Saturday, December 29, 2007

பெண்பார்க்கும் படலம்

அவள் பெற்றோருக்கு ஆச்சரியம். இவள் எப்படி "பெண்பார்க்கும்" நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொண்டாள்?
கீதா சற்று வித்தியாசமானவள். மற்ற பெண்களைப்போல இல்லை. எதெடுத்தாலும் கொஞ்சம் மாறுபட்டு சிறப்பாக செய்வதே அவளுடைய தனித்துவம். அப்படிப்பட்டவள் பெண்பார்க்க வருகிறார்கள் என்றதும் சரி என்று தலையை ஆட்டி விட்டாள். இதுதான் அவள் பெற்றோருக்கு ஆச்சரியம்! "ஏதேனும் ஏடாகூடமாய் செய்ய மாட்டயேடி?” ஆயிரமாவது தடவை அம்மா கேட்டு விட்டாள். புன்னகைதான் பதில். அம்மாவுக்கு வயிற்றில் புளியை கரைத்தது போல்தான் இருந்தது. "பாடலீஸ்வரா, இவள் இடக்கு பண்ணாம எல்லாம் நல்லபடியா முடிய நீதான் பாத்துக்கணும்" என்று அம்மாவின் வாய் முணுமுணுத்தபடி இருந்தது.

ஆயிற்று, மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டார்கள். என்னையும் அங்கே இருக்கும்படி கீதாவின் அப்பா சொல்லி இருந்தார். ஒரு தைரியத்துக்குத்தான். எங்கே மகள் எப்போ என்ன பண்ணுவாளோ என்று அவருக்கும் உள்ளுக்குள் உதைப்புதான்.

"வாங்க வாங்க!" வாயார வரவேற்றார் கீதாவின் அப்பா.
எல்லாரும் வந்து அமர்ந்தவுடன் ஒருசில நிமிஷங்கள் சின்ன பேச்சில் போயிற்று.
மாப்பிள்ளை பையனைப்பார்த்தேன். நல்ல பையன் மாதிரிதான் இருக்கிறான். விசாரித்தவரை நல்லபடியாகதான் எல்லாரும் சொன்னார்கள் என்று கீதாவின் அப்பா சொல்லி இருந்தார்.
பையனும் கலகலவென்றே அனைவருடன் பேசினான்.

"பொண்ணை வரச்சொல்லும்மா!” பெண்ணை பெற்றவர்.
கீதா வந்து பொதுவாக எல்லாருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். பையனின் பெற்றொர்கள் சில கேள்விகள் கேட்டார்கள். அடக்கமாகவே பதில் சொன்னாள் கீதா. சற்று நேரத்திலேயே அவர்கள் திருப்தி அடைந்துவிட்டதாக தோன்றியது. "அப்படின்னா..” என்று பிள்ளை பக்கம் திரும்ப அவன் சற்றே தயங்கியதாக எனக்குப்பட்டது. அதற்குள் கீதா, “மன்னிக்கணும்..” என்று ஆரம்பிக்க அங்கே சூழ்நிலை திடீரென்று மாறியது. அனேகமாக எல்லோரும் கொஞ்சம் பதட்டமடைந்தார்கள். கீதாவின் அம்மா வாய் "பாடலீஸ்வரா" என்று முணுமுணுக்க ஆரம்பித்தது எனக்கு தெளிவாக கேட்டது.

"இவரோட சில நிமிஷங்கள் தனியாக பேசினால் தேவலை" என்றாள் கீதா. கீதாவின் பெற்றோர் முகத்தில் ஈயாடவில்லை. பையனின் பெற்றோர் முகங்களில் கொஞ்சம் குழப்பம். பையன் மட்டும் சற்று உற்சாகப்படுகிறானோ?
"இந்த பக்கத்து அறைக்கு கொஞ்சம் வர முடியுமா?”
"நீங்களும் போங்க" என்று கீதா அப்பா தாழ்வாக சொன்னபோதும் அவளுக்கு கேட்டுவிட்டது.
“நீங்க வந்தா பரவாயில்லை மாமா" என்று சொல்ல நான் குழப்பத்துடனேயே போனேன். என்ன பேசப்போகிறாள் இந்த பெண்?

