Tuesday, February 17, 2009

தேடல் -2.

தேடல் -2.
காலை ராபர்ட் வாசலை தாண்டி போகும் போது திண்ணையில் படுத்து இருந்தவன் எழுந்தான். இரவு முழுதும் கொட்டித்தீர்த்த மழை அவனை பாதித்ததாக தெரியவில்லை. யார் இவன் என்று யோசித்தபடியே வெளியே வந்து எதிரில் இருந்த திறந்த வெளியை அடைந்தான். அங்கே ஒரு நெருப்பை யாரோ மூட்டியிருந்தார்கள். அதில் குளிர் காய அமர்ந்தான்.

அந்த வயதான தம்பதியினர் சற்று நேரத்தில் வெளியே வந்து அவன் அருகில் அமர்ந்தார்கள். "நீங்க யார்? எங்கிருந்து வரீங்க?”

என் பெயர் கதிர்வேலன் என்று ஆரம்பித்தார். தன் ஊரைச்சொன்னார். கொடி கட்டி பறக்கும் அவர் வியாபாரம், பணத்தை குறி வைக்கும் உறவினர்கள், மனதை கனமாக அழுத்தும் குழந்தை இல்லா பிரச்சினை, ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக சுத்தியது, கோவில் கோவிலாக சுத்தியது, ஆனால் இன்றுவரை ஒரு பயனும் இல்லாதது..... “டாக்டர் எல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லைனுதான் சொல்றாங்க. ஆனா ஒரு புழுவும் முளைக்கலியே!” தாபம் கண்ணீராக வழிந்தது. "கடைசியில யாரோ இங்கே போக சொன்னாங்க. வரும் வழில கார் ரிப்பேர் ஆயிட்டுது. அதை சரி செய்து ஊருக்கு கொண்டு போக சொல்லிட்டேன். அப்ப தற்செயலா வந்த பஸ்ஸுல இங்க வந்து சேந்தோம். இனி அவன் விட்ட வழி!" பின்னர் தன் மனைவியின் கனவையும் உடனே அங்கே போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதையும் சொன்னார்.

அப்போது காவி அணிந்து ஒரு மடாதிபதி போல தோற்றம் கொண்டவர் வந்து சேர்ந்தார். அவர் பின்னால் வந்த சிஷ்யன் அவர் அமர ஒரு பலகையை போட்டான்.
“நீங்க வரச்சொன்னதா கேள்விப்பட்டேன்."
ராபர்ட் தலை ஆட்டினான். தம்பதியினரை பார்த்து "நீங்க காட்டு வழில நடந்தே போக வேண்டியிருக்குமே" என்றான். கதிர் வேலனுக்கு முன் அவர் மனைவி முந்திக்கொண்டு பதில் சொன்னாள், “என்ன ஆனாலும் சரி, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி. போயே தீருவோம்"

என்னை கவனிக்கவில்லையே என்பது போல காவிதாரி இருமினார். அவர் பக்கம் திரும்பி மெல்ல சிரித்த ராபர்ட் "அடிகளே, கொஞ்சம் பொறுங்க. உங்களுக்கு வழி காட்ட ஆள் வந்துகிட்டே இருக்கு" என்றான்.

சங்கரும் அங்கே வந்து தன் தோள் பையை இறக்கி வைத்து உட்கார்ந்து "நான் தயார்" என்றான். ஏதோ பயணத்துக்கு தயாரானவன் போல காணப்பட்டது.

ராபர்ட் அவனை திரும்பி பார்த்து ¨அப்புறம் என்ன போக வேண்டியதுதான்¨ என்று எழுந்தான். அனைவரும் அவனை பின் தொடர்ந்து சென்றார்கள். கிராம எல்லை அதிக தூரம் இல்லையாதலால் சீக்கிரமே வந்து விட்டார்கள். அதோ உங்களை வழிகாட்டி அழைத்துப்போக ஆள் என்று சுட்டிக்காட்டினான் ராபர்ட். அங்கே உட்கார்ந்து இருந்த ஒரு மலை சாதி பெண் இவர்களைப் பார்த்ததும் தலையை குனிந்தபடி எழுந்தாள்.

