Wednesday, March 11, 2009

தேடல்-18

¨இவள் யார்? உங்கள் வழி காட்டிதான்! வேறு யாரும் இல்லை.¨ என்ற குரல் கேட்டது.
மஞ்சு கம்பீரமாக எழுந்து நின்று முதன் முறையாக குழுவினரை நேருக்கு நேர் பார்த்தாள்.

சக்தி வாய்ந்த கண்கள் ! ஏன் இவ்வளவு நாட்கள் யாரையும் நேரே பார்க்கவில்லை என்பது புரிந்தது. பார்த்திருந்தால் அவற்றின் சக்தி இது சாதாரண பெண் இல்லை என்று அடையாளம் காட்டி இருக்கும்!

இப்போது குரல் அவளது வாயிலிருந்தே வருகிறது என்பது புரிந்தது.

¨ஐந்து நாட்களாக உங்களுடனேயே இருக்கிறேனே! மௌனியை தவிர யாரும் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தால் அவரை அங்கேயே நிறுத்தி தேவையானதை செய்துவிட்டு வந்தேன். அவருக்கு உபதேசம் ஆகிவிட்டது. சமாதிக்கு போய்விட்டார்! சில காலம் சென்ற பின் இந்த மலையில் உலவும் பல சித்தர்களில் அவரும் ஒருவராகிவிடுவார். நித்திக்கு கொஞ்சம் புரிந்தது. கொஞ்சம் சிரமப்பட்டே அவன் கவனத்தை திருப்ப வேண்டி இருந்தது.¨

யாருக்கும் ஒரு பேச்சும் எழவில்லை. இவ்வளவு சக்தி வாய்ந்த சித்தர் நம்மிடையே ஒருவராக பழகி உலாவிக்கொண்டு இருந்தாரா? பிரமிப்பே ஏற்பட்டது. அனவரும் தரையில் வீழ்ந்து வணங்கினர்.

¨திருப்பி இங்கே...¨
¨திருப்பி இங்கே நீங்கள் வர முடியாது. இந்த இடம் கொஞ்சம் வித்தியாசமானது. உலகின் சாதாரண விதிகள் இங்கு செல்லுபடியாகாது. நீங்கள் திரும்பி இங்கே வருவது தேவையானால் அதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த இடம் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே வித்தியாசமாக ஆகிவிடும். திருப்பி இங்கே வந்தால் கூட உங்களால் கண்டு பிடிக்க முடியாது. அதைப்பற்றி கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையானது சரியான சமயத்தில் யார் மூலமாகவோ வந்து சேரும். இந்த மலையின் அடிவாரத்துக்கு போவதற்குள்ளேயே இங்கே நடந்த பல விஷயங்கள் உங்களுக்கு மறந்துவிடும். தேவையானது மட்டுமே நினைவில் இருக்கும்.¨

¨ஏன் அப்படி?¨
மஞ்சு சிரித்தார். அப்புறம் ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் கூட இங்கே வரத்தோன்றும். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கத்தோன்றும். கவலைப்படாதீர்கள் தேவையான நேரத்தில் ஏதோ ஒரு நபர், விஷயத்தின் மூலம் உங்களுக்கு எப்போதும் வழி காட்டப்பட்டுவிடும்.¨

¨ நித்தியானந்தம், இங்கேயே கொஞ்சம் நேரம் இரு. சிலர் வந்து உன்னை அழைத்து போவார்கள். எல்லாம் நல்ல படியாக நடக்கும்! போய் வாருங்கள். நிறைவான வாழ்க்கை வாழுங்கள்! நேரம் ஆகிவிட்டது. குமரனும் வனிதாவும் வந்து விடுவார்கள். சீக்கிரம் போங்கள்!¨

¨அவர்களுக்கு... ¨என்று இழுத்த சங்கரை இடைமறித்தார் மஞ்சு. ¨அவர்களுக்கு அவர்கள் தேடி வந்தது கிடைத்துவிட்டது. யார் யார் எதை தேடுகிறார்களோ அதுதானே கிடைக்கும்? அவர்களால் ஒன்றும் பிரச்சினை வராது. இதோ இந்த நாயை தொடர்ந்து போங்கள். சீக்கிரமே கீழே போய்விடலாம்.¨

நாய்?

இப்போது அவர்கள் கண் எதிரே புலி முன்னம் அவர்களுடன் வந்து கொண்டு இருந்த நாயாக மாறியது.

திகைப்புக்கு மேல் திகைப்பு!

2 comments:

குமரன் (Kumaran) said...

ஹை. இந்தப் பகுதி நல்லா இருக்கு. :-)

ஆனா குமரனுக்கு மட்டும் புலிக்குகையைப் பார்க்கும் நேரம் வராமல் போனதே. :-(

Kavinaya said...

(நான் ஹை சொல்லலாம்னு வந்தா... இந்த குமரன் சுத்த மோசம். முந்திக்கிட்டாரே! ஆனாலும் நானும்தான் சொல்லுவேன் :)

ஹை! இந்த பகுதி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு :)

//சமாதிக்கு போய்விட்டார்!//

:))))