Tuesday, May 17, 2016

கொடுங்கோல் மன்னன்

ஒரு நாட்டை ஒரு கொடுங்கோல் மன்னன் ஆண்டு வந்தான். குடிகள் அனைவரும் அவனது ஆட்சியில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தனர்.
இதற்கு எதிராக மறைமுகமாக ஒரு இளைஞர் குழு உருவாகிக்கொண்டு இருந்தது. அவர்கள் இந்த மன்னனை அகற்றும் வேலயில் யார் துணை வருவார்கள் என்று மக்களை கண்காணித்துக்கொண்டு இருந்தனர். பொதுவாக எல்லாருமே மன்னன் மீது ஒரு வெறுப்பில் இருந்தனர். ஆனால் எதிர்க்க சிலரே துணிந்தனர்.
ஒரு ஏழை கிழவி இருந்தாள். அவள் தினசரி அரண்மனைக்கு எதிரே சென்று நின்று மன்னன் நீடூடி வாழ்க என்று மும்முறை வாழ்த்தி வருவாள். இதை கண்ட இளைஞர் குழுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எல்லாரும் எதிர்க்கும்போது இவள் மட்டும் ஏன் இப்படி தினசரி வாழ்த்துகிறாள்? ஏழையாக இருக்கிறாள். மன்னனால் ஏதும் ஆதாயம் கிடைத்ததாகவும் தெரியவில்லையே?
பொறுக்க முடியாமல் ஒரு நாள் அவளை பின் தொடர்ந்து சென்றனர். அவள் குடிசைக்குள் புகுந்து விசாரித்தனர்.
 “எல்லாரும் எதிர்க்கும் போது நீ மட்டும் ஏன் வாழ்த்துகிறாய்?”
 “நீங்க எல்லாம் சின்ன பசங்க உங்களுக்கு புரியாது!”
சொல்லு பாப்போம், புரியறதா இல்லையான்னு அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்.”
நான் மூணு தலைமுறை ஆட்சியை பாத்துட்டேன். இந்த ராஜாவோட தாத்தா ஆண்டப்ப நா சின்ன பொண்ணு. அவன் கொடுங்கோலன். எல்லாரும் வெறுத்துப்போயிருந்தோம். இவன் சாக மாட்டானான்னு பேசிக்கொண்டு இருப்போம். அந்த நல்ல நாளும் வந்தது. ஒரு நாள் அவன் செத்துப்போனான்.
அவனோட பிள்ள அடுத்து பட்டத்துக்கு வந்தான். அவனோட ஆட்சியும் கொடுங்கோல் ஆட்சிதான். அவனோட அப்பனே தேவலைன்னு நினைக்கிற அளவுக்கு அவன் ஆட்சி இருந்தது. முன்ன மாதிரியே இவன் எப்படா சாவான்னு எல்லாரும் காத்திருந்தாங்க. அவனும் ஒரு வழியா செத்தான். அடுத்து இப்போ இருக்கற ராஜா பட்டத்துக்கு வந்தான். இவன் ஆட்சியோ இவனோட தாத்தாவயும் அப்பனையும் நல்ல ஆட்சி கொடுத்தவங்கன்னு நினைக்க வைக்குது.

நீங்க எல்லாரும் இவன் சாவக்கூடாதான்னு நினைக்கிறீங்க. இவன் செத்தா வரபோறவன் எப்படி இருப்பான்னு எனக்கு கதி கலங்குது! அதனாலத்தான் இவனே இருந்துட்டு போகட்டும்ன்னு தினசரி வாழ்த்தறேன்!”

No comments: