Wednesday, January 2, 2008

ரெண்டுல ஒண்ணு:

இளவரசன்:
நான் இந்த ஊருக்கு புதிசு. இந்த அலுவலகத்தில் உட்கார்ந்து இருந்தாலும் இது என்னுடையதல்ல. இது என் நண்பன் ஒருவனின் மாமாவுக்கு சொந்தமானது. அவருக்கு ஒரு துக்க செய்தியை தெரிவிக்க வந்தேன். இங்கேயே மூன்று நாட்கள் உட்கார்ந்து கொள் என்று சொல்லி அமர்த்திவிட்டு போய்விட்டார். பின்னால் போன் செய்து திட்டமிட்டபடி உடனே திரும்பி வர முடியாது எனவும், சில சிக்கல்களை தீர்த்துவிட்டு வர வேண்டியிருப்பதால் ஒரு வாரம் ஆகும் என்றும் சொன்னார். எனக்குத்தான் வேறு வேலை ஒன்றும் பெரிசாக இல்லாததால் இங்கேயே இருக்கலாம் என்று தீர்மானித்தேன்.

இது ஒரு செக்யூரிட்டி + துப்பறியும் நிறுவனம். இப்போதைக்கு செக்யூரிட்டி வேலை ஏதும் நிர்வாகம் செய்ய இல்லை. அதனால் வேலையும் ஒன்னும் இல்லை. மேசை மேல் கால் போட்டு நாவல் ஒன்றை படித்து கொண்டிருந்தேன். எந்த வேலையாலும் குறித்து வைத்துக்கொள். நான் வந்து கவனிப்பேன் என்று சொல்லு என்று அறிவுறுத்தி இருந்தார்.
படித்து முடித்த நாவலையே நான்காவது தடவையாக படித்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருந்த போதுதான் அந்த மனிதர் வந்தார்.

ஈ ஓட்டிக்கொண்டு இருந்தபோது இந்த வேலை வந்தது. முதல்ல விஷயம் கேட்டுக்கொண்டு பெரியவர் வந்த பிறகு கவனிப்பார் என்று சொல்ல இருந்தேன். ஒரு பொண்ணை தொடர்ந்துபோய் அவள் நடத்தையை கவனிக்க வேடுமாம். எதிரே ஆபீஸ். பிசினஸ் செய்கிறார். ஆபீஸுக்காக இருக்கும். சரி நாமும் போர் அடிச்சிகிட்டுதானே இருக்கிறோம். இது சுலபமான வேலை போல இருக்கே! செய்துவிடலாமே என்று இறங்கி விட்டேன்.

நாலு நாள் பாலோ செய்ததுமே தெரிந்து போயிற்று.. தனியார் கடையில் வேலை. கடை திறந்து சுத்தம் பண்ணி, சரக்கு வித்து எல்லாம் செய்து மாசம் ஆயிரம் கூட தேறாது. நடுவில் மாமன் ஒருத்தன் வந்து முதலாளிகிட்டே பேசி பணத்தை வேற வாங்கி போனான். அட்வான்ஸ் வாங்கிக்கொண்டே இருப்பான். அவள் கையில் ஒன்றும் தேறாது! மாடு மாதிரிதான் உழைக்கிறாள். சரி, நேர்மையா வேலை வேலை செய்கிறாளா என்று பார்க்க நாலு தரம் சும்மா வேண்டாத பொருளெல்லாம் வாங்கினேன். கை சுத்தம்தான். சரி, இன்று ராத்திரி ரிப்போர்ட் பண்ண வேண்டியதுதான். மாலை வீட்டுக்குப் போகும்போது கொஞ்சம் பின்னால் போய் பார்ப்போம்.

மாலை அந்த பெண்ணை தொடர்ந்து போனேன். பஸ் ஸ்டாண்ட் வந்தபோது அவள் திடீரென்று திரும்பினாள். “என்ன மிஸ்டர்! நானும் நாலு நாளா பாக்கிறேன். என் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கியே? என்ன விஷயம்?” இப்போதைக்கு முகத்தில் ஒரு சிரிப்புதான் இருந்தது.

மாலை அந்த பெண்ணை தொடர்ந்து போனேன். பஸ் ஸ்டாண்ட் வந்தபோது அவள் திடீரென்று திரும்பினாள். “என்ன மிஸ்டர்! நானும் நாலு நாளா பாக்கிறேன். என் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கியே? என்ன விஷயம்?” இப்போதைக்கு முகத்தில் ஒரு சிரிப்புதான் இருந்தது.

பேச்சை கேட்டு எங்கிருந்தோ ஒரு தடியன் வந்தான். "யாருய்யா நீ?"
சுற்றி ஜனம் கூடிவிட்டது. எனக்கு இந்த விஷயங்கள் புதிது. பயந்து விட்டேன். எவனோ ஒருவன் என் காலரை பிடித்தவுடன் இருந்த தைரியமும் ஓடி விட்டது.

"விட்டுடுங்க, விட்டுடுங்க. எல்லாம் சொல்லிடறேன். நான் செக்யூரிட்டி ஏஜென்ஸில வேலை பாக்கிறேன். இந்த பொண்ணு நடத்தையை கண்காணிக்க அமர்த்தினாங்க.” எல்லாம் சொல்லிவிட்டேன்.
கூட்டம் சிரித்துவிட்டது. துப்பறியர மூஞ்சியை பார்ரா!

அந்த பெண்ணின் சந்தேகம் போயிற்றோ? அவள் முகத்தை பார்த்தேன். முகத்தில் கண்ணீர்!
என் முகத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது.

"அவ்வளவுதானா? அவ்வளவுதானா? எங்க கடைக்கி வந்து வேண்டாத பொருளெல்லாம் வாங்கினையே! எனக்கும் இந்த நரகத்திலிருந்து விடுதலை கொடுக்க ஒத்தன் வந்துட்டானோன்னு நினச்சேனே! நானும் காதலிக்க ஒத்தன் கிடச்சானோன்னு நினச்சேனே! நான் முட்டாள்!”

அவள் கண்ணீருடன் திரும்பிச் சென்றாள்.

4 comments:

திவாண்ணா said...

இதை படிச்ச பின் ஒண்ணுல ரெண்டு படிங்க. தலைப்பு ஏன்னு புரியலாம்!

நடராஜன் கல்பட்டு said...

அன்பு திவா,

நீங்கள் கதை எழுதும் விதமே அலாதி. மிக மிக நன்றாக உள்ளது.

நடராஜன்

திவாண்ணா said...

அன்பு நடராஜன்,
உங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் பார்த்தேன். நன்றி.
இந்த் வலைப்பதிவில் பின்னூட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுஅதிகம் இருக்கின்றன. அதனால் அதை நான் பார்த்து அங்கீகரித்த பின்பே அது வெளியாகும். அந்த செய்தி ஒன்று காட்டப்பட்டு இருக்குமே?

சில நாட்களாக நேரம் இன்மையால் எதுவும் எழுதவில்லை. மேலும் அதிகமாக யாரும் பார்த்து பின்னூட்டம் இடவில்லை. அதனால் கொஞ்சம் உற்சாகக் குறைவு. உங்கள் மடல் என்னை ஊக்குவிக்கிறது. மீண்டும் நன்றி.

திவா

Geetha Sambasivam said...

//மேலும் அதிகமாக யாரும் பார்த்து பின்னூட்டம் இடவில்லை. அதனால் கொஞ்சம் உற்சாகக் குறைவு. //
அட, உங்களுக்குமா? :((((((( நான் கொஞ்ச நாளா யாரோட வலைப்பக்கத்துக்கும் போக முடியலை. ரொம்ப அழைக்கிறவங்க வலைக்கு மட்டும் தான் தவிர்க்க முடியாமல் போனேன். இன்னும் மிச்சம் நிறைய இருக்கு, பார்க்க வேண்டிய வலைப்பூக்கள். அரசியல்லே இதெல்லாம் ஜகஜமுங்க! இதுக்கெல்லாமா கவலைப்படுறது?