Monday, December 17, 2007

விபத்து

விபத்து நடக்கப்போகிறது என்று நான் பேருந்தில் ஏறியவுடன் தெரிந்துவிட்டது. தினமும் இதில்தான் அலுவலகம் போகிறேன். சும்மா நாலு நிறுத்தம்தான். எல்ஐசி அருகேதான் இறங்குவேன். அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். நான் வழக்கமாக இறங்கும் இடத்துக்கு அருகில்தான் விபத்து நடக்கப்போகிறது. நடக்கும் விபத்தில் நான் மாட்டக்கூடாது. மற்றவர்... யார் எப்படி போனால் எனக்கென்ன. சொன்னால் நம்பவா போறாங்க?

இந்த அமானுஷ்ய சக்தி எனக்கு இருப்பது சமீபமாகதான் தெரியும். பக்கத்து வீட்டு குழந்தை என் வீட்டில்தான் எப்பவும் விளையாடும். ஒரு நாள் "இன்னிக்கு எங்க மாமா சிங்கப்பூர்லேந்து வரபோறாங்களே! எனக்கு நிறைய சாக்லேட் எல்லாம் வாங்கி வருவாங்க" என்று பெருமையடித்துக் கொண்டது. அப்போதுதான் என் மனசில் பளிச் என்று தெரிந்தது. "இல்லை வரமாட்டார்.” என்றேன். வவ்வவ்வே என்றவாறு ஓடிவிட்டாள். அன்று சாயம்காலம் அவள் வரும்போது முகம் வாடி இருந்தது. “திடீர்னு லீவு கிடைக்கலையாம். வரலை" என்றாள். "அதுதான் நான் சரியாச் சொன்னேனே" என்று சிரித்தேன்.

இரண்டாம் முறை என் பெண்டாட்டி வைஷ்ணவி கோவில் போகலாம் என்று சொன்னபோது நடந்தது. வேண்டாம், அது பூட்டி இருக்கும் என்ரு சொன்னேன். கேட்கவில்லை. அவ்வளவு தூரம் அம்பத்தூர் தாண்டி திருமுல்லை வாயில் போய் கடைசியில் அந்த கோவில் அருகே ஒரு சாவு, எடுத்த பிறகுதான் கோவில் திறப்பார்கள் என்று சொல்லிவிட்டார்கள். முடிந்து வீட்டுக்கு திரும்ப வெகு நேரம் ஆகுமே என்று உடனே திரும்பிவிட்டோம்.

பாத்தீங்களா, இந்த நினைவு ஓட்டத்திலேயே ரெண்டு நிறுத்தம் போச்சு! நான் முண்டி அடித்துக்கொண்டு முன்னால் இறங்கும் படி பக்கம் போனேன். முன்னால் ஒரு சின்ன கூட்டம். சில ஆட்கள், ஒரு குடுகுடு கிழவி - அவள் பின்னால் ஒரு குண்டன் தள்ளாடிக்கொண்டு இருந்தான். காலங்காலைல குடியா? ஒரே மப்பு போல இருக்கு.

ஒரு நிமிடம் டிரைவர்கிட்ட விபத்து நடக்கபோறதுன்னு சொல்லலாமான்னு நினைத்தேன். சொன்னா நம்பவா போறாங்க? சரி, சரி, யார் எப்படி போனா நமக்கு என்ன? நாம சீக்கிரம் இறங்கிடனும்.

டிரைவர் திடீர் என்று ப்ரேக் போட்டார். வண்டி குலுங்கியது. யாரோ என் மேலே விழுந்தார்கள். ஓ விபத்தோ? இல்லை, “சாவு கிராக்கி" என்று டிரைவர் திட்ட வண்டி மீண்டும் வேகம் எடுத்தது. என் மேல் விழுந்தவன் சாரி சொல்ல எனக்கு சந்தேகம். சந்தடி சாக்கில் பர்ஸ் போச்சோ? சட்டை பையை தொட்டுப்பார்த்தால் அதில் பர்ஸை காணோம்! கால் சாராயின் வலது பை, இடது பை.... பரபரப்புடன் கைப்பையை துழாவினேன். இருந்தது. அப்படா, இன்றைக்கு பணம் அதிகமாக இருக்கே, கொஞ்சம் பாதுகாப்பா இருக்கட்டும்னு கைப்பையில் வைத்தேன். மறந்து போனது.

திருப்தியுடன் நிமிர்ந்தபோது வாசல் பக்கம் கிழவியை காணோம். வண்டி குலுங்கினதில் கீழே விழுந்து விட்டாளோ? இதுதான் விபத்தோ? ஓ, மற்றவர்களையும் காணோமே! நான் பர்ஸை தீவிரமாக தேடியபோது பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்று கிளம்பிவிட்டு இருக்கிறது. அய்யய்யோ! அடுத்து என் ஸ்டாப். அதற்குள்ளே இறங்கனுமே! இறங்குவதற்கு முன்னால் முண்டி அடித்து போனேன். குண்டன் லேசில் நகர்வதாயில்லை. "நிறுத்துங்க, இறங்கனும்!” என்று கத்தினேன். டிரைவர் அலட்சியமாக பார்த்தபடியே "சார் நீங்க அடுத்த ஸ்டாப்லதானே இறங்குவீங்க!” என்றபடி வேகத்தை அதிகப்படுத்தினார்.
"இல்ல, இல்ல, இந்த வண்டில விபத்து நடக்கப்போறது. நிறுத்துங்க!”
பின்னால் நின்றவர்கள் சிரித்தார்கள். எனக்கென்ன! யார் எப்படி போனா என்ன? நான் எப்படியாவது இறங்கனும். ரத்தம் தலைக்கு ஏறியது. பயம் விச்வரூபம் எடுக்க, யாரோ சட்டை காலரை பிடித்து இழுத்தும் வெளியே குதித்
..............
துவிட்டான். பக்கத்திலேயே மின்னல் வேகத்தில் வந்த லாரி மோதி அங்கேயே இறந்து போனான். அக்கம் பக்கம் ஒரு நிமிடம் உறைந்து நின்ற நபர்கள் "சரி, சரி. யார் எப்படி போனா நமக்கு என்ன? வேலைக்கு போக நேரமாச்சு" என்றபடி கலைந்து சென்றனர்.

