Sunday, March 7, 2010

கொலை.

வணக்கம் சார்!
யாருப்பா?
......அனுப்பினாரு!
ஓ, ஒரு நிமிஷம்.
உள்ளே போய் தொலைபேசிவிட்டு வந்தார்.
சரிதான்பா. பிரச்சினை உனக்கு தெரியுமில்லையா?
கொஞ்சம் தெரியுங்க.
எம்மேலே ஒரு கேஸ் நடக்குது. ஒரே சாட்சி ....தான். அவன் இல்லாட்டா கேஸ் நிக்காது. நானும் என்னன்னமோ சொல்லி பாத்துட்டேன். ஆளு மசியறா மாதிரி இல்லே! வேற வழியில்லே.
ஒரு சாட்சியும் இல்லாம தீத்துடனும். சரியா?
ஆகட்டுங்க.
சாட்சி மட்டும் இருந்தா நான் தொலஞ்சேன் என்று மனசில் எண்ணிக்கொண்டவர் தொடர்ந்தார். " இதோ பார். எல்லா விவரமும் சேத்து வெச்சிருக்கேன். ராத்திரி 9 மணிக்கு அவன் இருக்கற இடத்தில யாரும் இருக்க மாட்டாங்க. எல்லாரும் வேலை முடிஞ்சு போகிற நேரம். அதான் சரியான நேரம்....”
திட்டம் தீவிரமானது...
******
அவன் இளைஞன். சுறுசுறுப்பானவன். திறமையானவன். வேலை கிடைத்ததில் ஆச்சரியமில்லை.
வழக்கம் போல தோள் பையை மாட்டிக்கொண்டு மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பினான். மற்றவர்களை விட இவன் கொஞ்சம் வித்தியாசமானவன். பல விஷயங்களை யோசித்து புதிதாக ஏதாவது செய்வான். அதுதான் இவன் பலம். இன்று இந்த நகரத்தில் வேலை. முன்னமேயே கொஞ்சம் ஆராய்ந்து திட்டமிட்டாகிவிட்டது.
இந்த டாக்டர் வேலையை முடித்து விட்டால் அப்புறம் தொழில் செய்வது சுலபம். அதற்குத்தான் சரியான திட்டமிட்டாகிவிட்டதே! சமீபத்தில் நடந்த பிரச்சினைகள்.....

மருத்துவ மனை ஒரு முடிவில்லா தெருவின் கடைசியில் இருந்தது. இதோ வந்துவிட்டது. பொழுது சாய்ந்து நேரமாகிவிட்டதால் ஏறக்குறைய காலியாகிவிட்டது. வண்டிகள் ஒவ்வொன்றாக கிளம்பிக்கொண்டு இருந்தன. காவலாளி போக்கு வரத்தை சரி செய்து கொண்டு இருந்தார். ஓரமாக போய் சைக்கிள் நிறுத்துமிடம் வந்ததும் திரும்பிப்பார்த்தான்.
காவலாளி இந்தப்பக்கம் திரும்பவே இல்லை. பையை திறந்து தயாராக இருந்ததை ஷெட்டின் கூரை கீழே குறுக்குக்கம்பியில் பொருத்தினான். ஒட்டுநாடாவால் அதை அங்கேயே நிறுத்தி வைப்பது அரை நிமிஷ வேலையாக இருந்தது. யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு வரவேற்பறையை நோக்கி நடந்தான்.

