Thursday, June 16, 2011

கொலை.....


கொலை செய்வேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒன்று இல்லை இரண்டு கொலைகள்.
முரட்டுத்தனமும் மஹா கோபமுமாக இருந்தவன் வாழ்க்கை திடீரென்று ஏதோ திசை மாறிபோய்விட்டது. கொசுவைக்கூட கொல்லக்கூடாது என்று கொசு வலை போட்டுக்கொண்டே படுத்துவந்தவன். என் முரட்டுத்தனம் கோபம் எல்லாவற்றையும் ஆடக்கி வைத்துவிட்டு நல்ல பேருடனேயே வாழ்ந்து வருகிறேன்.... எந்த உயிரை பார்த்தாலும் ஒரு கம்பேஷன்தான் வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் நல்லா இருக்கணும் என்றே ப்ரார்த்தனைகள் எப்போதும். ம்ம்ம்.... இன்று இப்படி....

என் கையை பார்க்கிறேன். இவ்வளவு ரத்தமா? இது என் ரத்தமா இல்லை கொலையுண்டவரின் ரத்தமா? எப்படியும் என்னுடையதுதான் போல இருக்கிறது. யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என்ன சொல்லுவார்கள்? வியர்த்துக்கொட்டிக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பயமாகவே இருந்தது. இன்னும் யாரும் பதுங்கி இருக்கிறார்களோ?

கீழே கிடக்கும் சடலங்களை பார்க்கிறேன். பாவம் என்று தோன்றுகிறது. விரதம் கைக்கொண்ட நாள் முதலே வெகு பாதுகாப்பாக இருந்து இருக்கிறேன். ஆனால் இன்றோ கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். அதனால்தான் நான் இருக்கும் இடத்துக்கு இவர்களால் வர முடிந்தது.

அதை நானும் கவனிக்கவில்லை. திடீரென இவர்கள் என்னை ஒன்றாக தாக்கப்போக... முன் காலத்திய பழக்கம்... அனிச்சை செயல்... ரிப்லெக்ஸ் என்கிறார்களே... நானாக அடிக்கவில்லை. கைதான் அடித்தது. கை அடித்துவிட்டது என்று சற்று நேரம் கழித்தே உணர்வுக்கு தெரிந்தது... தெரிந்த போதோ காலம் கடந்துவிட்டு இருந்தது. இவ்வளவு சுலபமாக இவர்கள் இறந்து போனது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது! என் சாமர்த்தியம் எனக்கே தெரியாமல் இருக்கிறது.

சரி இப்போது என்ன செய்வது? பக்கத்தில் இருக்கக்கூடிய நீர் பிரவாகம் நினைவுக்கு வந்தது. ஹும்... அதுதான் செய்யத்தக்கது. சடலங்களை சுமந்தபடி சென்று நீர் ப்ரவாகத்தில் விட்டேன். கைகளை சுத்தமாக கழுவினேன்.

பாத் ரூமில் இருந்து திரும்பி வந்து படுக்கையில் கொசு வலைக்குள் புகுந்து கொண்டு ,வலை நகர்ந்து இருந்த இடத்தை சரி செய்துவிட்டு தூங்கிபோனேன்.

பி.கு: நேற்று நடந்த உண்மை நிகழ்ச்சி.... கொஞ்சம் கண்ணு காது...மிஸ்லீடிங்க.... ஹிஹிஹி!