Thursday, April 11, 2013

அட்மிஷன்.


சர்ஜன் சீட்டு எழுதிக்கொடுத்து "இன்னிக்கே போய் சேர்ந்துக்குங்க. நாளை காலை ஆபரேஷன். அந்த ஆஸ்பத்திரிலதான் சேரணும்; அங்கதான் எனக்கு வேண்டிய எக்விப்மென்ட் இருக்கு" என்றார்.
சீட்டை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். ஆபரேஷனுக்கு தயாராகவே வந்திருந்ததால் நேரே மருத்துவ மனைக்கு சென்றேன். ரிசப்ஷனில் ஒரு நடுத்தர வயது பெண்மணி சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார். சீட்டை கொடுத்தேன். அதை பார்வையிட்டுவிட்டு திருப்பியும் கையை நீட்டினார். ஒரே குழப்பம்! என்ன லஞ்சமா கேட்கிறார்? நாடு இவ்வளவு மோசமாகிவிட்டதா? வேலை பார்க்க வெளிநாடு போய் உழைத்துவிட்டு நாலு வருஷம் கழித்து திரும்பிவந்தால் இவ்வளவு மோசமாக போய் விட்டதா?

அந்த பெண்மணி கொஞ்சம் பொறுமை இழந்து "கொடுங்க சார்" என்றார்.
வந்து வந்து.... ஒரு வேளை அட்வான்ஸ் கேட்கிறாங்களோ? அது நியாயம்தான். ஐந்து ஆயிரம் ரூபாய் தாள்களை நீட்டினேன்.
"அது இல்லை சார். முக்கியமான டாக்குமென்டை கொடுங்க!"
எது முக்கியமான டாக்குமென்ட்? சினிமாவில் பார்த்த படி ரூபாய் நோட்டுதான் முக்கியமான டாக்குமென்ட்!
குழப்பத்தை பார்த்துவிட்டு, “நீங்க வெளியூரா?" என்றார்.
"ஆமாம், சில வருஷங்களாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு இந்த ஆபரேஷனுக்காகவே இந்தியா வந்தேன்!”
"சரி சரி, உங்க ஜாதகத்தை கொடுங்க சார்.”
"ஜாதகம்? கரிக்குலம் வீடாய்? அது எதுக்கு உங்களுக்கு? நான் வேலை தேடி வரலை!”

"சொல்லுப்பா இவருக்கு" என்று பக்கத்தில் இருந்த அட்டெண்டர் ஆசாமியிடம் சொல்லிவிட்டு, "வாங்க சார்!” என்றார் என் பின்னால் நின்ற ஆளிடம்.
வேறு வழியில்லாமல் அந்த ஆசாமியுடன் ஒரு மூலைக்கு நகர்ந்தேன்.
சார், ஜாதகம்ன்னா ஜாதகம்தான் சார்! நீங்க பொறந்த நேரத்தை வெச்சு கணிச்சு வெச்சிருப்பாங்களே! அதான்!”
"அது எதுக்கு உங்களுக்கு? நான் பொண்ணு கேட்டு வரலையே?”
இல்ல சார், ஜாதகத்தை அதோ அங்க உக்காந்து இருக்காரே அவர்கிட்ட கொடுத்துடுவோம். அவர் அத ஆராய்ஞ்சு பாத்து ஆபரேஷன் பண்ணிக்கலாமா, வாணாமா ன்னு சொல்லிடுவார்!”
அவர் எதுக்கு சொல்லணும்? சர்ஜன்தானே சொலல்ணும். அவர் சொல்லிட்டாரே, செஞ்சுக்கலாம்ன்னு?”
"அவர் சொன்னா எல்லாம் பத்தாது சார்! இவர் ஜோசியர்; இவர் க்ளியரன்ஸ் கொடுத்தாத்தான் அட்மிஷன்!”
புரியலையே!”
"அதாவது சார், உங்க ஜாதகத்தை ஆராய்ஞ்சு கிரக நிலமை எல்லாம் சரியா இருக்கா, ஆப்ரேஷன் பண்ணலாமா, பண்ணினா சக்ஸஸ் ஆகுமா, நீங்க எங்க மேல கேஸ் போடாம இருப்பீங்களா ன்னு எல்லாம் பாத்து அவர் பச்சை கொடி காட்டினாத்தான் நாங்க அட்மிஷன் போடுவோம். இப்படித்தான் எங்க ஆஸ்பத்ரி ரூல்ஸ்!”
பச்சை கொடி காட்டலைன்னா?”
அட்மிஷன் கெடயவே கெடையாது சார். ஆறு மாசம் முன்ன ஒரு தொண்டு கெழ பேஷண்ட் செத்துபோச்சுன்னு அவங்க சொந்தக்காரங்க கலாட்டா பண்ணி, கண்ணாடி கம்யூட்டர் எல்லாம் உடச்சதுலேந்து ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங்க.”
"எனக்கு சொந்தக்காரங்களே கிடையாதுப்பா! துணைக்கு, லீகலா யாராவது ரெஸ்பான்சிபிளா கூட இருக்கணும் என்கிறதுக்கு என் ப்ரெண்ட் ஒத்தனைத்தான் வரச்சொல்லி இருக்கேன்! ”
"அதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது சார்! சாரி!”
ஜாதகம் கைவசம் இல்லைன்னா?”
" அது பரவாயில்லை சார். அதோ கம்யூட்டர் முன்னால உக்காந்து இருக்காரே அவர்கிட்ட போய் பிறந்த தேதி ஊர் சொன்னா கம்யூட்டர்ல ஜாதகம் கணிச்சு அச்சடிச்சு கொடுத்துடுவாரு! அம்பது ரூவாதான்!”
அம்பது ரூபாயை பர்ஸில் இருந்து உருவியபடி கம்யூட்டர் ஆசாமியை அணுகினேன்.
"தேதி சார்?”
தேதி, ஊர் சொன்னேன். பக்கத்தில் சோபாவில் உட்கார்ந்தேன்.
ஒரு நிமிஷத்தில் ப்ரின்ட் அவுட் வந்துவிட்டது.
எனக்கு தலையை சுற்றிக்கொண்டு இருந்தது! பரிதாபப்பட்ட அட்டெண்டர் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் போனார். ஜோசியர் ராகு, சனி என்றெல்லாம் கணக்கு போடுவது கேட்டது.
ஐந்து நிமிடத்தில் கொஞ்சம் பரிதாப முகத்துடன் திரும்பி வந்தார். “சார், உங்க ஜாதகப்படி இது ரொம்ப மோசமான டைமாம். இப்ப கூடவே கூடாதுங்கிறார்.”
ஐயா, லீவு கிடக்கவே கிடைக்காம கெஞ்சி கூத்தாடி வாங்கிக்கொண்டு வந்திருக்கேன். இப்படி சொல்லறீங்களே!”
சாரி சொல்லியபடி அவர் போய்விட்டார்.
குழப்பத்துடன் வெளியே வந்தேன்.

