Tuesday, July 15, 2014

சலூன் கதைகள் - 2
 வாங்க சார்! உங்களத்தான் எதிர்பார்த்துகிட்டே இருந்தேன். என்னிக்கு வருவீங்கன்னு….
நீங்க அனுப்பின மருந்து நல்லா வேல செய்யுது. உக்காருங்க.
எல்லாரும் என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு கேக்கராங்க. இவரு இருக்காரே வக்கீல்லு ----- அவரு கேட்டாரு… என்ன பெருமாளு மூச்சு கொய்ன் கொய்ன்னு இழுக்குமே ஒண்ணும் காணுமேன்னு… நா உங்கள பத்தி சொன்னேனா? ரொம்ப ஆச்சரியப்பட்டு போயிட்டாரு. போய் பாக்கணும்யா அவர. இந்த மாதிரி ஜனங்களோட்தான் ப்ரெண்டா இருக்கணும்ன்னு சொன்னாரு… எல்லாரும் எங்க பாக்கராரு எங்க பாக்கராரு? ஏன் ஒடம்ப காட்டிக்கணும்ம்ன்னு கெக்கறாங்க. நா சொல்லவே இல்ல….

ஓ! அப்படியா? எங்கயும் பாக்கலை? அப்படின்னா கெவருமெண்ட் ஆஸ்பத்திரியா? இல்லை? அப்ப என்ன டாக்டரு நீங்க? ….

ஓ மயக்கம் கொடுக்கரது. அது ரொம்ப முக்கியமானதாச்சுங்களே. இப்படித்தான் ஒத்தர் ஆபரேஷன் பண்ணிக்கிட்டாரு. இதயம் நின்னுபோச்சாம். நா பொழச்சதே அந்த மயக்க டாக்டராலத்தான்பான்னு சொன்னாரு.

ஆமா முடி ரொம்ப ஒண்ணும் வளரலையே! அதுக்குள்ள…. ஓ பதினன்சு நாளுக்கு ஒரு தரமா? சரி!

இவரு வக்கீலு இருக்காரே அவருதாங்க எங்கிட்ட ரொம்ப பிரியமா இருப்பாரு. ரொம்ப வேல ரொம்ப வேல. ஊர் ஊர்ரா கோர்டுக்கு போராரு. ஷேவிங் பண்ண வாடான்னு கூப்புடுவாரு. முன்னல்லாம் அடிக்கடி போய்கிட்டு இருந்தேன். இப்பல்லாம் முடியல. அப்படியும் அப்பப்ப கூப்டுவாரு. போன மாசம் பையனை அனிப்பிச்சு பைக்ல கூட்டாட்டான்னு சொல்டாரு. திருப்பி அனுப்பறப்ப இந்தா பெருமாளு வெச்சுக்க, ஆட்டோல போயிடுன்னு அனுப்பிச்சாரு.

அவருக்குன்னு கத்தி, சோப்பு, க்ரீமு, ப்ரெஷ்ஷு எல்லாம் அங்கயே இருக்கும். ஒரு டப்பால போட்டு. அது அங்கயே இருக்கும். உங்களுக்கும் அப்படி ஒரு பொட்டி போட்டுடலாமுங்க. அத இங்கயே வெச்சுக்கறேன். அத வெச்சு வேர யாருக்கும் செய்யரதில்ல….

