Wednesday, December 19, 2007

தெளிவு

{குறிப்பு: போட்டிக்கான கதை இது அல்ல. மற்றது -விபத்து}
காலை பூஜையை முடித்து ஈஸி நாற்காலியில் அமர்ந்தேன். பக்கத்து வீட்டுக்காரரும் அவர் மனைவியும் மெதுவாக எட்டிப்பார்த்தார்கள். “ப்ரீயா இருக்கீங்களா?”
"வாங்க வாங்க, பூஜையெல்லாம் முடிச்சாச்சு. சொல்லுங்க" என்றேன்.
"ஒண்ணுமில்ல, ஒரு சின்ன பிரச்சினை. உங்களால உதவி பண்ண முடியும்.”
"ஆஹா! என்னால முடிஞ்சா நிச்சயம் செய்யறேன்."
“பிரச்சினை ஜானகியாலதான்.”
“என்னது??!”
ஆச்சரியப்பட்டு போனேன். ஜானகி நல்ல பெண் ஆயிற்றே! பள்ளியில் முதலில் இல்லாவிட்டாலும் முதல் ஐந்தில் இருப்பாள். இப்போது பட்டம் பெற்ற பின் ஒரு வருஷமாக வேலைக்கு போகிறாள். ஆபீஸில் ஒரு தப்பு தண்டா கிடையாது. அவள் என்ன பிரச்சினை செய்யப்போகிறாள்?
“ஆமாம். அவளுக்கு நல்ல வரன் ஒண்ணு பாத்திருக்கோம்.”
“துபாய்ல வேலை."
“கை நிறைய சம்பளம்."
“அவங்க வீட்டுக்கு போய் இருந்தோம். ரொம்பவே பணக்காரங்கன்னு தெரியுது."
“இந்த மாதிரி இடம் அமைய கொடுத்து வச்சு இருக்கணும்.”
“ஒரே பொண்ணு. வேற கூட பொறந்தவா இல்லை. இவளுக்கு பண்ணாம யாருக்கு பண்ண போறோம்?”
“ஜாதகம் பாத்துட்டாளாம். பொருந்தி இருக்காம். பையன் ஜாதகத்துக்கு நிறைய ஜாதகம் பொருந்தலையாம். இவளதுதான் பொருந்தி இருக்காம்.”
இருவரும் மாற்றி மாற்றி பேசினார்கள்.
"சரி. பிரச்சினை என்ன?”
“இவ மாட்டேங்கிறா. அதுதான் பிரச்சினையே.”
“ஆபீஸ்ல யாரானும்...”
"கேட்டுட்டேனே. அப்படி ஒண்ணும் இல்ல.”
“சரி, சாயந்தரம் ஆபீஸ்ல இருந்து வந்தபின்ன இங்க வரச்சொல்லுங்க. நான் பேசறேன்.”

திருப்தியுடன் சென்றார்கள்.

“வாம்மா ஜானகி! நல்லா இருக்கியா?”
“நல்லாதான் இருக்கேன் மாமா. உங்க முட்டி வலி பரவாயில்லையா?”
“அது கிடக்கு. எப்பவும்தான் வலிக்குது. பழகிப்போச்சு.”
“ஏன் மாமா, என் அப்பா அம்மா இங்க வந்து என் கல்யாண விஷயமா பேசினாங்களோ?”
“நீ புத்திசாலிமா! கண்டு பிடிச்சிட்டையே!”
“இதுக்கு ரொம்ப புத்திசாலிதனம் வேணுமாக்கும்? நேத்து வாக்குவாதம். இன்னிக்கு நீங்க கூப்பிட்டு அனுப்பறீங்க.”
“ஏன்மா இந்த சம்பந்தம் வேணாங்கிற?”
“சரி படாது மாமா"
"ஏன்?”
“என் அப்பா அம்மாவுக்கு கல்யாணம்கிறது ரெண்டு குடும்பத்துக்குள்ள உண்டாற ஒரு உறவுன்னு புரியல. வெறும் நல்ல வேலை, கை நிறைய சம்பளம்னு பாக்கிறா. பையன் குணம் என்ன எப்படிப்பட்டவன்? நாளை ஒரே பொண்ண கொடுத்த நமக்கு அனுசரணையா இருப்பானா? இத பாக்க வேண்டாமா? நான் அந்த பையன் வேலை பாக்கிற அலுவலகத்துல என் நண்பர்கள் மூலமா விசாரிச்சுட்டேன். பணம் பணம்னு ஒரே குறியா இருக்கறதா கேள்வி. அவங்க வீடுலயும் அப்படிதானாம். பணக்கார குடும்பம்னா அதுக்கு தகுந்தபடி செய்யனும்னு சக்திக்கு மீறி கல்யாணம் செய்வாங்க. பின்னால அவஸ்த படறது யாரு? ரிடையரான என் அப்பாவோட கைகாசெல்லாம் இதுக்கே போன பிறகு வாழ்கைக்கு அவர் பென்ஷன் போதுமா?”
அவளை வியப்புடன் பார்த்தேன்.
“ ஒரு சாதாரண உள்ளூர்ல வேலை பாக்கிற மிடில் க்ளாஸ் மாப்பிள்ளை பாக்கச் சொல்லுங்க. கல்யாணத்துக்கு அப்புறம் என் அப்பா அம்மாவையும் தேவையானா ஆதரிக்கிறா மாதிரி. அவரப்பத்தி விசாரிக்கச் சொல்லுங்க. நல்ல பையனா இருந்தா சரிதான். பணம் வேண்டாம். குணம் போதும். வரட்டுமா?"
இந்த காலத்து பெண்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்!