தன் பாக்கெட்டிலிருந்து ஒரு டைரியை எடுத்து மேசையில் போட்ட படி உட்கார்ந்தான் பிள்ளை. மூன்று பேரும் உட்கார்ந்ததும் "மன்னிக்கனும்" என்று ஆரம்பித்தாள் கீதா. "இந்த காலத்தில் பெண்கள் முன் போல இல்லை. எங்களுக்கும் சில பல அபிப்பிராயங்கள் ஆசைகள் எல்லாம் வந்தாச்சு. முன் காலம் போல அதையெல்லாம் அடக்கிப்போடனும் என்பதும் எனக்கு சம்மதமில்லை. வயசாக ஆக அபிப்பிராயங்கள் இறுகிப்போச்சு.” என்றபடி அங்கிருந்த ஒரு வெள்ளைத்தாளை பிரித்தாள் கீதா.
"இதில் என்னுடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் எழுதியிருக்கேன். எதில் விட்டுக்கொடுக்கவே முடியாது, எதில் நீக்குபோக்கு இருக்கலாம், எது எனக்கு ஒரு பொருட்டே கிடையாது... எல்லாம் விலாவரியாக எழுதியிருக்கேன். உதாரணமா என் கணவர் புகை பிடிக்கக்கூடாது. இதை விட்டுக்கொடுக்க முடியாது. சினிமா பார்ப்பதுல நீக்கு போக்கு இருக்க முடியும். இதையெல்லாம் படிச்சுவிட்டு எல்லாம் சரின்னா நான் கல்யாணத்துக்கு தயார்" என்றாள்.

"என்னப்பா இது! புதுசு புதுசா... நாராயணா!” என்று நினைத்துக்கொண்டேன்.
பையன் இதை எப்படி எடுத்துக்கொள்கிறான்? முகத்தைப்பார்த்தேன்.
ஒரு சிறு புன்னகையோடு "நானும் அந்தமாதிரி ஒரு பட்டியல் வச்சு இருக்கேன்" என்று டைரியில் இருந்து ஒரு பேப்பரை எடுத்தான் அவன்.
கீதா முகம் பிரகாசமானது! இருவரும் தீவிரமாக பட்டியல்களை அலச ஆரம்பிக்க நான் அந்த அறையிலிருந்து வெளியேறினேன். ஆமாம். புத்திசாலி இளைஞர் மத்தியிலே என்னை போன்ற கிழங்கட்டைகளுக்கு என்ன வேலை?

4 comments:

கீதா சாம்பசிவம் said...

ரொம்பவே சாதாரணமான கதை! மற்ற இரண்டையும் படித்துப் பார்க்கும்போது இந்தக் கதையை எழுதியது நீங்களான்னு தோணுது! :)

திவா said...

//ரொம்பவே சாதாரணமான கதை! மற்ற இரண்டையும் படித்துப் பார்க்கும்போது இந்தக் கதையை எழுதியது நீங்களான்னு தோணுது! :) //
நான் நான் நானேதான் எழுதினேன். பின்ன மண்டபத்துல யாரும் எழுதி கொடுத்தாங்கன்னு நினைச்சீங்களா?
:-)

போன வாரம் தினமலர்ல ஒரு செய்தி. அமெரிக்க டாக்டர் இந்தியா வந்து ஒரு டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எண்ணி 12 ஆம் நாள் கோர்ட்ல டைவர்ஸ் வாங்கிக்கிறாங்க. 8 லட்சம் செட்டில் பண்ணிட்டு போயிட்டார். ஏன் இப்படி? நாம் எங்க போறோம்?
நான் வேற இடத்துல சொன்னபடி இப்படி இருந்திருந்தான்னு தோணி ஒரு கதை வந்தது.
ம்ம்ம்ம். சில கதைகள் சில நேரங்களில்...
அன்புடன்
திவா

Thamizhmaagani said...

நல்லா இருக்கு கதை! வாழ்த்துகள்! கதையின் சீரோட்டம் அருமை! தொடர்ந்து அசத்துங்க!!

திவா said...

நன்றி தமிழ்மாகணி! தொடர்ந்து படிங்க.