தீத்துக்கட்டணும்…. ஏதோ ஒண்ணு… ஆன்... ஆச்சா. அத சொல்லறீங்க. அவங்க சரின்னு இத்தனன்னு சொல்வாங்க. ஒவ்வொன்னுத்துக்கு ஒரு ரேட் வெச்சு இருப்பாங்க. சரின்னு சொல்லிட்டு நீங்க தோ பாரு, இன்னார்தான்ன்னு என்ன காட்டறீங்க. இதான் இவன் வீடு. இதான் வேலைக்கு போற இடம்ன்னு எல்லாம் தூரத்துலேந்து காட்டறிங்க. சரின்னுட்டு போயிடுவாங்க.
ஆன்….. நாலு நாள் கழிச்சு நீங்க சொன்னத அப்படியே நிறைவேத்திடுவாங்க. எப்பவும் மூணு பேரும் ஒண்ணாத்தான் போவாங்க. காலை வெட்டணுமோ கைய வெட்டணுமோ… ஒழுங்கா முடிச்சுட்டு வந்து உங்ககிட்ட சொல்லிட்டு மீதி பணத்த வாங்கிட்டு போயிடுவாங்க. பாதி பணம் முன்னால கொடுக்கணும். மீதி பாதி வேலை முடிஞ்சப்பறம்… யாரும் இல்லைன்னு சொல்ல மாட்டாங்க. ஏமாத்தப்பாத்தா உனக்கும் இதேதான்ன்னு சொல்லிட்டு போயிடுவாங்க. அதனால யாரும் ஏமாத்த மாட்டாங்க.
இப்பிடி ஊரையே ஏய்ச்சுகிட்டு திரிஞ்சவங்க மூணு பேருமே தூக்கு மாட்டிகிட்டு செத்தாங்க.
ஏன்னு கேக்கறிங்களா? அதான்.
மொதல்ல மண்டையன். அவனோட பையன்... இருவது வயசு. இவனுக்கு நாப்பது வயசு. தகப்பன போட்டு அடிச்சுட்டான். செம அடி. என்ன பிரச்சனையோ… புள்ள அப்பன அடிச்சுட்டான். மண்டையனுக்கு அவமானம் தாங்கல. தூக்கு போட்டுகிட்டான். ஆமாங்க.
ம்ம்ம்ம்… 
அடுத்தவன் பாம்பாட்டி. இவன் நெறைய பணம், சொத்து சேத்து வெச்சிருந்தான். அவனுக்கு ஒடம்பு முழுக்க வெண்குஷ்டம் வந்திடுச்சு. சின்னதா ஆரம்பிச்சது கிடு கிடுன்னு வளந்து பெரிசா ஒடம்பு முழுக்க… அவனை வீட்ல இருந்து தொரத்திட்டாங்க. சொத்து கித்து எல்லாம் இருந்தா என்ன? மொதல்ல திண்ணைக்கு தொரத்துனாங்க. அப்பறம் வீட்ட விட்டே. அவமானம் தாங்கல. தூக்கு போட்டுகிட்டான்.
ம்ம்ம்ம்ம் எவ்ளோ சொன்னே(ன்)?
….
ஆமா கரெக்டு. ரெண்டு. மூணவதா மொரட்டடி முத்துகிஷ்ண(ன்). இவன் அடிதடி மட்டுமில்லாம சாராயமும் காச்சுவான். இவனுக்கு ஒரு பொண்டாட்டி. ரொம்ப அளகா இருப்பா…. அந்த சாதியே இல்ல. ஆமா. அப்ப்டி ஒரு…. ரொம்ப அளகு….
இந்தப்பய சாராயம் காச்சரான்னு அப்பப்ப போலீஸ்காரங்க வந்து தொந்தரவு கொடுப்பாங்க. இது அந்த பொம்பளைக்கு பிடிக்கலே. “ஏண்டா, குடிகாரா! ஏண்டா இப்படி சாராயம் காச்சறே?' ன்னு புருசன திட்டிகிட்டே இருப்பா. ஒரு நா நா ஆத்தங்கரல ரெண்டு பசங்களுக்கு முடி வெட்டிகிட்டு இருக்கேன். பக்கத்துல பொம்பளைங்க பேன் பாத்துகிட்டு இருக்காங்க. அப்ப முத்துகிஷ்ணன் அங்க வந்து ”டீ! நா தூக்கில தொங்கப்போறேன் தூக்கில தொங்கப்போறேன்”நு சொல்லிகிட்டே வீட்டுக்குப்போறான். ஆன்…. ஆமா முத்துகிஷ்ணன் பொண்டாட்டியும் அங்கதான் இருந்தா. மத்த பொம்பளைங்க எல்லாம் என்னடி இப்படி சொல்லிகிட்டு போறான் உன் புருசங்கறாங்க. ”ஆமா! இவரு செஞ்சிடுவாரு” ந்னு அவ பாட்டுக்கு பேன் பாத்துகிட்டு இருக்கா. கொஞ்ச நேரம் ஆச்சு… முத்துகிஷ்ணன காணலை. வீட்டுக்குள போனவன் வெளியே வரலை. ”டீ! போய் பாருடி” ன்னு எல்லாரும் அவன் பொண்டாட்டிய கெளப்பிவுட்டாங்க. அவளும் சரின்னு அள்ளி முடிஞ்சிகிட்டு வூட்டுக்கு போனா. ”ஐயோ ஐயோ!” ன்னு கத்தறா. பொம்பளைங்க எல்லாம் ஓடிப்போய் பாத்தாங்க. இவன் தொங்கறான். அஞ்சு மொழ துண்டு…. சன்னமா. எல்லாம் வந்து ”பெருமாளு தூக்குல தொங்கறான், அறுத்துபோடு” ன்னாங்க. நானும் ஓட்னேன். மேல ஏறி துண்ட வெட்னேன். மூக்கு முடி எடுக்க சன்னமா ஒரு கத்தி இருக்கும். அதால. கீழ இருந்து பொம்பளைங்க புடிச்சுகிட்டாங்க. என்ன பண்ணி என்ன ப்ரயோசனம். போய்ட்டான்.

பாவையோ இங்க பழிக்கஞ்சி தொங்கறா
பின் வந்த பாட்டியும் தொங்கறா
காளையோ தன்னோட திமிரால தொங்கறான்
பின் வந்த கத்திரியும் தொங்கறான்
பாவி இந்த வழுமொழி எதுக்காக தொங்கறா?

….
அது கெட்ட வார்த்தைங்க. இது என்ன பாட்டா? ஹிஹிஹிஹி இது மாதிரி நிறைய இருக்கு. இது ஒரு கதல வருது.
..

அது என்னவா? சொல்றேன்.

Monday, March 2, 2015

தலையணை மந்திரம்


வீட்டை விட்டு வெளியே போய்விட்டேன். இரண்டு தெருக்களை கடந்த பிறகு கோபம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் என்று கவனித்தேன். வழக்கம் போல பூங்காவை நோக்கித்தான். அதுவும் நல்லதே என்று நினைத்துக்கொண்டேன்.

என் மனைவிக்கும் எனக்கும் சண்டை ஏற்படுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை. கல்யாணமாகி மூன்று வருஷங்கள் ஆகிறது. முதல் வருஷம் அருமையாகத்தான் போனது. அப்புறம்தான் சண்டை சச்சரவு ஆரம்பித்தது. விஷயம் ஒன்றுமில்லை. நீயா நானாதான்! எதை எடுத்தாலும் நேர் எதிர் கருத்தை சொல்லுவதை என் மனைவி வழக்கம் ஆக்கிக்கொண்டு இருக்கிறாள். நான் காபி போடு என்றால் அவள் டீ தான் நல்லது என்பாள். நான் கோவிலுக்கு போகலாம் என்றால் அவள் கடைக்குப் போகலாம் என்பாள். புரிகிறதல்லவா?

வெறுத்துப்போயிருக்கிறேன். இப்போதெல்லாம் சண்டை அதிகமானால் வீட்டை விட்டுக்கிளம்பி நடக்க ஆரம்பித்து விடுகிறேன். இது கோபத்தை குறைக்கும் என்று உணர்வு சார் நுண்ணறிவு வலைப்பூவில சொல்லி இருக்கிறார்கள். 

பூங்காவை நெருங்கின போது என் மச்சினன் ராமைப்பார்த்தேன். சிரித்துக்கொண்டே "என்ன வழக்கம் போல சண்டையா?” என்றான். “ஆமாய்யா ஆமா!” என்றேன் கடுப்புடன். கொஞ்சம் சீரியஸாக "அதுக்குத்தான் அந்த யோகா லெக்சருக்கு வான்னு சொன்னேன். அதை நினைவுப்படுத்தத்தான் கிளம்பினேன். இன்னும் கால் மணியில் ஆரம்பிக்கப்போறது" என்றான். ஆஹா! ஆமாம் மறந்தே போனேன். “சரிதான். இன்னும் கொஞ்சம் நடந்துவிட்டு வரேன். நீ போ" என்றேன். "சரி நான் அக்காவை பாத்துட்டு போறேன். சீக்கிரமா வா. அவர் கரெக்டா நேரத்துக்கு ஆரம்பிச்சுடுவார். வழக்கம் போல முடியற நேரத்துக்கு வராதே" என்று சொல்லிய படி அவன் கிளம்பிப்போனான்.

ஹும்! ரொம்பத்தான் கிண்டலா போச்சு. நான் எப்பவும் இப்படி லேட்டா வரதா குற்றச்சாட்டை பலரும் வைக்கிறார்கள். நான் என்ன வேண்டும் என்றா அப்படி செய்கிறேன்? எல்லாருக்கும் நான் என்றால் இளப்பமாக இருக்கிறது! நினைவுகளில் மூழ்கியபடி பார்க்கில் சுற்றிவிட்டு நிகழ்ச்சிக்குப் போகலாம் என்று நினைத்த போது நேரமே ஆகிவிட்டது. ஹாலுக்கு போன போது உரை முடிந்து கேள்வி பதில் ஆரம்பித்து இருந்தது. நல்ல கூட்டம். நன்றாக விஷயம் தெரிந்தவர் போலிருக்கிறது. யாரோ ஒரு ஆசாமி கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார். “என் பையன் நாங்க என்ன சொன்னாலும் எதிர்மாறாத்தான் செய்யறான். படிடான்னா கேக்கறதே இல்லே! எப்பப்பாத்தாலும் விளையாட்டுதான். என்ன செய்யறதுன்னே புரியலை!” கொஞ்சம் விட்டால் அழுது விடுவார் போல் இருந்தது.

யோகா மாஸ்டர் பதில் சொன்னார். “இப்போதெல்லாம் இந்த பிரச்சினையை நிறைய பேர் சொல்லுகிறார்கள். இந்த காலத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்வதை ஏற்பதில் மனத்தடை இருக்கிறது. ஒன்று செய்யுங்கள். அவன் தூங்கின பிறகு அவனிடம் மெதுவான குரலில் சொல்லுங்கள். உன் அப்பாவுக்கு உன்னைப்பத்திதான் கவலை. எல்லாமே உன் நல்லதுக்குத்தான் செய்கிறார். உன் நல்லதுக்குத்தான் சொல்கிறார். அவர் பேச்சை கேட்டு நடந்தா உனக்கு நல்லது. ஒருவர் தூங்கின பிறகு மனத்தடை இருப்பதில்லை என்பதால் இப்படிச்சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்!”

உம்! இப்படி எல்லாம் வழி இருக்கிறதா? நேரம் முடிந்தது என்று சொல்லி நன்றி சொன்னார்கள். வாசல் அருகில் உட்கார்ந்து இருந்ததால் சட்டென்று எழுந்து வந்துவிட்டேன். வரும் வழியில் கேட்டதைப்பற்றி கொஞ்சம் யோசித்துக்கொண்டே வந்தேன். ஒரு திட்டம் உருவாகிக்கொண்டு இருந்தது. வீட்டை அடைந்த போது கதவு பூட்டி இருந்தது. என்னடா இது என்று திகைத்துப்போனேன். என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த போது மனைவி வந்துவிட்டாள். "வெள்ளிக்கிழமையாச்சேன்னு கோவிலுக்குப்போனேன். பக்கத்து வீட்டில சாவி கொடுத்து இருந்தேனே?” நான் ஒன்றுமே பேசவில்லை. 

இரவு உணவை முடித்துவிட்டு வழக்கம் போல சீக்கிரம் படுக்காமல் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தேன். மனைவி கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தாள். கொஞ்சம் கவலையும் இருக்கிறதோ? என்ன ஆச்சு இவனுக்கு இன்னும் படுக்கப்போகலையே என்று யோசித்துக்கொண்டு இருப்பாள். யோசிக்கட்டும்.

ஆனால் வழக்கமான நேரத்துக்கு தூக்கம் கண்களை அழுத்தியது. சரியென்று படுக்கைக்குபோய்விட்டேன். கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம். இவள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வேலையை முடித்துவிடுவாள். படுத்தவுடனே தூங்கிவிடுவாள். வரம் வாங்கி வந்து இருப்பாள் போலிருக்கிறது. இவள் தூங்கியதும் நம் திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டியதுதான். இப்படி நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது. லேசாக குறட்டை சத்தம் கூட காதில் விழுந்தாற்போலிருந்தது. திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன். அருகில் மனைவியின் குரல் மிருதுவாக கேட்டது. “உங்க மனைவிக்கு உங்களைபத்திதான் கவலை. எல்லாமே உங்க நல்லதுக்குத்தான் செய்கிறார். உங்க நல்லதுக்குத்தான் சொல்கிறார். அவர் பேச்சை கேட்டு நடந்தா உங்களுக்கு நல்லது. இனிமே அவர் சொல்கிறதை மறுக்காம ஒத்துகிட்டு செய்யுங்க." 

 அடப்பாவி ராம்! இவளையும் லெக்சருக்கு அழைச்சு போனாயா?


Tuesday, January 13, 2015

குரியர்...

இடம்: சட்டி குரியர் ஆப்பீஸ்
வந்தவர் பபுச்சா.
என்னங்க வேணும்? ஒரு பார்சல் அமேஸிங் கும்பெனிக்கு அனுப்பனுங்க!
சரி கொடுங்க.
அட! இப்ப காணலையே! இங்கேதானே வெச்சேன்?
இங்கதாங்க இருக்கும். தேடிப்பாருங்க.
இல்லைங்கா நல்லா பாத்துட்டேன். இங்கேதான் எங்கான இருக்கணும்.
பார்சல்ல என இருந்திச்சு?
ஒண்ணுமில்லைங்க... ஒரு பாம்பு.
பாம்பாஆஆஆ!
ஆமாங்க. ஒண்ணும் செய்யாதுங்க .... நல்ல பாம்பு!
நல்ல பாம்பாஆஆஆஆஆ!
ஆமாங்க. எனக்கு அவசர வேலை இருக்கு. வரட்டா? பாம்ப பாத்தா பிடிச்சு வைங்க. நா அப்புறமா வந்து வாங்கிக்கறேன்!
 
சீன் 2.
சங்கரூஊஊ! ஒன்ன பாக்க யாரோ வந்திருக்காங்க!
யாருப்பா நீ?
நா குரியர் கம்பனி சார்!
அட ஆமா. ஒரு மாசம் முன்னே வந்த இல்ல? ஆமா, பின்னே ஏன் திருப்பி வர முடில?
ஏன் சார்? இன்னொரு குரியர் வந்ததா சார்? முன்னெ நா டெம்பரியா இருந்தேன் சார். உங்க அட்ரஸ் தெரிலைன்னு குழம்பிகிட்டு இருந்தாங்க. நாதான் கண்டு பிடிச்சு கொடுக்கறேன்னு எடுத்துகிட்டு வந்தேன்.
சரி, இப்ப என்ன விஷயம்?
குரியர் ஆபீஸுக்கு கொஞ்சம் வந்து போங்க சார்!
ஏம்பா? நீதான் அப்ப வேலை செஞ்சதா சொன்னயே? இப்பவும் வேலை செய்யறியா என்ன?
இல்ல சார்! அந்த பக்கமா போனேனா? அந்த மேடம் கொஞ்சம் வாப்பா! யாராச்சும் பாம்பு புடிக்கறவங்கள அளச்சிட்டு வாயேன்ன்னு கெஞ்சி கேட்டாங்க! என்கே மன்சு பாவமாயிடுச்சு சார்! அதான் வந்தேன்.
ஏன் மத்த ஸ்டாப் யாரையான அனுப்பல?
அல்லாரும் பாம்புன்னது லீவு சொல்லிட்டு வூட்டுக்கு போய்டாங்களாம் சார்!
அதெல்லாம் வர முடியாது. வேற யாரான அழைச்சிட்டு போ!
பாவம் சார் அந்தம்மா! அளுது அளுது...பாவம் சார் அந்தம்மா! அளுது அளுது...
இப்ப எனக்கு வண்டி ஒண்ணுமில்ல சர்வீஸூக்கு போயிருக்கு. அப்பறம் வரேன்.
சார் சார்! வேணுமினா கார் வெச்சு அழைச்சுப்போறேன் சார். அப்பிடித்தான் அந்தம்மா சொல்லி அனுப்பிச்சாங்க!
எல்லாம் ஒண்ணும் வேண்டாம்!
சார், நீங்க இந்த எல்ப் பண்ணா எனக்கு வேல போட்டு கொடுத்தாலும் கொடுப்பாங்க சார்! ரொம்ப கஷ்டப்படறேன்!
சரி சரி! உனக்காக வரேன்.... (ஒரு பையில் ஏதோ எடுத்து போட்டுக்கொண்டு கிளம்புகிறார்.)...
சீன் 3.
இடம் குரியர் கம்பனி.
வாப்பா, வா! யாரும் கிடச்சாங்களா?
தோ வராரும்மா!
ஹா! நீங்களா! என்ன காரியம் செஞ்சீங்க? கர்.....
சரி சரி நா போறேன்.
அம்மா, அம்மா இவர வுட்டா இந்த ஏரியாலேயே பாம்பு புடிக்க ஆள் கெடயாதும்மா! இவரத்தான் அல்லாரும் பாம்பு சித்தர்ன்னு கூப்புடுறாங்க!
...
நா போறேன்!
ஹும்!  வேற வழி? சார் சார் தயவு செஞ்சு ஒண்ணும் மனசுல வெச்சுக்காதீங்க சார். சார் சார்....
சங்கர் ஆட்டோ பிடித்து போயே விடுகிறார்.

சீன் 4.
சங்கரூஊஊஊ!
யாரா இருந்தாலும் நா பாக்க முடியாதும்மா! திருப்பி அனுப்பிடு!
சரி..
(சற்று நேரத்தில் திரும்பி வந்து..)
டேய்! அவங்க கால்ல விழறாங்கடா! கொஞ்சம் போய்தான் பாத்துட்டு வாயேன்!
சரி சரி...
நீங்க யா...... ஓ நீங்களா!
ஆமா சார்! தயவு செஞ்சு ஒண்ணும் மனசுல வெச்சுக்காம வந்து பாம்பை பிடிச்சு எடுத்துப்போயிடுங்க சார்.
இப்ப என் வீடு தெரிஞ்சுதா?
தெரிஞ்சுது சார்!
இனிமே அட்ரஸ் கண்டுபிடிக்க முடிலை; டெலிவர் பண்ணலைன்னு சொல்ல மாட்டீங்களே?
மாட்டேன், மாட்டேன், மாட்டேன் சார்!
ரைட் போகலாம்!

சீன் 5.
குரியர் ஆப்பீஸ்.
எப்படி சார் பாம்பை பிடிப்பீங்க?
நா பிடிக்க மாட்டேன்!
பின்னே?
இதோ அந்த பாம்போட ப்ரெண்ட்ஸ். இதுங்களை விட்டா அதை கூட்டிகிட்டு வந்துடும்!
ஆ பையில் பா..பா... பாம்பு!
இதுக்க்கு ஏன் இப்படி அலற்றீங்க? அந்த பாம்போட ப்ரெண்ட் யாரு? இதுவா இல்ல. இந்தா இத பிடிங்க!
சார் சார் சார்.....
சும்மா இறுக்கி பிடிங்க!
முடில சார்! வழ வழன்னு இருக்கு வழுக்குது!
ஆ! இதோ! இதான் அதோட ப்ரெண்ட்!
(ஒரு பாம்பை எடுத்து கீழே விடுகிறார். அது வளைந்து நெளிந்து உள்ளே போகிறது!)
போறது! கொண்டாங்க அதை! (வேர்த்து விருவிருத்தவர் கையிலிருந்து பாம்பை வாங்கி பையில் போடுக்கொள்கிறார்)
(அரை மயக்கத்தில்) யப்பாடா!!!!!
இதோ பாத்தீங்களா! வந்திடுச்சு! பாம்புகளை எடுத்து பையில் போட்டுக்கொள்கிறார்.
ரொம்ப நன்றி சார்! இத வெச்சுக்கோங்க சார்!
அட ட! எதுக்கும்மா இதெல்லாம், வாணாம்! இத ஒரு சமூக சேவையா செய்யறேன்... இந்த நோட்டு கிழிஞ்சு இருக்கு! வேற தரீங்களா? ரைட், வரேன். குரியர் வந்தா உடனடியா டெலிவர் பண்ணிடுங்க!
நிச்சயமா சார்!
பை பை!
அப்பாடா!

சீன் 6. (டாக்ஸியில்...)
சார் ஒரு சந்தேகம்!
என்னப்பா?
நீங்க விட்ட பாம்பு கொஞ்சம் மஞ்ச கலரா இருந்திச்சு!
ஆமா.
திரும்பி வந்த பாம்புல ஒண்ணு கருப்பு! இன்னொன்னு கொஞ்சம் பழுப்பு கலர்!
ஆமா!
மஞ்ச கலர் பாம்பு எங்கே சார் போச்சு!
:-)))))))
நன்றி பலாபட்டரை சங்கர்.
ஒண்ணும் புரியலைன்னா ... https://plus.google.com/112641844811673276825/posts/fWjYP6aBNRA