Wednesday, January 2, 2008

ஒண்ணுல ரெண்டு:

முந்தின கதையை படிச்சிட்டீங்கதானே? இல்லாவிட்டா படியுங்க. ஏன்னா இரண்டுக்கும் தொடர்பு உண்டு!!

கதிரேசன்:
நல்லதுங்க... சரக்கு வந்த பிறகு தகவல் கொடுங்க. போன வச்சிரட்டுமா?
என்னங்க என்ன கேட்டீங்க? என்ன பத்தியா? ஏம் பேரு கதிரேசன். சின்ன வயசுல வீட்ட விட்டு ஓடிப்போனவன். எங்கெங்கேயோ சுத்தி என்னன்னவோ வேலை எல்லாம் பாத்து கடைசியா இந்த ஊர்ல வந்து உக்காந்திருக்கேன். போன அஞ்சு வருஷமா இங்கியேதான். பிசினஸ் நிலச்சு இப்போதான் வசதியா இருக்கேன். ஒரு நிமிஷங்க..போன் பேசிட்டு... அலோ!...

பாத்தீங்களா, நான் ரொம்பவே பிஸி. இது சீசன். சரக்கு வரத்தும் போக்கும் அதிகமா இருக்கும். எப்படி நான் நல்லா இருக்கேன்? நேர்மைங்க. சரக்கு சொன்னா சொன்ன விலைக்கு தரனும். சரியான நேரத்துல போய் சேரனும். இதனாலதான் என்கிட்டே கஸ்டமர் வராங்க. அலோ! கொஞ்சம் நேரம் சென்னு பேசவா?
அப்பாடா சரக்கு போய் சேந்திருச்சு. இப்படியே காலத்த ஓட்டிக்கிட்டுதான் இருந்தேன். மூனு மாசம் முந்தி டைபாய்ட் ஜுரம் வந்து படுத்தப்பதான் எனக்குன்னு ஒரு குடும்பம் இல்லாம இருக்கறது எவ்வளோ பிரச்சினைன்னு தெரிஞ்சது. செயலா ஆன பிறகு ஊருக்கு போய் பாத்தன்தான். ஆனா எல்லாரும் எப்பவோ ஊரை விட்டு போயாச்சுன்னு தெரிஞ்சது. என்ன பண்ண?

சரி எவளாவது ஒருத்தியை கட்டிக்கிடலாம்னு முடிவு பண்ணி தரகரை கூப்டு விஷயம் சொன்னேன். முடிச்சிரலாம் அண்ணே கவலைப்படாதீங்கன்னு சொன்ன ஆசாமி ஆளே காணோம். ஒரு மாசம் முன்னாடி ஆப்டாரு. பாத்துக்கிட்டே இருக்கேன் அண்ணே, கொஞ்சம் வயசாச்சு இல்ல. அதான் பிரச்சினைனாரு.
அப்படியே இன்னக்கி வந்து அண்ணே ஒரு பொண்ணு இருக்கு. ஏழ்மையான குடும்பம். பத்தாவது பாஸ். வேலைக்கு போவுது. கொஞ்சம் வயசாச்சு. 27. வயசான அம்மா. மாமாங்காரன்தான் குடும்பத்த பாத்துக்கறான்னு பேரு. பொண்ணோட சம்பளம் முழுக்க அபேஸ் பண்ணி ஏமாத்திக்கிட்டு இருக்கான். பாத்தா பாவமா இருக்கு. உங்களுக்கு சரின்னா பேசி முடிச்சுரலாம்னாரு.

ஏழ்மை என்னங்க ஏழ்மை? நானும் அப்படி இருந்தவன்தானே? எல்லாம் பாத்துக்கலாம். ஆனா பொண்ணு குணம் தெரியனுமே? நான் நம்பகமில்லாத சரக்கு வாங்கறதில்ல. ரெண்டு இடம் விசாரிச்சு பாத்துதான் வாங்குவேன். எப்படி விசாரிக்கிறது? யோசிட்டு இருந்தேன்.

