Wednesday, March 4, 2009

தேடல்-13

திடுதிப்பென்று வனிதா நின்றாள். பின்னாலேயே வந்த அடிகளார் மோதாமல் இருக்க மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.
¨மன்னிக்க வேண்டும்¨ என்று அவசரமாக குமரன் கூற அடிகள் சாந்தமாக ¨பரவாயில்லை!¨ என்றது அனைவரையும் வியப்பில் ஆழ்தியது.
¨என்ன வனிதா இப்படி?¨ என்ற குமரன் வனிதாவின் முகத்தை பார்த்து நிறுத்திக்கொண்டான். வனிதா பரபரப்புடன் பையை கீழே போட்டு உள்ளிருந்து தொலை நோக்கியை எடுத்தாள். கண்களில் அதை பொருத்திக்கொண்டு வலது பக்கம் இருந்த பள்ளத்தாக்கை ஆராய்ந்தாள். ¨குமரன், அதோ பாருங்க!¨ என்றபடி தொலை நோக்கியை அவரிடம் கொடுத்தாள்.
ஆராய்ந்த குமரனும் பரபரப்பானார்.
¨நான் நினைப்பதும் நீ நினைப்பதும் ஒன்றுதானா?¨
¨ஆமாம். அழிந்துவிட்டது என்று பலரும் சொல்லி வரும் செடி போலதான் இருக்கிறது. கிட்டே போய் பார்த்தால்தான் தெரியும்.¨
¨நேரம் ஆகிவிட்டது. இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். சமீபத்தில் சில அரிய தாவரங்கள் இருக்கின்றன. நாங்கள் கொஞ்ச நேரத்தில் அங்கே போய் பார்த்துவிட்டு வருகிறோம். ¨

யாரும் பதில் சொல்லக்கூட நேரம் தராமல் இருவரும் பள்ளத்தில் இறங்கிவிட்டனர்.

மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இதென்ன ....
தாழ்ந்த குரலில் மஞ்சு சொன்னாள்... ¨ கிளம்புங்க போகலாம்.¨
¨எங்கே?¨ என்று குழப்பத்தில் கேட்டான் சங்கர்.
¨நாம தேடி வந்த புலிக் குகை அந்த திருப்பத்திலதான் இருக்கு!¨ என்று சொல்லிக்கொண்டே நடந்தாள் மஞ்சு.
திகைத்துப்போய் நின்றவர்கள் சுதாரித்துக்கொண்டு அவள் பின்னால் விரைந்தார்கள்.

மஞ்சுவை இப்போது விரட்டிப்பிடிக்க வேண்டியிருந்தது. பல காலம் பழகிய பாதையில் நடப்பதைப்போல தயக்கமில்லாமல் நடந்து சீக்கிரமே பாதையின் வளைவை திரும்பி விட்டாள். பின்னால் ஓட்டமும் நடையுமாக தொடர்ந்தவர்கள் வளைவு திரும்பியதும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஒரு குகையின் எதிரே சுமார் பதினைந்தடி தள்ளி மஞ்சு அமர்ந்திருக்க குகையின் வாசலை அடைத்தபடி முன்னே அடிகளாரை தூக்கிச்சென்ற புலி படுத்திருந்தது.

புலிக்கு எதிரே உட்கார்ந்து இருந்தாலும் மஞ்சு கொஞ்சம் கூட பயப்படுவது போல தெரியவில்லை. வந்தவர்கள் புலிக்குகையை தேடி வந்தாலும் புலியை எதிர்பார்த்து வரவில்லை. இப்போது யோசிக்கும் போது அது தர்க்க ரீதியாக மடத்தனமாக இருந்தது.

புலியின் பின்னே குகையின் வாசல் தெரிந்தது. சுமார் ஐந்து அடி உயரம், அகலம் இருந்தது. குகையின் உள்ளே எதிர்பார்க்கும் இருட்டுக்கு மாறாக செக்கச்செவேல் என்று ஒளி. ஆனால் கண்ணை கூசுவதாக இல்லை. இதமாகவே இருந்தது. அங்கங்கு பொன்னிற ஒளியும் சேர்ந்து பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. குகையின் பின்னால் பச்சைப்பசேல் என்று மரங்கள், புதர்கள். இனம் புரியாத நல்ல வாசனை ஒன்று அங்கே தவழ்ந்து கொண்டு இருந்தது.

¨வாருங்கள் குழந்தைகளே!¨

எல்லாருக்கும் இப்போது அதிசயமாக இருந்தது. ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகத்தெளிவாகவே கேட்டது.

5 comments:

குமரன் (Kumaran) said...

பாயும் புலி கேள்விபட்டிருக்கிறேன். இது பேசும் புலியா? சரி தான். வியாக்ரபாதரின் தரிசனம் பெற இன்னும் குமரனுக்கு நேரம் வரவில்லை போல. :-)

கவிநயா said...

//வந்தவர்கள் புலிக்குகையை தேடி வந்தாலும் புலியை எதிர்பார்த்து வரவில்லை. இப்போது யோசிக்கும் போது அது தர்க்க ரீதியாக மடத்தனமாக இருந்தது.//

சொன்னேன்ல? :)

திவா said...

//பாயும் புலி கேள்விபட்டிருக்கிறேன். இது பேசும் புலியா? சரி தான்.//

புலி பேசுவதாக சொல்லவில்லையே குமரன்?
//ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. //
இப்படித்தான் எழுதினேன்.

திவா said...

//சொன்னேன்ல? :)//

:-)))))
நீங்க கவிதாயினி மட்டுமில்லே! கதையாயினி கூட இல்லையா!
கதைநயா ன்னு பேரை மாத்திக்கலாம். :-))
உங்க பேவரைட் மஞ்சுவும் திரும்பி வந்தாச்சு!
என்சாய்!

திவா said...

//வந்தவர்கள் புலிக்குகையை தேடி வந்தாலும் புலியை எதிர்பார்த்து வரவில்லை. இப்போது யோசிக்கும் போது அது தர்க்க ரீதியாக மடத்தனமாக இருந்தது.//

இதை முன்னாலேயே எழுதிட்டேன்னு மட்டும் தெரிவிச்சுக்கிறேன்! மாத்தலை!