ட்ராபிக் ஜாம்டா, சாரி” என்றபடி என் நண்பன் வந்து சேர்ந்தான்.
ஏண்டா மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு?”
இப்ப எனக்கு ஆப்ரேஷன் செய்ய நல்ல நேரம் இல்லையாம். ஜாதகம் பாத்துட்டு அட்மிஷன் இல்லைன்னு சொல்லிட்டாங்க. சர்ஜனுக்கு வேண்டிய எக்விப்மெண்டும் இங்கதான் இருக்காம். இங்க மட்டும்தான் அட்மிஷன் போடணும்ன்னு ஸ்டிரிக்டா முன்னேயே சொல்லிட்டார்!”
அதெல்லாம் பரவாயில்லை, பாத்துக்கலாம் வா!” என்ற படி கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனான்.
'என்ன செய்கிறான் இவன்?' புரியாமலே பலி ஆடு போல கூடவே போனேன். பக்கத்தில் ஒரு சந்தில் நுழைந்து கொஞ்ச தூரம் போனதும் ஒரு கடைக்குள் நுழைந்தோம். ப்ரௌசிங் சென்டர் போல இருந்தது. ஆனால் மூலையில் தூங்கி வழிந்து கொண்டு இருந்த வயசான ஆசாமி தவிர ஆட்கள் யாரும் காணவில்லை.
கடைக்காரர் "வாங்க சார் என்ன வேணும்?”
நண்பன் அவர்கிட்டே போய் மெதுவாக ஏதோ சொன்னான்.
"அவ்வளவுதானே? பண்ணிடலாம். சாருக்கு ஒரு முப்பது வயசு இருக்குமா? ரைட்!”
சற்று நேரத்தில் 200 ரூபாய் கை மாறியது.
ஒரு ப்ரின்ட் அவுட் கைக்கு வந்தது.
இது என்னடா?”
நீ, சும்மா என் கூட வா!” செல் போனில் நேரத்தை பார்த்தான். "இன்னும் அரை மணி இருக்கு. அப்புறம் ட்யூட்டி மாறிடும். டிபன் சாப்பிட்டுவிட்டு போகலாம் வா"

அடுத்த ஒரு மணியில் அந்த ஆஸ்பத்திரியில் ஒரு ரூமில் இருந்தோம்.
"சர்ஜனுக்கு சொல்லியாச்சு சார். அதிகம் முழுச்சு பேசிகிட்டு இருக்காதீங்க சார். நாளை ஆபரேஷன். இந்த மாத்திரையை போட்டுகிட்டு நல்லா தூங்குங்க.” மாத்திரை ஒன்றை கொடுத்து விட்டு செவிலி அகன்றார்.

"எப்படிடா இது?”
"ஒண்ணுமில்லைடா, ஒரு சிஸ்டம் வந்தா அதை உடைக்கறதுதானே நம்மளோட அடுத்த வேலை? அந்த கம்ப்யூட்டர் சென்டர்ல அந்த அந்த நாளைக்கு பொருத்தமா பிறந்த ஜாதகம் கணிச்சு கொடுக்கறாங்க! அவ்ளோதான் விஷயம்! ஆமா, ஏன் என்னமோ கோடி ரூபா லாட்டரி அடிச்சவன் மாதிரி பாக்குற?”
டேய், என் வேலையே இன்ஸ்யூரன்ஸ் கம்பனிலன்னு உனக்கு தெரியுமில்லே? மெடிக்லெய்ம்ல செலவு அதிகமாயிட்டு இருக்கு; குறைக்க வழி சொல்லுங்கடான்னு உசிரை வாங்கிட்டு இருக்காங்க! இப்ப வழி தெரிஞ்சுடுச்சு!”
அத்தோட சைட் பிசினஸும் செய்ய எனக்கும் வழி தெரிஞ்சுடுச்சு!” என்று சிரித்தான் நண்பன்!