அதோ அந்த பொண்ணுதான், பாருங்கன்னாரு. ஒஹோ, இந்த பொண்ணா? ஏறக்குறைய தினசரி பாக்கிறேனே. வேலைக்கு இந்த நேரம்தான் போகும். ஆனா எப்படி விசாரிக்கிறது? எதிரே போர்டை பாத்து சட்டுனு ஐடியா வந்தது. அந்த ஆபீசுக்கு போனேன்.

இளவரசன்:
ஈ ஓட்டிட்டு இருந்தப்ப இந்த வேலை வந்தது. முதல்ல விஷயம் கேட்டுக்கிட்டு பெரியவர் வந்தப்பறம் கவனிப்பார்ன்னு சொல்ல இருந்தேன். ஒரு பொண்ணை பாலோ பண்ணி அதோட நடத்தையை கவனிக்கனுமாம். ...

கதிரேசன்:
வாங்க! பாத்து நாலு நாளாச்சே! இன்னிக்குதான் ஒரு கடிதாசி வந்திருக்கு. இன்னும் பாக்கல. அலோ..சரிங்க,..சரிங்க..அப்படியே ஆகட்டும்.

கடிதாசில என்ன இருக்குன்னு பாக்கலாமா?
“நீங்க கண்காணிக்க சொன்ன பெண்ணை கண்காணித்ததில்......." சரிதான், எல்லாம் நல்லாதான் இருக்கு. பேசி முடிச்சுர வேண்டியதுதான். இதென்ன கூட இன்னொரு கடிதாசு? "அன்புள்ள ஐயா, நீங்கள் கண்காணிக்கச் சொன்ன பெண் வேலைக்கு வர இயலாது. அவளுடைய நிலை எனக்கு பரிதாபம் ஏற்பட செய்து விட்டது. அவளை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்! வாழ்த்துங்கள்! இப்படிக்கு...”

ஹும். ஆண்டவன் போக்கு இப்படி இருக்கு. நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான். அலோ... அது சரீங்க. நேரமே இல்லாத நமக்கு கல்யாணம் ஒரு கேடா? யோசிச்சி பாத்தா வேணான்னுதான் தோணுது. அலோ, லாரி நம்பர் எழுதிக்குங்க.....

ரெண்டுல ஒண்ணு:

இளவரசன்:
நான் இந்த ஊருக்கு புதிசு. இந்த அலுவலகத்தில் உட்கார்ந்து இருந்தாலும் இது என்னுடையதல்ல. இது என் நண்பன் ஒருவனின் மாமாவுக்கு சொந்தமானது. அவருக்கு ஒரு துக்க செய்தியை தெரிவிக்க வந்தேன். இங்கேயே மூன்று நாட்கள் உட்கார்ந்து கொள் என்று சொல்லி அமர்த்திவிட்டு போய்விட்டார். பின்னால் போன் செய்து திட்டமிட்டபடி உடனே திரும்பி வர முடியாது எனவும், சில சிக்கல்களை தீர்த்துவிட்டு வர வேண்டியிருப்பதால் ஒரு வாரம் ஆகும் என்றும் சொன்னார். எனக்குத்தான் வேறு வேலை ஒன்றும் பெரிசாக இல்லாததால் இங்கேயே இருக்கலாம் என்று தீர்மானித்தேன்.

இது ஒரு செக்யூரிட்டி + துப்பறியும் நிறுவனம். இப்போதைக்கு செக்யூரிட்டி வேலை ஏதும் நிர்வாகம் செய்ய இல்லை. அதனால் வேலையும் ஒன்னும் இல்லை. மேசை மேல் கால் போட்டு நாவல் ஒன்றை படித்து கொண்டிருந்தேன். எந்த வேலையாலும் குறித்து வைத்துக்கொள். நான் வந்து கவனிப்பேன் என்று சொல்லு என்று அறிவுறுத்தி இருந்தார்.
படித்து முடித்த நாவலையே நான்காவது தடவையாக படித்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருந்த போதுதான் அந்த மனிதர் வந்தார்.

