Wednesday, December 23, 2015

சலூன் கதைகள் - 3

வாங்க! போன வாரம் வரக்காணோமேன்னு பாத்தேன்.
.…
ஆமா. மழையில் நானும் இங்க வர முடில. நிறைய வெள்ளம் பாதிப்புத்தான். ஆனா பாருங்க செஞ்ச பாவத்துக்கு அனுபவிச்சே ஆகணும். யாரும் தப்பிக்க முடியாது. நா அனுபவத்துல பாத்துருக்கேன்.
எங்க ஊர்லதாங்க. மூணு பேரு. மண்டையன், பாம்பாட்டி. மொரட்டடி முத்துகிஷ்ணன். இவங்க எங்கூரு ரௌடிங்க. ரௌடின்னா எங்க ஊர்ல ஒண்ணும் பண்ண முடியாது.
நாங்க நானூறு குடும்பம். உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம். அதான். வெளியூர்காரங்க வந்து இவங்கள கூலிக்கு வெச்சிக்குவாங்க. இப்ப நீங்க இருக்கீங்க. என் மேல கோவம். ஏதோ… உங்களுக்கு போட்டியா தொழில் செய்யறேன்; உங்களுக்கு தொந்திரவா இருக்கேன். ஏதோ ஒண்ணு. நீங்க என்ன பழி தீக்கப் பாக்கறிங்க. நீங்க இவங்ககிட்டப்போய் பாருய்யா, இன்னாரை வெட்டணும்… கைய வெட்டணும், கால வெட்டணும்… இல்ல தீத்துக்கட்டணும்…. ஏதோ ஒண்ணு… ஆன்... ஆச்சா. அத சொல்லறீங்க. அவங்க சரின்னு இத்தனன்னு சொல்வாங்க. ஒவ்வொன்னுத்துக்கு ஒரு ரேட் வெச்சு இருப்பாங்க. சரின்னு சொல்லிட்டு நீங்க தோ பாரு, இன்னார்தான்ன்னு என்ன காட்டறீங்க. இதான் இவன் வீடு. இதான் வேலைக்கு போற இடம்ன்னு எல்லாம் தூரத்துலேந்து காட்டறிங்க. சரின்னுட்டு போயிடுவாங்க.
ஆன்….. நாலு நாள் கழிச்சு நீங்க சொன்னத அப்படியே நிறைவேத்திடுவாங்க. எப்பவும் மூணு பேரும் ஒண்ணாத்தான் போவாங்க. காலை வெட்டணுமோ கைய வெட்டணுமோ… ஒழுங்கா முடிச்சுட்டு வந்து உங்ககிட்ட சொல்லிட்டு மீதி பணத்த வாங்கிட்டு போயிடுவாங்க. பாதி பணம் முன்னால கொடுக்கணும். மீதி பாதி வேலை முடிஞ்சப்பறம்… யாரும் இல்லைன்னு சொல்ல மாட்டாங்க. ஏமாத்தப்பாத்தா உனக்கும் இதேதான்ன்னு சொல்லிட்டு போயிடுவாங்க. அதனால யாரும் ஏமாத்த மாட்டாங்க.
இப்பிடி ஊரையே ஏய்ச்சுகிட்டு திரிஞ்சவங்க மூணு பேருமே தூக்கு மாட்டிகிட்டு செத்தாங்க.
ஏன்னு கேக்கறிங்களா? அதான்.
மொதல்ல மண்டையன். அவனோட பையன்... இருவது வயசு. இவனுக்கு நாப்பது வயசு. தகப்பன போட்டு அடிச்சுட்டான். செம அடி. என்ன பிரச்சனையோ… புள்ள அப்பன அடிச்சுட்டான். மண்டையனுக்கு அவமானம் தாங்கல. தூக்கு போட்டுகிட்டான். ஆமாங்க.
ம்ம்ம்ம்… 
அடுத்தவன் பாம்பாட்டி. இவன் நெறைய பணம், சொத்து சேத்து வெச்சிருந்தான். அவனுக்கு ஒடம்பு முழுக்க வெண்குஷ்டம் வந்திடுச்சு. சின்னதா ஆரம்பிச்சது கிடு கிடுன்னு வளந்து பெரிசா ஒடம்பு முழுக்க… அவனை வீட்ல இருந்து தொரத்திட்டாங்க. சொத்து கித்து எல்லாம் இருந்தா என்ன? மொதல்ல திண்ணைக்கு தொரத்துனாங்க. அப்பறம் வீட்ட விட்டே. அவமானம் தாங்கல. தூக்கு போட்டுகிட்டான்.