“இவளா" என்று இகழ்ச்சியுடன் கேட்டார் அடிகள்.
“ஆமாம். பெயர் மஞ்சு. இவளுக்கு இந்த மலைப்பகுதியெல்லாம் நல்லா தெரியும். புலிக்குகைக்கு வழி தெரியும் என்று சொல்கிறாள்¨ என்றான் ராபர்ட்.
“அப்படியாம்மா? அது எங்கே இருக்கு?அங்கே எங்களை அழைத்துப்போக முடியுமா" என்று ஆவலுடன் கேட்டான் சங்கர்.
“ஆங்!” என்றவள் திரும்பி மலையை நோக்கி கை காட்டினாள். ¨அங்க தூரத்தில.. வழி கேள்வி பட்டு இருக்கேன். போனதில்ல" என்றாள்.
"போனதில்லையாமே? இவளை நம்பி எப்படி போறது? என்றார் கதிரேசன் கவலையுடன்.
“நம்புங்க சாமி! போயிரலாம். அவ்வளவு தூரம் ஆச்சேன்னு பாக்கறீங்களா?”
"இல்ல இல்ல எப்படியும் போகணும்" என்றாள் கதிரேசன் மனைவி வள்ளியம்மை.
"வழியெல்லாம் காட்டுப்பாதை, முள்ளு தைக்கும், உங்க செருப்பு ரெண்டு மைலு தாங்காது, பிஞ்சிரும். ராவு குளிரு, பூச்சி பொட்டு இருக்கும். புலி சிறுத்தையெல்லாம் வரும். பரவாயில்லையா?' என்று பயமுறுத்தினாள். அனைவரின் உடலும் சிலிர்த்தது. எப்படியானாலும் என்று வழக்கம் போல கதிரேசன் மனைவி பிடிவாதம் பிடிக்க, ஒரு மணி நேரத்தில் புறப்பட வேண்டும் என்று முடிவானது.

இரண்டு மணி நேரத்தில் அவர்கள் மலையேற ஆரம்பித்து விட்டார்கள். ஒத்தையடிப்பாதை ஒன்றை பற்றி போய் கொண்டு இருந்ததால் எதிர்பார்த்தது போல இல்லாமல் நடை சுலபமாகவே இருந்தது. பின் தங்கி வந்த வள்ளியின் கையிலிருந்து மலைப்பெண் பையை பிடுங்கிக்கொண்டாள். "கொடும்மா பரவால்லை. இது உனக்கு பழக்கமில்ல.” மூன்று மணி நேர நடைக்கு அப்புறம் முன்னால் போய்க்கொண்டு இருந்த சங்கர். திடீரென்று நின்றான்.

6 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரு தேடல் அவசியம். மனிதன் போனாலும் தேடல் தொடரும்.ஆனாலும் இப்படி தொடரும் போட்டு தேடலை தேடவைக்ககூடாது. நல்ல போகுது கதை.

திவா said...

//மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரு தேடல் அவசியம். மனிதன் போனாலும் தேடல் தொடரும்.//
சரிதான் அண்ணா!
//ஆனாலும் இப்படி தொடரும் போட்டு தேடலை தேடவைக்ககூடாது. நல்ல போகுது கதை.//

;-))
நம்ம ஒரு பேஜ் டவுன் பாலிஸிதான். அதுக்கு மேலே படிக்க நேரம் இராது பலருக்கு.

கிருத்திகா said...

கதை ரொம்ப நல்லா போயிட்டிருக்கு... தேடல் ஆரம்பத்திலேயே ஆரம்பித்துவிட்டதே... சீக்கிரம் வாங்க அடுத்த பகுதியோடு...

திவா said...

நன்னி கிருத்திகா அக்கா! திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி காலை பாருங்க. கதை முழுக்க எழுதி முடிச்சாச்சு. அதனால தடை இருக்காது.

கவிநயா said...

//ஆனாலும் இப்படி தொடரும் போட்டு தேடலை தேடவைக்ககூடாது. நல்ல போகுது கதை.//

கதையைப் போலவே இதையும் ரசித்தேன் :)

திவா said...

:-))