வரவேற்பறையில் பணிப்பெண் நிமிர்ந்துகூட பார்க்காமல் டோக்கன் முடிந்துவிட்டது என்றாள். இவன் மௌனமாக ஒரு அறிமுக அட்டையை நீட்டினான். அதை பார்த்தவள் "வேண்டியதுதான். நேரமாகிவிட்டதே. டாக்டர் பார்ப்பாரோ மாட்டாரோ!” என்றாள். “பரவாயில்லை. இருந்து பார்த்துவிட்டு போகிறேன்.”
வரவேற்பறையில் ஒரு மூலையாக பார்த்து அமைதியாக உட்கார்ந்து கொண்டான். இன்னும் ஐந்தாறு பேர்கள்தான். இதான் ஆராய்ச்சி செய்து செயலாக்க வேண்டும் என்கிறது. நோயாளிகளை பார்க்கும்போது நடுவில் போனால் வேலைக்கு ஆகாது. கடைசியில் என்றால் சுளுவாக முடிந்துவிடும். பதினைந்து நிமிஷம் ஆனதும் கண் விழித்துப்பார்த்தான். கடைசி நபர் உள்ளே போகிறார். திரும்பி வாசல் பக்கம் பார்த்தான். கண்ணாடி வழியாக காம்பௌண்ட் வாசலும் வண்டிகள் நிறுத்துமிடமும் தெரிந்தது. இரண்டும் ஏறக்குறைய வெறிச்சோடி விட்டன. பீடி பற்றவைத்துக்கொண்டிருந்த பரட்டை தலையன் ஒருவனைத்தவிர தெருவில் கூட யாருமில்லை. காவலாளி விளக்குகளை ஒவ்வொன்றாக அமர்த்துவது தெரிந்தது. கொஞ்சம் கலவரத்துடன் பார்த்தான். நல்ல வேளை கடைசி நோயாளி சைக்கிளில் வந்து இருக்க வேண்டும். காவலாளி அதை பார்த்துவிட்டு விளக்கை அணைக்காமல் போய்விட்டான்.

கடைசி நோயாளி சிரிப்புடன் வெளியே வந்தார். டாக்டர் ஏதோ ஜோக் அடித்து இருக்க வேண்டும். வரவேற்பறை பெண் உள்ளே போனார். " அவ்வளோதானேம்மா? என்ன ரெப்ரசன்டேடிவ்வா? இப்போ இல்லை....ஓஹோ, அப்ப சரி. வரச்சொல்லு”
பணிப்பெண் இவனுக்கு சைகை செய்ய உள்ளே போனான்.

டாக்டர் இண்டர்காமில் பேசிக்கொண்டு இருந்தார். " ட்ரைவர்! வண்டியை எடுத்துக்கொண்டு கோவிலுக்குப்போய் அம்மாவை அழைச்சுகிட்டு வா. இங்க எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.” போனை வைத்துவிட்டு பணிப்பெண்ணை பார்த்தார்.
“சரிம்மா. நீ கிளம்பு. சந்தானத்தை கதவை பூட்டிக்கொள்ளச் சொல்லு.”
வெளியே கார் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது.
இவனைப்பார்த்து "சொல்லுங்க" என்றார்.

“ சார்! நான் ரெட் புல் செக்யூரிடி கம்பெனியிலிருந்து வருகிறேன். நாங்கள் 25 வருஷமாக இந்த வியாபாரத்தில் இருக்கிறோம்.
சமீபத்தில் மருத்துவ மனை மீது ரௌடிகள் தாக்குதல் நடத்துவது அ திகமாகிவிட்டது. சாகும் நிலையில் இருக்கிற ஒருவரை கொண்டு வந்து அட்மிட் பண்ணுவது. அவர் இறந்து போனால் கொன்றுவிட்டாய் என்று கலாட்டா பண்ணுவது. ரகளைக்கு பயந்த டாக்டரிடம் பணம் கறப்பது. போலீஸுக்கு போனாலும் கூட்டமாக கலாட்டா செய்வதால இன்னார்தான் செய்தார்ன்னு ஒண்ணும் ஆதாரமிருக்காது"

டாக்டர் ஆமென்று தலையசைத்தார். சமீபத்திய நிகழ்வு அவர் மனதில் ஓடியது. "எங்களுடைய சமீபத்திய ப்ராடக்ட் உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறேன். இதைப்பற்றி சொல்வதை விட வேலை செய்வதை காட்டுகிறேன்.”

இதற்குள் மடிக்கணினியை பிரித்து சக்தியூட்டி இருந்தான்.
"இதோ பாருங்கள் உங்க மேசை மேலே இருக்கும் கணினியிலேயே வெளியே நடப்பதை பார்க்கலாம். அதை தேவையானபோது பதிவும் செய்யலாம். இதைப்போல...”
கணினியில் சைக்கிள் ஷெட் தெரிந்தது. காவலாளி வருவது அங்கே இவன் பொருத்திய தொலை காமிரா வழியாக தெரிந்தது. நகர் படம் பதிவாக ஆரம்பித்தது. வெற்றி உணர்வோடு இவன் டாக்டரை பார்த்தான். இருவரும் கணினி திரையை கவனிக்க ஆரம்பிக்க பரட்டைத் தலையன் சைக்கிள் கூடத்தில் நுழைந்து கத்தியால் காவலாளியை சரமாரியாக குத்துவது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

டாக்டர் கீழே மயங்கிக்கிடந்த விற்பனை பிரதிநிதியின் நாடித்துடிப்பை பார்த்துவிட்டு போலீஸுக்கு போன் செய்ய ஆரம்பித்தார்...