11 comments:

SurveySan said...

டச்சிங்! :)

திவா said...

நன்றி சர்வேஸன்!
ஆமா, போட்டிக்கான சிறுகதைன்னு இதை சுட்டவில்லையே நீங்க? நான் சமர்பித்தது விபத்து என்ற கதை. நீங்க அதுக்கு பின்னூட்டம் போட்டு இருக்கீங்க பாருங்க!

திவா

கீதா சாம்பசிவம் said...

என் அப்பா அம்மாவுக்கு கல்யாணம்கிறது ரெண்டு குடும்பத்துக்குள்ள உண்டாற ஒரு உறவுன்னு புரியல. வெறும் நல்ல வேலை, கை நிறைய சம்பளம்னு பாக்கிறா. பையன் குணம் என்ன எப்படிப்பட்டவன்? நாளை ஒரே பொண்ண கொடுத்த நமக்கு அனுசரணையா இருப்பானா? இத பாக்க வேண்டாமா? நான் அந்த பையன் வேலை பாக்கிற என் நண்பர்கள் மூலமா விசாரிச்சுட்டேன்.


சரியான வார்த்தைகள், ஆனாலும் இன்றையப் பெண்கள் சிலர் திருமணம் என்பது இரு குடும்பங்களின் உறவு என்பதைப் புரிந்து கொள்வதில்லை, அவங்க உறவெல்லாம் பிறந்த வீட்டோடு சரி! :(

கீதா சாம்பசிவம் said...

அவங்க உறவுகள் எல்லாம் restricted to their family only! :(

திவா said...

கீதா அக்கா, புகுந்த வீட்டுல புதிய உறவுகள் ஏற்படறதில்லைன்னு சொல்றீங்க இல்லையா. இந்த மாதிரியான வருத்தங்கள்தான் என்னை இப்ப கதை எழுத வைக்குது!
தவறுகள சுட்டி காட்டாம ஆதர்ச நிலை ஒண்ணை காட்டினால் தேவலைன்னு தோணிச்சு.

அன்புமணி said...

இந்தக்கால பெண்கள் எல்லாவிசயத்திலயேயும் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது திவாவி்ன் கதை.

திவா said...

வாங்க அன்புமணீ.
பாராட்டுக்கு நன்னி!

ராமலக்ஷ்மி said...

நான் கிழிகிழி எனக் கிழிக்கப் போறதில்லை திவா. கிளியை வளர்த்துப் பூனை கையில கொடுத்திடாதீங்கன்னு கிளியே அழகா சொல்ற கதை. அருமை. பாராட்டுக்கள்!

சுட்டி கொடுத்த கோமாவுக்கு நன்றிகள்.

திவா said...

அட ராம அக்கா! வாங்க வாங்க! பின்னூட்டத்திலே கூட கவிதை எழுதறிங்க! வருகைக்கும் கமென்டுக்கும் நன்னி!

கோமா அக்கா என்ன பண்ணி இருக்காங்க? போய் பாக்கணும். இந்த ஆர்காட் தொந்திரவிலே வேலையே நடக்கலை!

கவிநயா said...

தெளிவா இருக்கு கதை!

திவா said...

நன்னி கவிநயா!