ஆமுங்க. ரொம்ப பிரியமா இருப்பாரு. அப்படி நெறய பேர் இருக்காங்க. தோ இந்த அக்ரகாரத்து ஐயர் வேற யார்கிட்டேயும் பண்ணிக்க மாட்டாரு. காத்து மழயானாலும் நாந்தான் போகணும். குறிஞ்சிப்பாடிலேந்து ஒரு மொதலியார் வருவாரு. இங்கே ---- பக்கத்துலதான் அவரோட பொண்ண கட்டிக்கொடுத்திருக்காரு. இப்படீ பாக்க வருவாரு. அப்ப எங்கிட்டத்தான் முடி வெட்டிப்பாரு, ஷேவிங் செஞ்சுப்பாரு. வேற யார்கிட்ட போனாலும் அந்த திருப்தி இல்ல பெருமாளும்பாரு. ஹேன்ன்ன்ன்… அப்படி ஒரு பாசம்.நெல்-----லேந்து ஒரு ஐயரு வருவாரு…. காலேஜ்ல வாத்தியாரு. அவருக்கு பண்ணண்டு புள்ளைங்க! ஆறு பொண்ணு ஆறு பசங்க! எப்படிங்க பாத்துக்கறிங்கன்னு கேப்பேன். யாரா இருந்தாலும் பண்ணண்டு பேர எப்படிங்க சமாளிக்கிறது? அதது ஸ்கூலுக்கு போணம், துனி மனி எடுத்துக்கொடுக்கனும். ஆனா அவரு கவலையே படமாட்டாரு! நானா பாத்துக்கறேன்? எல்லா அந்த திருப்பதி பெருமாளுதான் கவனிச்சுக்கரான் ம்பாரு! அவ்ளோ பக்தி……

என்ன சார் பாக்கறீங்க? மகா பெரியவருதான். நா பாத்திருக்கேன். ரொம்ப வருஷம் முன்ன இங்கே கோவிலுக்கு வந்து இருந்தாரு. கூட்டம்ன்னா கூட்டம் அவ்ளோ கூட்டம். நா இங்கேந்து மாடிலேந்து பாத்தேன்! அப்பாப்பா! அவருதாங்க….. என்ன சொல்லறது! ரொம்ப பெரியவரு. இதெல்லான் வெறும் படந்தாங்க. கையால வரஞ்சது…. அவர போட்டால்லலாம் புடிக்க முடியாது! போட்டா இருக்குதுங்கறாங்களே எல்லாம் சும்மா! ரொம்ப பெரியவரு. நீங்க பாத்து இருக்கீங்களா? …
என்னது! இல்லியா?.......
ஹும், அப்படி போயிடுச்சா? அவர பாக்க கொடுத்து வெக்கலை…..
சரி, போய்வாங்க!

Monday, July 14, 2014

சலூன் கதைகள் -1
வாங்க ஐயா! கணேஷ் ஐயா உங்கள பத்தி சொன்னாரு... குடுமி வைக்கணும் அவ்ளோதானே? செஞ்சிரலாம். உக்காருங்க. ம்ம்ம்ம் ஐய இதென்ன? வேல தெரியாம  வெச்சு இருக்காங்க.... அது சரி,  நீங்க என்ன செய்வீங்க? இப்பல்லாம் யாரு வெச்சுகிறாங்க? ஐயருங்களே வெச்சுக்கிறதில்ல. தமிழருங்க பத்தி கேக்கணுமா. யாருக்கும் பழக்கமில்லாம போயிட்டது ... நம்ம ஊரு எதுங்க?
……
ஓ இதேதானா?
…….
 தாத்தா வந்து சேந்த ஊரா? ஓ அந்த நேரமெல்லாம் நா இங்க வரல.
ஏனூரு சேத்தியாத்தோப்பு பக்கம். அப்படியே வீராணம் ஏரிகரையோரமா போனீங்கன்னா மூணு மைல். அப்பல்லாம் நடந்தே போகனும், இப்பத்தான் ஊருக்கு ஊர் க்ராமத்துக்கு க்ராமம் பஸ்ஸு விட்டிருக்காங்களே. எங்கப்பா நாட்டு வைத்தியம் பாப்பாரு. பத்து க்ராமத்துக்கு அவருதான் வைத்தியரு.  இதெல்லாம் உனக்கு வேண்டாண்டான்னுதான் இந்த வேலைல இழுத்து விட்டாரு. கர்மா சேருண்டாம்பாரு. இருந்தாலும் எனக்கு பச்சிலை வைத்தியம் எல்லாம் தெரியுங்க. இப்படித்தான் பாருங்க பண்ரொட்டிக்கு மேஜிக் செஞ்சுகாட்ட போனேன்

என்ன! ஆஆமாங்க. மேஜிக் நல்லா செய்வேன். இந்த ஸ்கூலுங்களுக்கு எல்லாம் போவேன். அப்பவே நூறு எரணூறுன்னு கொடுப்பாங்க. இப்பத்தான் உடம்பு முடியல. காலு பின்னுது. அத விட பாருங்க இந்த மூச்சு எறப்பு! சமயத்துல போயிடப்போறோம்ன்னு தோணும். எப்படியோ இழுத்து பிடிச்சுகிட்டு இருக்கேன்

அய்ய்ய்யய்யோ! என்னாத்த வேல செஞ்சிருக்காங்க! என்கிட்ட வேல பாத்த ஆளு இப்பிடி செய்வானா? ஆமாங்க! தெருவில கட வெச்சிருந்தப்ப நாலு ஆளு வேலை செய்யும்! நாலு பெரிய கண்ணாடி, இந்தா மாதிரி நாலு கண்ணாடி…. இந்த ஏரியாலியே பெரிய கட என்னுதுதான். அதெல்லாம் ஒரு காலம்…..

என்ன சொன்னேன்? ஆங்! மேஜிக் காட்ட போனேன். பண்ரொட்டி பக்கத்துல க்ராமம். ஒரு 200 புள்ளைங்க இருந்துச்சு. அல்லாம் முடிச்சுட்டு திரும்பி வரேன். எரநூறு ரூவா கொடுத்தாங்க. பஸ்ஸுல ஏறினதுமே அவன பாத்துட்டேன். வயசானவந்தானே புடிங்கிக்கலாம்ன்னு நினைச்சான் போலருக்கு. நல்ல தண்ணி வேற. சாக்கிரதையா பாத்துகிட்டு இருந்தேன். பஸ் ஸ்டாண்ட் வரப்ப கூட்டமே இல்ல. நா பின் பக்கமா எறங்கறப்ப அவன் முன் பக்கமா எறங்கறான். சுதாரிச்சுட்டேன். பாக்கெட்லெந்து ஒரு பொடிய எடுத்து காத்து தெச பாத்து ஊதிவிட்டுட்டு கம்ன்னு வந்துட்டேன்!
என்ன ஆச்சா? உடம்பு முழுக்க அரிப்பு ஆரம்பிச்சுடும். அப்புறம் அவன் ஏன் நம்ம பத்தி யோசிக்கப்போறான்!

அதுவா! …….. ந்னு… க்ராமத்துல வேலில எல்லாம் பூக்கும்! அத காய வெச்சு பொடி பண்ணி வெச்சுக்க வேண்டியதுதான்! மூணு நாளுக்கு அரிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான்.

மாத்தா? அது ரொம்ப சுலபங்க! மஞ்ச பொடிய கரச்சு மேல ஊத்திக்கணும். அப்படி கொஞ்சம் எறங்கி உக்காருங்க! ஷேவிங் நீங்களே பண்ணிப்பீங்களா?  தப்பில்ல…
இப்ப ஒண்ணும் முடிலிங்க. எறைக்குது. இருந்தாலும் ஸ்கூல் தெறக்கரப்ப போய் கேப்பேன். இப்பல்லாம் உள்ளூரோட நிறுத்திக்கிறது. இத பாருங்க சர்டிபிகேட் எல்லாம்…. இது கலெட்டரு கொடுத்தது…. இது போலீஸு சூப்பரெண்டு. இது புது வாழ்வு….
ஆயிடுச்சுங்க. அடுத்தவாட்டி வரதுன்னா முன்னயே போன் பண்ணுங்க. உங்கள ஒடனே பாத்து அனுப்ச்சிடுவேன். இந்த எறப்பு மருந்து எதாச்சுனா…… சரிங்க, ஆவட்டும்.போய் வாங்க.