11 comments:

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம்ம் கிழிச்சிட்டாங்க, னு தான் எழுதி இருக்கணும். ஆனால் கதையின் நபர்களை ஒருவரோடு ஒருவர் எப்படித் தொடர்பு என்பதைக் கடைசி வரை சஸ்பென்ஸா வச்சுட்டீங்க. அந்தப் பையனுக்கு இது வெற்றியில்லை போலிருக்கே! பாவம்! பிசினஸ் எப்படி நடக்கும்??? டாக்டரைத் தான் கொல்லப் போறாங்க, பையன் அதிர்ச்சி அடையப் போறான்னு நினைச்சேன். :))))))))

திவாண்ணா said...

//ம்ம்ம்ம்ம் கிழிச்சிட்டாங்க, னு தான் எழுதி இருக்கணும்.//
புரியலையே!
// ஆனால் கதையின் நபர்களை ஒருவரோடு ஒருவர் எப்படித் தொடர்பு என்பதைக் கடைசி வரை சஸ்பென்ஸா வச்சுட்டீங்க.//
ஹிஹி! ஆமாம் கொஞ்சம் மிஸ்லீட் பண்ணேன்.

// அந்தப் பையனுக்கு இது வெற்றியில்லை போலிருக்கே! பாவம்! பிசினஸ் எப்படி நடக்கும்???//
சின்ன பையந்தானே? உழைப்பான். பிசினெஸ் நல்லாவே நடக்கும். இப்ப இருக்கிற நிலையிலே நிறைய பேர் வாங்கும் மார்கெட் இருக்கு. உழைச்சு தொடர்பு கொண்டு ப்ரொமோட் பண்னனும்.
// டாக்டரைத் தான் கொல்லப் போறாங்க, பையன் அதிர்ச்சி அடையப் போறான்னு நினைச்சேன்.//
:))))))))

Ashwin Ji said...

//அந்தப் பையனுக்கு இது வெற்றியில்லை போலிருக்கே! பாவம்! பிசினஸ் எப்படி நடக்கும்??? //

வெற்றிகரமா நடக்கும். இந்த டெஸ்டிமோனியல் ஒன்றே போதுமே. பிசினஸ் பிச்சிக்கும்.

திவா, கலக்குறீங்க.

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம்ம் கிழிச்சிட்டாங்க, னு தான் எழுதி இருக்கணும். //

க்ர்ர்ர்ர்ர் பின்னூட்டத்தில் கிழிச்சுட்டாங்கனு சொல்லி இருக்கீங்க இல்லை?? அதைச் சொன்னேன்! :P:P:P

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவனுக்கு இவ்வளவு சஸ்பென்ஸ் வைத்துக் கதை எழுதத் தெரியுமா!!
உங்கள் எல்லாரையும் நான் தெரிந்து கொண்டது கொஞ்சமேன்னு புரிகிறது. நன்றாக இருந்தது. விறு விறூ ப்பு குறையவில்லை.வாழ்த்துகள்மா.

திவாண்ணா said...

நன்றி அக்கா! எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம்.....

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

கதை அருமை

திவாண்ணா said...

வாங்க ஜெய்! நலமா?
பாராட்டுக்கு நன்றி!

எல் கே said...

கதை ஏன் நின்று பொய் விட்டது. ஒரு வருசமா கதை எதுவும் இல்லையா

திவாண்ணா said...

எல்கே, கதை இருக்கு. ஆனா நேரம் ... அதானே இல்லை!
இல்லை மத்ததெல்லாம் நிறுத்திட்டு உருப்படியா கதை எழுதலாம்ன்னு சொல்லறீங்களா? :-)))))))))))))))