16 comments:

SurveySan said...

kadhaikku nanri.

aattayil seththukkaren :)

VSK said...

ஆழ்நிலை அழுத்து நிபுணர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்!:))
இறக்கும் போது என்ன எண்ணமோ அதிலேயே உறைந்து போவார்கள் எனப் படித்திருக்கிறேன்.
மயக்கத்தில் ஆழ்ந்து எழுந்த பின்னர், முதலில் இருந்த நிலையை நினைவில் கொள்வார்கள் எனக் கண்டதுண்டு!

முதலில் இருந்தே ஒரு ஆவி உணர்வு மனதில் ஒDஇக்கொண்டிருந்ததைத் தவிர்க்க முடியவில்லை!

நன்றாக இருந்தது.

வாழ்த்துகள்!

திவாண்ணா said...

ஸர்வேஸன், ஆட்டையில் சேத்துகிட்டதுக்கு நன்றி!

திவாண்ணா said...

//ஆழ்நிலை அழுத்து நிபுணர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்!:))//

ஆழ்நிலை அழுத்து? புதுசா இருக்கு!

//முதலில் இருந்தே ஒரு ஆவி உணர்வு மனதில் ஒDஇக்கொண்டிருந்ததைத் தவிர்க்க முடியவில்லை!//
:-)

//நன்றாக இருந்தது. வாழ்த்துகள்!//
வான்கோழியை பாராட்டிய மயிலுக்கு நன்றி!

Geetha Sambasivam said...

நல்லா இருந்தது, ஆனாலும் அசோகமித்திரன், வல்லிக்கண்ணன் போன்றவர்களின் சிறுகதைகள் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை! முயற்சி தொடரட்டும், வாழ்த்துக்கள்.

திவாண்ணா said...

கீதா அக்கா, நன்றி.
பெரியவங்க பேரல்லாம் சொல்றீங்க! இவங்க பேரெல்லாம் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா இவர்களுடைய இந்த கதையை படிச்சிருக்கேன்னு எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

அனேகமாக நாம் படித்தவை எல்லாவற்றின் தாக்கமும் நமக்குள் இருக்கும் போலிருக்கிறது.
எதுவுமே புதுசு இல்ல. ஒரு விஷயம் பத்தி யோசிக்கும்போது இது இப்படி இருந்திருந்தா..அப்படி ஒரு எண்ணம் வந்தா இன்னொரு கதை வந்துடும் இல்லையா?

ஜீவி said...

கதையின் முக்கிய கட்டமான அந்தக் கடைசி பாராவைக் கொஞ்சம் தெளிவா எழுதியிருக்கலாமே?
அன்புடன்,
ஜீவி

திவாண்ணா said...

ஜீவி நல்வரவு1
விபத்து நடக்கும் என்று அறிந்தவர் தனகுத்தான் அது என அறியாமல் போனதும் அவர் அடிக்கடி நினைத்த "யார் எப்படி போனால் என்ன" என்பதை மற்றவர்கள் அவருக்கே திருப்புவதுமே ஓஹென்ரி பாணி "ஐரனி". திடுக் திருப்பம் ஆனதால் இனும் விளக்கினால் நச் குறைந்து போகும் என்று நினைத்தேன்.
எனினும் நச் என்பதே "short and precise"அல்லவா?
பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி!

ஜே கே | J K said...

//குதித்
..............
துவிட்டான்.

இறந்து போனான்.//

கதை முழுதும் நீங்க சொல்றது மாதிரியே வந்துட்டு, இது வேற ஒருத்தர் சொல்வது போல் அமைகிறதே?.

திவாண்ணா said...

@ஜேகே: //கதை முழுதும் நீங்க சொல்றது மாதிரியே வந்துட்டு, இது வேற ஒருத்தர் சொல்வது போல் அமைகிறதே?.//

வாங்க ஜேகே!
ஆமாம்.செத்துப்போனபிறகு கதை சொல்ல முடியாதில்லையா? அதுவரை வந்தது எல்லாம் நிகழ்காலமாக இருக்கும் பாருங்க!

goma said...

vithi valiyathu.....

திவாண்ணா said...

வாங்க கோமா!
கமென்டுக்கு நன்றி!

மோனோலிசா said...

கதை வாசிக்க வாசிக்க ஒரு சந்தேகம்....கதையைச் சொன்னது ,மனிதனா?ஆவியா

திவாண்ணா said...

மோனோலிசா நல்வரவு. நீங்க டூயலிஸாவா இருப்பீங்க போல இருக்கே! கதையை சொன்னது நான்தான்! நான் ஆவியில்லை.

ஆ! கதையிலே வர கதை சொல்கிறது யாருன்னு தோணுதோ அப்படியே வெச்சுக்கலாம். சாகிற வரை மனுஷனே சொன்னதா நினைச்சுகிட்டுதான் எழுதினேன்.

Kavinaya said...

திகில் கதை போல இருந்தது :)

//கதையை சொன்னது நான்தான்! நான் ஆவியில்லை.//

:)))

திவாண்ணா said...

கவி
:-))