ஈ ஓட்டிக்கொண்டு இருந்தபோது இந்த வேலை வந்தது. முதல்ல விஷயம் கேட்டுக்கொண்டு பெரியவர் வந்த பிறகு கவனிப்பார் என்று சொல்ல இருந்தேன். ஒரு பொண்ணை தொடர்ந்துபோய் அவள் நடத்தையை கவனிக்க வேடுமாம். எதிரே ஆபீஸ். பிசினஸ் செய்கிறார். ஆபீஸுக்காக இருக்கும். சரி நாமும் போர் அடிச்சிகிட்டுதானே இருக்கிறோம். இது சுலபமான வேலை போல இருக்கே! செய்துவிடலாமே என்று இறங்கி விட்டேன்.

நாலு நாள் பாலோ செய்ததுமே தெரிந்து போயிற்று.. தனியார் கடையில் வேலை. கடை திறந்து சுத்தம் பண்ணி, சரக்கு வித்து எல்லாம் செய்து மாசம் ஆயிரம் கூட தேறாது. நடுவில் மாமன் ஒருத்தன் வந்து முதலாளிகிட்டே பேசி பணத்தை வேற வாங்கி போனான். அட்வான்ஸ் வாங்கிக்கொண்டே இருப்பான். அவள் கையில் ஒன்றும் தேறாது! மாடு மாதிரிதான் உழைக்கிறாள். சரி, நேர்மையா வேலை வேலை செய்கிறாளா என்று பார்க்க நாலு தரம் சும்மா வேண்டாத பொருளெல்லாம் வாங்கினேன். கை சுத்தம்தான். சரி, இன்று ராத்திரி ரிப்போர்ட் பண்ண வேண்டியதுதான். மாலை வீட்டுக்குப் போகும்போது கொஞ்சம் பின்னால் போய் பார்ப்போம்.

மாலை அந்த பெண்ணை தொடர்ந்து போனேன். பஸ் ஸ்டாண்ட் வந்தபோது அவள் திடீரென்று திரும்பினாள். “என்ன மிஸ்டர்! நானும் நாலு நாளா பாக்கிறேன். என் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கியே? என்ன விஷயம்?” இப்போதைக்கு முகத்தில் ஒரு சிரிப்புதான் இருந்தது.

மாலை அந்த பெண்ணை தொடர்ந்து போனேன். பஸ் ஸ்டாண்ட் வந்தபோது அவள் திடீரென்று திரும்பினாள். “என்ன மிஸ்டர்! நானும் நாலு நாளா பாக்கிறேன். என் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கியே? என்ன விஷயம்?” இப்போதைக்கு முகத்தில் ஒரு சிரிப்புதான் இருந்தது.

பேச்சை கேட்டு எங்கிருந்தோ ஒரு தடியன் வந்தான். "யாருய்யா நீ?"
சுற்றி ஜனம் கூடிவிட்டது. எனக்கு இந்த விஷயங்கள் புதிது. பயந்து விட்டேன். எவனோ ஒருவன் என் காலரை பிடித்தவுடன் இருந்த தைரியமும் ஓடி விட்டது.

"விட்டுடுங்க, விட்டுடுங்க. எல்லாம் சொல்லிடறேன். நான் செக்யூரிட்டி ஏஜென்ஸில வேலை பாக்கிறேன். இந்த பொண்ணு நடத்தையை கண்காணிக்க அமர்த்தினாங்க.” எல்லாம் சொல்லிவிட்டேன்.
கூட்டம் சிரித்துவிட்டது. துப்பறியர மூஞ்சியை பார்ரா!

அந்த பெண்ணின் சந்தேகம் போயிற்றோ? அவள் முகத்தை பார்த்தேன். முகத்தில் கண்ணீர்!
என் முகத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது.

"அவ்வளவுதானா? அவ்வளவுதானா? எங்க கடைக்கி வந்து வேண்டாத பொருளெல்லாம் வாங்கினையே! எனக்கும் இந்த நரகத்திலிருந்து விடுதலை கொடுக்க ஒத்தன் வந்துட்டானோன்னு நினச்சேனே! நானும் காதலிக்க ஒத்தன் கிடச்சானோன்னு நினச்சேனே! நான் முட்டாள்!”

அவள் கண்ணீருடன் திரும்பிச் சென்றாள்.