ம்ம்ம்ம்ம் எவ்ளோ சொன்னே(ன்)?
….
ஆமா கரெக்டு. ரெண்டு. மூணவதா மொரட்டடி முத்துகிஷ்ண(ன்). இவன் அடிதடி மட்டுமில்லாம சாராயமும் காச்சுவான். இவனுக்கு ஒரு பொண்டாட்டி. ரொம்ப அளகா இருப்பா…. அந்த சாதியே இல்ல. ஆமா. அப்ப்டி ஒரு…. ரொம்ப அளகு….
இந்தப்பய சாராயம் காச்சரான்னு அப்பப்ப போலீஸ்காரங்க வந்து தொந்தரவு கொடுப்பாங்க. இது அந்த பொம்பளைக்கு பிடிக்கலே. “ஏண்டா, குடிகாரா! ஏண்டா இப்படி சாராயம் காச்சறே?' ன்னு புருசன திட்டிகிட்டே இருப்பா. ஒரு நா நா ஆத்தங்கரல ரெண்டு பசங்களுக்கு முடி வெட்டிகிட்டு இருக்கேன். பக்கத்துல பொம்பளைங்க பேன் பாத்துகிட்டு இருக்காங்க. அப்ப முத்துகிஷ்ணன் அங்க வந்து ”டீ! நா தூக்கில தொங்கப்போறேன் தூக்கில தொங்கப்போறேன்”நு சொல்லிகிட்டே வீட்டுக்குப்போறான். ஆன்…. ஆமா முத்துகிஷ்ணன் பொண்டாட்டியும் அங்கதான் இருந்தா. மத்த பொம்பளைங்க எல்லாம் என்னடி இப்படி சொல்லிகிட்டு போறான் உன் புருசங்கறாங்க. ”ஆமா! இவரு செஞ்சிடுவாரு” ந்னு அவ பாட்டுக்கு பேன் பாத்துகிட்டு இருக்கா. கொஞ்ச நேரம் ஆச்சு… முத்துகிஷ்ணன காணலை. வீட்டுக்குள போனவன் வெளியே வரலை. ”டீ! போய் பாருடி” ன்னு எல்லாரும் அவன் பொண்டாட்டிய கெளப்பிவுட்டாங்க. அவளும் சரின்னு அள்ளி முடிஞ்சிகிட்டு வூட்டுக்கு போனா. ”ஐயோ ஐயோ!” ன்னு கத்தறா. பொம்பளைங்க எல்லாம் ஓடிப்போய் பாத்தாங்க. இவன் தொங்கறான். அஞ்சு மொழ துண்டு…. சன்னமா. எல்லாம் வந்து ”பெருமாளு தூக்குல தொங்கறான், அறுத்துபோடு” ன்னாங்க. நானும் ஓட்னேன். மேல ஏறி துண்ட வெட்னேன். மூக்கு முடி எடுக்க சன்னமா ஒரு கத்தி இருக்கும். அதால. கீழ இருந்து பொம்பளைங்க புடிச்சுகிட்டாங்க. என்ன பண்ணி என்ன ப்ரயோசனம். போய்ட்டான்.

பாவையோ இங்க பழிக்கஞ்சி தொங்கறா
பின் வந்த பாட்டியும் தொங்கறா
காளையோ தன்னோட திமிரால தொங்கறான்
பின் வந்த கத்திரியும் தொங்கறான்
பாவி இந்த வழுமொழி எதுக்காக தொங்கறா?

….
அது கெட்ட வார்த்தைங்க. இது என்ன பாட்டா? ஹிஹிஹிஹி இது மாதிரி நிறைய இருக்கு. இது ஒரு கதல வருது.
..

அது என்னவா? சொல்றேன்.

2 comments:

geethasmbsvm6 said...

அந்தக் கடைசிப் பாட்டு இதுவரை கேட்டதே இல்லை. எதிலே வருது? விநோத ரசமஞ்சரி?

Vasudevan Tirumurti said...

அவர் பாட்டுக்கு நிறைய சொல்லுவார். இது வரை அதெல்லாம் கூகுள்ளக்கூட மாட்டினதில்லை!