Wednesday, September 19, 2012

மூஞ்சூறு
பூஜைக்கு எல்லா ரெடியாம்மா?

“இதோ ஆயிடுத்துன்னா. இந்த தொல்லை தாங்கலை. எத வெச்சாலும் இழுத்துண்டு போயிடறது” என்று அலுத்தபடியே பூஜை அறையை விட்டு வெளியே வந்தாள் வெங்கடராமனின் சஹதர்மிணி.

சிரித்துக்கொண்டே உள்ளே போய் பூஜையை தொடங்கினார் வெங்கடராமன். வழக்கம் போல் பூஜை பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு சந்தனம் அரைக்கலானார். வாய் ஸ்தோத்திரங்களை முணுமுணுத்தபடி இருந்தது. இதோ ஆயிற்று. தினப்படி பூஜையை முடித்துவிட்டால் பிள்ளையாரை பார்க்கப் போய்விடலாம். என்னதான் பிள்ளையார் சதுர்த்தி என்றாலும் தினப்படி பூஜைதானே பிரதானம்?

ருத்திரம் சமகத்துடன் தினசரி பூஜை முடிந்தது. பஞ்சாயதனத்தை பூஜை பெட்டிக்குள் நகர்த்திவிட்டு கதவை மூடிவிட்டு நேற்று வாங்கி வந்த களிமண் பிள்ளையாரை முன்னுக்கு நகர்த்திக்கொண்டார். “இந்த முறை வாங்கி வந்த குடை எவ்வளவு அழகாக இருக்கிறது? நல்ல கற்பனா ரசத்துடன் செய்திருக்கிறான் யாரோ!” இரண்டு மெல்லிய மூங்கில் துண்டை ஒரு அச்சில் அமைத்து இரண்டுக்கும் நடுவில் காகித வேலை செய்திருந்தது. இரண்டையும் ஸான்ட்விச் போல சேர்த்து  ரப்பர் பான்ட் போட்டு வைத்திருக்க அது பார்க்க கொடி போல இருந்தது. ரப்பர் பான்டை கழட்டிவிட்டு ஒரு மூங்கில் துண்டை ஒரு சுழற்று சுழற்றி ரப்பர் பான்டை திருப்பி பொருத்த, அட அழகு! என்று தோன்றியது.

இதெல்லாம் இருக்கட்டும், மனசு ஈடு படணும் அதானே முக்கியம் என்று நினைத்துக் கொண்டு பூஜையை ஆரம்பித்தார். 

ஏனோ ப்ராண ப்ரதிஷ்டை மந்திரம் தடைப் பட்டது. திருப்பித் திருப்பி நாலு தரம் சொல்ல வேண்டியிருந்தது. மனசு ஏன் இன்றைக்கு இவ்வளவு ஊசலாடுகிறது? பிள்ளையாருக்கு அப்பம், கொழுக்கட்டை, பழங்கள் என்று நிறைய நிவேதனம் செய்து தண்ணீர் சொம்பையும் அவர் பக்கம் நகர்த்தி பூஜையை முடித்து எழுந்திருந்தார்.

மனசு நிறையவே இல்லை. பூஜைக்கு பிள்ளையார் வரவேயில்லை என்று ஒரு உணர்ச்சி! கனத்த மனதுடன் காக்கைக்கு அன்னத்துடன்  கிணற்றடியை தாண்டி தோட்டத்துக்கு போனார். காம்பவுண்ட் சுவர் ஓரத்தில் …. விக்கித்துப்போய் சிலையாக நின்று விட்டார் வெங்கட்ராமன். அரக்க பரக்க வந்த வேலைக்காரி எலிப்பொறியில் தலை நசுங்கி கிடந்ததை “மறந்தே போயிட்டேன்”   என்றவாறு எலிப்பொறியுடன் தூக்கிப்போனாள்.

“ஹே ஜீவனே! நான் தப்பு பண்ணிவிட்டேன்! இந்த பாவியை மன்னிக்க முடியுமா உன்னால? இந்த எலிப்பொறியை தூக்கிப் போடு! ன்னு முன்னேயே சொன்னேன். யாரும் கேட்கலை. சரி அவசியம்ன்னா  கூண்டுப்பொறி வாங்கி வைன்னு சொன்னேன். அதை நானே செய்திருக்கணும். அப்படி ஒண்ணை வாங்கனும்ன்னு எவ்வளோ நாளா நினைச்சு கை வரலை! என் சோம்பேறித்தனம்தான் காரணம். அப்பவே செய்திருந்தால் நீ இப்போ செத்துப்போயிருக்க மாட்டாயோ என்னமோ! பிள்ளையார் சதுர்த்தியும் அதுவுமா…. என் தப்பு! என் தப்பு! என் தப்பு! ஜீவ ஹிம்ஸை செய்துட்டு பூஜை செய்து என்ன பலன்? இவ்வளவு நாள் பூஜை செய்தும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஜீவ காருண்யம் வரலைன்னா என்னதான் பூஜை செய்கிறேன்? மன்னிச்சுடுப்பா மன்னிச்சுடு!”

“என்னன்னா, தீட்டுக்கு குளிக்கற மாதிரி அகாலத்துல குளியல்?” என்று கேட்ட மனைவியை பொருட்படுத்தாமல் உடை மாற்ற உள்ளே சென்றார் வெங்கட்ராமன்.